திருவனந்தபுரம் சினிமாவிழா -கடிதங்கள்

iffk-759

திருவனந்தபுரத்தில்…

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

திருவனந்தபுரத்தில் பஸ் நிலையத்தின் எதிரே தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. மூன்று நாட்களில் வெவ்வேறு கதைக்கருக்களும் நிலப்பரப்பினையும் கொண்ட திரைப்படங்களைப் பார்த்தேன். இம்மாதிரி வெளிநாட்டுப் படங்களில் படமாக்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பே என்னைப் பரவசத்தில் ஆழ்த்தும்.  The Bed திரைப்படத்தினைச் “சகிக்கான் பாடில்லா” என்றபடி இளைஞர் ஒருவர் பாதியில் எழுந்து சென்றார். அவர் வயதுக்குத் தேவையான நிர்வாணக்காட்சிகள் அளவிற்கும் அதிகமாகவே இருந்தன அத்திரைப்படத்தில். மலையாள திரைப்பட ரசிகருக்கும் தமிழகத் திரைப்பட ரசிகருக்குமிடையாயான முக்கிய வேறுபாடு அந்த இளைஞரின் செயல்பாடு.

 

 

கேரள இளைஞர்களின் ரசிப்புத் திறன் போற்றத்தக்கது. திரைப்படம் முடிந்ததும் கைத்தட்டல், அரிதாய் சில சமயம் இயக்குனர் பெயரைக் கண்டதும். மற்றபடி பெரும் நிசப்தம்.  Cold war திரைப்படம்  முழுவதும் இசையால் நிரம்பியிருந்தது. அதற்கு நேரெதிர் Poisonous Roses. L’appiration ஆவணப்படமாக ஆரம்பித்து திரைப்படமாக மாறி எப்படி முடிப்பது எனத் தெரியாமல் நாடகத்தனமாக முடிந்தது. கிம்மின் Human, Space, Time and Human படத்திற்கும் El Angel படத்திற்கும் மிகமிக நீண்ட வரிசை.

 

 

தினமும் அதிகாலையில் ரயிலில் சென்றும் நள்ளிரவு வீடு திரும்பியும் திரைப்படங்களைப் பார்த்து வருவதைக் கண்ட நண்பர்கள் “உனக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது” என்றார்கள். “ஆம் ஒரு நட்டு கொஞ்சம் லூஸு” என்றேன்.

 

 

மிக்க அன்புடன்,

 

 

இரா. பாலா.

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

திருவனந்தபுர திரைப்பட விழாவின் படங்கள் பற்றி உங்கள் அனுபவத்தையும் கருத்தையும் கூறினீர்கள் நன்றி. எதையும் அனுபவமாக ஆக்கும் உங்கள் மனதினால் இதையும் சிறந்த அனுபவமாக ஆக்கி எங்களுக்கு கொடுத்திருக்கிறீர்கள். நாடக தன்மை நீக்கபட்ட படங்களின் காலம், இருத்தலியத்தில் தத்தளித்தகாலம், குடும்ப அமைப்பு, தனிப்பட்ட உறவுகளின் மீதுகொண்ட அவநம்பிக்கையின் காலம்,அரசியல் சரிநிலைகளின் காலம்,ஆகியவற்றை கடந்து சினிமா குடும்ப,தனிபட்ட உறவுகளின் உணர்வுகள் மூலம் மானிடரை தழுவி ஒன்றாக்குவதின் காலத்திற்கு வந்துள்ளது என கூறி இருந்தது எந்த சினிமா பட்டறையிலும் கற்று கொடுக்க படாதது. கலை என்பது கட்டமைக்கபட்ட நிஜம் என்பதை உணர்ந்து அதன் அடுக்குகளுக்குள் தயக்கமில்லாமல் செல்வதே இன்றையபாணி என நீங்கள் கூறியது மிகவும் புதுமையான கருத்தாக இருந்தது.

