[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை]
புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன
அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! வரலாற்றை அறிந்தவர்கள் கடந்தகாலத்தில் மாபெரும் படையெடுப்புக்கள் வழியாகவே பண்பாட்டு உரையாடல்கள் உண்மையில் நிகழ்ந்தன என்று அறிந்திருப்பார்கள். வணிகம் வழியாக மிகக்குறைவாகவே பண்பாட்டு உரையாடல்கள் நிகழ்ந்தன [பலநூறு ஆண்டுகள் நமக்கும் கிரேக்க-ரோம நாகரீகத்திற்கும் வணிகப்பரிமாற்றம் இருந்தது. பண்பாட்டு உரையாடல் நிகழவே இல்லை]. அத்தகைய ஒரு வாய்ப்பு நவீன காலகட்டத்தில் மாபெரும் குடிப்பெயர்வுகள் வழியாக இயல்வதாகிறது.
குடிப்பெயர்வுகள் முன்பும் நிகழ்ந்துள்ளன. ஆனால் பிறந்த நிலத்தை முற்றாக உதறிவிட்டே செல்லமுடியும். சென்ற இடத்தில் தனிப் பண்பாட்டுக்குழுவாக ஒதுங்கி குறுகி வாழவேண்டும். தமிழர்கள் தென்னாப்ரிக்காவுக்குச் சென்று முந்நூறாண்டுகள் ஆகின்றன. எந்தப் பண்பாட்டுப்பரிமாற்றமும் இதுவரை நிகழவில்லை.
இன்றைய காலகட்டம் தன் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ள, தன் முதல்நிலத்துடன் உளப்பூர்வமான உறவை நீட்டித்துக்கொள்ள, சென்றமையும் பண்பாட்டை முழுமையாக அறிய எல்லா வாய்ப்பையும் அளிக்கிறது. அதை ஓர் ஆசிரியன் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்! அதை தவிர்த்து தன்னைத்தானே நோக்கியபடி திரும்பி அமர்ந்துகொள்பவரே கடந்தகால ஏக்கம், தனிமை ஆகியவற்றை எழுதமுடியும்.
தமிழகத்திலிருந்து பல்லாயிரம்பேர் பணிநிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் முதலிய கீழைநாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா. அவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பி வராமல் அங்கே தங்கிவிடுபவர்கள். உண்மையில் செல்பவர்களில் ஆயிரத்தில் ஒருவர் ஏதேனும் வகையில் சென்றமைந்த பண்பாட்டை புரிந்துகொள்ள முயன்று தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதியிருந்தால் நமக்கு ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் கிடைத்திருக்கும். தமிழ்ப்பண்பாட்டை அங்கே அறிமுகம் செய்ய முயன்றிருந்தால் நாம் அங்கெல்லாம் மிக அறியப்பட்டவர்களாக இருப்போம். இரண்டும் அனேகமாக நிகழவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
விதிவிலக்குகள் உண்டுதான். தமிழ்ப்பண்பாட்டை வெளிப்பண்பாட்டுடன் உரையாடச் செய்தவர்களில் முதன்மையான ஆளுமை அ.முத்துலிங்கம். அவ்வரிசையில் ஆசி.கந்தராஜா போன்ற சில பெயர்களை சொல்லமுடியும். ஆனால் அது எவ்வகையிலும் ஓர் இலக்கிய இயக்கமாகவோ அறிவுச்செயல்பாடாகவோ வளரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். புலம்பெயர் இலக்கியத்தில் வாசகனாக நான் எதிர்பார்ப்பது ஒன்றையே, ஓர் அயல்பண்பாட்டை நம் பண்பாட்டைக்கொண்டு மதிப்பிடுவதும் நம் பண்பாட்டை அந்த அயல்பண்பாட்டைக்கொண்டு மதிப்பிடுவதும்.
