திருவனந்தபுரத்தில்…

iffk-759

 

நேற்றுமாலை [12-12-2018]  திருவனந்தபுரம் திரைவிழாவிலிருந்து திரும்பினேன். நள்ளிரவில் வீடுவந்தேன். ஆறுநாட்கள் அங்கிருந்தேன். நாகர்கோயிலில் ஒரு திருமணத்திற்காக வரவேண்டியிருந்தது. ஆகவே ஒருநாள் முன்னரே திரும்பினேன்.அருண்மொழியும் சைதன்யாவும் இன்று [13-12-2018]தான் திரும்புகிறார்கள்.

ஆறுநாட்கள்மொத்தம் 26 படங்கள் பார்த்தேன்.

1 Foxtrot

2 One Step Behind the Seraphim

3 Everybody Knows

4 Manta Ray

5 Ash Is Purest White

6 Shoplifters

7 The Reports on Sarah and Saleem

8 Crystal Swan

9 A Family Tour

10 The bed

11 The Ballad of Buster Scruggs

12 A Twelve-Year Night

13 Mayanadhi

14 The third wife

15 Yomeddine

16 Roma

17 The graveless

18 Sivaranjiniyum Innum Sila Pengalum

19 Aga

20 And Breathe Normally

 21 Summer Survivors

22 The Interpreter

23 BlacKkKlansman

24 Yuli

25  Sew the Winter to My Skin

26 Loves of a Blonde

திரைப்படவிழாவின் கூட்டான உத்வேக மனநிலை, இதற்காக மட்டுமே வந்திருக்கிறோம் என்னும் உணர்வு இல்லையேல் இத்தனை படங்களைப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகம். முப்பதாண்டுகளுக்குமேலாக உலகக் கலைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன், ஒருகாலத்தில் கலைப்பட இயக்கத்துடன் தொடர்புகொண்டிருக்கிறேன், ஆனாலும் சினிமா என்னுடைய முதன்மை ஊடகம் அல்ல. வாசிப்பதே என்னை முழுமையாக உள்ளிழுத்துக்கொள்கிறது.  இம்முறை எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்றுதான் வந்தேன்.

The Wild Pear Tree, Capernaum இரண்டும் நான் தவறவிட்ட படங்கள் என்றார்கள். மாயாநதி நான் சென்றபோது Capernaum க்கான அரங்கு நிறைந்திருந்தமையால் சென்று பார்த்தபடம். இருபத்தாறு படங்களில் பதினைந்து படங்களையாவது சிறந்தவை என்று சொல்வேன். Aga, Roma இரண்டையும் மிகச்சிறந்தவை என நினைக்கிறேன். A Family Tour போன்ற சிலபடங்கள் தனிப்பட்டமுறையில் என் வாழ்க்கையுடன் எங்கோ தொடர்புகொள்பவை என்பதனால் எனக்குப்பிடித்தன

எப்போதுமே சினிமாக்களைப் பற்றி விரிவாக எழுதுவதில்லை. அரிதாகச் சில விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். இது எனக்கே நினைவிருப்பதற்கான ஒரு நாட்குறிப்புதான். ஆனால் இந்த ஆறுநாட்களைப்பற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. பொதுவாகத் திரைப்படவிழாக்கள், இசைவிழாக்களின் இடமென்ன என பலருக்குத் தெரிவதில்லை. ஒர் இசைவிழாவுக்குச் சென்றாலன்றி நாம் நாளில் பதினெட்டு மணிநேரம் இசை கேட்கமுடியாது. என்ன ஆச்சரியமென்றால் அப்போது நம் மனம் மிகக்கூர்மைகொண்டிருப்பதனால் இசையை நாம் கவனமில்லாமல் கேட்பதில்லை, சலிப்படைவதுமில்லை. சினிமாவும் அப்படித்தான்

இப்படங்களில் கணிசமானவற்றை சீக்கிரமே நெட்ஃப்ளிக்ஸ் போன்றவற்றில் பார்த்துவிடலாம். முன்பெல்லாம் இத்தகைய படங்களை மீண்டும் இன்னொரு விழாவில் பார்த்தால்தான் உண்டு. ஆனால் அகன்றதிரையில் திரையரங்கின் இருளில் இருந்து பார்த்தால்தான் திரைப்படம் பார்க்கும் அனுபவம் முழுமையடைகிறது. அகா போன்ற படங்கள் அகன்றதிரைக்கே உரியவை. தூந்திரப்பிரதேசத்தின் அகன்று விரிந்த நிலப்பரப்பின் தனிமையை ,விழிகள் பனிவெண்மையால் நிறையும் எக்களிப்பை அப்போதுதான் உணரமுடியும்