 

ஸ்டீபன்ராஜ்

 

 

இனிய ஜெயம்

 

 

திரைப்பட விழா சார்ந்து உங்கள் அனுபவங்கள் சற்று பொறாமையையும்  ,அந்த விழாவின் படங்களை  அணுகி அறிய தேவையான அடிப்படைகளை குறிப்பிட்ட விதம் வழியே சற்றே ஆதங்கமும் எழுந்தது .இதை ஒரு பதினைந்து வருடத்துக்கு முன் நான்  உலகசினிமாக்களை  பார்த்துக் குவித்துக்கொண்டிருந்த காலத்தில் சொல்லி இருக்கக்க்கூடாதா?

 

 

அப்போது வீசிய உலகசினிமா ரசனை சுனாமியை இப்போது திரும்பிப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது .எழுதிக்குவிக்கப்பட்ட இத்தனையும் எங்கேதான் போனது ,என்ன விளைவை உருவாக்கியது என்று பார்த்தால் சூன்யமே எஞ்சுகிறது .உதாரணமாக இயக்குனர் செழியன் விகடனில் எழுதிய உலக சினிமா தொடர் , பிற வெகுஜனம் அளவே எனக்கும் உத்வேகம் அளித்த தொடர் . அதை எழுதிய செழியன் இன்று டூ லெட் என்றொரு நல்ல படம் [தமிழர்கள் நமது பெருமிதம் இது என தாராளமாக பெருமிதப்பட்டுக்கொள்ளலாம்] எடுத்திருக்கிறார் .சர்வதேச விருதுகள் பல வென்றிருக்கிறார் . இன்று வருடா வருடம் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசிப்பது போல ,தமிழ் நிலமெங்குமிருந்து சென்று விழாவில் ,ஐக்கியமாகும் தமிழ் உலக சினிமா ரசிகர்களில் எத்தனை பேர் இந்த டூ லெட் திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள் ? அப் படம் தமிழ் நிலத்தில் பொது பார்வையாளர்கள் நோக்கி எத்தனை முறை விழாக்களில் இலவச திரை இடல் கண்டிருக்கிறது என்றாவது  அறிவார்களா ?

 

 

கொஞ்சம் பின்னால் சென்று இணையத்தில்  சுற்றிப் பார்த்தால் இந்த விழாவில்,வெளியாகும் பட்சத்தில் ,  எந்த எந்த நாட்டு ,எந்த எந்த இயக்குனர்களின் படங்களை தவிர்க்காமல் பார்க்கவேண்டும்  என்ற பட்டியல் எல்லாம் காணக் கிடைக்கிறது . அங்கே டூ லெட் என்றொரு தலைப்பு மட்டும் காணக் கிடைக்கவில்லை .  கடந்த பத்து வருடமாக உலக சினிமாவை கூடையில் வாரி ,என் போன்ற அப்ராணிகள் தலையில் கவிழ்த்தியோர் ,இன்னமும் திவ்யமாக அதே பணியில் இருக்கிறார்கள் . அவர்கள் வசமும் டூ லெட் சார்ந்து மௌனமே விமர்சனமாக கிடைக்கிறது .

 

