புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்

220px-Actor_Madhupal

விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்

 

விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை

 

தமிழில்: நிர்மால்யா

 Tiger+painting

 

லிஜீஷ் பத்மநாபன் கேமராவில் படச்சட்டத்தை நுட்பமாகச் சோதித்தான். ஒரு சதுரத்திற்குள் புலி தனது வாயைப் பிளந்தது. மஞ்சள் கண்களில் சோம்பல் நிறைந்த உணர்ச்சியின்மை. அது சூரிய ஒளியில் மின்னியது. ஒரு காட்சியை வெகு அருகில் பார்க்கும்போது மூர்க்கமானதாக, அச்சமூட்டுவதாக தோன்றுவதைக் கண்டு அவன் வியந்தான். வானத்து மேகங்களின் வண்ணம் புலியின் கண்களில் வேறொரு வானமாகியது. அது மஞ்சளில் முன் எப்போதும் அறிந்திராத ஒரு நிறத்தைக் கலந்தது. காடு தனது கடும் நெடியைப் பரப்பியது. புலியின் வாய்ச்சிவப்பு கேமராவின் இருட்டுக்குள் நிறைந்தது. மழைக்காடுகள் நிழலிடங்கள். ஒளி என்பது விளக்குடன் வரும் விருந்தாளி. நிழலுக்கும் வெளிச்சத்திற்குமிடையில் மௌனமான உரையாடல்கள்  இருப்பதாக  விழிக்காட்சி கூறும். காட்சியுடன் ஓசையையும் பதிவு செய்ய இயலுமென்றால் அந்த நிலைத்தக் காட்சி அசைவின் வேகத்தையும் உணர்த்துமென்று லிஜீஷ் மனதில் கணக்கிட்டான். காட்டின் உறுமல் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதைப் போல.  பூமிக்கடியிலுள்ள கற்பாளங்கள் ஒன்றின் மீது ஒன்று முட்டிக்கொள்ளும் போது பூமியின் நிலைகள் மாறுகின்றன. கடலின் கரை ஒரு பிரத்தியேக நிலையை அடைகிறது.

 

நான் மனிதனைப் படைத்தேன். இப்போது அவனிடமிருந்து என்னை விடுவிக்க முயல்கிறேன். தப்பிப்பதற்கான இந்த அழுகை பூமியின் வயிற்றை எப்போதைக்குமென அழிக்கிறது, விளையவும் வைக்கிறது. அது உடலிலிருந்து உடலுக்குத் தாவுகிறது. தலைமுறைகளிலிருந்து தலைமுறைகளுக்கு, இனங்களிலிருந்து இனங்களுக்கு செல்கிறது. அவை  ஆற்றல்கொள்கின்றன. ஊனுண்ணிகளாகின்றன. எல்லாப் பெற்றோர்களும் அவர்களின் விழிப்பிலும் கனவிலும் ஆழ்நிலையிலும் சொல்லிக்கொள்கிறார்கள், எங்களைக்க் காட்டிலும் மகத்தான ஒரு புதல்வனுக்கு நாங்கள் பிறவி தரவேண்டும். கொண்டாரபள்ளம் ஒரு நதி அல்ல, அதொரு வாழ்நிலம். பல வருடங்களுக்கு முன்பு அப்பெயரில் ஒரு நதி, மலை மீதிருந்து பள்ளத்தாக்குகளைக் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அதனுடைய நீரோட்டத்தில் வாழ்க்கை ஈரம் கொண்டது. குடியிருக்கும் மண்ணின் மீதான பேராசையும் தாக்கும்வெறியும்  காலப்போக்கில் ஒரு நதியை பூமியின் அடியாழத்திற்குள் மறைத்து விட்டன. வெகுகாலம் அனைத்து உயிரினங்களும் ஆதாரமாக இருந்த ஒன்று வான்வெளியில் ஆவியாக மறைந்தது மனிதன் என்னும் ஆணவத்தின் சிறுமையால். மனிதனால் ஒரு நதி இறப்பதென்பது காலத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் எதிரான  ஓர் எல்லைமீறல்.

