அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,
நலம் நலமறிய ஆவல்.
எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு நீங்கள் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறன். அதை மீண்டும் உங்களது வலைத்தளத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை உங்களிடமே மீண்டும் கேட்டு உங்களின் எண்ணத்தையும் பெற்றுக்கொள்ள ஆசை.
இன்றைய கால கட்டத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களும் பெரும்பாலும் முழுமையாக ஆங்கிலத்திலும் அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலும் பேசுகிறார்கள். ஏன் நமது தொலைகாட்சிகள் கூட அப்படிதான். என் போன்ற தமிழ் உணர்வு உள்ள தமிழர்கள் எல்லோரும் இந்த நிலைமை கண்டு மிகவும் வருததப்படுகிறோம். இப்படியே புலம்பி கொண்டு இருப்பதை விட்டுவிட்டு எதாவது செய்ய வேண்டும் என்று தோணுகிறது.
நான் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன். எனக்கு பத்து வயதில் ஓர் மகனும் ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே அமெரிக்காவிலேயே பிறந்து வளர்கின்றனர். என் குழந்தைகள் விளையாடும்போது மற்ற தமிழ் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். நாங்கள் வீட்டில் எப்பொழுதும் தமிழில்தான் பேசுகிறோம் அப்படியிருந்தும் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியவில்லை. இதற்கு அவர்களைக் குறை சொல்ல இயலவில்லை. அவர்களைச் சுற்றி அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவதால் அவர்களுக்கு அந்த மொழி தன்னாலே வந்துவிடுகிறது. அதே சமயம் சீனா போன்ற நாட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் அப்படிப் பேசுவதில்லை.
சென்னை போன்ற நகரங்களில் முக்கால்வாசி பேர் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதற்கு காரணம் நாம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக பார்க்காமல் நமது அந்தஸ்தை உயர்த்தும் ஒரு ஏணியாக பார்க்கிறோம் என நினைக்கிறேன். என் குழந்தைகள் எனது தாயாரிடம் பேசும்போது மட்டும் தமிழில் பேசுவார்கள்.
இப்படி [வெளிநாடுகளில்] ஆங்கிலம் நமது தமிழைப் படிப் படியாக முழுங்கிக்கொண்டு இருக்கிறது.
உலகம் முன்பு போல் இல்லாமல் இப்போது மிகவும் சுருங்கி விட்டது. இதில் நாம் ஒரு மொழியை வளர்ப்பதினால் உலகோடு ஒத்து வாழமுடியுமா? மொழிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது சரியா? ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாளடைவில் பகைதானே வளரும்? என்ன லாபம் கிடைக்கும்? அதாவது ஒவ்வொருவரும் தன மொழியை வளர்ப்பதன் மூலம் பகை வளர வாய்பிருக்கிறது. ஒருவன் தனிப்பட்ட ஒரு மொழியை வளர்ப்பது சமுதாயத்தைப் பிரிப்பது போன்று தானே அர்த்தம்? இந்தியா போன்ற பல மொழி பேசும் நாட்டில் ஒரு மொழியை வளர்ப்பது நாளடைவில் பிரிவினைவாதத்திற்கு இது வழி வகுக்குமா?
அன்புடன்
அருள்
அன்புள்ள அருள்
நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள். பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் ஒருநாளில் கொஞ்ச நேரம் மட்டுமே நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள். மிச்சநேரமே அவர்களை வடிவமைக்கிறது
ஆனால் மழலைப்பிராயம் முடிந்தபின்னர் வீட்டில் நீங்கள் தமிழ் பேசினீர்கள் என்றால் அவர்கள் தமிழும் கற்றுக்கொள்வார்கள். தமிழை அவர்களுக்கு அளிப்பது உங்கள் கடமை. அவர்கள் ஏற்பதும் மறுப்பதும் அவர்களின் விருப்பம். மறுத்தால் அது அவர்களுக்கே நஷ்டம்.
மொழிக்கான தேவை என்பது அக்குழந்தைகளின் இயல்பான ஆன்மீக வல்லமை சார்ந்த விஷயம்.வெறுமே உலகியலார்வம் மட்டும் உள்ள குழந்ததைகளுக்கு ஒருவேளை தாய்மொழி தாய்நாடெல்லாம் பொருட்டாகத் தெரியாது. ஆனால் கணிசமான குழந்தைகள் அப்படி அல்ல. அவற்றுக்குள் ஆன்மீகமான ஒரு நாட்டம் உள்ளது. அவைதான் கலைகளையும் சிந்தனைகளையும் நோக்கிச் செல்கின்றன.
குழாய் பழுதுபார்ப்பதிலோ அல்லது கணிப்பொறித்துறையிலோ அல்லது ஏவுகணை விடுவதிலோ உள்ளீடற்ற தொழில்நுட்ப வேலைகளைச் செய்து ஓய்ந்தவேளைகளில் குடித்து முடிந்தவரை துய்த்து வாழப்போகும் பிள்ளைகளுக்கு தாய்மொழி இல்லையேனும் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனால் கலைகளையும் இலக்கியத்தையும் சிந்தனைகளையும் தொட்டறியும் இயல்பான நுண்ணுணர்வுள்ள குழந்தைகளுக்கு அது பெரிய இழப்பாகும்.
மொழியைத் தகவல் தொடர்புக்கான ஒரு ஊடகமாக மட்டும் பார்த்தால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் மொழி என்பது அதுவல்ல என்பதே நவீன மொழியியலின் கூற்று. மொழி என்பது மாபெரும் குறியீட்டுத்தொகை. தமிழ்ப்பண்பாட்டுக்கு ஐயாயிரம் வருட பழமை உண்டு. இத்தனை காலமாக அது ஈட்டிய பண்பாடும் ஞானமும் முழுக்க குறியீடுகளாக ஆகி நம் கூட்டு மனத்தில் உறைகிறது. அக்குறியீடுகளை சுட்டும் ஒலிக்குறிப்புகளே தமிழ்ச் சொற்கள். அதுவே மொழி என்பது
அச்சொற்களை நீங்கள் இன்னொரு மொழிக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அந்த அன்னியமொழியின் சொற்கள் அங்குள்ள மக்களின் ஆழ்மனக் குறியீடுகளைச் சுட்டக்கூடியவை. நம் சொற்களை அவற்றுக்கு நிகரான அவர்களின் சொற்களுக்கு மாற்றி நாம் ஒருவாறாக நம்மை தொடர்புறுத்த மட்டுமே முடியும். கற்பு என்ற சொல் வேறு Chastity வேறு.
ஆகவே தமிழ் தேவையா என்றல்ல, இன்றுவரையிலான தமிழ்ப்பண்பாடு தேவையா இல்லையா என்பதுதான் கேள்வி. அது தேவையில்லை, அழியட்டும் என்றால் தமிழும் அழியட்டும். வள்ளுவனும் கம்பனும் இல்லாத ஓர் உலகம் அது, இல்லையா?
ஆனால் அப்படி எல்லா உலகப் பண்பாடுகளும் அழிந்து ஆங்கிலம் மட்டும் இருக்கவேண்டும் என்றால் அது எவ்வகையான ஆதிக்கம் என்று மட்டும் யோசித்து பாருங்கள். அந்த உலகம் எப்படி இருக்கும்! ஆங்கிலேயரல்லாத மக்கள் அனைவரும் வெறும் நுகர்வோராக, உழைப்பாளிகளாக ஆகவேண்டும் என்று சொல்வதற்கு சமம் அல்லவா?
ஜெ