இந்தப் பண்பாட்டு மதிப்பிடுதலுக்குத் தடையாக அமையக்கூடிய ஒன்று உண்டு, அது பண்பாட்டு வேறுபாடுகளில் உள்ள வியப்பை, பலவகையான புரிதல்குழப்பங்களை, சிறுசிறு வேடிக்கைகளை மட்டுமே கண்டு அதில் ஆழ்ந்துவிடுவது. வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றால் அங்கே நாய்க்கறியை உண்பார்கள், மீனை ஒருநாள் புதைத்துவைத்து மறுநாள் சமைத்து உண்பார்கள் என்பதெல்லாம் முதலில் ஒரு திகைப்பையும் வியப்பையும் அளிக்கும்தான். ஒரு சுற்றுலாக்கட்டுரையில் அதற்கு ஓர் இடமுண்டுதான். ஆனால் அங்கே சென்று வாழ்பவருக்கு அது ஓரிருநாட்களிலேயே பழகிவிடும் ஒரு எளிய செய்திமட்டுமே. அவர் ஆழமான பண்பாட்டு முரண்பாடுகளை, அந்த முரண்பாடுகளினூடாக துலங்கிவரும் மானுட சாத்தியங்களை விழிகொள்ளவேண்டும்
தமிழில் எழுதப்படும் புலம்பெயர் படைப்புக்களில் இந்த எளிமையான ‘விந்தை’ அம்சம் பெரும்பாலும் ஓங்கியிருக்கிறது. ஏனென்றால் மேலோட்டமான வாசகர்களுக்கு அது உவப்பாக இருக்கிறது. வேடிக்கையான ஒரு கதையை சொல்ல அதுவே போதுமானதாகும். அதோடு மிகச்சரியான நம் நடுத்தரவர்க்கத்து குணம். உதாரணம், சிவா கிருஷ்ணமூர்த்தியின் இத்தொகுதியிலுள்ள ‘யாகாவாராயினும் நாகாக்க’. ஓர் அயல்வீட்டிலேயே நாம் உளம்கொள்ளவேண்டிய இடக்கரடக்கல்கள் உண்டு. அயல்நாட்டில் அப்படி ஏராளமானவை. அவை அந்தப் பண்பாட்டின் நுண்ணிய கூறுகளுடன் தொடர்பு கொண்டவை. இக்கதை அப்படி இடம்பொருள் அறியாமல் பேசுபவர்களை மேலோட்டமாக கிண்டல்செய்து அந்த அயல்சூழல் மேல் ஒரு பொதுவான பகடியை முன்வைத்து நின்றுவிடுகிறது. இலக்கியம் எந்தப் பண்பாட்டு உரையாடலை நிகழ்த்தவேண்டுமோ அதற்கு நேர் எதிரான திசையில் நின்றிருக்கும் கதை இது. புலம்பெயர்ந்தவர்கள் எழுதும் தமிழ் இதழ்களில் இத்தகைய கதைகளையே அதிகமாக பார்க்கிறோம்.
இத்தொகுதியில் உள்ள ‘மறவோம்’ சிவா கிருஷ்ணமூர்த்தியின் மிகச்சிறந்த சிறுகதை மட்டுமல்ல, புலம்பெயர்வகை இலக்கியத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றும்கூட. இது மிக ஆழமாக ஒரு பண்பாட்டு உரையாடலை கதைநிகழும் தளத்தில் நிகழ்த்தி, கதை முடிந்தபின்னர் வாசகனின் எண்ணங்களிலும் நீட்டிக்கச் செய்கிறது.
சென்ற 2015 மார்ச் மாதம் நண்பர்களுடன் நாகாலாந்தில் கோஹிமா சென்றிருந்தபோது அங்கிருந்த இரண்டாம் உலகப்போர் களப்பலிகளுக்கான இடுகாட்டை பார்த்தோம். மிகச்சிறப்பாக பராமரிக்கப்படும் இடம் அது. அங்கே பலநூறு கல்லறைகள். ஒவ்வொன்றிலும் இறந்தவர்களின் பெயர்களையும் குடும்பப்பெயரையும் தாங்கிய நடுகற்கள். பலவற்றில் கவிதைவரிகள். இந்தக்கதையில் சிவா கிருஷ்ணமூர்த்தி கொடுத்திருக்கும் “They shall grow not old, as we that are left grow old: Age shall not weary them, nor the years condemn. At the going down of the sun and in the morning We will remember them” என்ற வரிகளையே அங்கே கண்டேன். திரும்பத்திரும்ப ‘மறவோம், நினைவு என்றும் வாழும்’ என அக்கற்கள் உறுதிகூவின. எவரிடம்? இறந்தவர்களிடமா? இருப்பவர்கள் தங்களைத் தாங்களே அவ்வாறு சொல்லி தேற்றிக்கொண்டார்களா?
