«

»


Print this Post

குகை கடிதங்கள் -2


2

குகை [சிறுகதை]-1

குகை [சிறுகதை] -2

‘குகை’ [சிறுகதை]-3

‘குகை’ -சிறுகதை -4

அன்புள்ள ஜெ,

குகை ஒருமாதிரி கொந்தளிப்பையும் பயத்தையும் உருவாக்கிய கதை. இந்தவகையான உருவகக் கதைகள் நிறையவே வாசித்திருக்கிறேன். குகை மனிதனின் அடிப்படையான கனவுகளில் ஒன்று. ஆகவே கொஞ்சம் மனம்பிறழ்ந்தாலே நாம் அதற்குள்தான் செல்கிறோம். ஆனால் இந்தக்கதையின் பயமுறுத்தும் அம்சம் இதிலுள்ள மிகச்சரியான லாஜிக்தான்.

அந்த லாஜிக்தான் பயங்கரமானது. அவன் கலைக்களஞ்சியங்களை நிறைய வாசிக்கிறவன் என ஒரு க்ளூ இருக்கிறது. ஆனால் அந்த தகவல்களைக்கொண்டு பக்காவான ஒரு சமான உலகை அவன் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். அந்தவகையான ஒரு முழுமையான லாஜிக் இருக்குமென்றால் எப்படி அந்த உலகிலிருந்து தப்பிப்பது என்ற பயம் வந்துவிட்டது. அந்த உலகத்திலுள்ள லாஜிக்பிழைகளை வைத்துத்தான் அது பொய்யானது என்று நம் மனம் புரிந்துகொள்ளமுடியும். நம்முடைய ஆழம் அதை விலக்குவதற்கும் நாம் மெய்யான உலகுக்கு வருவதற்கும் அது அவசியம்.

கனவிலேயேகூட கனவுகாணும்போது என்னதான் நாம் அதிலிருந்தாலும் இதில் எங்கோ லாஜிக் இல்லையே என்ற எண்ணம் இருந்துகொண்டிருக்கும். அந்த குழப்பத்தால்தான் நாம் வெளியே வருகிறோம். இந்த அளவுக்கு பக்காவான லாஜிக்குடன் பிழையே இல்லாமல் இருந்தால் அதுவும் இன்னொரு உண்மையுலகம்தானே? அதிலிருந்து வெளியே வருவதே முடியாதே. அதுதான் பயம் அளிக்கிறது.

இதை நானே பார்த்திருக்கிறேன். நாம் சில மனநிலை மாறியவர்களைப் பார்க்கையில் அவர்கள் அவர்களின் பார்வையில் மிகமிக லாஜிக்கலான சரியான ஒரு உலகத்திலே வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவர்களை அந்த உலகத்திலிருந்து மீட்கவேண்டுமென்றால் அந்த லாஜிக்கை உடைக்கவேண்டும். அது முடியாமலானால் என்ன ஆகும்?

அதோடு உண்மையுலகம் என்றால் என்ன? அவன் வாழும் குகையும் எல்லா லாஜிக்கும் கொண்டது. அங்கேயும் எல்லாமே இருக்கிறது. அங்கிருந்து ஏன் மீண்டு வரவேண்டும்? இங்கே இருக்கும் உண்மையுலகம் மட்டும் உண்மையா என்ன?

நினைக்க நினைக்க பயத்தையும் விதவிதமான கேள்விகளையும் எழுப்பிய கதை. எனக்கு மேட்ரிக்ஸ் சினிமா இதேபோல ஒரு பயத்தையும் உண்மையுலகம் என்றால் உண்மையிலேயே என்ன என்ற கேள்வியையும் அளித்தது. இதற்குமேல் சொல்லத்தெரியவில்லை.

எஸ்.குமார் மகேஸ்வரன்

ஜெ!

குகை (நெடுஞ்)சிறுகதை வாசித்தேன். பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களைக்கொண்டு சிறுகதை விளங்குகிறது. 1. மனோவியல் சார்ந்த வாசிப்பு, 2.தத்துவம் சார்ந்த வாசிப்பு, 3. வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த வாசிப்பு என நான் அவற்றை வகைப்படுத்திப் பார்க்கிறேன்.

  1. மனோவியல் வாசிப்பு: மனநலம் பிறழ்ந்த ஒருவனின் அடக்கப்பட்ட மனம் ஒரு திறப்பினைப் பற்றிக்கொண்டு அதை ஊடகமாகக்கொண்டு திறந்த மனத்துடன் ஒரு கட்டுபாடான ஆனால் கட்டற்ற குகை என்னும் வழியைப் பின்பற்றி உலாவுகிறது; தனக்கான வழியைத் தேடமுயல்கிறது.இறுதியில் அது தான் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைகிறது.