அத்துடன் கலைப்படங்களில் பெரும்பாலானவை பின்னணி இசை கொண்டிருப்பதில்லை. பின்னணி இசை என்பதே மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது. பின்னணி ஓசை மட்டுமே. அந்த ஓசை மிகச்சிறந்த ஒலியமைப்புடன் கூடிய திரையரரங்கிலேயே சிறந்த அனுபவத்தை அளிக்கிறது

காலை ஒன்பதரை மணிமுதல் படங்கள். ஒருபடத்திற்கும் இன்னொன்றுக்கும் இடையே அரைமணிநேரம்தான் இடைவெளி.  அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் விரையவேண்டும். திருவனந்தபுரம் திரைவிழாவின் சிறப்பு பெரும்பாலான அரங்குகள் இரண்டு கிலோமீட்டர் வளையத்திற்குள் அமைந்திருப்பது. ஆட்டோரிக்‌ஷாக்கள் இருபது முப்பதுரூபாய்க்கு எப்போதும் கிடைப்பது.

உலகப்படவிழா ஒரேபார்வையில் உலகைப்பார்க்கும் ஓர் அனுபவம். தூந்திரப்பிரதேசம் [Aga] முதல் தாய்லாந்து [Manta Ray] வரை எகிப்து [Yomeddine ] முதல் கியூபா [Yuli] வரை படத்திற்குப் படம் உலகம் மாறிமாறித்தெரிகிறது. வணிகப்படங்கள் போல அரங்குகளில் கட்டமைக்கப்பட்ட செயற்கையான யதார்த்தம் அல்ல. உண்மையான நேரடிக்காட்சி. கதை, தரிசனம் ஆகியவற்றை கருத்தில்கொள்ளாவிட்டாலும்கூட நாமறியாத நாடுகளின் வாழ்க்கையை வெறுமே பார்ப்பதே பெரிய அனுபவமாக அமைகிறது.

சிறிய அளவில் பின்னணிப்புரிதல் இருக்குமென்றால் நாம் சாதாரணமாக காணாத பலவற்றைக் கண்டடையமுடியும். உதாரணமாக And Breathe Normally ஒரு யதார்த்தவாதப்படம், இரு பெண்களிடையே உருவாகும் சார்பையும் அன்பையும் சொல்வது. ஆனால் படத்தின் மொழிபுக்கு வெளியே, காமிரா வெறுமே காட்டித்தரும் ஓரு யதார்த்தமும் உண்டு. ஐஸ்லாந்து சமீபத்தில் பொருளியல்வீழ்ச்சியைச் சந்தித்த நாடு. முதல்உலகம் எனப்படும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அது. அத்தகைய நாடு பொருளியல்வீழ்ச்சி அடையும்போது உள்கட்டுமானங்கள் உயர்தரமாக இருக்க உணவுக்கும் உறைவிடத்திற்கும் வழியில்லாத ஏழ்மை வந்துவிடுகிறது. அந்த விந்தையை இப்படத்தில் பார்க்கலாம். கண் நமக்கு காட்டித்தரும் சூழலில் வறுமையே இல்லை, அழகான சாலைகள் உயர்தர வசிப்பிடங்கள் கார்கள் எல்லாம் உள்ளன. ஆனால் இலவசமாகக் கிடைக்கும் ‘சாம்பிள்’ உணவை வாங்கி சாப்பிடுகிறாள் கதாநாயகி. இப்படி எல்லா படங்களிலும் ஆசிரியன் உத்தேசிக்காமலேயே காமிரா காட்டும் யதார்த்தங்கள் உள்ளன.

சற்றே இலக்கியவாசிப்பும் இருந்தால் இப்படங்களிலிருந்து மேலும் நெடுந்தோலைவு செல்லமுடியும். A Family Tour எளிமையான கதையோட்டம் கொண்ட படம். ஆனால் நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்களின் வாழ்க்கைகுறித்த ஓர் பின்புல அறிதல் அந்தக் கதாநாயகியின் தத்தளிப்பையும் கசப்பையும் பலமடங்காக ஆக்கிவிடும். நான் அலக்ஸாண்டர் குப்ரின் முதல் தாமஸ் மன் வரையில் மண்ணை உதறிவிட்டுச் செல்லநேர்ந்த படைப்பாளிகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். ஏதோ ஓர் இடத்தில் அந்த அரசியலும், வெளியேற்றமும் அபத்தமாகத் தெரிகின்றன. ஆனால் நாடுதிரும்புவது அறவீழ்ச்சியாகவும் அமைகிறது.

