ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6

_MG_7190

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5

6 தமிழ்ப்பண்பாட்டு ஆய்வின் மூன்று புள்ளிகள்

தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றை எழுதுதல் தமிழ் வரலாறு ஓரளவிற்கு எழுதப்பட்ட பின்னரே தொடங்குகிறது. எந்த ஒரு பண்பாட்டு வரலாற்று எழுத்திலும் இருக்கும் இயல்பான குறைபாடு என்னவென்றால் பெரும்பாலும் அது வேறேதோ ஒன்றுக்கான எதிர்வினையாகவே எழுதப்படுகிறது என்பதுதான். எதிரிகளுக்கெதிராக தன்னுடைய அடையாளத்தை தேடிக்கொள்ளுதல், உலகத்தின் முன் தன்னை முன்வைத்தல் போன்ற நோக்கங்கள் அதற்கு இருக்கின்றன.

இந்தியப்பண்பாட்டு வரலாற்றெழுத்து என்பது காலனி ஆதிக்கவாதிகள் இந்தியாவைப்பற்றி எழுதிய பண்பாட்டு வரலாற்று எழுத்துக்கு எதிர்வினையாகவே உருவாகியது. இந்தியா வரலாற்றில் பின்தங்கிய பண்பாடு கொண்ட ஒரு தேசமென்பது அவர்களின் முன்வரைவாக இருந்தது orient என்ற வார்த்தையே இந்திய மற்றும் கீழைதேச பண்பாடுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒற்றைச் சொல்லில் அறுதியாக வரையறுக்கக்கூடியதாக இருந்தது. அதற்கெதிரான குரலும் ஐரோப்பியர்களிடமிருந்தே எழுந்ததென்பதில் ஐயமில்லை. ஐரோப்பா என்றுமே இரு நிலை கொண்டது. ஆதிக்கமும் மெய்த்தேடலும் ஒன்றையொன்று முயங்கி மறுத்து உருவாக்கும் ஒரு சித்திரத்தையே நாம் ஐரோப்பாவின் அறிவியக்கம் என்கிறோம்.

அந்த மெய்த்தேடல் கொண்டவர்கள் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டையும் தத்துவத்தையும் கண்டடைந்தனர். அவற்றை முறையாக மொழி பெயர்த்து ஆவணப்படுத்தினர் .அந்த இரண்டாவது ஐரோப்பாவிலிருந்தே இந்தியா தன்னைக் கண்டடைந்தது. இந்தியாவில் உருவாகிவந்த கல்வி கற்ற உயர்தர நடுத்தர வர்க்கத்தினர் ஐரோப்பிய இந்தியவியலாளர்களிடமிருந்து இந்தியப்பண்பாட்டின் சிறந்த அம்சங்களை அறிந்துகொண்டனர். ஏற்கனவே அவர்கள் நுட்பமாக உள்ளுணர்ந்ததுதான் அது .இங்கிருந்த பல்வேறு மெய்யியல் அமைப்புகள் அந்த ஞானத்தை தொடர்ச்சியாக தக்க வைத்து ஆசிரிய-மாணவ மரபினூடாக கைமாற்றிக் கொண்டும் வந்திருந்தனர்.

ஆனால் மேலைக்கல்வி பெற்ற ஒருவர் மேலை நாட்டு ஆய்வாளர் ஒருவரால் அங்கீகரிக்கப்படும்போது ஓர் உணர்ச்சி மிகுந்த நம்பிக்கையை பெறுகிறார். மேலைக்கல்வி பெற்றவருக்கு எளிதில் புரியும்படியாக மேலை நாட்டு கூறுமுறையில் இந்திய மெய்யியல் சொல்லப்படும்போது மேலும் தெளிவடைகிறார். ஓர் உதாரணமாக விவேகானந்தரை எடுத்துக்கொண்டால் மேக்ஸ்முல்லர் உட்பட ஜெர்மானிய அறிஞர்களிடமிருந்தே அவர் இந்திய மெய்யியல்தத்துவத்தின் அடிப்படைகளை கற்றுக்கொள்கிறார் .ஆனால் அதை உள்ளுணரும் நுண்ணுணர்வை ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற இந்திய யோகியிடமிருந்து அறிகிறார். ராமகிருஷ்ணரோ பைரவி பிராமணி, தோதாபுரி என்று ஒர் அறுபடாத குருமரபின் வழி உருவாகி வந்திருந்தார்.ஏறத்தாழ இந்தியவியலை பேசிய அனைவருக்குமே இந்த இரண்டு மெய்யியல் மூலங்களும் இருப்பதை காணலாம்.

