அகச்சான்றின் காட்சிவடிவங்கள்

rishaan

ரிஷான் ஷெரீப் எழுதிய சினிமாக்கட்டுரைகள் – நேர்காணல்களின் தொகுதியான ‘ஆழங்களினூடு…’ என்னும் நூலுக்கான முன்னுரை. வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை வெளியீடு

பார்வதிபுரத்தைச் சேர்ந்த பழைய தோழி ஒருத்தி லண்டனில் பணிபுரிகிறார். கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கே கல்லூரி ஆசிரியை. இங்கே இருந்தபோது இலக்கிய ஆர்வம்கொண்டிருந்தார். தமிழிலிருந்து சில கதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல குண்டான அழகி. நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் பார்த்தபோது அதே உற்சாகத்துடன் அவர் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்ட இலக்கியத்தைப் பற்றிப் பேசினார். அவர் முன்னர் நாணமும் தயக்கமும் கொண்ட பெண்ணாக இருந்தார். அப்போது தன்னம்பிக்கையும் உறுதியும் கொண்ட பிறிதொருவராக மாறிவிட்டிருந்தார்.

பேச்சுநடுவே ஒரு செய்தி வந்துசென்றது. அவர் ஆராய்ச்சி மாணவியாக லண்டன் சென்றபோது அவருக்கு கிடைத்த முதல்வேலை பிணங்களை இறுதிச்சடங்குக்காக குளிப்பாட்டி அலங்கரிப்பது. அங்கே ஒருவாரத்திற்கு ஐந்துமணி நேரம் மட்டுமே வேலைசெய்ய அனுமதி. அதுவும் அவர்கள் அளிக்கும் வேலை. இங்கிருந்து அனுப்பும் பணம், அங்கே கிடைக்கும் கல்வியுதவித் தொகை எதுவும் போதாது. வேலைசெய்தே ஆகவேண்டும். ஆகவே இரண்டு ஆண்டுகள் அந்தவேலையை அவர் செய்தார்.

நான் அவர் அப்பாவை நினைத்துக்கொண்டேன். உள்ளூரில் இந்தவேலையைச் செய்பவர் தீண்டத்தகாதவர் என கருதப்படும் நாவிதர்குலத்தவர். அவருடைய அப்பா சாதிமேட்டிமையால் எப்போதுமே முகவாயை அரை இஞ்ச் மேலே தூக்கி வைத்திருக்கும் ‘தறவாட்டு’ நாயர். தோழி சிரித்தபடி “அப்பாவிடம் சொல்லவில்லை.மகள் லண்டனில் பேராசிரியை என்று நினைத்து மகிழ்ந்துகொண்டிருப்பவரால் இதை தாளமுடியாது” என்றார்.

ஒரு சிறுகதைக்கான கதைக்கரு. உறைந்த வெள்ளைக்கார முகங்கள் கொண்ட சடலங்களை கழுவி அலங்கரிக்கும் நாகர்கோயில் இலக்கிய வாசகி. கணித ஆராய்ச்சியாளர். எங்கெங்கோ சென்றது கற்பனை. ரிஷான் ஷெரீஃபின் இந்நூலில் ஆகஸ்ட் மழைத்தூறல் என்னும் சினிமாவின் கருவை வாசித்தபோது அந்த நினைவுடன் சேர்ந்து மேலும் மன எழுச்சி அடைந்தேன். பிணம் அறுக்கும் பெண்ணின் வாழ்க்கையிலிருந்து விரியும்கதை அது. மானுட வாழ்க்கை விந்தையான சூழல்களில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏன் விந்தையான சூழல்கள் கவனிக்கத்தக்கவை? ஏனென்றால் மானுட உள்ளம் நீரைப்போல. அது பாய்ந்து பெருகும் இடத்திற்கு ஏற்ப வெளிப்பாடு கொள்கிறது. முற்றிலும் புதிய ஒரு சூழலில் அது தன்னை முற்றிலும் வேறொன்றாக கண்டடைகிறது.