 

மனிதர்கள் அப்பத்தைக் கொண்டு மட்டும் வாழக்கூடியவர்களல்ல எனக்கூறியது   அன்பின் மாற்றுச் சொல். வாழ்நிலம் என்பது மானுடர் வயிறுமுட்ட தின்று உறங்குவதற்கானது  அல்ல. அது அனைத்துச் சராசரங்களுக்கும் உயிர்களம். பூமியின் மூன்றில் இருபங்கு நீரால் சூழப்பட்டிருப்பதனாலேயே இங்குள்ள உயிர்வாழ்க்கை என்பதும் நீராலானது. பிரபஞ்சத்தில் ஓர் உயிர் உருவாவது, அது மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும்  தாயின் கருவறையின் சிறிதளவு நீரில்தான். நீரில் உடல் உருப்பெருகிறது. அவ்வுடலை நிலைநிறுத்துவதும் பூமியின் கருவறை நீர் தான். ஆகவே நீரால்தான்  பிரபஞ்சம் நிலைகொள்கிறது, வாழ்கிறது.

 

பாலகாட்டின் கிழக்கில்  மல்லீஸ்வரன் மலை ஆகாயத்தை நோக்கி தலையுயர்த்தி நிற்கிறது. பழங்குடி இனத்தின் மனிதர்கள் அந்த மலையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காட்டின் அடர்வுக்குள் அவர்கள் ஒர் முறைமையை உருவாக்கிக் கொண்டார்கள். உயிரற்ற புழுதிமண் முதல் உயிர் துடிப்பு கொண்டவை வரை அனைத்தும்   மல்லீஸ்வரனுக்குரியவையே என்றும் அதை அழிப்பதோ இல்லாமல் செய்வதோ பாவம் என்றும் விதி வகுத்தார்கள். அவ்விதி காட்டுவாசிக்கு மட்டுமல்லாமல் அங்கு உயிரின் நெறியாகவே இருந்தது. புல், வெட்டுக்கிளி முதல் பிரபஞ்சத்தின் எல்லாவற்றிற்கும் அதற்கேயுரிய சத்தியம் இருப்பதாகவும் அவை அனைத்திற்கும் இப்பூமியில் சுதந்திரமாக வாழ்வதற்கான தகுதியிருப்பதாகவும் பொருள்கொள்ளும் ஒரு விதி. ஆனால், காலங்களின் ஊடாக மனிதனே அனைத்து சராசரங்களுக்கும் அதிபதி என்று மாற்றி எழுதிக்கொண்ட ஒரு தன்முனைப்பு  மனிதனை பிறவற்றிலிருந்து பிரித்துக்கொண்டதை காண நேர்ந்தது. வாழ்நிலத்தின்  நெறிகள்  நாகரீகமுள்ளவர்களும் நாகரிகம் அற்றவர்களும் என்னும் தரம் பிரித்தலாக மாற்றப்பட்டு   எதுவும் தன்னுடையதே என்னும் மானுடனின் எண்ணமாக ஆவதையும் காண நேர்ந்தது. எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முன்னேற்றத்தின் பாதையில் பயணிப்பவர்களாச் சொல்லிக்கொள்ளும் ஒருவகை மனிதர்கள் எல்லாப் பிரபஞ்ச உண்மைகளையும் நிரகாரிப்பதையும் அது பிரபஞ்சத்தின் இருப்புக்கே ஆபத்தாக மாறுவதையும் காண நேர்ந்தது.

 

நதி ஒரு வாழ்வுநிலை என்று எல்லா நூல்களும் கூறுகின்றன. ஆகவே, நீர் என்பது ஆதியானது என்றும் அது ஒருபோதும் அழியாமலிருக்கும் என்றும் மனிதன் நம்புகிறான். ஆனால், வரப்போகும் பெரும்யுத்தங்கள் அனைத்துமே நீருக்காகவே இருக்குமென்று உலக அறிவியலாளர்கள் தொடர்ந்து நினைவூட்டி வருகிறார்கள். காடு என்பது நதியின் தாய். மண்ணின் ஆழங்களில் வேர் செலுத்திய பெருமரங்களின் வேர்களின் நடுவில் உயிரின் தூயநீர் பாதுகாக்கப்படுகிறது.