மனோவியல் தெரிந்தவர்கள் இதனை இன்னும் மிக விரிவாக விளக்கமுடியும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக அமையும். அதாவது ஒரு மனோவியல் பிரச்சனை எப்படி ஜெயமோகனின் கைவண்ணத்தில் ஒரு இலக்கியமாகிறது என்பதையும் அவர்கள் அறிய முற்பட்டால் அவர்களின் வாசிப்பு இன்னும் கூர்மையடையும்.

அவனின் தாய் அவனைப் புரிந்துகொண்டவளாக வருகிறாள்; மருத்துவம் பார்க்கிறாள். எனினும் அவனோடான உடையாடலை; அவனுக்கான உரையாடலைத் தவிர்க்கிறாள். அவன் மனைவியும் அவனோடு எந்த உரையாடலையும் வைத்துக்கொள்வதில்லை. ஒரு தந்தையோ குழந்தையோ இருந்திருந்தால் அவனுக்கான உரையாடல்வெளி திறக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஜெயமோகனின் பாத்திரப்படைப்பு நுட்பமாக இதனைக் கொள்ளலாம்.

எனவே பூட்டப்பட்ட மனம்; ஒவ்வாத பழைய வீட்டுச்சூழல் மற்றும் அவனை எப்போதுமே தூங்க வைக்கும் மருந்து மாத்திரை என எல்லா விசயங்களுமே அவனுக்கான வெளியைக் குறுகடித்துவிட்டிருக்கிறது.

புதிய வீட்டில் அவனுக்கான ஒரு தனியறை கிடைக்கிறது. அவனுடைய மனம் ஒரு திறப்புக்கான வெளியைத் தேடுகிறது; மனத்தைப் பிதுக்கிக்கொண்டு எண்ணம் வெளிப்படுகிறது. அதற்கான ஒரு குறியீடாக குகை அமைகிறது.

சிறுவயதில் நூலகம் மட்டுமே அவனுக்கான ஒரு வெளியாக இருந்திருக்கிறது. அவன் அப்போது ஊரையும் நன்கு சுற்றிவந்திருக்கிறான். ஒரு கட்டத்திற்குமேல்தான் மனநலம் இழந்திருக்கிறான். இந்தக் குகை அவன் சிறுவயதில் உல்லாசமாகச் சுற்றிய எண்ணங்கள் மற்றும் நூலகத்தில் படித்த வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த அறிவு இரண்டையும் வெளிப்படுத்தும் கருவியாக அமைகிறது.

குகைக்குள் வாழும் வெளிநாட்டவர்கள்கூட வரலாற்று மனிதர்களாகவே – வரலாற்றின் படிவங்களாகவே அமைகின்றனர்.

ஆழ்மனத்திற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஆழ்மன வெளியெங்கும் – குகையெங்கும் காமமும் வஞ்சகமும் அறியவருகின்றன. அவனின் மனநலப்பிறழ்வு அவனின் காமத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தவர்களின் காமத்தை வெளிப்படுத்துகிறது.மற்றவர்களுக்கு இப்படி ஒரு குகை கிடைத்தால் அவர்களின் காமமே வெளிப்பட்டிருக்கும்.

காமத்தை எழுதுகிறவனின் கையில் இந்தக்கதைக்கரு கிடைத்தால் இந்தக்கதை ஒரு பாலியல் சார்ந்த கதையாக மாறியிருக்கும். ஆனால் ஜெயமோகனின் கைகளில் அது கலையாக வெளிப்படுவதைப்பார்க்கிறோம்.

வெளியெங்கும் அலைந்துவிட்டு அம்மனம் மீண்டும் தன் கூடடைகிறது; இந்தக் குகைவாழ்க்கையைக்கூட அந்த மென்மையான மனத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்று தோன்றுகிறது. மனோவியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் ஜனரஞ்சகமாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

2.தத்துவவாசிப்பு: இங்கு பாரதியின் ஞானரதம் நினைவுக்கு வருகிறது. நித்திரையில் பாரதி ஒரு கனவு காண்கிறான். கற்பனைத் தேரில் ஏறி சொர்க்கலோகம் போன்ற ஒன்றைக்காண்கிறான். பாரதியின் கற்பனையின் எல்லையைத் தொட்ட ஒரு படைப்பு அது.

