வங்கத்தின் பெண்குரல்

anita-mugshot-300x300

வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி பற்றி ராம்குமார் எழுதிய குறிப்பு

 

அனிதா அக்னிஹோத்ரி கதைகள்

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

 

திருமதி அனிதா அக்னிஹோத்ரி முதன்மையாக வங்காள மொழியில் தன் படைப்புகளை எழுதிவருகிறார். எழுத்துக்களை சரியாக அடையாளம் கண்டுகொண்ட ஐந்து வயது நிரம்பும் பொழுதே சிறு கவிதைகளை எழுதத்தொடங்கியுள்ளார். ஒரு நடுத்திர வங்காள குடும்பத்தில் பிறந்த இவருக்கு அவரின் பெற்றோர் தன் உணர்வுகளை தெளிவாக எழுத ஊக்கப்படுத்தினர் அவரின் முதல் கவிதையை வெளியிட்டது வங்காளத்தில் நமக்கு தெரிந்த மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒருவர், ‘சந்தேஷ்’ என்ற பாரம்பரிய சிறுவர் இதழை நடத்திவந்த இயக்குனரும் எழுத்தாளருமான திரு.சத்யஜித்ரே. ரே இவரின் கவிதைகளுக்கு ஒரு ரசிகராக இருந்ததை அவர் பல இடங்களில் திருமதி.அனிதாவின் கவிதைகளை வாசித்து காட்டியதில் தெரிகிறது. 13 முதல் 18 வயது நிரம்பும்வரை அவர் எழுதிய எல்லா கவிதைகளையும் திரு.சத்யஜித்ரே  வெளியிட்டிருக்கிறார். இதுவே இவர் தொடர்ந்து எழுத பெரும் ஊக்கத்தை தந்துள்ளதாக இன்று நினைவுகூறுகிறார்.

அதன் பின் வங்காளத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியரான பீமல் கரின் அறிவுரைப்படி இவர் சிறுகதைகள் எழுதத்தொடங்கியுள்ளார். 1980ம் வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று ஒருங்கிணைந்த மத்திய பிரதேச மா நிலத்திலும், பின்னர் ஒடிசா மா நிலத்திலும் முப்பத்தாறு வருடங்கள் பல்வேறு பதவிகளில் அரசு ஊழியம் செய்துள்ளார். கடைசியாக மத்திய அரசில் ஊரக மற்றும் வீடு வளர்ச்சி துறையிலும், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறைக்கும் தலைமை செயலாளராக இருந்து ஓய்வுபெற்றார். இவரின் பணிக்காலங்களில் பீஹார், வங்காளம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து பயணம் செய்து அம்மக்களின் வாழ்க்கையை தனது ஆக்கங்களில் கொண்டுவந்துள்ளார். வங்காளத்தில் எழுதினாலும் பரந்துபட்ட இந்த நிலங்களில் இருந்தே தன் கதைக்கருக்களை உருவாக்கியுள்ளார். இந்த மத்திய இந்திய நிலங்களில் மிகவும் பின் தங்கிய இடத்தில் இருக்கும் பழங்குடிகள் பற்றியும் பெண்கள் பற்றியும் இவரின் எழுத்துக்கள் முக்கிய வாக்குமூலங்கள் என்றே சொல்லலாம்.

சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் என எல்லா தளங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஏழு நாவல்களையும் பல கட்டுரை தொகுப்புகளையும் கொண்ட இவரின் படைப்பு களஞ்சியம் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஜெர்மன், சுவீடிஸ், ப்ரெஞ்ச் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. வங்காளத்தில் ‘பக்ஷிம் பங்களா விருது’, சாஹித்ய பரிஷாட் சம்மன், சரத் புரஷ்கார் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் புபன் மோகினி தாசியின் பெயரில் கொடுக்கப்படும் தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். ‘17’ என்ற இவரின் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு தொகுப்பு புகழ்பெற்ற ‘க்ராஸ்வர்ட்’ விருதை பெற்றுள்ளது.

2016ல் பணியில் இருந்து ஓய்வுபெற்றபின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கறும்பு அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு புதிய நாவலை எழுதி முடித்துள்ளார். இவரின் கணவர் திரு.சதீஷ் அக்னிஹோத்ரியும் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று மத்திய அரசின் கேபினெட் செயலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐ.ஐ.டி. பம்பாயில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களின் மகன் பொறியாளராக இருந்து பணியை துறந்து அமெரிக்காவில் மானுடவியலில் முனைவர் பட்டத்திற்காக படித்துக்கொண்டிருக்கிறார். ஒடிசாவின் பழங்குடிகள் பற்றி ஆய்வும் செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் இளையமகள் உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை சம்பந்தப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றுகிறார். திருமதி.அக்னிஹோத்ரியின் மகன் ஒரு கொலம்பிய பெண்ணையும் மகள் ஒரு தமிழரையும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமதி அனிதா அக்னிஹோத்ரி தற்போது கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார்.

முந்தைய கட்டுரைராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா :எழுத்தாளர் சந்திப்புகள்