Artists

இத்தகைய அரியதருணங்கள் இலக்கியத்தில் எளிதாக வெளிப்பாடு கொள்ளமுடியும். ஆனால் சினிமாவில் அரிது, அதற்குக் கலைப்பட இயக்கம் தேவை. பார்வையாளர்களின் ரசனைக்கு உகந்த முறையில் உருவாக்கப்படும் வணிகசினிமாவில் இக்கருக்கள் வரவே முடியாது. நான் தமிழ்சினிமாவின் மூத்த திரைக்கதையாசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வணிகசினிமாவின் எல்லையைப்பற்றி அவர் சொன்னார், ‘தமிழக மக்களில் மிகப்பெரும்பான்மையினர் அன்றாடங்காய்ச்சி வாழ்க்கை வாழும் உதிரித்தொழிலாளர்கள். ஆனால் ஒருமுறைகூட அவர்களில் ஒருவர் கதைநாயகனாக வந்ததில்லை, வரமுடியாது’ வணிகசினிமாக்காரர்கள் தமிழ் ரசனையை உணர்ந்தவர்கள், அவர்களுக்கு யதார்த்தம் நன்கு தெரியும். பார்வையாளர்களை நோக்கிச் செல்லாமல் தன் மெய்மையை சொல்வதை மட்டுமே இலக்காகக்கொண்ட கலைப்பட இயக்கமே இத்தகைய வாழ்க்கைத்தருணங்களின் வழியாக மானுடமெய்மையைத் தேடமுடியும். சிங்களக் கலைப்பட இயக்கத்தின் இயல்பையும் கொடையையும் சுட்டிக்காட்டுவதற்கு இந்தக்கதைக்கருவே போதுமானது.

இன்று இந்தியக் கலைப்பட இயக்கம் ஏறத்தாழ அழிந்துவிட்டது. அடூர் கோபாலகிருஷ்ணன் முதல் கிரீஷ் காசரவள்ளி வரையிலான கலைப்பட இயக்குநர்கள் அமைதியாகிவிட்டிருக்கிறார்கள். சாதாரண வணிகப்படங்கள் இன்று தேசியவிருதுகளை பெறுகின்றன. முதன்மையான காரணம், இந்தியாவில் கலைப்பட இயக்கத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் [NFDC] இன்று திரைப்படம்தயாரிக்க நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டது என்பதே. இந்தியக் கலைப்படங்களை திரையிட்டு பார்வையாளர்களை உருவாக்கிய திரைப்படக்கழக இயக்கம் அழிந்துவிட்டது. ஆகவே கலைப்படங்களை எடுக்கவும் கொண்டுசெல்லவும் இன்று வழியில்லை.

அத்துடன் இன்று அத்தகைய படங்களை எழுதியெழுதி ரசிகர்களிடம் கொண்டுசெல்லும் விமர்சகர்களும் இல்லை. இன்றுள்ள விமர்சகர்களும் வணிகசினிமாக்களைப் பற்றியே மாய்ந்துமாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த சமூகவலைத்தளச் சூழலில் அதிகம்பேர் வந்து  ‘கிளிக்’குவதே வெற்றி எனப்படுகிறது. அதிகம்பேர் பார்த்து, அதிகம்பேர் பேசிக்கொண்டிருக்கும் படங்களைப்பற்றிப் பேசுவதே அதிகம்பேரால் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்பு. இன்றைய திரைவிமர்சகன் உண்மையில் மாபெரும் வணிகப்படங்கள் பலகோடி ரூபாய் செலவில் செய்யும் விளம்பரத்தின் ஒருபகுதியை தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு அதிலிருந்து சிறிய லாபம் பெற முயல்பவன் மட்டுமே. அனைவரும் கவனிக்கும் ஒரு படத்தை வசைபாடுவது கூட அதன் விளம்பரத்திலிருந்து லாபம் பெறும் வணிகமுறைதான். மிகச்சிலருக்குரிய சிறிய கலைப்படங்களைப் பற்றி எழுதுவதனால் எந்த லாபமும் அவர்களுக்கில்லை.

