தெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்

220px-Actor_Madhupal

விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்

 

விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை

 

தமிழாக்கம்  அழகியமணவாளன்

 

1200px-Crossofashes
லூஸி தெய்வத்தின் மந்தையிலிருந்து வழிதவறிய ஆட்டுக்குட்டி. இதைக் கேட்கும்போதெல்லாம் அவள் உதடுகள் துடிக்கும். மூக்குநுனி சிவந்துவிடும். தெய்வத்தின் நாமத்தை உறுதியாக ஜெபித்தபடி என்றும் தெய்வத்தின் வழியையே பின்தொடரும் ஒரு புனித தேவதையின் மனதுதான் தனக்குள்ளது என்று அவளே சொல்லிக்கொள்வாள். அப்போதெல்லாம் நான் ஒரு நகைச்சுவையை கேட்டதைப்போல ”நீ தெய்வத்தின் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டவள் ” என்று கிண்டல் செய்வேன். அவள் அழ ஆரம்பித்துவிடுவாள். அந்த அழுகைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அந்தக்கதையை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். திரும்பத்திரும்ப சொல்லி அந்த கதை ஒரு நினைவுகூரல் என்பதுபோல ஆகிவிட்டது. ஒவ்வொருமுறையும் அந்தக்கதை சொல்லப்படும்போதும் அறியாமலேயே சில விஷயங்கள் மாற்றப்பட்டும் புதிதாக சில சேர்க்கப்பட்டும் விடுகிறது என்று இப்போது எனக்குப் புரிகிறது. லூஸி இறைவனை அறிந்த ஒரு ஆத்மா. நம்பிக்கை வெளிப்படுத்துவதற்கானதல்ல என்பதுதான் அவளின் ஒரே நம்பிக்கை. நன்மை நிறைந்த மனம் அதை எப்படியோ கண்டுகொள்ளும் அவ்வளவுதான் என்பாள். பிரார்த்தனைக்கிடையில் ஒருநாள் அவள் என்னிடம் ஒரு கதை சொன்னாள். வாழ்க்கையின் பல மேடு பள்ளங்கள் வழியாக பயணம் செய்ய நேர்ந்த ஒரு பாவப்பட்ட பெண்ணின் கதையை.

அப்போது நான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்மதியம். நல்ல குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. கண்ணெட்டும் தூரம்வரை பாதை நீண்டுகிடந்தது. குளிரை அவள் அறிந்ததாகத் தெரியவில்லை. அவள் மேலுதடு ஈரமாக இருந்தது.

மார்கரெட்டின் கார் ஒரு வளைவில் திரும்பியபோது முன்னால் ஒரு லாரி தோன்றியது. கணநேரத்தில் ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பி மரணத்திலிருந்து தப்பித்தாள். நாம் மரணவிளிம்பிலிருந்து மீள்கிறோம் என்றால் தெய்வத்திற்கு கடன்பட்டுள்ளோம் என்று மனதில் எண்ணிக்கொண்டு கர்த்தரை அழைத்தாள். கடவுள் அவளது காரின் இடதுபுற சீட்டில் இருக்கிறார். அப்படி நினைப்பதால்தான் அவள் இடப்புற சீட்டில் யாரையும் ஏற்றுவதில்லை.

