«

»


Print this Post

விஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…


 

விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை

 

விஷ்ணுபுரம் விருதுவிழா 2010ல் எளிமையாகத் தொடங்கியது. என் கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் விழாவுக்கு. நண்பர்கள் கையிலிருந்து மேலுமொரு ஐம்பதாயிரம். மேலும் இருபதாயிரம் செலவாயிற்று. மணிரத்னம் வந்து தங்கி சென்ற செலவு அவரே செய்துகொண்டது. அவர் வந்தமையாலேயே விழா பெரிதாகத் தெரிந்தது. பெரிதாகத் தெரியவேண்டும் என்பது எங்கள் நோக்கம். விருது என்பதே ஒர் எழுத்தாளனை வாசக உலகம் திரும்பிப்பார்க்கச் செய்யும்பொருட்டுதானே?

முதல் விருது ஆ. மாதவன் அவர்களுக்கு. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மேடையில் அவர் அவருக்கு அளிக்கப்பட்ட முதல் விருது மட்டுமல்ல, அவருக்காகக் கூட்டப்பட்ட முதல்கூட்டமே அதுதான் என்றார். அது அவ்விருதின் நோக்கத்தை எங்களுக்கு மேலும் உறுதிசெய்வதாக அமைந்தது. எம்.வேதசகாயகுமார், பிரியத்திற்குரிய இக்கா புனத்தில் குஞ்ஞப்துல்லா என பலர் கலந்துகொண்ட விழா. ஆ.மாதவன் பின்னர் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.

இரண்டாவது விருது பூமணிக்கு. தமிழின் இயல்புவாத எழுத்துக்களின் தலைமகன். அன்று சற்று உடல்சோர்ந்த நிலையில் இருந்தார். ஆனால் அதன்பின் ஊக்கம் பெற்று நிறையவே எழுதிவிட்டார். அன்று அவரை கோயில்பட்டி சென்று நேரில் பார்த்து விருது அறிவித்தபோது அவர் இருந்த தோற்றம் என்றும் மறக்காத ஒன்று. நான் பார்த்த எழுத்தாளர்களில் அழகன் அவர். அப்போது நரம்புச்சோர்வால் உடல் ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் கிடைத்த சாகித்ய அக்காதமி விருது அவரை மேலும் ஊக்கம்கொண்டெழச்செய்தது

பாரதிராஜா எஸ்.ராமகிருஷ்ணன் யுவன் சந்திரசேகர் வே அலெக்ஸ் என பலர் கலந்துகொண்டனர். கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமார் பங்கெடுத்தார். அன்றும் விழா பலவகையான சிக்கல்களைச் சந்தித்தது. பங்கெடுப்போர் பெருகினர். ஆனால் தங்க போதிய இடமில்லை. இரவெல்லாம் பேசியபடி கோவையின் தெருக்களில் அலைந்தோம். அன்றே விழாவுக்கு முந்தையநாள் சந்திப்பு நிகழ்ச்சி முக்கியாமன இலக்கிய நிகழ்வாக ஆகிவிட்டிருந்தது

 

 

தேவதேவனுக்கு விருதளிப்பது எங்களுக்கு நாங்களே விருதளிப்பதுபோல. ஏனென்றால் எங்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர் அவர். எங்களில் ஒருவர். ஆனால் நம் காலகட்டத்தின் பெருங்கவிஞனுக்கு முதன்மையான விருதுகள் பெரும்பாலும் வந்துசேரவில்லை. ஆகவே விஷ்ணுபுரம் விருதை பெரிய அளவில் நிகழ்த்தவேண்டுமென முடிவெடுத்தோம்

அம்முறை விழா மிகப்பெரியதாகவே நிகழ்ந்தது. காரணம் இளையராஜா அவர்கள் பங்கெடுத்தது. அவரைப்போன்ற ஒருவர் பங்கெடுப்பதற்குரிய செலவுகள் ஏதும் ஆகவில்லை. ஏனென்றால் எங்களுக்காக இன்னொருவிழாவுடன் தொடர்புபடுத்திக்கொண்டு இலவசமாகவே அவர் வந்து கலந்துகொண்டார். அந்த விழா மறக்கமுடியாத ஒன்று. எண்ணியிருக்காத பெருங்கூட்டம் வந்து மொய்த்துக்கொண்டது. எங்களிடம் ஆட்கள் போதவில்லை. அன்று அவரை காத்து கொண்டுசென்று சேர்த்ததே பெரிய பணியாக இருந்தது.