 

லிஜீஷ், புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது என்னும் புத்தகத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டு  பரப்பி வைக்கப்பட்ட படங்களில் கண்களைப் பதித்தான். மரங்களும் விலங்குககளும் புல்லும் வெட்டுக்கிளியும் வண்ணத்துப்பூச்சிகளும் காய்ந்த மலைச்சரிவும் பயிரிடப்பட்ட சமவெளியும் ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சியைப் போல தெரிந்தன. படியெடுத்த எழுத்தில் அடையாளமிட்ட இடங்களில் இணைக்க வேண்டிய படங்களை அவன் தேடினான். இயற்கையை அறிந்த ஒரு புகைப்படக் கலைஞனின் மனம், எழுதி நிறைவு செய்த ஒரு நதியோட்டத்தின் ஊடாக நெளிந்து சென்றது. மலைச்சரிவிலிருந்து வழிந்திறங்கி பள்ளத்தாக்கின் சதுப்புநிலங்களின் ஊடாகத் தவழ்ந்து நதி தனது சங்கமத்தை எட்டும் ஒரு பயணத்தின் வெவ்வேறு காட்சிகளை முன்னர் ஒருமுறை அவன் பதிவுசெய்திருந்தான். அவற்றை அவன் புகைப்படத்தொகையிலிருந்து தேர்ந்தெடுத்து இப்புத்தக முகப்புக்குப் பயன்படுத்துவதற்கென ஒதுக்கி வைத்தான்.

 

நகரத்தில் தலைமைச்செயலகத்தின் எதிரில் போலீஸ்காரர்கள் திரண்டனர். அவர்கள் யாரையோ எதிர்பார்ப்பதைப் போல நின்றிருந்தார்கள். வெள்ளையம்பலத்திலிருந்து ஒரு பேரணி புறப்பட்டு விட்டது. அது மாணவர் அமைப்பின் பேரணி. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்காகக் கொதித்தெழுந்த ஓர் அமைப்பு என்பதை அவர்களின் கோஷங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். பத்திரிகையாளர்கள் அனைவரும் தலைமைச்செயலகத்தின் நடைபாதையில் கூடியிருந்தார்கள். அவர்களின் நடுவில் லிஜீஷ÷ம் நின்றிருந்தான். அவனது கேமரா எதிர்பாராமல் கிடைக்கவிருக்கும் ஒரு காட்சியை நோக்கி கண்களைக் கூர்ந்தது. கட்டடங்களின் பால்கனிகளில் பார்வையாளர்கள் குழுமினார்கள். மனிதன் மனிதனை லத்திகளாலும் உருட்டுக்கட்டைகளாலும் அடிப்பதையும் திட்டுவதையும் மிருகத்தனமாகத் தாக்குவதையும் பார்ப்பது ஓரு ரகசிய ஆனந்தம்.

 

ஆனால் லிஜீஷ் மிருகத்தனமான என்ற வார்த்தையை மனிதன்  பயன்படுத்துவதை  ஏற்கவில்லை. உடனிருந்த பல செய்தியாளர்களிடமும் தனது எதிர்ப்பைக் காட்டினான். மனிதன் அவனுடைய மனதிலும் சுற்றுப்புறங்களிலும் எல்லைகளை உருவாக்கி, அதுதான் அவனுடைய உலகம் அதற்குள் வேறு எவரையும் நுழையவிட மாட்டேனென்று தீர்மானித்திருப்பதைப்போல அதே மனதால் எல்லைகளில்லாத காட்டுயிர்களின் உலகத்திலும் எல்லைகள்  வகுக்கிறான். ஒவ்வொரு புலிக்கும் அதற்கேயுரிய ஒரு சாம்ராஜ்ஜியம் உள்ளது என்றும் அதற்குள் இன்னொரு புலி நுழைய முடியாது என்றும், அப்படி நிகழ்ந்தால் அவை சண்டையிட்டு ஒன்று அடுத்ததை இல்லாமல் செய்து விடும் என்றும், அவ்வாறாக தனக்கு மட்டுமே உரிய ஓர் இடத்தை அவை வகுத்துக்கொள்கின்றன என்று  மனிதன் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அதே மனிதன் எழுதுகிறான்.   அதைப் படிக்கும் போதும் கேட்கும்போதும் முன்பின் தெரியாத ஓர் இடத்தின் வழியாகப் பயணிப்பதைப் போலத் தோன்றும். விலங்குகள் என்பவை மனிதனின் அறிவுக்கப்பாற்பட்டவை என்று தோன்றுகிறது. அன்றைய நாளுக்கான பசியைப் போக்க உணவு தேடியலையும் உயிரினங்கள் விதைப்பதோ அறுவடை செய்வதோ கிடையாது. அத்துமீறி பிறரின் உடமைகளைக் கைப்பற்றிச் சேர்த்துக் களஞ்சியங்களை உருவாக்குவதில்லை. அவை பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் ஊடுருவுவதோ அவர்களின் சுதந்திரத்தை இல்லாமல் செய்வதோ கிடையாது. காட்டுயிர்கள் நவீன மனிதனைக் காட்டிலும் விவேகமும் அறிவும் கொண்டவை. ஓர் இரையை எதிர்பார்க்கும் புலியைப் பிற உயிர்கள் சட்டென்று புரிந்து கொள்ளும். அவ்வேளையில் புலியின் உருவத்திலும் பாவனையிலும் சத்தத்திலும் அசைவிலும் அம்மாற்றங்கள் தெரியும். அத்தகைய புலியைக் கண்டதும் காடு ஓசைகளால் பரபரக்கிறது. ஒவ்வொரு உயிரின் கண்ணிலும் மனதிலும் அந்த நடுக்கம் தெரியும். சிதறிப்போன யானைக்கூட்டங்கள் கூட சட்டென ஒன்றுசேரும். மற்ற பொழுதுகளில் புலியின் அசைவைக் காடு அறியாது. மானும் காட்டெருதுகளும் மேயும் புல்வெளிகளின் ஊடாக புலி அமைதியாக நடந்து செல்லும். ஓர் அசைவைக் கேட்டுச் சற்றுச்  சாய்வாகத் தலையுயர்த்திப் பார்த்துவிட்டு அமைதியாக மான்கள் மேய்ந்துகொண்டிருக்கும். புலியின் உறுமல்கள் என்பவை பசியின் ஓசைகள் என்னும் உண்மையை யாரும் நோக்குவதில்லை.