இவ்வாறு இந்தியப் பண்பாட்டு வரலாறென்பது ஐரோப்பிய மெய்நாடிகளாலும் இந்தியமீட்புவாதிகளாலும் இணைந்து உருவாக்கப்பட்டது வேதகாலத்திலிருந்து பக்தி காலகட்டம் வரைக்குமான இந்து மதத்தின் வரலாறு, பௌத்தம் சமணம் ஆகிய அவைதிக மதகங்களின் வரலாறு, தாந்திரிகம் முதலிய புறச் சமயங்களின் வரலாறு ஆகியவை பதினெட்டாம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக எழுதப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன மேக்ஸ்முல்லர், மோனியர் வில்லியம்ஸ், ஷெர்பாட்ஸ்கி, ஆர்தர் ஆவ்லோன் போன்ற பேரறிஞர்களின் பங்களிப்பு முதன்மையானது. பிரம்மஞான சங்கம் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் பெரும்பங்காற்றின. பின்னர் பிரம்மசமாஜம் ஆரியசமாஜம் ராமகிருஷ்ண இயக்கம் போன்றவை பண்பாட்டு வரலாற்றைக்கட்டி எழுப்புவதில் ஈடுபட்டன. எஸ்.என்.தாஸ்குப்தா. டாக்டர் ராதாகிருஷ்ணன் ,ஹிரியண்ணா என இந்திய பண்பாட்டு வரலாற்றை உருவாக்கும் இந்திய அறிஞர்களின் ஒரு நிரையும் உருவாகியது.

பின்னர் இவர்களுக்கு எதிராக இந்த வரலாற்றெழுத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டி எம்.என்.ராய், அம்பேத்கார் முதிலியோர் எழுதிய பண்பாட்டு மாற்று வரலாறு இங்கு உருவாகியது. இந்தியத் தேசிய வரலாறென்பது ஐரோப்பிய ஆதிக்க வரலாறுகளுக்கான எதிர்வினை. மார்க்சிய மாற்று வரலாறென்பது தேசிய வரலாற்றுக்கெதிரான எதிர்வினை. இந்த எதிர்மறை அம்சத்தாலாயே இவையனைத்துமே சற்று நிலைபிறழ்ந்தவையாகவே உள்ளன. இவற்றைக் கணக்கிலெடுக்கையில் இவற்றின் இந்தப் பிறழ்வு அம்சம் அல்லது மிகை அம்சத்தை கருத்தில் கொண்டு மட்டுமே நாம் விவாதிக்க வேண்டும். ஒற்றைப்படையாக இவற்றை பேச ஆரம்பிப்பது இவற்றின்மீதான ஆராதகர்களாக ஆவதைநோக்கி நம்மைக் கொண்டு செல்லும்.

தமிழகப் பண்பாட்டு வரலாற்றை எடுத்துக்கொள்ளும்போது இந்தியப் பண்பாட்டு வரலாறு எனும் ஒற்றை சித்திரத்திலிருந்து அதற்கு எதிர்வினையாகவே இது உருவாக்கப்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் .தமிழகப் பண்பாட்டு வரலாறென்பது தொடக்கத்தில் இந்தியப்பண்பாட்டு வரலாற்றின் ஒரு பகுதியாக எளிமையான கோட்டுச்சித்திரமாக் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்திய பண்பாட்டு வரலாற்று சித்திரத்திற்கு எதிர்வினையாக இதை மிகைவண்ணங்கள் கொடுத்து தீட்டலாயினர் அவ்வாறுதான் பொற்காலங்கள் இங்கே கண்டடையப்பட்டன. இந்திய வரலாற்றின் பொற்காலங்களுக்கு இணையான பொற்காலங்கள் அவை