எங்கே சிக்கல் ? உண்மையில் தமிழ் நிலத்தில் உலக சினிமா சார்ந்து கிளம்பிய அலை எந்த உள்ளீடும் அற்றது .  வெற்றிடத்திலிருந்து எழும் அசரீரி போல .  அதன் பார்வையாளர்களில், கலையுடன் தொடர்புகள் அற்ற , பொதுப் பார்வையாளர்கள்  அது போலவே உள்ளீடு அற்ற தன்மை கொண்டவர்களே . இதன் விளைவே இன்றைய டூ லெட் மீதான மௌனம் . உண்மையில் இங்கு நிகழ்ந்த  இந்த உலக சினிமா உரையாடலுக்கு ஏதேனும் உள்ளீடு என ஒன்றிருந்தால், ஹென்றி ஷாரியரின் நாவலான பட்டாம்பூச்சி[இதை தமிழில் பலரும் வாசித்திருக்கின்றனர் என்பதனால் சொல்கிறேன் ] ,அதன் திரை வடிவமான பாப்பிலான் குறித்து ஒரே ஒரு காத்திரமான கட்டுரையாவது எழுதப்பட்டு இருக்கும் . கதை காட்சி இந்த இரண்டு ஊடகங்கள் வழியாகவும் ஒரு அனுபவம் எப்படி கலையாக மாறுகிறது , இலக்கிய,வரலாற்று,  வாசிப்பு எப்படி காட்சி அனுபவத்தை புரிந்து உள்வாங்கி கலானுபவத்தை முழுமை செய்து கொள்ள உதவுகிறது எனும் கல்வி, அல்லது அறிமுகம் இங்கே நிகழவே இல்லை . விளைவு ? இன்று எப்படி விழாக்களில் பலர் தொடர்ந்து  பொம்மை பார்த்து தள்ளிக்கொண்டு இருக்கிறார்களோ ,அவ்வாறுதான் நான் பொம்மை பார்த்துத் தள்ளிக்கொண்டிருந்திருக்கிறேன்.  இதை  அறிய வந்த கணம் இருக்கிறதே, என்  மகத்தான உடைவு கணங்களில் ஒன்று அது .

 

 

பெட்டர் லேட் தென் நெவர் … அன்று

https://en.wikipedia.org/wiki/The_Mission_(1986_film)#Plot

 

தி மிஷன் படத்தில் துவங்கினேன் . இன்று ,சில வருடம் முன்பு நான் காண நேர்ந்த

 

https://en.wikipedia.org/wiki/Agora_(film)

 

அகோரா வரை ,குறிப்பிட்ட கருப்பொருளில் ,  ஒரு பத்து நல்ல படத்தை,  வாசித்து , வாசிப்பின் தொடர் கலை என ,அதன் பின்னர் தேடி ,கண்டடைந்து அனுபவித்திருக்கிறேன் , கலைக்கும் கலை வேடம் போட்டு வரும் போலி உலக சினிமாக்களையும் அடையாளம் கண்டு புறக்கணிக்க அறிந்திருக்கிறேன். எல்லாமே வாசிப்பின் பின்புலத்தில் வைத்து ,அந்த வாசிப்பின் தொடர் புள்ளிகளில் ஒன்றாக சினிமாவை வைத்து நான் கண்டடைந்தவை . இன்று இலக்கியம் அளவே , ஷிவாகோ , லாரன்ஸ் ஆப் அரேபியா , ராத் ஆப் காட் , மங்கோல் , எஸ்டர்டே படங்களில் வரும் சைபீரிய பனி நிலமும் ,அரேபிய பாலை வெளியும் ,வனங்களும், ஆப்ரிக்க கிராமமும் , எனது கனவுகளில் கலந்து விட்ட ஒன்று .

 

 

நீங்கள் குறிப்பிட்டு சொல்லும் இந்த அடிப்படைகளை அறியாமல்தான் அன்று நான் படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் . இன்றும் பலர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் .  ”ஹெர்சாக் ஓவர் ரேட்டட் . தார்கொவ்ஸ்கி யோட பெஸ்ட் ,ஆண்ட்ரே ரூபலோவ் தான் சாக்ரிபைஸ் இல்லை” ,என்றெல்லாம் அன்று என் மேல் பொழியும் உலக சினிமா ரசிக விமர்சன வாசகங்களை செவியுற்று , நான் [இப்படி உலக சினிமா ரசிக அறிவு இல்லாத கபோதியாக இருக்கிறேனே என்று ] அவமானத்தில் குறுகி ,முற்றுப்புள்ளி அளவு சுருங்கி இருக்கிறேன் .  அதே சொல் அதே கோஷ்டிகளால் அதே போல இன்றும் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது .பாவம் என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டு ஒரு புன்னகையுடன் கடந்து விடுகிறேன் .அங்கிருந்து இங்கு  வந்து சேர தேவைப்பட்டிருப்பது  பதினைந்து ஆண்டுகள் . :)

 

கடலூர்சீனு

 

 

 

முந்தைய கட்டுரைராஜ்கௌதமனின் அ.மாதவையா, இலவசநூல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்