மார்கரெட்டின் வலப்புறம் ஒரு ஆண் துணை இல்லாமலாகி பல வருடங்களாகிவிட்டன. தான் யாருடைய இழந்த விலா எலும்பும் இல்லை என்று அவள் தெய்வத்திடம் சொல்லவும் செய்துவிட்டாள். நடுவில் எப்போதோ ஏதோ ஒரு மனிதன் தான் இழந்த முழுமையை அவளில் கண்டுகொண்டான் என்றாலும் அது ஏனோ சரியாக பொருந்தவில்லை. பிரிந்து பதினெட்டு வருடங்கள் ஆகின்றது. பிரார்த்தனை கூடத்தில் தெய்வத்திற்குத் துணையாக மார்கரெட் நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள். ஒரு பெருமூச்சுடன் இதையெல்லாம் எண்ணியபடி தன்னை எளிதாக்கிக்கொண்டு கார் ஓட்டுவதை தொடர்ந்தாள். அப்போது மொபைல் ஃபோன் ஒலித்தது. வண்டி ஓட்டியபடியே பேச முயற்சிக்காமல் பாதையோரமாக வண்டியை நிறுத்திவிட்டு கைபேசியை எடுத்தாள். ஜோசப்தான் அழைக்கிறான். ஜோசப்பை லூஸியின் கழுத்திலொரு தாலி கட்ட வைத்துவிட வேண்டுமென்று மார்கரெட் முடிவுசெய்திருந்தாள். அது ஜோசப்பிற்கும் இஷ்டம்தான். லூஸியின் எல்லா கதைகளையும் அறிந்த ஒரு மனதாலேயே அவளுக்கு புதுவாழ்க்கையைக் கொடுக்கமுடியும் என்று மார்கரெட் கர்த்தரிடம் சொல்லியிருந்தாள். கர்த்தரிடம் இருந்து வாக்கு கிடைத்த நாளில் மார்கரெட் அதை தீர்மானிக்கவும் செய்துவிட்டாள்.

”என்ன குழந்தை இந்த நேரத்தில்?”

” அம்மச்சி*, நான் வீட்டில் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டேன். அவர்களுக்கும் சம்மதம்தான்”

“ தெய்வத்திற்கு ஸ்தோத்திரம்!… அவன் எல்லாவற்றையும் அறிகிறான். நான் முன்பே சொன்னேன் இல்லையா, அவன் காட்டும் வழியில்தான் நாம் பயணிக்க வேண்டும்”

”இனி என்று திருமணம் நடத்த வேண்டும் என்று அம்மச்சி நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதைத் தெரிந்துகொள்ளத்தான் நான் கூப்பிட்டேன்.”

” அதை தீர்மானிக்கவேண்டியது நானல்ல. உன்னை எனக்கு காட்டிய அவன் தான். அந்த தினம் மிகத்தொலைவில் இருந்துவிடக்கூடாது என நீயும் பிரார்தனை செய். அவளிடமும் பிராத்திக்கும்படி சொல்லியிருக்கிறேன்.”

மார்கரெட் தெளிந்த வான்பரப்பு வழியாக மெல்ல காரை ஓட்டிச்சென்றாள். சூரியவெளிச்சம் தெய்வத்தின் மெழுகுவர்த்திச்சுடர் போல பாதையில் விழுந்திருந்தது. அது நல்ல நிமித்தம். மார்கரெட் மனதில் ஜபித்துக்கொண்டாள்.

ஜோசப் அலுவலகக் கணினியில் ஒரு பெண்ணின் படத்தை வரைந்தான். அதன் கண்களில் மையிட்டான். நெற்றியில் சிலுவை வரைந்தான். புனிதவெள்ளி அன்று நெற்றியில் இட்டுக்கொள்வது போன்று சிலுவைக்கு கரிய நிறம் கொடுத்தான். கையில் மொபைலை எடுத்து லூஸியின் எண்ணை டயல் செய்தான் . அம்மச்சி சம்மதம் தெரிவித்துவிட்டதை அவளுக்கு சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால் உடனேயே அவள் எண்ணை அழித்துவிட்டான். இப்போது அவள் மார்கரெட்டின் அருகில்தான் இருப்பாள். அவளால் நிச்சயமாக அவனது அழைப்பை எடுக்க முடியாது என்று அவனுக்குத்தெரியும். லூஸியிடம் தான் சொல்லும்போது மட்டும் பேசினால் போதுமென்று மார்கரெட் சொல்லியிருந்தாள். அவ்வாறே கடைபிடிப்பதாக அவளிடம் ஜோசப் வாக்குறுதி அளித்திருந்தான். சில வாக்குறுதிகள் மீற முடியாதவை. வயது முதிர்ந்தவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை எந்த சூழ்நிலையிலும் மீறுவதில்லை என்பது ஜோசப் சின்னவயதிலேயே தீர்மானித்து உறுதிசெய்துகொண்டது. முதிர்ந்தவர்களுடைய சொற்களுக்கு தெய்வத்தின் சொற்களுக்கு நிகரான மதிப்பு உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் ஜோசப் கற்றிருந்தான். வாழ்க்கையில் இன்றுவரை அவனை இயக்கிவந்தவை அவன் கடைபிடித்த நெறிகள்.