 

அவரை பார்க்கவந்து முட்டிமோதிய இளைஞர்களை உந்தி அகற்றி அவரை மீட்டு கொண்டுசென்றோம். ஆனால் பின்னர் அது குற்றவுணர்ச்சியை அளித்தது. ராதாகிருஷ்ணனை அனுப்பி அவ்விளைஞர்களைத் தேடிக் கண்டடைந்து இளையராஜா தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச்சென்று சந்திக்கவைத்தபின்னரே நிறைவு வந்தது

 

 

தெளிவத்தை ஜோசப் அவர்களுக்காக விருது தமிழகத்திலிருந்து இலங்கைப்படைப்பாளி ஒருவருக்கு அளிக்கப்படும் முதல்பெரிய விருது. உண்மையில் அப்படி ஒரு விருதே இங்கே இருக்கவில்லை. உலகளாவிய தமிழிலக்கிய விருது என்றால் அதற்கு முன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல்விருது மட்டும்தான். தெளிவத்தை அவர்களுக்கு அளித்த விருதினூடாக விஷ்ணுபுரம் விருதும் ஓரு சர்வதேச விருதாக மாறியது

அவ்விழாவில் இந்திரா பார்த்தசாரதி கலந்துகொண்டது ஓர் இனிய நினைவு. எண்பது வயதில் இளைஞருக்குரிய குன்றா ஊக்கத்துடன், நகைச்சுவையுடன் அவர் இளைஞர்களுடன் இலக்கிய உரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

 

ஞானக்கூத்தன் விழாவைச் சிறப்பித்தது ஆவணப்படம். ஞானக்கூத்தன் பற்றி ஒரு நூல் வெளியிட்டிருக்கவேண்டும். அதற்கு முன் அத்தனை படைப்பாளிகளைப்பற்றியும் நூல்கள் வெளியிடப்ப்ட்டன. ஆனால் 2014 ல் நான் வெண்முரசு எழுத ஆரம்பித்துவிட்டிருந்தேன். ஒரு முழுநூல் எழுத நேரமில்லை. திட்டமிட்டபடி எழுத முடியவில்லை. ஆகவே ஆவணப்படமே போதும் என முடிவெடுத்தோம்

அவ்விழாவின் சிறப்பம்சம் புவியரசு கலந்துகொண்டது என இப்போது படுகிறது. ஞானக்கூத்தனுக்கு நேர் எதிரான சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்த கவிஞர். ஆனால் மிக உற்சாகமாக வந்து எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். மேடையிலும் சிறப்பாகப் பேசினார், ஆனால் தன்னுடைய கவிதைக்கொள்கையை விட்டுக்கொடுக்கவுமில்லை.

 

தேவதச்சனின் விருதுவிழா நிகழ்வை ஒட்டித்தான் விழாவுக்கு முந்தைய அரங்குகள் முறைமைப்படுத்தப்பட்டன. விழாவை முறையாக நடந்த்தலாம், முந்தையநாள் சந்திப்பு தன்போக்கில் இயல்பான உரையாடல்களாக அமையட்டும் என்று முன்னர் எண்ணியிருந்தோம். அம்முறை சந்திப்புக்கள் சிறப்பாக நிகழ்ந்தன. ஆகவே அதை முறைப்படுத்தவேண்டும் என்னும் எண்ணம் உருவாகியது

ஏனென்றால் தமிழகத்தில் முன்னர் வாசகர் -ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகள் பல நடந்திருந்தன. சென்ற இருபதாண்டுகளில் அவை படிப்படியாக நின்றுவிட்டிருக்கின்றன. அந்த உரையாடல் ஒர் இலக்கிய ச்ச்சூழலுக்கு மிக இன்றியமையாதது. அன்று கே.என்.செந்தில், முருகவேள், ஜோ டி க்ரூஸ் ஆகியோர் பேசியது அரிய நினைவாக நீடிக்கிறது

