விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு

vlcsnap-error944

 

[2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுவதை ஒட்டி வாசித்தளிக்கப்படும் பரிசு அறிவிப்பு]

 

பண்பாடு என்பது நாம் வழக்கமாக நினைத்திருப்பதுபோல ஒரு நதியாக இயல்பாக ஒழுகிவருவது அல்ல. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதிருக்கும் அறிவியக்கத்தால் அதற்கு முந்தைய வரலாற்றிலிருந்து பண்பாட்டுக்கூறுகளை தொகுத்துக்கொண்டு, மதிப்பிட்டு, தேவையானவற்றை தேர்வுசெய்து, அவற்றைக்கொண்டு கட்டமைக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படுவது. தமிழ்ப்பண்பாடு இவ்வாறு தொடர்ச்சியாக தொகுப்பும் மறுவரையறையும் செய்யப்படுவதன் சித்திரத்தை பேராசிரியர் ராஜ் கௌதமன் எழுதிக்காட்டுகிறார்.

 

குறிப்பாக நான்கு காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் தமிழ்ப் பண்பாட்டுவரலாறு தொகுத்து மீண்டும் எழுதப்பட்டது. சங்ககாலத்தில் ஒருமுறை. பின்னர் களப்பிரர் காலகட்டத்தில். அதன்பின்னர் பல்லவர்களின் காலகட்டத்தில். இறுதியாக பத்தொன்பதாம்நூற்றாண்டில்.பத்தொன்பதாம்நூற்றாண்டில் தொகுத்து மறுவரையறை செய்யப்பட்ட வரலாற்றையும் பண்பாட்டையும்தான் நாம் தமிழ்வரலாறு தமிழ்ப்பண்பாடு என்று சொல்கிறோம்.

 

இவ்வாறு தமிழ்ப்பண்பாடு தொகுப்பும் மறுவரையறையும் செய்யப்பட்டபோது அன்றிருந்த அரசியலுக்கு ஏற்ப தமிழ்ப்பெருமையை முன்வைக்கும் பார்வை மேலோங்கியது. தமிழ் வரலாற்றிலும் பண்பாட்டிலும் அடித்தள மக்களின் இடம் என்ன, அவர்களின் வரலாறு என்ன என்னும் கேள்வி கேட்கப்படவே இல்லை. அந்தவினாவைக் கேட்ட முதன்மையான ஆய்வாளர் பேரா.ராஜ்கௌதமன்.

 

பேராசிரியர் ரணஜித் குகாவின் விளிம்புநிலை சமூகஆய்வு, ஃபூக்கோவின் பின்நவீனத்துவ சமூகவியலாய்வு ஆகிய முன்னோடி வழிமுறைகளைக்கொண்டு இங்கு தலித் பண்பாட்டு  வரலாற்றாய்வு முறைமை ஒன்றை உருவாக்கிய முன்னோடி. தமிழ்வரலாற்றின் தொடக்கம் முதலே சாதிய ஆதிக்கம் உருவாகி நிலைகொண்ட சித்திரத்தை ஆதாரங்களுடன் விரித்துக்காட்டும் அவருடைய ஆய்வுகள் நம்மை நாமே மேலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவக்கூடியவை. அவ்வகையில் தமிழ்ப்பண்பாட்டுக் களத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவை.

 

தலித் இலக்கியத்தின் முதன்மையான அழகியல்வடிவம் தன்வரலாறு. சிவகாமியின் பழையனகழிதல், பாமாவின் கருக்கு போன்ற முக்கியமான தன்வரலாற்றுப் புனைவுகள் தமிழில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் வைக்கப்படத்தக்க ஆக்கங்கள் ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகியவை. பண்பாட்டாய்வாளர், புனைவெழுத்தாளர் என்னும் இரு தளங்களிலும் பெரும்பங்களிப்பாற்றிய ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018  ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை வழங்குவதில் பெருமைகொள்கிறோம்

 

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா:விருந்தினர்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா இன்று