இன்று இந்தியாவில் ஒரு கலைப்படம் எடுப்பதென்றால்கூட எல்லா தளங்களையும் நிறைத்திருக்கும் வணிகப்படங்களுடன் அது போட்டிபோட வேண்டியிருக்கிறது. முதலில் அது தன் நிதியை தன் பார்வையாளர்களிடமிருந்தே திரட்டவேண்டியிருக்கிறது. திரைப்படத்தின் தீயூழ்களில் ஒன்று இது. ஒரு தரமான கலைப்படத்தின் ரசிகர்கள் சில ஆயிரங்கள் மட்டுமே அமையமுடியும். தரமான இலக்கியத்திற்கும் இசைக்கும் எப்படியோ அப்படி. அந்த பார்வையாளர்கள் திரைப்படம் பார்ப்பதற்கான பயிற்சி பெற்றவர்கள். திரைப்படத்தை கலையாக அணுகும் வழக்கம் கொண்டவர்கள். அவர்கள் அளிக்கும் நிதியை மட்டும் கொண்டு திரைப்படத்தை தயாரிக்க முடியாது. ஆகவே கலைப்பட இயக்கம் அரசு, நன்கொடையாளர்கள் என்னும் புற நிதியுதவியை நாடியிருக்கிறது.

நான் சென்ற திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் சர்வதேச அளவில் வெளிவந்த முக்கியமான கலைப்படங்களின் தயாரிப்புப் பின்புலத்தை கவனித்தேன். அவை பல்வேறு திரைப்பட நிதிக்கொடைகளின் உதவியுடன், ஒன்றுக்கும் மேற்பட்ட திரைநிறுவனங்களின் ஒத்துழைப்பால் தயாரிக்கப்பட்டவை. பலபடங்களுக்கு உலகளாவிய  திரைப்பட நிதியுதவியும் உள்ளூர் நிதியுதவியும் இருக்கிறது. ஏனென்றால் இன்று திரைப்படம் பார்ப்பது தொழில்நுட்ப வசதியால் பலமடங்கு பெருகிவிட்டிருந்தாலும்கூட, ஒரு நல்ல படம் இணையம் வழியாக உலகமெங்கும் பார்க்கப்பட்டாலும்கூட ஒரு படத்தின் தயாரிப்பை தாங்குமளவுக்கு கலைப்படங்கள் தங்கள் பார்வையாளர்களிடமிருந்து மட்டும் நிதிதிரட்ட முடிவதில்லை. ஐரோப்பிய கலைப்படங்களுக்குக்கூட பல்வேறு நிதிக்கொடைகள் தேவையாகின்றன.

இந்நிலையில் இந்தியமொழிப் படங்களைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இந்தியாவில் இன்று ஒரு கலைப்படத்தை எடுக்க வணிகச்சூழலில் நிதி திரட்டமுடியாது. சொந்த முயற்சியில், சொந்த நிதியில் எடுக்கவேண்டும். அந்தப்படம் பிற வணிகப்படங்கள் ஓடும் திரையரங்குகளில் வெளியாகவேண்டும். திரையரங்குகள் கிடைப்பதிலுள்ள போட்டியும் அதன் வணிகவிதிகளும் மிகக்கொடூரமானவை. வணிகப்படங்களுக்குச் சமானமாக விளம்பரம் செய்யவேண்டும். வணிகப்படங்களின் ஃபார்முலா கட்டமைப்புக்கு உள்ளம் பழகிய ரசிகர்கள் அதை ரசிக்கவும் திரளாக வந்து பார்த்து ஆதரிக்கவும் வேண்டும். இவை எதுவுமே நடக்காது. ஆகவேதான் இங்கே கலைப்பட இயக்கம் அழிந்தது.

