சிறுகதை: இலைகள் பச்சைநிறம்; பூக்கள் வெள்ளைநிறம்- மதுபால்

220px-Actor_Madhupal

விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்

 

விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை

 

தமிழில்: அழகியமணவாளன்

 

female-portrait-kerala-painting-rajasekharan

ஆவாடு கடல்புறத்தில் எரணப்பனின் டீக்கடைமுன் உள்ள மின்கம்பத்தில் ஒரு கொடி ஏறிய நாள் முதன்முதலாக ஒருவனை அவர்கள் கொன்றனர். செத்த ஆள் ஆவாடு வந்து மூன்று நாட்கள்தான் ஆகியிருந்தன. அவன் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்றோ பெயர் என்னவென்றோ யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அன்று முழுவதும் போலீஸ்காரர்களும், கட்சிக்காரர்களும் ஊர் முழுக்க ஒவ்வொரு மூலையிலும் சலித்துத் தேடினார்கள், இருந்தும் யாரையும் கைதுசெய்ததாக இடைவழியில் பேசிக் கேட்கவில்லை. இது முடிந்து இரண்டு நாட்களில் முதன்முதலாக ஒரு ஆவாட்டை சேர்ந்தவன் போட்- ஹவுஸில்  செத்துக்கிடப்பதை ஊர்காரர்கள் பார்த்தார்கள். தலை முழுவதும் மட்டைத்தேங்காயை உரித்துப்போட்டது போல இருந்ததால் முகத்தை வைத்து யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.  உடுத்தியிருந்த வேட்டியையும் சட்டையையும் அடையாளம் வைத்து ஆள் டீக்கடைக்காரன் எரணப்பன் என்றும் இல்லை கடலுக்குப் போன மொய்தீன் என்றும் ஆட்கள் பேசிக்கொண்டார்கள். எரணப்பனின் மனைவியும் பிள்ளைகளும் பிணத்திற்கு பக்கத்திலிருந்து அழுது தீர்த்தபிறகு இரண்டு நாட்களுக்கு முன் கோழிக்கோட்டிற்கு சொல்லாமல் சென்றிருந்த எரணப்பன் பிணத்தின் அருகில் வந்தான் . எரணப்பனை கண்டவுடன் வசுமதியும் பிள்ளைகளும் அழுகையை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்று விட்டனர்.  போலீஸ்காரர்களும் கட்சிக்காரர்களும் மருத்துவமனை ஆட்களும் வந்து பிணத்தை எங்கெங்கோ கிழித்துப் பார்த்துவிட்டு ஓலைப்பாயில் போட்டபோது ஆட்கள் அது மொய்தீன் தான் என உறுதிசெய்துகொண்டனர்.

கால்பந்து விளையாட்டில் கோலடிப்பதுபோல பின்பும் மூன்றுநான்கு பேர் வெட்டிக்கொல்லபட்டனர். முடிவில் எப்போதோ இரு அணிகளும் சரிசமமாக கோல்கள் போட்டுவிட்டிருந்தன. அத்தோடு விளையாட்டை முடித்துக்கொண்டு பிரிந்துசென்று மூன்று வருடங்களாகிறது. இப்போது ஆட்கள் நிம்மதியாக சாலையில் நடக்கவோ, கடைக்குச்சென்று சாமானங்கள் வாங்கி வீடு திரும்பவும் எரணப்பனின் கடையில் டீ குடித்தபடி அரசியல் பேசி வம்பளக்கவோ, வேறு வேறு கட்சிக்காரர்களாக இருந்தாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் ” எங்கே கிளம்பிட்டீங்க?” என்றோ ”பையன் லெட்டர் போட்டானா?” என்று கேட்டுக்கொள்ளவோ முடியுமளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. இது எரிமலை வெடிப்பதற்கு முந்தைய அமைதி என்று அரசுப்பள்ளி ஆசிரியர் இப்ராஹிம் சார் சொல்வார். இப்படி புகைந்து புகைந்து எத்தனை நாட்கள்?

தையல் கிளாஸுக்குப் போகும்போது அவன் எனக்காக காத்து நிற்பான், முதலிலெல்லாம் அவன் என்னைத்தான் காத்து நிற்கிறான் என்று எனக்கு  தெரியவேயில்லை. மெல்ல மெல்ல , ஒவ்வொருமுறை தன்னைப் பார்க்கும்போதெல்லாம் அவனின் உதடோரங்களில் தெளிந்த நிலாவெளிச்சத்தை காணமுடிந்தது. காத்துநிற்பது தனக்காகத்தான் என்று புரிந்தது.