குகையில் ஜெயமோகன் ஒரு ஆழ்மனப்பயணத்தை ஆரம்பித்துவைக்கிறார்.

பாரதியின் மனம் திரிவிக்கிரமனாய் விண்ணோக்கிப் பாய்ந்தது. ஜெயமோகன் கூர்மாவதாரமாய் பூமியைத்துழைத்து உள்வழிப்பயணம் மேற்கொள்கிறார்.

பாரதிக்கு அந்தப்பயணத்தில் லௌகீக விசயங்கள் தேவைப்படவில்லை. முழுக்க முழுக்க கற்பனைப்புனைவினாலேயே நடத்துகிறார். ஆனால் ஜெயமோகனுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறது; ஒரு வரலாறு தேவைப்பட்டிருக்கிறது. ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போதுமான புறக்காரணிகளை அம்மா, மனைவி என்னும் வடிவங்களில் கட்டமைக்கிறார்.

பாரதியின் கற்பனை உலகம் பரவசமானது. ஜெயமோகனின் கற்பனை உலகம் படபடப்பானது. அடிவயிற்றை எக்கிக்கொண்டே வாசிக்கவைப்பது.பாரதின் பயணமும் திரும்பவந்து கூடடைவதில் முற்றுப்பெறுகிறது. குகைப்பயணமும் மீண்டும் கூடடைகிறது.

இக்கதையில் ஒரு ஞானத்தேடல் இருக்கிறதா? உள்மனத்தை அறிய முயற்சிப்பதுதான் ஞானத்தேடல். இந்தக்குகை உள்ளொளியைத்தேடும் பயணம்தான். ஆனால் குறைபட்டமனம்; குறைபட்ட மனத்தினால் ஆன்மீகத்தின் முழுமையை உட்கொள்ளமுடியாதல்லவா. அதனால் அது எந்த வெற்றியையும் பெறாமலேயே திரும்பிவருகிறது. ஆனாலும் உள்ளோளித் தேடல் என்பது ஒரு ஆன்மீகனுக்கு அவசியமானது. இந்தத் தேடல்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். ஒருநாள் அது வெற்றிபெறும்.

3.வரலாறு மற்றும் பூகோள வாசிப்பு: ஒரு கதையினைப்படைக்கும்போது நம்பகத்தன்மை மிகமுக்கியம் ஆகும். அதற்கான ஊடுபொருட்களாக- களனாக வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த விசயங்களை ஜெயமோகன் அமைத்துள்ளார்.

இந்தக்கதை ஒரு வட இந்திய நகரத்தில் நடக்கிறது. இந்தி பேசும் நகரம் என்பதற்கான ஒரு சிறு குறிப்புவருகிறது.

இந்தக் குகையில் காட்டப்படும் நில அமைப்பு தமிழகத்திலோ அல்லது கேரளத்திலோ இல்லாதது. நம் நிலம் கடினப்பாறைகளால் ஆனது.அவைகளில் சமணர்கள் வாழ்ந்ததைப் போன்று இயற்கைக் குகைகள்தான் உண்டாகும். செயற்கையான ஒரு நகரம் முழுவதையும் இணைக்கும் குகைப்பாதைகளை இணைக்கவே முடியாது. எனவேதாம் ஜெ.மோ. வட இந்திய நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவருடைய இந்தியப்பயணம் என்னும் நூல் இதனை விளங்கிக்கொள்ள உதவும்.

நூலகம் வாயிலாக அவர் பிரிட்டிஷ் காலத்து வரலாற்றைப் பின்புலமாக ஆக்குகிறார். கதாநாயகன் நூலகம் செல்லும் வழக்கம் உடையவனாக இருக்கிறான். அதிலும் வரலாறு சார்ந்த நூல்களைப் படிப்பவனாக இருக்கிறான்.

…………………. …………………. ……………………..

எங்கள் கிராமம் கன்னியாகுமரி திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான கடற்கரைப்பகுதியில் மங்களா என்று எங்களால் அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான கட்டட அமைப்பு உள்ளது. முழுவதும் சுதை, செங்கலால் அமைக்கப்பட்டது. மேல்கூரையும் அதே சுதையால் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட பெட்ரோல் கொண்டுவரும் கண்டெயினர் உருளைபோன்ற அமைப்புடையது.