‘எத்தனைமணிக்கு நீ வீட்டிலிருக்க வேண்டும்’ வாகன நெரிசலில் கார் நின்று விட்டபோது நான் லூஸியிடம் கேட்டேன்.

‘அம்மச்சி வருவதற்கு முன்பே…’ லூஸி ஏஸியை குறைத்தபடி சொன்னாள்.

” உன் திட்டம் என்ன?” என்றாள்.

”ஒரு டீ குடிக்கலாம். உனக்கு நேரமிருக்கிறதா?”

” வேண்டாம். இங்கு ஜோசப்பின் நண்பர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது.” என்றாள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி.

சிவப்பு மாறி பச்சை எரிந்தவுடன் நகரம் பரபரப்பாகியது. வாகனங்களின் நிறுத்தாத இரைச்சலால் பின்பு நான் ஒன்றும் பேசவில்லை. பதில் கிடைக்காத கேள்விகளை எண்ணியபடி அலைக்கழிப்பில் இருக்கும்போதெல்லாம் லூஸி என்னை அழைப்பாள் “ இன்று உன்னை பார்க்கமுடியுமா? ” அதிவிரைவில் வந்து காரில் அவளை ஏற்றிக்கொண்டு இருவரும் கிளம்புவோம். அந்நேரத்திற்கு அவள் கேள்விகளையெல்லாம் மறந்துவிட்டிருப்பாள். இரண்டு அந்நியர்கள் போல காரில் நாங்கள் ஒன்றும் பேசாதபடி செல்ல வேண்டியிருக்கும். இருட்டுவதற்கு முன்பே அவள் வீடு இருக்கும் தெரு எல்லையில் இறக்கிவிட்டு திரும்பும்போது என் கைபேசியில் பீப் ஒலி எழும். அவள் அனுப்பிய குறுஞ்செய்தி. “தாங்க்ஸ். ஐ ஃபீல் ஹேப்பி நௌ” என்ன சந்தோஷத்தை நான் அவளுக்கு அளித்துவிட்டேன்? அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம் என்று நினைக்கிறேன்.

“ ஐ ஆம் செண்டிங் மை ஹார்ட் டு ஸ்டே இன் யுவர் இன்பாக்ஸ் ஏஸ் எ ப்ரூப் ஆப் ஃபெரெண்ட்ஷிப். ஒன்ஸ் டெலிடெட் கன்ஸிடர் : ப்ரோக்கன்”