பின்பு ஆளில்லாத பள்ளித் தோட்டத்திலும்,  கல்லறைகளின் நடுவே படர்ந்து விரிந்திருந்த ஆலமரத்தடியிலும் ஒவருவரையொருவர் கண்டுகொண்டோம்,  துடிக்கும் இதயத்துடன், வெளிறிய முகத்துடன், வியர்த்து வழுக்கும் கைகால்களுடன் பயத்தின் பிடியில் இருக்கும்போதும் இந்தக் கணங்கள் முடிந்துவிடக்கூடாதே என மனம் பிரார்த்திக்கும். கடல் அலைகள் உயரும்போதும் தாழும்போதும் ஒரு ஆசுவாசம். நீ நீ என்று அவன் இதயம் சொல்வதை கேட்பதற்காக மட்டுமே காதுகளை நெஞ்சோடு சேர்ப்பேன். அவனது வியர்வையில் உப்புக்காற்றின் மணம் இருக்கும். அது மனிதனின்  மணம் என்பான். மாலை பாங்கு சத்தம் கேட்கும்வரை அவன் நெஞ்சில் காதலின் மணத்தை அறிந்தபடி கிடப்பேன். இருட்டின் ஒட்டடை வந்து மூடும் முன்பே அவனோடு விடைபெற்றுச் சென்றுவிடுவேன். பள்ளித்தோப்பின் இடைவழியிலூடே வீட்டிற்கு செல்லும்போது மனதில் பிரிவின் ஏக்கம் மட்டும்தான் எஞ்சும்.

அப்தூக்காவின் மனைவியாகிவிட்டால் வீட்டிலிருப்பவர்கள் இடைஞ்சல் உண்டாக்குவார்களா என்று ஓவ்வொரு முறை சென்று வரும்போதும் ஆவலாதியோடே மனம் நினைக்கும். கணாரண்ணனின் கடையிலிருந்து சீனியும் டீத்தூளூம் வாங்கச்செல்லும்போது கணாரண்ணன் கேட்பார் ” குட்டி இன்று நீ ஏன் இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய். காலம் கெட்டுக் கிடக்கிறது. வேகமாக வீட்டிற்குப் போகப் பார். ” குஞ்செக்காவை கூப்பிட்டு சொல்வார் ”குஞ்செக்கா…. சீக்கிரம் ஜானுவை அவள் வீட்டில் கொண்டுவிடு”

குஞ்செக்கா பந்தம் கொழுத்தியபடி துணைவர தோளில் பையை மாட்டிக்கொண்டு நடப்பேன். அப்போதும் அப்தூக்காவின் மணம் கூட இருக்கும். வாசித்த ஏராளமான நாவல்களிலும் கதைகளிலும் பல தடைகளை தாண்டித்தான் காதலின் நதி ஓடியிருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். மனிதன் எதற்கு இப்படி ஜாதி மதங்களாக தன்னை ஆக்கிக்கொண்டான். காதல் தோன்றினால் நேசித்தவரை கல்யாணம் செய்துகொள்ளக் கூடாதா என்ன? …..கடவுளே இதெல்லாம் எப்படி முடியப்போகின்றதோ…….

கடல்காற்று வீசும் இரவுகளில் கோபத்தில் என்பதுபோல எரியும் பல்பு வெளிச்சத்தில் வாசிக்க எடுக்கும் புத்தகத்தின் பக்கங்களில் அப்தூக்காவின் முகம் மட்டுமாக இருக்கும். பாயில் முகம்புதைத்து படுத்துக்கிடக்கும்போதும் அப்தூக்காவின் பெருமூச்சை அருகில் என உணரமுடியும்.

என்ன ஆனாலும் நான் அப்தூக்காவைத்தான் கட்டுவேன். அதற்காக மதம் மாறவும் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை.

”என்ன குட்டி தூக்கத்தில் உளருகிறாய் தெய்வ நாமம் சொல்லி தூங்கப் பாரு”

அம்மாவின் பக்கம் திரும்பி படுத்து தூக்கத்தின் ஆழங்களில் முழ்கிவிட்ட அந்த இரவில் ஆவாடு கடற்கறையில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது.

