அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்

220px-Actor_Madhupal

 

புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

அன்புள்ள ஜெயமோகன்

 

சிலநாட்களாக உங்கள் தளத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் கதைகள் நாம் தமிழில் வழக்கமாக வாசிக்காத வகையான கதைகளாக உள்ளன. தமிழ்ச்சிறுகதைகளின் பொதுவான இரண்டு டெம்ப்ளேட்டுகள் என்னவென்றால் நகர்புற நடுத்தரவர்க்கத்தின் அன்றாடப் பிரச்சினை. அல்லது கிராமத்து வறுமையும் நெகிழ்ச்சியும். இன்னொன்று ஆண்பெண் உறவு சார்ந்த பூடகமான பேச்சு. [நீங்கள் இதை சுட்டிக்காட்டி சொல்லியிருக்கிறீர்கள்]

 

விவேக் ஷான்பேகின் கதைகள் வெளிவந்தபோது சம்பந்தமே இல்லாத ஓர் உலகத்தைப் பார்த்ததுபோல புதிய அனுபவமாக இருந்தது. அந்தப் புதிய அனுபவம் இந்தக்கதைகளிலும் இருந்தது. சிலகதைகள் நான் சாதாரணமாக வாசிக்காத வடிவில் கொஞ்சம் திகைக்கவைப்பவையாக இருந்தன.

 

அனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் அதிகாரத்தின் வெவ்வேறு முகங்களைக் காட்டுபவை. அதிகார உலகம் எப்படி அதில் சென்று ஒட்டிக்கொள்பவர்களை அதன் பகுதியாக ஆக்குகிறது அல்லது சிக்கவைத்து அழிக்கிறது என்பதை பல கதைகள் காட்டுகின்றன. சமரசம் செய்துகொண்டவர்கள் அழிகிறவர்கள் என இரண்டேபேர்தான். ஆனால் நிலவொளியில் வேறுமாதிரியான கதை. உங்கள் நீதியுணர்ச்சியின் எல்லை என்ன என்பதைக் கேட்கும் கதை. நிலவொளியில் என்ற தலைப்பு வேறு அர்த்தம் அளிக்கிறது. அன்றாட வாழக்கையில் கண்ணுக்குத்தெரியாமல் ஆகிவிடும் பல விஷயங்கள் நிலவு நிறைந்த இரவில் தெரிகின்றன.

 

மதுபாலின் கதைகளும் முற்றிலும் வேறாக இருந்தன. இத்தகைய கதைகளை இங்கே எழுதுபவர்கள் இல்லை. கதை நிகழ்வதில்லை. கதையை அவர் காட்டுவதுமில்லை. அவர் சுருக்கிச் சொல்கிறார். நடுவே சமகாலக் கருத்துக்களையும் பல்வேறு மேற்கோள்களையும் ஊடுருவ விட்டு ஒரு கொலாஜ் மாதிரி கதையை உருவாக்குகிறார். சாதாரணமாக வாசித்தால் அந்தக்கருத்துக்களையும் மேற்கோள்களையும் கொடுப்பதுதான் அவரது நோக்கம் என தோன்றும். ஆனால் எப்போதுமே அதைவைத்து கதையை மறைக்கிறார் என்பதை பின்னர் உணர்வோம்.

anita-mugshot-300x300

புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது  ஒரு சுவாரசியமான கதை. கதையை வைத்து விளையாடுவது. கதையில் ஒரு பத்திரிக்கையாளனின் மனநிலை சொல்லப்படுகிறது. அவன் சூழலியல் கருத்துக்கள், பைபிள் மேற்கோள்கள் வழியாக ஓர் யதார்த்ததை அறிகிறான். அதை சூழ்ந்திருக்கும் உலகம் புரிந்துகொள்ளவில்லை. இது ஒரு மேல்மட்டக்கதை. ஆனால் அடியில் சில படிமங்கள் கோத்து வைக்கப்படுகின்றன. மறைந்துபோன ஒரு நதி. அந்த நதிக்கரையிலிருந்து பிடிபட்டு கூண்டில் அடைபட்டிருக்கும் புலி. அந்தப்புலியின் கண்களில் மறைந்த நதி. அந்த நகருக்குமேலே உடையக்காத்திருக்கும் அணை. அதில் மரணவடிவமாக இருக்கும் நீர். நீர் என்னும் உயிராதாரத்தை வன்முறை ஆயுதமாக நீர்பீரங்கியில் பயன்படுத்துகிறார்கள்.

 

இந்த படிமங்கள் வழியாகத்தான் மெய்யான கதையை மதுபால் சொல்கிறார். அதற்குமேல் அந்த செய்திகளும் மேற்கோள்களும் உள்ளன. அந்த படிமங்களை நேரடியாகச் சொல்வதுபோல் ஆனால் கதைஅழகில்லாமல் ஆகிவிடும். அந்தப்படிமங்களை வாசகன் கண்டறியவேண்டும். அதற்காக அந்த செய்தியாளனின் சிந்தனையின் அலைக்கழிவு, நினைவுகூர்தல் வழியாக  ஒரு ஓட்டத்தை உருவாக்கி அதில் படிமங்களைக் கோர்த்து வைக்கிறார்

 

கொலாஜ் என்னும் கலைவடிவின் சிறந்த உதாரணம் அந்தக்கதை. உயிராதாரமான நீர் என்று கதையின் ஒரு பகுதி நீதிநூல்களை எல்லாம் மேற்கோள் காட்டிச் சொல்லிக்கொண்டே இருக்க இன்னொரு பகுதி நீர் துப்பாக்கிக்குண்டாக ஆவதைச் சொல்கிறது. அந்த முரண்தான் கதை. வெவ்வேறு வடிவில் எழுதப்பட்ட இந்தக்கதைகள் சிறுகதை என்ற வடிவத்திற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன என்பதைக் காட்டுகின்றன

 

ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைநிலவொளியில் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7