பல வருடங்களுக்குமுன் ஒரு மாலை நேரம் நகரத்திலுள்ள சினிமா தியேட்டரில் வரிசையில் நிற்கும்போதுதான் நான் லூஸியை முதல்முறையாக பார்த்தேன். முன்பு எப்போதோ கண்டுமறந்த அறிமுகமான முகம் என்று அவளைப் பார்த்தவுடன் தோன்றியது. அதனாலேயே கூட்டமான வரிசையில் ஒரு டிக்கெட் வாங்கித்தரும்படி அவளிடம் தைரியமாகக் கேட்கமுடிந்தது. டிக்கெட் வாங்கித்தரும்போது அவள் சொன்னாள், நாம் எங்கேயோ முன்பு சந்தித்திருக்கிறோம்! ஆனால் நினைவின் எல்லா மூலைகளிலும் தேடி சலித்தபிற்கு நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம் அந்த தியோட்டரில்தான் நாங்கள் முதல்முறையாக பார்த்துக்கொள்கிறோம் என்று. அது அப்படித்தான், சில புதிய முகங்கள் ஏற்கனவே அறிமுகமானவை என்ற எண்ணத்தை உருவாக்குவதற்குக் காரணம் நம் முற்பிறவி நினைவுகள்தான். ஆனால் லூஸியின் நம்பிக்கைப்படி மனிதவாழ்க்கை இங்கேயே முடிந்துவிடக்கூடியது. மீண்டும் ஒரு பிறவியைப் பற்றி அவளிடம் சொன்னபோது வாழ்கையை ஒருமுறை மட்டும் வாழ்ந்து தீர்த்தால் போதும் என்று பிடிவாதமாக சொன்னாள். சிகரெட்டின் கனலால் ஒரு பொட்டுவைத்தால் எப்படி இருக்கும்? தொலைபேசி மணி அடிக்கிறது. அவசர அவசரமாக அதை எடுக்கும்போது மின்னதிர்ச்சி ஏற்பட்டால் எப்படி இருக்கும்? தூங்கிக்கொண்டிருக்கும்போது கத்தரிக்கோலால் ஆடைகளையெல்லாம் வெட்டி களைந்துவிட்டால் எப்படி இருக்கும்? ஒரு புது வாழ்க்கை தொடங்கியிருந்தது. ஆனால் கொஞ்ச காலம்தான். சரியாக மூன்று வருடங்களுக்குள் மானுவேலின் கண்ணெதிரேயே அது கடலில் குதித்து மறைவதுபோல காணாமலாகிவிட்டது. மானுவேலோடு இருந்த வாழ்க்கையை பின்பொருமுறைகூட லூஸி திரும்பிப்பார்க்கவில்லை. இதை அவள் சொல்லும்போது நான் கேட்பேன் ஒரு காதல் வெறும் சோகக்கதையாக மட்டுமாக எஞ்சிவிட்டதல்லவா?

அப்பன்,அம்மச்சி,அண்ணன் இவையெல்லாம் எண்ணிறந்த அர்த்தங்கள் உள்ள, அனுபவங்கள் நிறைந்த சொற்கள் என்று பள்ளியில் படிக்கும்போது தோன்றியிருந்தது. நடைமுறை வாழ்க்கையில் இவையெல்லாம் வெவ்வேறு காரியங்களை சாதித்துக்கொள்ள உதவும் வெறும் பதிலிகள் மட்டும்தான் என்று புரிந்துகொள்ள அதிகநேரம் வேண்டி வரவில்லை. அதுதான் மானுவேல் என்ற சொல்லும் எனக்கு கற்பித்தது. இனி ஜோசப்போடு எப்படி வாழவேண்டும் என்று இப்போது என்னையே கேட்டுக்கொள்கிறேன். அம்மச்சியின் கைகளால் ஆட்டிவிக்கப்படும் பொம்மைபோல மாட்டிக்கிடந்துதான் என் வாழ்க்கையை கழிக்க நேருமோ என்று அறியாமலேயே என் நாட்கள் கடந்துகொண்டிருக்கின்றன. இறை வாக்கு என்று ஆணையிட்டு ஒவ்வொரு நாளும் புதிய புதிய தீர்மானங்களுடன் அம்மச்சி பிரார்த்தனை கூடத்திலிருந்து வந்து சேர்கிறார். இனி அவனை அழைக்காதே அவனோடு பேசாதே அவன் சொற்களை நீ கேட்கவேண்டிய நாட்களை நான் சொல்வேன். முன் அனுபவங்களிலிருந்து உன்னை காப்பற்றி தெய்வத்தின் சாம்ராஜ்ஜியத்திற்கு கொண்டு சேர்க்கப்போவது நானாகத்தான் இருக்கும். அம்மச்சியின் சொற்கள் ஒருபோதும் மீறக்கூடாதவை. இந்த பொம்மலாட்டத்தில் என்னவாகப்போகிறது என் வாழ்க்கை?

பிரார்த்தனை கூடத்திற்கு போகும் முன்பே மார்கரெட் லூஸியை அழைத்தாள். ‘தெய்வத்திற்கு ஸ்தோத்திரம்…. நீ வீட்டிற்கு வந்துவிட்டாயா?”