சன்னல் போன்ற திறப்பின் வழியாக சென்று ஆடு மாடு மேய்ப்பவர்கள் ஓய்வு எடுப்பர். அந்த மங்களா பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதன் மத்தியில் ஒரு ஆழ்துழைக் கிணற்றுக்குப் ‘போர்’ போட்டது போன்ற அமைப்பு இருந்தது. அது பற்றிய வாய்மொழிக்கதை உள்ளது.அது: உள்ளே பொக்கிசம் இருக்கு. ஆனா அதைப் பூதம் காக்கிறது. அதை யாரும் தோண்டிப்பார்க்கக்கூடாது. அவ்வளவுதான். அதையாரும் எந்த முயற்சிக்கும் உட்படுத்தவில்லை.

சில நேரம் சில ஆபீசர்கள் அயல்நாட்டாரோடு வந்து பார்த்துவிட்டுப் போவதைப்பார்த்திருக்கிறோம். அவர்கள் மக்களிடம் எதுவும் பேசியதில்லை.மக்களும் அது என்ன என்று கேட்டதில்லை. ஒரு கட்டத்தில் மங்களா உள்ளே யாரும் போகமுடியாதபடி சிமென்டால் சன்னல்களை அடைத்துவிட்டனர். இதே போன்ற மங்களா ஒன்று கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் கல்லூரிச்சாலையில் அழிந்துகிடப்பதைக் கல்லூரி செல்லும் நாட்களில் பார்த்திருக்கிறேன்.

கன்னியாகுமரி கோயில், வட்டக்கோட்டை, இந்த இரண்டு மங்களா இவற்றிற்கிடையில் குகை உறவு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது.போர்க்காலங்களில் கோட்டை தாக்கப்படும்போது தப்பிப்பதற்காக அரசர்கள் ஏற்படுத்திய குகை வழிகளாக இருக்கலாமோ?

இது போன்ற கடற்கரை நிலங்களில்மட்டுமே தமிழகத்தில் குகைகள் சாத்தியம். ஒரு நகரம் முழுமைக்கான குகைவழிப்பாதைகள் தமிழகத்தில் சாத்தியமே அல்ல. நமது கருங்கல் பாறைகளைக் குடைவது அத்தனை எளிதல்ல. அது மட்டுமல்ல அவை எளிதில் நொறுங்கக்கூடியவை.மயிலாடியில் சிற்பம் செய்யப் பயன்படுத்தும் பாறைகள் சாதாரணமானப் பாறைகள் அல்ல. அவை நொறுங்காதவை. சுசீந்திரம் சிற்பங்கள் செய்யப்பயன்பட்டுள்ள பாறைகளுக்கும் நமது சாதாரண பாறைகளுக்கும் உறவெதுவும் இல்லை. அவை நிறத்திலும் தரத்திலும் மிக வேறுபட்டவை.

…………. ………………….. ………………….

மன அழுத்தங்கள் மிகைப்படும்போது பயணங்கள் மிக அவசியமானவை. மிக அழுத்தப்பட்ட மனம் ஒன்றின் பயணத்துக்கான புறவழிகள் அடைக்கப்படும்போது யாரும் அறியாதபடி அகவழியை அம்மனம் பயணத்துக்கான வெளியாகக்கொள்ளும். அந்தப் பயணம் பற்றிய கற்பனையை ஆங்கிலேய ஆட்சிப்பின்னணி மற்றும் இந்தியப் பயணத்தில் தான் பார்த்த நில அமைப்பு ஆகியவற்றைத் துணையன்களாகக்கொண்டு ஜெயமோகன் ஒரு அற்புதமான ‘குகை’யை வடிவமைத்துள்ளார். கதைக்கூறுகளின் கலவை மிக நேர்த்தியானது. கணவனுக்கும் மனைவிக்குமான உறவிடைவெளி மட்டும் போதுமான அளவிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். கணவன் மீதான மனைவியின் அத்தனை ஒதுக்கத்திற்கான காரணம் யாது? அது வெளிப்படுத்தப்பட்டிருந்தால் இந்தக் குகைப்பயணத்திற்கான தேவை இன்னும் அழுத்தமடைந்திருக்கும் என்று தோன்றுகிறது.

இந்தப் பதிவு எனது முதல் வாசிப்பில் எழுதப்பட்டது. ஒரு வாசிப்போடு நிறுத்தப்படமுடியாத படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் வாசிக்கிறேன்; எழுதுகிறேன்.

நன்றி ஜெ.

முனைவர் தி.இராஜரெத்தினம்

குகை கடிதங்கள் 1

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/116207