அந்த இடத்தில் இன்று வெளிவருபவை கலைப்படங்களின் சில கூறுகளை வணிகப்படங்களின் கதைக்கட்டுமான அமைப்புக்குள் பொருத்திக்கொண்ட படங்கள். அவற்றையே முன்னுதாரணத் திரைப்படங்கள் எனக் கொண்டாடுகிறார்கள் நம் விமர்சகர்கள். அவற்றைக்கொண்டே படங்களுக்கான ரசனையை வடிவமைக்கிறார்கள். ஆகவே இங்கே மெல்லமெல்ல நல்லபடங்களுக்கான ரசனை மிக அரிதாகிவிட்டிருக்கிறது. கன்னடத்தில் அது அழிந்துவிட்டது, மலையாளத்தில் அது குறைந்துவருகிறது, தமிழில் உருவாகவே இல்லை.

இச்சூழலில்தான் சிங்கள சினிமாவின் எழுச்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எழுபது எண்பதுகளில் மலையாளக் கலைப்பட இயக்கம் எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது சிங்கள சினிமா இன்று. சிங்கள சினிமாவுக்கு இருக்கும் இரண்டு பெரிய சாதக அம்சங்கள், ஒன்று அவர்களுக்கு வணிகசினிமா என்னும் மாபெரும் போட்டியாளர் இல்லை. அது உருவாக்கும் விளம்பர மாயையால் நல்ல படங்கள் முற்றாக மறைக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, திரைப்படங்களை குறைந்த செலவில் தயாரிப்பதற்கும் சர்வதேச அளவில் கொண்டுசெல்வதற்கும் உரிய வாய்ப்புகள் உள்ளன. வழக்கம்போல தமிழ் திரைரசிகர்களின் பார்வைக்கும் ரசனைக்கும் அப்பால் உள்ளது அவ்வியக்கம்.

ரிஷான் ஷெரீஃபின் இந்நூல் அவர் பார்த்த சினிமாக்களைப்பற்றி எழுதிய விரிவான குறிப்புகளின் தொகுப்பு. இதை நான்கு பகுதிகளாக அவர் பிரித்திருக்கலாம். முதற்பகுதி சிங்கள சினிமாக்களைப்பற்றியது. என் வாசிப்பில் அதுவே முக்கியமானது. அதையே ஒரு தனிநூலாக அவர் ஆக்கியிருக்கலாம். இரண்டாவது பகுதி தமிழ் சினிமாக்களைப்பற்றியது. வழக்கமான பொதுரசனையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ஒப்புநோக்க சாதாரணமானனை இக்கட்டுரைகள். மூன்றாம் பகுதி மலையாள சினிமாக்களைப்பற்றியது. நான்காம் பகுதி உலகசினிமா, பெரும்பாலும் ஈரானிய சினிமா பற்றியது.

aaz

சிங்களத் திரைப்பட இயக்கத்தின் வெவ்வேறு முகங்களை அறிமுகம் செய்யும் பகுதியை நான் கூர்ந்துவாசித்தேன். ரிஷான் ஷெரீஃப் அத்திரைப்படங்களின் கருக்களின் தனித்தன்மையை, அவை ஏன் பார்வையாளனுக்கு முக்கியமானவை என்பதை சொல்கிறார். அந்தப்படத்தை பொதுரசிகன் பார்ப்பதற்குத் தேவையாகக்கூடிய பின்புலப்புரிதலை அளிக்கிறார். இலங்கையின் வெவ்வேறு வாழ்க்கைச்சூழல்களில் நிகழும் அந்தப்படங்களுக்கிடையே ஓடும் பொதுவான கூறுகளைத் தொட்டுக்காட்டுகிறார். பிணம் அறுக்கும் பெண் முதல் கன்னங்கரிய பெண் வரை, மாற்றுப்பாலியல் பழக்கம் கொண்ட மக்கள் முதல் குழந்தைத் தொழிலாளர்வரை வெவ்வேறு கதாபாத்திரங்கள். அவர்கள் அனைவரிலும் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியிருக்கும் சிங்கள பௌத்த மதக்கருத்தியல். அவர்கள் அதை ஒட்டியும் மீறியும் செல்லும் திசைகள் என இந்தப்படங்கள் விரிகின்றன.