 

முழக்கம் போல திடீரென்று கோஷங்கள் எழுகின்றன. எல்லா பேருந்து முதலாளிகளையும் மாணவர்கள் முஷ்டி மடக்கிச் சண்டைக்கு அழைத்தார்கள். ஆட்சியாளர்கள் முதலாளிவர்க்கத்தைச் சேர்ந்தவர்களென்றும் சாதாரணமக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க இயலாதவர்களென்றும் அவர்கள் இலக்கிய மொழியில் கூவினார்கள். கோஷங்களில் முன்பைக் காட்டிலும் இலக்கியநயம். மாணவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக லிஜீஷ÷க்குத் தோன்றியது. வெள்ளை உடைகளில் ஆர்ப்பரித்து வரும் கடலலை, கரையின் சகதியை உறிஞ்சி இழுப்பதைப் போல போலீஸ்காரர்களை அந்த அணிவகுப்பு உள்ளே இழுத்துக் கொண்டது. பட்டாசு சத்தம். புகை எல்லாவற்றையும் மறைந்தது. நீராவி படிந்த ஜன்னல்காட்சி. மழை பெய்கிறது. புகையால் எதையும் அடையாளம் காண முடியவில்லை. லிஜீஷ் கேமராவை பையால் மூடினான். அது மழை அல்லவெனச் சட்டென்று தெரிந்து கொண்டான். போலீஸ்காரர்கள் தண்ணீர்பீரங்கியால் தண்ணீரைப் பீச்சியடித்தார்கள். தண்ணீர் நதியைப் போல சாலையில் ஓடுகிறது. மழைநீர் பாய்ந்தோடுவதைப் போல. மக்கள்க்கூட்டம் சிதறியது. புகை விலகியபோது சாலையில் ஒரு இயற்கைச்சீற்றம் நிகழ்ந்து முடிந்ததைப் போல சாலையோரத்திலும் குழிகளிலும் தண்ணீர் தேங்கியிருந்தது. தாகம்கொண்ட மண் அருங்கொடையாகக் கிடைத்த நீரைக் குடித்துத் தீர்க்கிறது. அவ்வேளையில் பாதி ஷட்டர் இறக்கப்பட்ட காப்பிக்கடையில் லிஜீஷ் நின்றிருந்தான். வெயிலின் வெப்பத்தில் சாலையோரம் தேங்கிய நீர் நீராவியாகி மேகங்களுக்குள் மறைந்தது.