சங்க காலம் பொற்காலமாக கட்டமைக்கப்பட்டது இவ்வாறுதான். சோழர்காலம் இரண்டாவது பொற்காலமாக கற்பிதம் செய்யப்பட்டது. தமிழகத்தின் தொல்வரலாற்றில் ஒரு முழுமையாக வரலாற்றை உருவாக்குவதில் பி.டிஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழத்தில் பல்வேறு பண்பாட்டுக்கூறுகளை ஒருங்கிணைத்து ஒருமைகொண்ட ஒரு சித்திரத்தை அவர் உருவாக்கினார். பின்னர் அவர் உருவாக்கிய சித்திரத்தின் வண்ணங்களை முறைப்படுத்தும் பணியை அவ்வை துரைசாமிப்பிள்ளையிலிருந்து மு.வரதராசனார் வரைக்குமான ஏராளமான அறிஞர்கள் அரைநூற்றாண்டுக்கு மேலாக இடைவெளியில்லாமல் செய்துவந்தனர்; தமிழகத்தில் நிகழ்ந்த மாபெரும் அறிவியக்கம் என்பது இந்த பண்பாட்டு வரலாற்று உருவாக்கமே ஆகும் ஒட்டுமொத்தமாக இதை தமிழியக்கம் என்று நாம் சொல்கிறோம்.

தமிழ் நூல்களை பதிப்பிக்கும் தமிழ்ப்பதிப்பியக்கம், தொன்மையான இசைமரபை மீட்கும் தமிழிசை இயக்கம், தமிழில் அயல்மொழி ஊடுருவலைத் தவிர்க்கும் தனித்தமிழ் இயக்கம் ஆகிய மூன்று பகுதிகள் கொண்டது தமிழியக்கம். இந்த மூன்று தளத்திலும் தமிழ்ப் பண்பாட்டு வரலாறு எழுதப்பட்டது. தமிழிசையின் வரலாற்றை தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் எழுதினார்கள். தமிழ் வரலாற்றின் முதன்மைச் சித்திரத்தை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார்,ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோர் எழுதினார்கள். இவற்றுடன் அன்று எழுதப்பட்ட தமிழ்ச் சமய வரலாற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஞானியார் சுவாமிகள், மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை முதலியோர் எழுதினார்கள் . இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று விவாதித்து ஒன்றையொன்று முழுமை செய்துகொள்ளும் விதமாக இணைந்து ஒரு பெரும் சித்திரமாக மாறின இன்றும் தமிழ் சிந்தனையில் வலுவாக நீடித்திருப்பது இந்த தமிழ் வரலாற்றுச் சித்திரமே.

பி.டிசீனிவாச ஐயங்காரின் அணுகுமுறையென்பது தமிழ்ப்பற்று முறையில் உருவானதென்றாலும் தமிழ் தர்க்க ரீதியானது என்பதனால்தான் தமிழ் பண்பாட்டு வரலாற்றின் முதற்பெரும் ஆளுமையாக அவரை குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது .வரலாற்று எழுத்துக்கான முறைமைகளில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. வெற்று உணர்ச்சிக் கூக்குரல்களை விடவும் அவர் ஆதாரங்களுக்கும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். அதில் முதன்மையான புதிர்கள் சிலவற்றை அவரால் விளக்க முடிந்ததில்லை.ஆயினும் அவருடைய ஊகங்கள் ஒரு முதற்சித்திரத்தை உருவாக்கின.

