ஞானபீடம் -அமிதவ் கோஷ்

amitav-ghosh_

நான் வாசித்தவரை இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் அமிதவ் கோஷ் மட்டுமே இலக்கியப்படைப்பாளியாக முக்கியமானவர் என்பது என் எண்ணம். இதை பல ஆண்டுகளாக இந்திய ஆங்கில எழுத்துக்களைப் பற்றி பேசும்போதெல்லாம் சொல்லி வந்திருக்கிறேன்.  அரிதாக நல்ல எழுத்துக்களை பார்ப்பதுமுண்டு, ஜனிஸ் பரியத் போல. ஆனால் இந்திய ஆங்கில எழுத்துக்களை தேடித்தேடி வாசிப்பவன் அல்ல என்பதையும் சொல்லியாகவேண்டும். ஏனென்றால் வாசித்தவை தரும் ஏமாற்றம் மேலும் வாசிக்கத் தூண்டுவதில்லை. அவற்றை வாசிப்பதைவிட அச்சூழலில் நின்று எழுதும் இந்தியமொழிப் படைப்பாளிகளை வாசிப்பது, குளறுபடியான மொழியாக்கத்திலானாலும்கூட, நல்லது என்பது என் அனுபவம்.

ஏன்? இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு இரண்டுபாவனைகள் உண்டு. ஒன்று நயனதாரா செகல் முதல் ஷோபா டே வரை தொடரும் உயர்குடி மிதப்பு. இந்தியாவின் உயர்மட்டவாழ்க்கையின் சித்திரங்களைச் சொல்வது. மெல்லிய கிண்டலுடன் அவற்றைச் சொன்னாலும்கூட அவர்களும் அதன் பகுதியாகவே தெரிவார்கள். பாலுறவுமீறல்கள், ஊழல்கள், வெற்றுத்தோரணைகள், அரசியல்சூழல்களினால் உருவாகும் இக்கட்டுகள் ஆகியவையே பெரும்பாலும் அவற்றின் கருப்பொருட்கள்.

இன்னொன்று, உயர்குடிச்சூழலில் இருந்தபடி  ‘இறங்கிவந்து’ இந்தியச்சூழலைப் பார்ப்பது. இவை மிகப்பெரும்பாலும் மொக்கையான முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டு சமைக்கப்பட்ட படைப்புகள். இந்திய ஆங்கில எழுத்தில் இந்தவகையான போலிமுற்போக்கு உள்ளடக்கம் கொண்ட எழுத்துக்களே மிகுதி. அவற்றின் உச்சகட்ட உதாரணம் அருந்ததி ராய்தான். நேர்மையான அரசியல் நோக்கு கொண்ட படைப்புகள் எந்நிலையிலும் முக்கியமானவை. ஆனால் இப்படைப்புகளில் தெரியும் அரசியல் அடிப்படையில் ஒருபாவனை.

இந்தப்போலிச்சூழலில் உண்மையான தேடலும், ஆழ்ந்த வரலாற்றுணர்வும் கொண்ட படைப்பாளி அமிதவ் கோஷ். இவ்வளவுக்கும் நான் அவருடைய இரண்டுநாவல்களை மட்டுமே படித்திருக்கிறேன். The Shadow Lines நான் வாசித்த அவருடைய முதல்நாவல். நிழல்கோடுகள் என்ற பேரில் திலகவதி மொழியாக்கத்தில் தமிழிலும் வெளிவந்துள்ளது. அது ஓர் உண்மையான படைப்பாளியை அடையாளம் காட்டியது. அதைப்பற்றி எழுதியிருக்கிறேன். விரிந்த வரலாற்றுப்பின்புலத்தில் எழுதப்பட்ட The Glass Palace நான் வாசித்த இன்னொரு நாவல் Sea of Poppies நல்ல நாவல் என்று சொன்னார்கள். நான் அவரை தொடர்ந்து வாசிக்கவில்லை, வாசிக்கக்கூடாதென்றில்லை. ஆங்கிலத்தில் வாசிப்பது சற்றே காலமெடுத்து செய்யவேண்டிய வேலை எனக்கு. அந்த உழைப்பை அளிக்கத்தக்க உலகப்படைப்பாளிகள் பலர் காத்திருக்கிறார்கள். நான் வாசிப்பதே குறைந்துவரும் வயது இது.