 

பூமியின் உடமையாளர்கள் யாராக இருப்பார்களென்று கேட்கப்படும் கேள்வியைச் சற்று உரக்கக் கேட்க வேண்டியிருக்கிறது. பூமியைப் படைத்த இறைவன் மனிதனுக்கு இரண்டு பொறுப்புகளை அளித்தான். ஆதியாகமம் இரண்டாம் அத்தியாயத்தில் பதினைந்தாம் வசனம் இப்படிச் சொல்கிறது:  “கடவுளாகிய யாஹோவா மனிதனை வேலை செய்யவும் காவல்நிற்கவும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றது” உயிரை நிலைநிறுத்தி  பூமியைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதனுடையது. பூமியின் மீது எந்தவித உரிமையையும் நிலைநாட்ட முடியாத  அன்னியன் மனிதன். லேவியாராகமம் 25-ம் அத்தியாயம் 23-ம் வசனம் பூமியின் உரிமையைப் பற்றி தெளிவாகவும் கண்டிப்பாகவும் இப்படிச் சொல்கிறது. “நிலத்தை முழு உரிமையுடன்  விற்கக்கூடாது, நாடு எனக்குரியது. நீங்கள் என்னிடத்தில் நாடோடிகளாகவும், வந்து தங்கிச் செல்பவர்களாவும் இருப்பவர்கள் மட்டுமே” உலகப் பெரும்போருக்கான  அடுத்த காரணம் தண்ணீராக இருக்கும். பூமியின் 97விழுக்காடு தண்ணீர் உப்புநீராக உள்ளது. முக்கால்பங்கு பனிமலைகள். எஞ்சிய தூயநீரை மனிதன் எப்படி பயன்படுத்துகிறான் என்று பார்த்தால் ஓர் அரும்பொருளை எவ்வளவு கவனக்குறைவாகக் கையாள்கிறோம் என்பது புலனாகும். மாசடைந்த நதிகள், அழிந்துகொண்டிருக்கும் பல்லுயிர் சமூகம், மூடப்படும் நீரோட்டங்கள், ஆக்கிரமிக்கப்படும் நீர்நிலைகள். பூமியை மனிதன் வான்வெளியில் கரைந்து மறையச்செய்கிறான். வளர்ச்சியின் பேரில் எல்லோருக்குமாகத் தரப்பட்ட பூமியை வெகுசிலர் கையகப்படுத்தி நாசமாக்கும் அறமற்ற செயலைத் தீர்க்கதரிசனத்தில் பார்க்கிறோம். ஏசய்யா தீர்க்கதரிசனம் 24-ம் அத்தியாயம் 5-ம் வசனம்:  “பூமி அதில் வசிப்பவர்களாலே மாசடைந்திருக்கிறது. அவர்கள் இறையாணைகளை மீறி சட்டத்தை மாற்றி  மாறாநெறிகளுக்கு ஊறு விளைவித்திருக்கிறார்கள். ஆகவே பூமி சாபம் கொண்டது. அதில் வசிப்பவர்கள் தண்டனையை அனுபவிக்கிறார்கள்”

 

கடந்த காலத்தில் எழும் அமைதி உங்களின் நிகழ்காலத்தை அழிப்பதில்லை

 

பிறர் உங்களைக் குறித்து  எவ்வளவு சிந்தித்தாலும் அது உங்களைப் பாதிப்பதில்லை.

 

காலத்தினால் தரப்பட்டது எதுவாக இருப்பினும் காலத்தினாலேயே மாற்றப்படும்.

 

உங்கள் மகிழ்ச்சிக்கு உங்களைத் தவிர வேறுயாரும் காரணமாக இருக்க மாட்டார்கள்.

 

பிறர் வாழ்க்கையுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். அவர்களின் பயணம் எந்த வழியில்  இருக்குமென்பது உங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அதிகமாக யோசித்துத் தலையைப் புண்ணாக்காதீர்கள். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லையென்று நினைத்துக் கலக்கமடையாதீர்கள். அனைத்தையும் அறிந்தாகவேண்டும் என்று பிடிவாதம் கொள்ளவும் கூடாது.

 

எனவே, சிரித்துக் கொண்டேயிருங்கள். உலகில் உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும் நிறைவு பெற ஒரு வழி மட்டுமே உள்ளது. நிரந்தரப் புன்னகையால் எல்லாவற்றையும் எதிர்கொள்ளுங்கள். விடுதலையே எல்லா நெறிகளுக்கும் சாரம்..

