மதுபால் கதைகள் – கடிதங்கள்

220px-Actor_Madhupal

 

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

 

அன்புள்ள ஜெ

 

மதுபால் எழுதிய இரு சிறுகதைகளுமே சிறப்பானவை. வேறுவகையான சிறுகதைகள். கதையை அவரே சொல்கிறார். சுருக்கமாக சந்தர்ப்பங்களை குறிப்பிட்டு ஒரு சின்னப்புள்ளியில் சற்றே கதையை திருப்பிவிடுகிறார். இந்தவகையான கதைகள் இங்கே இல்லை. இப்படி இன்னொரு சூழலில் இருந்து மொழியாக்கம் வழியாக வந்தால்தான் உண்டு

 

அண்டைவீட்டார் வேகும் மணம் [ என்ன ஒரு தலைப்பு! அடிக்கடி ஞாபகம் வந்து திடுக்கிட வைக்கிறது] ஒரு நுணுக்கமான கதை. கதைநாயகி எல்லாவிதமான சாத்வீக எண்ணங்களும் கொண்டவள். நல்லவள். அவள் ஆசிரியை. ஆகவே அரிய நல்லெண்ணங்களை குறித்துக்கொள்கிறாள். வகுப்பில் சொல்கிறாள். கணவனும் நல்லவன். அண்டைவீட்டார் எல்லாருமே நல்லவர்கள். உதவ தயாராக இருப்பவர்கள். ஆகவே எதுவுமே எதிர்மறையாக இல்லை

 

ஆனால் அவள் தனிமையில் சாகிறாள். கைவிடப்பட்டு. காரணம் முழுக்கமுழுக்க தற்செயல்மட்டும்தான். அப்படியென்றால் அந்த நல்ல சிந்தனைகளுக்கும், சாத்வீகமான குணத்துக்கும் என்னதான் அர்த்தம்? அபத்தம் என்பதா அல்லது மனிதனை மீறிய கவித்துவம் என்பதா? தெரியவில்லை. ஆனால் உலுக்கிய கதை

 

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

 

மதுபால் எழுதிய  ‘ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?’ கதையை வாசித்து அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சினிமாக்காட்சியாக அதை ஏன் காட்டுகிறார்? அதிலிருந்து செண்டிமெண்ட் அம்சத்தை நீக்கி ஒரு காட்சியாக மட்டும் காட்ட விரும்புகிறார். அதனால்தான் அந்த கிளைமாக்ஸின் குழந்தையின் பேச்சு அதற்குள் பொருந்துகிறது. கதைநாயகி ஓடும் ரயிலை துரத்துபவள். இன்னொருத்தி துரத்தி அதை தவறவிடுகிறாள். அந்த இருவருக்கும் இடையே நடக்கும் அந்த பரிமாற்றம்தான் கதையின் கரு. அந்தப்பரிமாற்றத்தை எப்படிப்புரிந்துகொள்வது என்பதை அவர் வாசகர்களுக்கே விட்டுவிடுகிறார். விசித்திரமான கதை. பலகோணங்களில் யோசிக்கவைத்தது

 

ஆர்.சதீஷ்குமார்

 

அன்புள்ள ஜெ,

 

மதுபால் எழுதிய இருகதைகளுமே வித்தியாசமான ஒரு கதையாசிரியரை காட்டின. ஓடும்ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி ஒரு அற்புதமான கதை. இவள் கையில் ஒரு குழந்தை சிக்கிக் கொள்கிறது என்பது அல்ல கதை. அந்த ரயில் என்பது என்ன என்பதுதான். அவளை ஓட ஓட துரத்துகிறது ரயில். ஆனால் ஓடி ஏறிவிட்டவள் இவள். அவள் ஓடி ஓடி தொலைந்து விழுந்துவிடுபவள். இருவருக்கும் நடுவே ஒரு குழந்தை. அந்தக்குழந்தை ஒரு கனவில் வருவதுபோல பேசுகிறது! ஆச்சரியமான ஒரு கதை

 

மாதவ்

 

அன்புள்ள ஜெ

 

மதுபால் கதைகளின் மொழியாக்கம் சிறப்பாக இருந்தது. தமிழிலேயே ஒரு நல்ல எழுத்தாளரால் எழுதப்பட்ட நடை. அழகான சொற்கோவைகள். நீங்களே வேறு பெயரில் மொழியாக்கம் செய்தீர்கள் என்று என் நண்பன் சொன்னான். அந்த மொழியாக்கம் செய்தவருக்கு வாழ்த்துக்கள்

 

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ராஜேந்திரன்

 

அவர் பெயர் அழகிய மணவாளன். ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலக்காட்டில் நான் பேசிய ஒரு கூட்டத்திற்கு வந்தார். என் மலையாளத்தைக் கேட்டபின் ஒரே வாரத்தில் மலையாளம் கற்றுக்கொண்டார். இப்போது தீவிர கதகளி ரசிகர்

 

ஜெ

 

முந்தைய கட்டுரைபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்
அடுத்த கட்டுரைநிலவொளியில் -கடிதங்கள்