 

 

வண்ணதாசன் விழா எங்கள் எவர் முயற்சியும் இன்றியே சிறப்பாக நடைபெற்றிருக்கும். காரணம் அவர் கோவையிலேயே ஓர் இலக்கிய நட்சத்திரம். பெருந்திரளான வாசகர்கள் வந்திருந்தனர். விழாவுக்கு முந்தைய அமர்வுகள் மிகச்சிறப்பான இலக்கியக் கருத்தரங்கின் தன்மை கொண்டிருந்தன இரா முருகன், பாரதிமணி, பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், நாஞ்சில்நாடன் என அனைவருமே மிகச்சிறப்பாக வாசகர்களுடன் உரையாடினர்.

ஆனால் உச்சம் என்பது கன்னட எழுத்தாளர் எச்.எஸ் சிவப்பிரகாஷின் உரையாடல்தான். படைப்பாளியின் நிமிர்வும் அறிஞருக்குரிய திமிரும் கொண்ட அவருடைய பேச்சு வரலாறு, கன்னட இலக்கியம், சமயம் என பலதளங்களை தொட்டுச் சென்றது. அச்சந்திப்புகளின் நட்சத்திரம் அவரே. அவருடைய மேடைப்பேச்சும் அற்புதமாக அமைந்திருந்தது

 

அவ்வாண்டின் சிறப்பு விருந்தினர் நாஸர். கல்யாண்ஜி பற்றிய அவருடைய அழகிய நினைவுகூரல், பவா செல்லத்துரையின் உரை என விழா நிறைந்த அரங்கில் நடந்தது

 

 

சென்ற ஆண்டு சீ.முத்துசாமி. மலேசியாவின் இலக்கிய உலகின் முதன்மையான பெயர். மனச்சோர்வால் சிறிதுகாலம் எழுதாமலிருந்தவர். இவ்விருதின்மூலம் மேலும் ஊக்கம் கொண்டிருக்கிறார். அவருடைய புதிய நாவல் இவ்வாண்டு கிழக்கு வெளியீடாக வரவிருக்கிறது. மலேசிய இலக்கியவாதிகள் நவீன் வழிநடத்த  கலந்துகொண்ட இலக்கிய அரங்கு தமிழ்ச்சூழலில் மிக முக்கியமானது. மலேசிய இலக்கியம் பற்றி இங்கே கல்வித்துறை சாந்த சம்பிரதாயமான பேச்சுக்களேஇதுவரை நிகழ்ந்துள்ளன. நவீன் விமர்சனநோக்குடன், இலக்கியத்தெளிவுடன் அளித்த அறிமுகம் மிகப்பெரிய திறப்பு

 

சிறப்புவிருந்தினர் ஆங்கில எழுத்தாளர் ஜனிஸ் பரியத் மற்றும் பி ஏ கிருஷ்ணன். இருவருமே உற்சாகமான உரையாடல்காரர்கள். ஜனிஸ் பரியத்தின் சிறுகதைகளை நண்பர்கள் மொழியாக்கம் செய்திருந்தார்கள். இவ்வாண்டு அக்கதைகளை நற்றிணை நூலாக வெளியிடுகிறது

இந்நிகழ்ச்சியில் அனைத்து எழுத்தாளர் சந்திப்புகளும் முன்னரே முழுமையாகத் திட்டமிடப்பட்டிருந்தன. இளம் எழுத்தாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களை வாசகர்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களுக்கான மேடைகள் அவர்களுக்கும் அவர்களை அறியமுயலும் வாசகர்களுக்கும் உதவியானவையாக இருந்தன

 

எண்ணிப்பார்க்கையில் விஷ்ணுபுரம் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் திட்டமிட்ட அமைப்புடன் மேலும் பெரிய அளவில் நிகழ்ந்துவருவதையே காண்கிறேன். இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு விழா பெரிதாகிவிட்டிருக்கிறது

 »


விஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள்– வண்ணதாசன்

விஷ்ணுபுரம் விழா நினைவுகள்

விஷ்ணுபுரம் விழா பதிவுகள் 2017 சீ முத்துசாமி

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/116261