 

சாயங்காலம்தான் அதைக் கேள்விப்பட்டான். அச்சுக்குக் கொடுத்துவிட்டதே எனக் கருதி சற்றுப் படுத்திருந்தான். புத்தகத்தின் வார்த்தைகள் உண்மையாகின்றன என்றே முதலில் தோன்றியது. தொலைக்காட்சிகள் அதை அப்படி பெரிய செய்தியாகத் தரவில்லை. வழக்கமாக எந்தக் குப்பையையும் ஒரு பெரிய துயரக் காட்சியாகக் கொண்டாடும் எந்தச் செய்தித்தொலைக்காட்சியும் அச்செய்தியை அப்படியொரு  ‘பிரேக்கிங் நியூஸாக’  அளித்து ’ஸ்க்ரோல்’ ஓட்டவில்லை.  சிறிய ஒரு ஊகம் என்ற அளவில்தான் அனைவரும் கிசுகிசுத்துக்கொண்டார்கள். சிராப்பள்ளி அணையின் இடதுபக்கம் ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எந்நிமிடமும் அணை உடையுமென்றும், அப்படி நிகழ்ந்தால் மூன்று மாவட்டங்களின் எல்லா உயிரினங்களும் மீண்டெழ முடியாமல் பிரபஞ்சச் சக்தியில் கரைந்தழியும் என்றும் செய்திகள். யாரும் எங்கும் விழவில்லை. பயத்தின் இருளில் அனைவரும் ஒளிந்துகொண்டார்கள்.  நிகழப் போகும் துயரத்தை அந்த அளவு கடினத்தன்மையுடன் அணுக யாராலும் இயலவில்லை. மனிதர்கள் எப்போதும் எதுவும் தங்களைப் பாதிக்காது என்றும், விபத்து என்பது தன் இடங்களை வந்துசேர முடியாத ஏதோ அபூர்வப்பொருள் என்றும் நம்பி வாழும் மந்தபுத்திகள் என்று புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு விபத்துக்கு நாம் சாட்சியாக வேண்டும். உலகத்தில் நிகழ்ந்த எல்லாத் விபத்துக்களிலும் எஞ்சி வாழும் பாதி உயிர்கள் இவ்வுண்மையை சொல்வதற்குரிய சாட்சிகளாக இருந்தபோதிலும் அவற்றை மறந்து வாழும் அற்பப்புழுக்களாக இருக்கிறார்கள் மனிதர்கள். எந்தக் காட்சியும் முழுமையானது அல்லவென்று அவர்கள் உணர்வதில்லை.

 

பிரஸ் கிளப்பின் கீழ்த்தள இருட்டில் பெரிய பரபரப்பு எதுவுமில்லை. தினமும் சந்திக்கக்கூடிய ரவி அண்ணன் கூட. ஒரு விபத்து எந்நிமிடமும் கேரளத்தை இரண்டு கரைகளாகப் பிரித்து விடுமென்றால் அணுக்கமும் தொடர்பும் கொண்ட உயிர்கள் மறையும் வெறுமையில் எஞ்சிய வாழ்க்கையை கடத்தவேண்டிய நிலைமையைக் குறித்து  யாருடனேனும் சற்று மனம்திறக்கவேண்டும் என்று ஒவ்வொரு பெக் உள்ளே செல்லும்போதும் லிஜீஷ் நினைத்துக் கொண்டான். புராதனமான ஓர் உலகிற்கு மனிதன் திரும்பிப் போக நேர்வது பார்வைகளில் மெய்யில்லாமையினால் என்று லிஜீஷ் பயந்தான். எல்லாச் செயல்களுக்கும் தெளிவான நேர்மை இருக்குமெனில் அது உருவாக்கும் ஆற்றலும் உண்மையாக இருக்கும். நிரம்பிய கோப்பைகளை வேகவேகமாக லிஜீஷ் காலிச் செய்து கொண்டிருந்தான். சுற்றி நிகழும் எதையும் அவன் உணரவேயில்லை. கருங்கல் சுவர் மீது தலையைச் சாய்த்துக் கொண்டான். சிகரெட்டுக்குத் தீ கொளுத்த மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எங்கெல்லாமோ இருந்து வந்த காற்றுகள்தான் முதலில் அவன் தீயை அணைத்தன. பிறகு நனைந்த தீக்குச்சிகள். கருங்கல் சுவரின் குளிர்ச்சியில் அவனது தலை மரத்தது. இழுத்து வெளித் தள்ளிய புகைச்சுருள் பனியைப் போல படர்ந்தது. சிறிய அறைக்குள் இருட்டு மட்டுமே இருந்தது.

 

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

 

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6
அடுத்த கட்டுரைமதுபால் கதைகள் – கடிதங்கள்