அவர்களில் மிகப்பெரும்பாலான களப்பலியினர் மிகமிக இளையோர். இன்றைய கணக்குப்படி சிறார்போர்வீரர்கள். அவர்களின் பலி அவர்களின் குடும்பத்தினரை கொந்தளிக்கச் செய்திருப்பதை, அவர்களின் உள்ளுருகியிருப்பதை உணரமுடிந்தது. அந்த உணர்வெழுச்சியில் அவ்வரிகள் பொன்னொளி கொண்டுதான் தெரிந்திருக்கும். ஆனால் நடைமுறை வேறானது. அங்கே அஞ்சலி செலுத்த நாளொன்றுக்கு எத்தனைபேர் வருகிறார்கள் என்று பார்த்தேன். மிகமிக அரிதாக ஆண்டுக்கு ஒருசிலர் வருகிறார்கள். மற்றபடி இரண்டாம்தலைமுறையில் அவர்கள் முற்றாக மறக்கப்பட்டுவிட்டார்கள்.
அங்கே இறந்துபோன இந்திய வீரர்களுக்கான நினைவகம் ஒன்று இருந்தது. அவர்கள் அனைவருமே எரிக்கப்பட்டுவிட்டனர். ஆகவே அனைவருக்குமாக சேர்த்து ஒரு நினைவகம் உருவாக்கி பெயர்களை மட்டும் வரிசையாக பொறித்திருந்தார்கள். அதையும் எவரும் வந்து பார்ப்பதில்லை. இரு பண்பாடுகளை தனித்தனியாக கண்கூடாகப் பார்க்கும் அனுபவம். அந்த அனுபவத்தை அளித்தது சிவா கிருஷ்ணமூர்த்தியின் இந்தச்சிறுகதை.
தொன்மையான போர்ச்சமூகங்கள் போரை ஒரு பெரும் விளையாட்டாக உருவகிக்கின்றன. போர்வீரர்களை தங்கள் தலைக்குடிகளாக கொண்டாடுகின்றன. போரை பாடிப்பாடி போருக்குச் செல்வதை ஒரு பெரும் கொண்டாட்டமாக அந்த மக்கள் நம்புப்படி செய்கின்றன. கிரேக்கமும் ரோமாபுரியும் அவ்வாறு போரை ஒரு பெரும் இறைவழிபாட்டுச் சடங்கு அளவுக்கு புனிதப்படுத்தியவை. ஆகவேதான் அவை உலகை வென்றன. அந்த உளநிலைகளை அப்படியே மீண்டும் நிகழ்த்திக்கொண்ட மூன்று நாடுகள் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து. ஆகவே அவை மீண்டும் உலகை வென்றன. நம்மை வென்ற அந்த மனநிலையின் தீவிரம், ஆன்மீக உள்ளீடின்மை ஆகியவற்றுக்குள் இந்தக்கதை ஊடுருவிச் செல்கிறது. ஐரோப்பியப் பண்பாடு அறம், கருணை, மனிதாபிமானம் ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறது. கூடவே போரையும் கொண்டாடுகிறது. போரில் அது சொல்லும் அவ்விழுமியங்களுக்கு எந்தப்பொருளும் இல்லை. அந்த முரண்பாடு முனைகொண்டு நின்றிருக்கும் முக்கியமான கதை இது.
இந்தத் தொகுதியில் உள்ள சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகளை மதிப்பிட நான் மேலே சொல்லப்பட்ட இருகதைகளையும் அளவீடுகளாகக் கொண்டேன். எளிய சுவாரசியம் மட்டுமே கொண்ட கதைகள். ஆழ்ந்த பண்பாட்டுமுரண்பாட்டைச் சொல்லும் கதைகள். அவ்வகையில் மறவோம் அளவுக்கே முக்கியமான கதை What a Wonderful World. இளைய ஐரோப்பாவின் பண்பாட்டு முகமாக விளங்கும் விளையாட்டும், பரப்பிசையும் கலந்த ஒருகளம். அங்கேயே பிறந்து வளர்ந்து அதில் இயல்பாக இறங்கி நீந்தும் இளைய தலைமுறை. தங்கள் வேர்ச்சுமையுடன் நினைவுநோயுடன் அதன் கரையில் திகைத்து நின்றிருக்கும் அவர்களின் தந்தையர். இந்தக்காலகட்டத்தின் மிக அழுத்தமான பண்பாட்டுச் சிக்கலை சொல்லும் கதை இது. இதை தமிழின் சிறந்தகதைகளில் ஒன்று என ஐயமின்றி சொல்லமுடியும்
I see trees of green, red roses too
I see them bloom, for me and you
And I think to myself
What a wonderful world!