‘வந்துவிட்டேன்’

‘கதவு ஜன்னல் எல்லாம் பூட்டிக்கொள். வெளியே தெய்வத்தின் எதிரிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மூச்சுக்காற்றுகூட உன்மீது படாமல் உன்னை பாதுகாத்துக்கொள் ”

‘அம்மச்சிக்கு என்ன ஆயிற்று…’ லூஸி கேட்டாள்

தெய்வக் கிருபையால் எனக்கு வெளிச்சம் கிடைத்துவிட்டது. நான் இங்கு வரும்முன்பே அவன் என்னை கூப்பிட்டான். அவன் உன்னையும் அழைக்க வாய்ப்பிருக்கிறது. வாயைத்திறந்துவிடாதே. அவனுடைய் ஆட்கள்கூட கூப்பிடலாம், ஒன்றும் சொல்லிவிடதே. எல்லாவற்றையும் இறைவன்தான் தீர்மானிக்கவேண்டும்”.

‘அம்மச்சி யாரைப்பற்றி சொல்கிறீர்கள்’

‘எல்லாவற்றையும் நான் வந்தபிறகு சொல்கிறேன். நீ அறைக்குள்ளேயே இரு. நான் வருவதுவரை கதவைக்கூட திறக்காதே,’

‘அம்மச்சி, யாரோ கூப்பிடுவார்கள் என்றீர்கள் அது யார்?

“அவன்”

அதன்பின்னர் லூஸியின் காதில் அம்மச்சி சொன்னது எதுவும் கேட்கவில்லை.

ஏதோ ஆபத்தின் அறிவிப்புபோல அம்மச்சியுடைய ஒலி தன்னை பயப்படுத்துவதாக லூஸி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். யாரோ தங்கள் வீட்டின் அருகிலேயே அவர்களை கண்காணிக்கின்றனர் என்று பின்பு ஃபோனில் கூப்பிட்டு சொன்னாள். “மன அமைதியுடன் பிராத்தித்துக்கொண்டிரு. ஏதாவது தீய நிமித்தம் என்று தோன்றினால் உடனே கூப்பிடு”.

உலகத்தை ஆள்வது ஆண்கள்தான். ஆனால் ஆணை இயக்குவது பெண் என்று ஒருமுறை ஒருவர் என்னோடு சொன்னார். அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை அதுதான் யதார்த்தம் என்று அவரிடம் சொன்னேன் எதையும் எதிர்கொள்ளவும்,எந்த அனுபவத்தையும் தாங்கிக்கொள்ளவும், யாரையும் மன்னிக்கவும் பெண்ணால் முடியும். இருந்தும் ஏன் மார்கரெட்டும் லூஸியும் இப்படி ஆனார்கள்? மார்கரெட் கண்டுபிடித்த வழியில் ஒருநாள் ஜோசப் வருவதும் ஜோசப்பை லூஸியின் கையில் கொடுத்துவிடுவது என மார்கரெட் முடிவுசெய்வது இதெல்லாம் எப்படி நடந்தது? நேற்று இரவு ஒரு கனவுகண்டேன். படக்கதைகளில் வருவதுபோல விகாரமான தோற்றம்கொண்ட மானுவேலை, நீட்டினால் தீயை உருவாக்கக்கூடிய சுட்டுவிரலால் எரித்துப் பொசுக்குவது போன்ற கனவு. எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து லூஸி சொர்க்கத்தின் புல்மேடுகளில் காற்று வாங்கியபடி நடந்துகொண்டிருக்கிறாள் என நினைத்துக்கொண்டேன். அப்போது உருவான மன நிறைவில் அவளுக்கொரு குறுஞ்செய்தி அனுப்ப முடிவுசெய்தேன். தெய்வத்தின் விரல்கள் பின்னும் பிரம்மாண்டமான வலைப்பின்னலில் சிக்கிக்கொள்வதற்கு முன்பு மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளவாவது மறக்கக்கூடாதல்லவா.
================================================================
*அம்மச்சி – கிறித்தவர்கள் அம்மாவை அழைக்கும் சொல்

 

 

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

 

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-8
அடுத்த கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி கடிதங்கள்