அழுகையும் கூச்சலும் நிறைந்த இந்த நடுராத்திரியில் கடற்கரை மணற்பருக்களின் மீது ரத்தத்தின் சிவப்பு ஒழுகிக்கிடந்தது. கூக்குரலிட்ட ஆத்மாக்கள் உயிரின் கடைசிமூச்சுக்காக அலைந்த பாதையில்லா பயணம் இறுதியாக ஓய்ந்தது. படர்ந்து எரியும் தீ நாவுகள் கடற்கறையின் மணற்பருக்களையும் மரங்களையும் வெந்து உருக்கின. கடலின் இடைவிடாத ஒழுக்கில் அன்னம் தேடிய தோணிகளும் மீன்படகுகளும் வெறும் விறகுக்கட்டைகளாக தீக்கு இரையாயின. ஒவ்வொரு வெடிச் சத்தத்திற்கு இடையிலும் கதறி அழும் மிருக,மனித ஓலங்கள். வேதனையின், பிரிவின்  கூக்குரல்களுக்குள் பீதியுடன் ஒரு இரவு முழுவதும் இருந்தேன் பகலை எதிர்நோக்கியபடி.

மணல்மேடுகளும், ஓலைக்குடிசைகளும் வீட்டு சாமான்களும் எரிந்து உதிர்ந்தன. உப்புக்காற்றில் வெந்த மாமிசத்தின் மணம் இருந்தது. ஆண்களெல்லாம் ஆட்கள் யாரும் அறியாமல் இருட்டில் ஏதோ குகையில் ஒளிந்திருந்தனர். அழும் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி கண்ணீர் வற்றிய முகத்தோடு பெண்கள் ஓலைகள் கருகிய தென்னமர நிழலில் மௌனமாக இருந்தனர். அநாதைகளாக எங்களை விட்டுவிட்டு ஆண்களெல்லாம் எங்கே போய் ஒளிந்திருக்கின்றனர்?

பாலன் அண்ணனின் தோப்பு இப்போது ஒரு அகதிகள் முகாம். தீயால் வாடிய வாழையிலைகளில் பரப்பிய சோறும் தேங்காய் துவையலும் சாப்பிடும் பெண்களில் பீவாத் உம்மாவும் கௌஸல்யா அண்ணியும் இருக்கிறார்கள்.

பாலன் அண்ணன் கிருஷ்ணன் கோவில் தீபாராதனையில் தவறாமல் காணப்படும் ஆள்தான் என்றாலும் ஒருபோதும் ஜாதியின் பெயரால் பிரச்சனை உருவாக்கக்கூடிய கூட்டத்தில் அவரைப் பார்த்ததில்லை. அதனால், அவரது வீட்டில் அடைக்கலம் அடைந்தவர்கள் பயந்த கண்களோடு காணப்பட்டார்கள் என்றாலும் ஆசுவாசத்தைத் தரும் காற்று இன்னும் நம்மைக் கைவிடவில்லை என்ற சமாதானத்துடன் பசியடக்கினர்.

செய்தித்தாளில் வந்த செய்தி தவறு என்று யாரிடம் சொல்வது…? பாலன் அண்ணன் வீட்டிற்குப் போய் அவரிடமே சொன்னால்? ஜானுவிற்கு கைகால் எல்லாம் நடுங்கியது. இடைவழியில் குழாயில் தண்ணீர் எடுக்கும் பெண்களிடம் தொப்பி வைத்த ஒரு இளைஞன் ஏதோ வேண்டாதது செய்தான் என்பதால் வந்த பிரச்சனை முற்றி இச்சம்பவம் நடந்ததாக செய்தித்தாள்களில் எழுதப்பட்டன. பின்னர் ஊர் ஆட்களேகூட அதையே சொல்ல ஆரம்பித்தனர்.. அது அல்ல பாலன் அண்ணா பிரச்சனை. நான் இப்போது அதை எப்படிச் சொல்வேன்.. ஒன்றும் வாயையே திறக்கக்கூடாது என்று அம்மா சொல்லியிருக்கிறாளே.  இது திட்டமிட்டு உருவாக்கிய பிரச்சனை, அதனால் என்ன ஆனாலும் நான் சொல்லப்போகிறேன். பாலன் அண்ணா நீங்களே இதை தீர்க்க ஒரு வழி கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு கடலுக்குப்போன அப்தூக்காவை தெரியும் இல்லையா? …..அவரேதான்.. ஆம். கருவாடு விற்கும் அவ்வோக்கர் சாயிப்பின் மகன். அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ஒன்றுமில்லை, நான் தையல் க்ளாஸ் போகும்போது வழியில் பார்ப்பேன். எப்போதாவது சும்மா ஏதாவது பேசுவேன். அவ்வளவு தான். வேறொன்றுமில்லை….(கடவுளே இதையெல்லாம் எதுவுமே சொல்லவேண்டாம் என்று அம்மா சொல்லியிருந்தாள்) அன்று நாங்கள் பேசிவிட்டு விடைபெற்றபின்  டீக்கடையிலிருந்து வந்து நீங்களும், கிருஷ்ணன் அண்ணனும் வழியில் தடுத்து நிறுத்தி அப்தூக்காவோடு என்ன பேச்சு? அவனோடு ஒன்றும் பேச வேண்டாம் என்று கோபப்பட்டுவிட்டு சென்றுவிட்டீர்கள்..ஒன்றும் சொல்லாமல் அசடு போல நான் வீட்டிற்கு போய்விட்டேன். இரவில் என் அண்ணன்கள் வந்ததும் என்னை திட்டித் தீர்த்தனர். மனிதர்கள் ஏதோ சும்மா பேசினார்கள் என்றால் அதற்காக எதற்கு பாலன் அண்ணா என்னிடம் பிரச்சனை செய்தீர்கள்? அழுது அழுது நான் தூங்கியும் விட்டேன். அப்தூக்கவை  காலை முதல் காணவில்லை.  அண்ணன்களும் மற்றவர்களும் சேர்ந்து அப்தூக்காவை ஏதாவது செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்தூக்காவின் நண்பர்களில் ஒருவரான மஜீத்திடம் அவர்கள் என்னவோ கேட்டு தகராறு செய்தனர் என்று சொன்னார்கள். சரிதான். மஜீத் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று கௌஸுத் அக்கா வந்து சொன்னார், இப்படி நடந்தால் நாம் என்ன செய்வது?அதனால் பாலன் அண்ணனே இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும்