ரிஷான் ஷெரீஃப் அறிமுகப்படுத்தும் இந்தக் கதைக்களங்கள், கதாபாத்திரங்களை பார்க்கையில்தான் நமக்கென கலைப்பட இயக்கம் ஒன்று இல்லாததன் பெரும் குறையை உணரமுடிகிறது. இன்றிருக்கும் இந்திய – தமிழ் மையப்போக்கு சினிமாவின் கட்டமைப்புக்குள் இந்தக் கதைக்கருக்கள் எதையுமே பேசமுடியாது. இந்த மக்களை உண்மையாக காட்டவும் முடியாது. பார்வையாளர் அளிக்கும் நிதியை நம்பாமல் செயல்படும் கலைப்பட இயக்கம் மட்டுமே உண்மையான மனிதர்களின் முகங்கள் வழியாக உண்மையான வாழ்க்கையைக் காட்டமுடியும். அது நம்மிடம் இல்லை. அதற்கு எந்த நிதியாதாரமும் இங்கு உருவாகவில்லை.

இதற்கு நிகரான பல்லாயிரம் கதைக்களங்கள், கதைமாந்தர் நமக்குள்ளனர். ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ போன்று ஒரு சில சினிமாக்களை தவிர அவ்வாறு வாழ்க்கையைக் காட்டிய சினிமாக்கள் எவையும் நமக்கில்லை. அதை ரிஷான் ஷெரீஃப் இந்நூலில் சுட்டியிருக்கும் சினிமாக்களைக் கொண்டே நாம் அறியலாம். வீடு, சந்தியாராகம் முதல் பூ வரையிலான எல்லா தமிழ்சினிமாக்களும் வணிகசினிமா என்னும் சூத்திரத்திற்குள் அடங்குவனதான். கதைக்கருவை எப்படியோ ‘கவற்சிகரமாக’ ஆக்குவது அதன் முதல் இயல்பு. தொடக்கம், முடிச்சு, முடிவு என்னும் கட்டமைப்புக்குள் கதையை அமைப்பது, கதாபாத்திரங்களை எதிரும்புதிருமாகக் கட்டமைப்பது, உணர்ச்சித்தருணங்களை செயற்கையாக உருவாக்குவது என அதில் பல ‘கட்டுமானப்’ பணிகள் உண்டு. ரிஷான் ஷெரீஃப் சுட்டும் சிங்கள கலைப்படங்களுடன் இவற்றை எவ்வகையிலும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் இவை காட்டும் வாழ்க்கையும் கதைமாந்தரும் எவ்வகையிலும் உண்மையானவர்கள் அல்ல. அவை ரசிகனின் கண்களுக்காக அமைக்கப்படும்போதே கலைக்குறைபாடு உருவாகிவந்துள்ளது. கலையம்சம் கொண்ட வணிகப்படங்கள் அவை, அவ்வளவுதான். சினிமா பல்லாயிரம்பேரால் பார்க்கப்படும் கேளிக்கைவடிவமாக இருக்கும்வரை அந்தவேறுபாடு நீடிக்கும்.

ரிஷான் ஷெரீஃப் சுட்டும் சிங்களச் சினிமாக்களினூடாகச் செல்கையில் உருவாகும் இன்னொரு உளப்பதிவு நீதியுணர்ச்சியின் வெளிப்பாடாகவே பல திரைப்படங்கள் அமைந்திருப்பது. அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக நிலைகொள்ளும் பிரசன்ன விதானகேயின் நீதிமன்றத்தில் அமைதி ஓர் உதாரணம் என்றால் பெரும்பான்மையின் உளநிலைக்கு எதிராகவே நின்றிருக்கும் புறநிழல் இன்னொரு உதாரணம். எவ்வகையிலும் எதைச்சார்ந்தும் நின்றிருக்காதபோதுதான் இத்தகைய சினிமாக்கள் எழமுடியும். சினிமா ஒரு கலை என ஆவது இத்தகைய தருணங்களில்தான்.