அமிதவ்கோஷ் மனிதர்களின் உளநிகழ்வுகளை விவரிப்பதிலும் சூழல்விவரணைகளை கூர்மையாக அளிப்பதிலும் தேர்ந்தவர். அவருடைய வரலாற்றுநோக்கு பிற ஆங்கில எழுத்தாளர்களைப்போல அன்றாட அரசியல்சரிகளால் கட்டமைக்கப்பட்ட எளிமையான பார்வை அல்ல. கல்விக்கூடங்களிலிருந்து பொறுக்கிக்கொண்டதும் அல்ல.  வரலாற்றுப்பெருக்கின் பொருளின்மையை, அதனூடாக மானுடர் அடையும் துயரை ஒரு தரிசனமாக திரட்டி முன்வைப்பதில் அமிதவ்கோஷ் வெற்றிபெற்றிருக்கிறார் என்பதை The Glass Palace காட்டுகிறது

ஆனாலும் சிலவற்றைக் குறிப்பிடவேண்டும். அமிதவ் கோஷ் எழுதியவைகூட ‘மையப்போக்கு’ வாசிப்புவகை நாவல்களே. அவற்றில் விரிவான தகவலொழுக்கு, சித்தரிப்பின் கூர்மை ஆகியவற்றாலும் வரலாற்றுணர்வாலும் அவர் மேலே நிற்கிறார். ஆனால் தீவிர இலக்கியம் என்பது இதைவிட ஒரு படி மேலானது. அது எழுத்தாளனின் அந்தரங்க அலைக்கழிப்புகளிலிருந்து உருவாவது. அவனுடைய சொந்தக்கண்டடைதலால் நிலைகொள்வது. வடிவக்கூர்மையை விட எழுத்தாளனின் தனித்தன்மையாலேயே நம்முடன் பேசுவது. அதற்கேற்ப சிடுக்கும் சிக்கலும் எளிமையும் நெகிழ்வும் கொள்ளும் தனிமொழியால் ஆனது.

இதை அமிதவ் கோஷின் நாவல்களை நீலகண்டப்பறவையைத் தேடி போன்ற பிற வங்கநாவல்களுடன் ஒப்பிட்டாலே உணரமுடியும். அமிதவ்கோஷ் நாவல்கள் மிகமிகக் கச்சிதமானவை, நன்றாக ‘எடிட்’ செய்யப்பட்டவை. சீரான பொதுவாசிப்புக்கான மொழி கொண்டவை. ஏனென்றால் அவை எந்த வாசகர்களுக்காக உருவாகின்றன என ஆசிரியருக்கும் தெரியும், பதிப்பாளருக்கு இன்னும் தெளிவாகத் தெரியும். அதை அளவுகோலாகக் கொண்டு அவற்றை செம்மை செய்யமுடியும். அமிதவ்கோஷ் சென்றடையவேண்டிய இடம் முன்னரே அவரால் வகுக்கப்பட்டுவிட்டது. இந்திய ஆங்கில எழுத்து என்பது சர்வதேச வாசகர்கள், இந்திய வாசகர்களை உத்தேசித்து உருவாக்கப்படுவது. அது மிகப்பெரிய சந்தை. அந்தச் சந்தையில் சில விஷயங்கள் உடனடியாக விலைபோகும் – முதிராமுற்போக்கு முதன்மையாக. அடுத்தபடியாக  வரலாறு.அதற்கேற்பவே இவை எழுதப்படுகின்றன. வாசகனே இங்கே தீர்மானிக்கும் சக்தி, ஆசிரியனின் தேடல் அல்ல.

மாறாக, இலக்கியம் எவரென்றே தெரியாத ஒருவாசகனை முன்னால்கண்டு எழுதப்படுவது. அவன் நாளை வருபவனாகக்கூட இருக்கலாம். ஆகவே இன்றைய வாசகப்பரப்பின் ரசனைக்கேற்ப  அதை செம்மையாக்கம் செய்ய முடியாது. என்ன சொல்லப்போகிறோம் என்று எழுத்தாளனுக்கே தெரியாமல் எழுவது அது. ஆகவே அவன் மொழி அவனைமீறி எழுமிடங்களே அதில் முக்கியம், அவனால்  பிரக்ஞபூர்வமான ஒழுங்குடன் செதுக்கப்பட்ட இடங்கள் அல்ல, அவை அவனுடைய பயிற்சியை மட்டுமே காட்டுகின்றன. கலை என்பது கலைஞனின் தன்மறப்பில் இருந்து எழுவது.

அமிதவ் கோஷ் தலைமுறையில் வங்கம் உருவாக்கிய பெரும்படைப்பாளி சுனீல் கங்கோபாத்யாய தான். அவருடன் ஒப்பிடுகையில் அமிதவ்கோஷ் நேர்த்தியான வாசிப்பை அளிப்பவர், ஆனால் நெடுங்காலம் நம்முடன் வாழாதவர். நம்முள் அந்த நிலமாகவும் மக்களாகவும் வளராதவர். இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் ஞானபீடம் வழங்கப்படும் தகுதி கொண்டவர் அமிதவ் கோஷ்தான் என்பதைச் சொல்லும்போதே இந்திய வாசகன் சுனீல் கங்கோபாத்யாயவுக்கு ஞானபீடம் வழங்கப்படவில்லை என்பதையும் நினைவுகொள்ளவேண்டும்

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4
அடுத்த கட்டுரைஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்