முக்கியமாக சங்க இலக்கியம் காட்டும் சமூக வரலாற்றுக் காட்சி எந்த அளவுக்கு யதார்த்தத்துடன் நெருக்கமானது, தமிழ் வரலாற்றுச் சித்திரத்தில் எவ்வாறு இந்திய வரலாற்றின் ஒட்டு மொத்தச் சித்திரம் பொருந்துகிறது, தமிழ் தொல்வரலாற்றுக்கான வலுவான தொல்லியல் தடயங்கள் இல்லாத போதும் எப்போது அதை நம்பகமான நூல் சான்றாக எடுத்துக்கொள்வது, தமிழகத்தின் பழைய வரலாற்றுச் சித்திரம் பிற்கால வரலாற்று சித்திரத்துடன் எவ்வாறு ஒத்துப்போகிறது போன்றவற்றுக்கு அன்று ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு விளக்கத்தை அவருடைய ஆய்வுகள் அளித்தன.

தொல்தமிழ் வரலாறென்பது இரும்புக்காலகட்டத்தின் தொடக்கத்தில் பழங்குடிப் பண்பாட்டிலிருந்து கிளைத்து, சிறு அரசுக்ளாக உருவாகி, மூவேந்தர்கள் என்னும் பேரரசுகளை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு களப்பிரர்களால் தோற்கடிக்கப்பட்டு ஓர் இருண்ட காலத்திற்கு சென்று பின்னர் மீண்டும் சோழர்காலத்தில் தலையெடுத்தது. தொல்லியல் சான்றுகள் இல்லையென்றாலும் கூட நூல்களுக்கிடையேயான நுட்பமான ஒத்திசைவும் அந்நூல்கள் காட்டும் பண்பாட்டுக்கூறுகள் பல ஏறத்தாழ மாற்றமின்றி அவ்வாறே நீடிப்பதும் அவை வரலாற்றையே காட்டுகின்ற்ன என்பதை உறுதி செய்கின்றது

பி.டி..சீனிவாச ஐயங்காரின் ஆய்வுக்கு பிறகு ஏறத்தாழ ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்த தமிழ் வரலாற்று வரைவின் மீது ஒர் ஊடுருவலை நிகழ்த்தியவர் என்று இலங்கை இலக்கிய விமர்சகரும், வரலாற்று ஆசிரியருமான கைலாசபதி அவர்களைச் சொல்லலாம். மார்க்சியக் கோணத்தில் சங்ககாலம் என்பது வீரயுகக் காலம் என்று அவர் வரையறுக்கிறார். வீரயுக காலம் என்று அவர் சொல்லும்போது அதன் பழங்குடித்தன்மைக்கு அவர் அடிக்கோடிடுகிறார்.ஏறத்தாழ தொன்மையான கிரேக்கப் பண்பாட்டுக்கு சமானமான பண்பாடு கொண்ட காலம். காலத்தால் மேலும் ஆயிரம் ஆயிரத்தைநூறு ஆண்டுகள் பிற்பட்டது.

வீரயுகக் காலமென்பது சில பண்பாட்டுக்கூறுகளால் ஆனது. பழங்குடி அரசுகள் நகர அரசுகள் ஆவது, நகர அரசுகள் நடுவே பூசல், வணிகம் மூலம் பெருநிலம் இணைப்புகொண்டு அரசு என்று ஆவது. பழங்குடி அரசுகளும் சரி ,சிறு நகர அரசுகளும் சரி ஒருவகை பழ்னக்குடி ஜனநாயகத் தன்மை கொண்டவை. அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று கடுமையான மோதல்களில் ஈடுபட்டிருந்தன. அந்தக்காலகட்டத்தில் ஒவ்வொரு பழங்குடியும் வீரன் என்னும் ஆளுமையை தங்கள் உச்ச கட்ட லட்சியமாக முன்னிறுத்தியது. வீரம் எனும் விழுமியமே கொண்டாடப்பட்டது. ஏனெனில் அந்த சமூகம் வாழ்வது அந்த வீரர்களின் கையில்தான் இருந்தது.

நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடி அரசுகளும் சிறு நகர அரசுகளும் இருந்த தமிழ்நிலம் தொடர்ந்த போர்களின் வழியாக மூன்று அரசுகளாக சுருங்கிய சித்திரத்தை கைலாசபதி அளிக்கிறார். இவ்வாறு மூன்று அரசுகளாக அது குறுகுவதற்கு போர்ஆதிக்கம் ஒரு காரணம் என்றாலும் பொருளாதார காரணமும் உண்டு. பழங்குடி அரசுகள் முற்றிலுமே உபரியை உருவாக்க முடியாதவர்கள். பேரரசுகளே வலுவான வரி வசூல் அமைப்பை இருவாக்கி உபரியை மையத்தில் திரட்ட முடியும். உபரி மையத்தில் திரளும்போதே அந்த நகரம் பெருகிறது. படை வல்லமை கொண்டதாகிறது. மேலும் பெருகுவதற்கான ஆற்றலையும் தோற்கடிக்கமுடியாத தன்மையையும் பெறுகிறது. ஆகவே. அது பேரரசை நோக்கிச் செல்கிறது.

தமிழகத்தில் சங்ககாலத்தின் கடைசிகட்டத்தில் மூலதனக் குவிப்பினூடாக பேரரசுகளும் நிலப்பிரபுத்துவ அமைப்பும் உருவாயிற்று. அதன் விளைவாகவே முன்னால் இருந்த பழங்குடிச் சமுதாயக் கட்டுமானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கருத்தியல் ரீதியாக வலுவூட்டப்பட்டு சுரண்டல் கட்டுமானமாக மாறியது என்பது கைலாசபதி அளிக்கும் சித்திரம். அதை கா.சிவத்தம்பி மேலும் விரிவுபடுத்தினார். இது எழுபதுகள் முதல் நம் கல்வித்துறை ஆய்வுகளில் செல்வாக்கு செலுத்தியது. இன்று கல்விப்புலத்தில் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வின் இரண்டு சித்திரங்களாக இருப்பவை இவைதாம்.

கைலாசபதி முந்தைய தமிழ்ப் பெருமித வரலாற்று ஆசிரியர்கள் போல ஒற்றைப்படையான ஒரு பெருமித வரலாற்றை உருவாக்கவில்லை என்றாலும் தமிழ்ப் பற்று என்னும் கூறு அவரிடம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்விரு எழுத்து முறைகளுக்குப்பிறகு மூன்றாவதாக உருவான கருத்தியல் ஊடுருவல் என்று தலித் பண்பாட்டு வரலாற்று எழுத்தையும் ராஜ் கௌதமனையும் குறிப்பிட முடியும். ராஜ்கௌதமன் கைலாசபதியின் தொடர்ச்சியாகவே செயல்படுகிறார். ஆனால் கைலாசபதிக்கு இருந்த தமிழ்த் தன்னுணர்வும் அதுசார்ந்த பெருமிதமும் ராஜ் கௌதமனிடம் இல்லை. எள்ளல் வழியாக அதை தன்னிடமிருந்து களைந்துவிடுகிறார்

ராஜ்கௌதமனின் பார்வை கைலாசபதியைப்போல அந்தக்கால கட்டத்தினுடைய பொருளியல் கட்டமைப்பு என்ன, அது உருவாக்கிய அரசியல் அமைப்பு என்ன, அதன் விளைவான சுரண்டல் அமைப்பு எப்படி இயங்கியது என்பதைச் சார்ந்து இருக்கவில்லை. மாறாக அன்றைய சமுதாயத்தில் பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடிமைகள் எப்படி நடத்தப்பட்டனர் என்றும் அவர்கள் கருத்தியல் ரீதியாக எப்படி வரையறுக்கப்பட்டனர் என்றும்தான் அவருடைய கவனம் செல்கிறது.