என அங்கிருக்கும் பண்பாட்டுவெளியில் பூத்து எழுந்த கருப்பினத்தவர் பாடும்போது தன்னை உள்ளிழுத்துக்கொண்டு அவர்கள் இன்னமும் குரங்குகள்தானே என்று சொல்லும் நம்மவர்மீதான கடுமையான எள்ளல் வழியாக பண்பாட்டு மதிப்பீடு பண்பாட்டுவிமர்சனமாக ஆகும் கதை இது.
ஒவ்வொரு கதையையும் வாசகர்கள் தங்கள் அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடலாம். சிலகதைகள் பண்பாடுகளை அருகருகே வைத்துக் காட்டிவிட்டு கடந்துசெல்கின்றன. “கீழப்பாவூர் பயலுக கிட்ட பாத்து நடந்துக்கோ. அவனுங்களுக்கு ரத்தத்திலேயே கள்ளத்தனம் உண்டுடா, பாத்துக்கோ” என்னும் உள்ளூர் முன்முடிவின் குரலை முற்றிலும் அன்னியநிலத்தில் வேறு ஒரு மனிதரிடமிருந்து கேட்டு ‘யாதும் ஊரே’ என உணரும் கதை ஓர் உதாரணம் [வெளிச்சமும் வெயிலும்].
இக்கதைகளில் நான் சிறுபிசிறுகளாக பார்ப்பது மூன்று கூறுகளை. “இது வாண்டுவின் இரண்டாவது பிறந்தநாள்” என்பதுபோன்ற வார இதழ்க்கதைகளின் தேய்வழக்குகள். “சாலை சுத்தமாக கழுவி விட்டதுபோல இருந்தது” போல அன்றாட வாழ்க்கையில் நாம் சொல்லிச்சொல்லி பொருளிழந்துபோன வர்ணனைகள். உண்மையில் சிவா கிருஷணமூர்த்தியின் பலவீனம் என்றால் அவரால் ஓர் அயலகத்து மண்ணை காட்சிவடிவாக அளிக்கமுடியவில்லை என்பதைத்தான் சொல்வேன். சுருக்கமான செய்திவடிவ விவரணைகள் ‘தெரிவிக்க’ மட்டுமே செய்கின்றன. மூன்றாவதாக, அவர் கதையினுள் “ஆல்ப் நான் இருக்கும் அணியின் என்னைப் போலவே ஓர் உறுப்பினர். என்னைவிட குறைந்தது முப்பது வருடங்களாவது பெரியவராக இருக்ககூடும்” என நேரடியாக கதைமாந்தரை, சூழலை அறிமுகம் செய்வது. அதில் அழகியல்பிழை ஏதுமில்லை. ஆனால் அது நம் வாசிப்புக்கு சற்றே பழகிய முறை.
ஆனால் அவருடைய வெற்றி நுண்ணிய அக அவதானிப்புகள் எளிதாக வந்து செல்வதில் உள்ளது. “அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்தால் மாலை ஐந்து மணிக்கு சோபாவின் மேல் சுவர் கடிகார நொடி முட்கள் ஓடுவது அவ்வளவு துல்லியமாக கேட்கும். நான் சென்னையில் இருந்தவரை நொடி முள்ளிற்கு சத்தம் இருக்கும் என்று தெரியவே தெரியாது. தாங்க முடியாமல் சுவர் கடிகாரத்தை எடுத்து வார்ட்ரோப்பின் உள் வைத்துவிட்டேன்” என்பதுபோன்ற வரிகளினூடாக நாம் முற்றிலும் புதிய அனுபவதளம் ஒன்றை நோக்கி செல்கிறோம்.
சிவா கிருஷ்ணமூர்த்தியின் இக்கதைகளில் உள்ள குறைகள் அல்லது பிசிறுகள் அவர் நிறைய எழுதாததன் மூலம் உருவாகி வருபவை. எழுதிஎழுதி எளிதில் கடந்துசெல்லத்தக்கவை. சிவா கிருஷ்ணமூர்த்தி நிறைய எழுதவேண்டும் என விரும்புகிறேன்.
ஜெயமோகன்