ரிஷான் ஷெரீஃப் இந்நூலில் மலையாள சினிமாக்களைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகளில் மலையாள சினிமாக்களுக்கும் இலக்கியத்திற்கும் இடையேயான ஊடாட்டத்தை விரிவாகவே பேசியிருக்கிறார். ஆனால் மலையாள சினிமா என இவர் இதில் குறிப்பிடும் படங்கள் பெரும்பாலும் வணிகசினிமாவின் கட்டமைப்புக்குள் சற்றே கலைத்தன்மையை கொண்ட நடுத்தரப் படங்கள்தான். மலையாளத்தில் கலையம்சம் கொண்ட படங்கள் பி.பாஸ்கரனின் நீலக்குயில் முதலே உருவாகி வந்துள்ளன. ஆனால் மலையாள கலைப்பட இயக்கம் அடூர், அரவிந்தன், பி.ஏ.பக்கர், யூ.கே.குமாரன், டி.வி.சந்திரன், எம்.டி.வாசுதேவன் நாயர், லெனின் ராஜேந்திரன், ஷாஜி என் கருண் போன்றவர்களால் ஆனது.   கேரளவாழ்க்கையின் மெய்யான சித்திரம், கேரளப் பண்பாட்டின் ஆழ்ந்த சிக்கல்கள் வெளிப்படுவது இந்தப்படங்களில்தான்

இந்நூலை இதில் சிங்கள சினிமாக்களைப்பற்றி பேசப்பட்டுள்ள பகுதியைக்கொண்டே மீண்டும் மதிப்பிட விரும்புகிறேன்.இந்த சினிமாக்கள் எல்லாமே மிகக்குறைவான செலவில் எடுக்கப்பட்டுள்ளன என்பதை உணரமுடிகிறது. இன்று சினிமா எடுப்பதற்கு குறைவான நிதி போதும். விளக்குகள் குறைவாக போதும். இன்றைய மின்னணுக் காமிரா எடையற்றது. வெளிப்பக்க ஒளியை நேரடியாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதனால்மட்டும் நல்லபடம் எடுத்துவிடமுடியாது. கலைப்பட இயக்கம் ஒன்று இருந்தால்தான் நல்லபடங்களை எடுக்கமுடியும். நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்கள் என அதற்குரிய ஒரு தனி வட்டம் உருவாகி வரவேண்டும். அதை ரசிக்கும் ரசிகர்களும் அதை ஆராயும் விமர்சகர்களும் உருவாகி வரவேண்டும். மலையாளத்தில் எழுபதுகளில் தொடங்கி தொண்ணூறுகள் வரை  அவ்வியக்கம் இருந்தது. தமிழில் அப்படியொன்று இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நூலில் பேசப்படும் வெவ்வேறு சினிமாக்களினூடாகச் செல்லும்போது ஆற்றல்மிக்க ஒரு கலைப்பட இயக்கம் என்பது ஒரு பண்பாட்டுக்கு எத்தனை முக்கியமானது என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் உருவாகிறது. அப்படி ஒன்று இல்லையேல் அப்பண்பாட்டின் வாழ்க்கை பெரும்பாலும் காட்சிப்பதிவாக, திரைவடிவாக ஆகாமலேயே அழிந்துவிடுகிறது. இந்நூலின் இறுதியில் அளிக்கப்பட்டிருக்கும் சிங்கள திரைப்பட இயக்குநர்களின் பேட்டிகள் ஆளுமை மிக்க திரைக்கலைஞர்களின் இடமென்ன என்பதை மீண்டும் உறுதிசெய்கின்றன. அவை அகச்சான்றின் நேர்வெளிப்பாடுகளாகவே ஒலிக்கின்றன. கலை தொடங்குவது அங்கிருந்துதான், கலைஞனின் அகச்சான்று மட்டுமே அதற்கு ஆதாரம். அதை ஒரு பார்வையாளன்கூட பார்க்கவில்லை என்றாலும் அது ஒலிக்கவேண்டும். அப்போதுதான் அப்பண்பாட்டின் மெய்யான கலைவெளிப்பாடாக அது அமையும்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகாடு – மீண்டுமொரு வாசிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16