உதாரணமாக, சங்க காலத்தின் தொடக்கத்தில் பெண்கள் சுதந்திரமான வாழ்க்கை முறை கொண்டிருந்தார்கள் என்பதும் காதல் அவர்களின் முதன்மையான் விழுமியமாக இருந்தது என்பதும் கைலாசபதியால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவு. ஆனால் ராஜ்கௌதமன் சங்க இலக்கியத்திரட்டில் நாம் காணும் தொடக்க கட்டப் பாடல்களிலேயே கற்புநெறி என்பது ஒரு முதன்மையான விழுமியமாக முன் நிறுத்தப்படுகிறது, அது பெண்களுக்கு மட்டுமே உரிய ஒர் ஒழுக்கமாக கூறப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

கற்பு பெண்களை இற்செறிப்பு நோக்கி கொண்டு செல்கிறது. இற்செறிப்பு என்பது அவர்களை வீட்டுக்குள் அடைத்து போடுகிறது .சங்க இலக்கியத்தில் பெண் காதலனுடன் செல்லும் காட்சிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்திலுமே காதலன்தான் அவளை அழைத்துச்செல்கிறான். பரத்தைக்கு இருக்கும் சுதந்திரம் கற்புள்ள பெண்களுக்கு எப்போதுமே இருப்பதில்லை. அவர்கள் பரத்தமையாடும் கணவனை நோற்று காத்திருக்கும் கண்ணகிகளாகவே சங்க இலக்கியத்தில் காட்டப்படுகிறார்கள். பரத்தையர் X குலப்பெண்டிர் என்னும் பிரிவினை மிக அழுத்தமாக வேரூன்றியிருக்கிறது. பெண்கள் குடும்ப அடிமைகளாகவும் உணர்வு ரீதியாக சுரண்டப்படுபவர்களாகவும்தான் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறார்கள்.

சங்க இலக்கியம் முழுக்க அடித்தள மக்கள் பிறப்பினாலேயே அடையாளப்படுத்தப்படுகிறார்க்ள். அரசர்கள் உரிமைமாக்கள் உரிமைமகளிர் தொடர கேளிக்கைகளுக்குச் செல்கிறார்கள். மலைகளிலும் பிற இடங்களிலும் வாழும் மக்கள் அந்த நிலத்திற்கு அடிமைகளாக அதனுடன் நிரந்தரமாக பூட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள் .பாலை மக்களாகிய எயினர்களின் கொடுமையான வறுமையும் சரி, வரப்புகளை அகழ்ந்து எலி சேர்த்து வைத்திருக்கும் நெலை எடுத்து உண்ணும் குறிஞ்சிநில மக்களின் வறுமையும் சரி, நிகரானவையே. அவர்கள் தங்கள் எல்லைகளை மீற முடிவதே இல்லை. காதலி மீன் கொள்ளும் சாதியை சேர்ந்தவளாக இருக்கையில் அவளை பாலுறவுக்காக மட்டுமே நாடிவரும் உயர்சாதிக் காதலனிடம் ‘புலவு நாறுதும், செல்க’ என்றுதான் அவள் சொல்கிறாள். அருவருப்பு என்பது சாதிகளை பகுக்கும் அம்சமாக உள்ளது

இத்தகைய பண்பாட்டுக்கூறுகளை கொண்டு மட்டுமே சங்க காலத்தையும் பின்னர் உள்ள காலகட்டத்தையும் வகுக்கும் பார்வையே ராஜ்கௌதமனிடம் காணப்படுகிறது. அதன் பொருளியல் கூறுகளை மிகத் தேவையான போது மட்டும் குறைந்த அளவில் அவர் கருத்தில் கொள்கிறார். இது முன்னர் சொல்லப்பட்ட வரலாற்று வரைவுக்கு எதிரான ஒருபார்வையாகவும், அவற்றால் விடப்பட்டவற்றை நிறைவுசெய்வதாகவும் திகழ்கிறது. பண்பாட்டு வரலாற்றெழுத்தில் ராஜ்கௌதமனின் கொடை என்பது இதுவே.

மேலும்

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5

முந்தைய கட்டுரைராஜ்கௌதமனின் அயோத்திதாசர் நூல் இலவசமாக
அடுத்த கட்டுரைபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்