வானொலியிலும் செய்தித்தாள்களிலும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. நாட்டின் எந்தெந்த மூலையிலிருந்தோ சமாதானத்தின் வெள்ளைக்கொடிகளும் வெள்ளைப்புறாக்களுமாக புகழ்பெற்ற ஆட்கள் ஆவாட்டின் மையப்பகுதிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொற்களில் ஆசுவாசத்தின் நீண்ட பெருமூச்சுகள் இருந்தன. எல்லாவற்றையும் கொண்டாட்டமாக்கும் மனிதர்களின் நடுவில் பாலேட்டனின் சுயநலம் இல்லாத விளம்பரங்கள் இல்லாத சேவை ஆவாட்டின் கரையை அன்பின் பிரகாசத்தால் ஜொலிக்க வைக்கிறது.

ஜானு வீட்டிலிருந்து வெளியே இறங்கவேயில்லை. அவளுடைய அண்ணன்களும் அப்பாவும் வீட்டிற்கு வந்தே கொஞ்ச நாட்களாகிவிட்டன. அம்மாவின் கண்ணீரால் கலங்கிய முகத்தையே பார்த்தபடி இரவு பகலாக நாட்களை கடத்துவதுதான் ஜானுவின் ஒரேவேலை.  அப்தூக்காவை கொஞ்சம் பார்க்க முடிந்தால்…….. அல்லது எங்கே என்று அறிய முடிந்தால்? பாலன் அண்ணன் எப்போது இந்த வீட்டுப்பக்கம் கொஞ்சம் வருவார்..?

இலைகள் கருகிய மரங்களில் புதிய தளிர்கள் முளைத்தன. ஒரு காலை வேளையில் ஜானு, அம்மாவின் காலைபிடித்துக் கெஞ்சி அனுமதி வாங்கி கோவிலுக்குப் போனாள். நன்மையில் தெளிந்த மனிதர்களின் எல்லா வேதனைகளையும் ஏதோவொரு தெய்வம் அறிகிறதல்லவா… கோயில் நடையிலிருந்தபடி ஜானு பிரபஞ்சத்திலுள்ள சகல தெய்வங்களையும் அழைத்தாள், மனிதனின் துக்கங்களை அறியும் தெய்வங்கள் அனைத்தும் கருவறைப் படியிறங்கி  ஜானுவின் முன்னில் வந்தன. அவைகளின் பிரகாசமான முகம் கண்டு அவற்றின் காலடிகளில் இரண்டு குவளைமலர் மாலைகளை வைத்தாள்.

‘இது என் அப்தூக்காவுக்காக’’

தெய்வங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன, அவர்களுடைய கால்கீழே இருக்கும் கருங்குவளையின் இலைகளின் பச்சை மெல்ல வெள்ளைப் பூக்களாவதை ஜானுவால் காணமுடிந்தது. ஆசுவாசத்துடன் அவள் கண்களை மூடினாள். ஆனால் தெய்வங்களுக்கு ஜானுவைப் பார்க்க பயமாக இருந்தது.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா, ஒரு தனிப்பட்ட கோரிக்கை
அடுத்த கட்டுரைமதுபால் – கடிதம்