இந்த திரைவிழா நீண்டநாட்களுக்குப்பின் நான் முழுமையாக பங்கெடுக்கும் திரைவிழா. பெரிய தொலைவே எனக்கும் உலகசினிமாவுக்கும் நடுவே உருவாகி வந்துள்ளது. அதுவே சிலவற்றைக் காட்டித்தருகிறது. முதன்மையாகத் தெரியும் வேறுபாடு, இப்போது பெரும்பாலான படைப்புகள் உணர்ச்சிகரமானவையாக ஆகிவிட்டிருப்பது. முன்பு கலைப்படங்களின்  உலகளாவிய  தனித்தன்மையாக இருந்தது உணர்ச்சியற்ற அழுத்தம். அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்களின் பாணியும் அதுவே. இப்படங்களில் எதிலுமே அந்த உணச்சிய்ற்ற தன்மை இல்லை

உணர்ச்சிகரம் நாடகத்தன்மையை கொண்டுவருகிறது, மிகையாகிவிடுகிறது என எண்பதுகளின் திரைப்பட ஆசிரியர்கள் எண்ணினார்கள். உணர்ச்சித்தருணங்களை வேண்டுமென்றே தவிர்த்து அடுத்த ‘கட்டு’க்குச் சென்றுவிடுவது அவர்களின் வழக்கம். இப்போது உச்சகட்ட உணர்ச்சிகரத் தருணங்களிலேயே படத்தைக் கொண்டுசெல்ல திரைப்பட ஆசிரியர்கள் தயங்குவதில்லை. Foxtrot, Roma போன்ற படங்கள் உணர்ச்சிகரமானவை. கலை என்பது நிஜம் அல்ல, கட்டமைக்கப்பட்ட நிஜம்.ஆகவே நிஜத்தை அது நகல்செய்யவேண்டியதில்லை. கட்டமைக்கப்பட்ட நிஜத்தினூடாக அது சென்றடையும் இடமென்ன என்பதே முக்கியம். கலையை நிஜம் அருகே கொண்டுசெல்ல முயன்றது நவீனத்துவ பாணி. கலை என்பதே கட்டமைக்கப்பட்ட நிஜம் என உணர்ந்து அதன் அடுக்குகளுக்குள் தயக்கமில்லாமல் செல்வதே இன்றைய பாணி . இலக்கியத்தில் வேரூன்றிவிட்ட அந்தக்கருத்தை சினிமாவிலும் காணமுடிந்தது. 

உடனடியாகத் தோன்றிய இன்னொரு உளப்பதிவு, இப்படங்களில் அரசியலை விட குடும்பம், மானுட உறவுகளே முதன்மை கொண்டிருப்பது.  A Twelve-Year Night மட்டுமே முழுமையான அரசியல்படம் என்று சொல்லவேண்டும்.முன்பெல்லாம் திரைவிழாக்கள், திரைக்கூட்டமைப்புகளில் பெரும்பாலான படங்கள் அரசியல்படங்களே. குடும்ப அமைப்பின் மீதான அவநம்பிக்கையைச் சொல்லும் படங்கள் அன்று மிகுதி. இப்போது குடும்ப அமைப்பு மானுடரை உணர்ச்சிகரமாக தழுவி ஒன்றாக்குவதையே பல படங்கள் பேசுகின்றன. அதேபோல எண்பதுகளில் ஆக்ரமித்திருந்த ‘தனிமனிதனின் இருத்தலியல் அலைக்கழிப்புகளும் திரிபுகளும்’என்னும் கருவும் இன்று பெரிய பேசுபொருளாக இல்லை. ஈரானில் மட்டும்தான் இருத்தலியம் கொஞ்சம் எஞ்சியிருக்கும்போல.  

ஈரானிய சினிமாக்கள் நாடகங்களை வைத்துப்பார்க்கையில் அவர்கள் பெரும்பாலும் ஐரோப்பா எழுபதுகளில் பேசிக்கொண்டிருந்த கதைக்கருக்களை தங்களுடையவை என இப்போது உணர்கிறார்களோ என்ற ஐயம் ஏற்பட்டது. The graveless முழுக்கமுழுக்க ஓர் ஐரோப்பியக் கரு, அழுகும் தந்தைப்பிணம் என்பது ஒரு பெக்கட்தனமான கரு– ஈரானியப் பின்னணியில். இந்த திரைவிழாவிலேயே நான் வெறுத்தபடம் BlacKkKlansman. செயற்கையான நக்கல்கள் மட்டுமே கொண்டது. எந்த ஆழமும் அற்ற ஒற்றைப்படையான உமிழ்வு மட்டும்தான் இது. அதன் சமூக –அரசியல் காரணங்கள் என்னவாக இருந்தாலும் அது கலை அல்ல.அதிலிருந்து நான் எங்கும் செல்ல வழியே இல்லை. 

திருவனந்தபுரம் திரைவிழாவுக்கு இருபதாண்டுகளுக்கு முன்பு வந்த பலரை மீண்டும் கண்டேன். அதற்கும் முன்பு, சூரியா திரைவிழாவாக இது இருந்த காலத்தில் பார்த்த ஒருவரைக்கூட மீண்டும் பார்த்தேன். பழைய சினிமா நினைவுகளை பரிமாறிக்கொண்டு முதியவராக உணர்ந்தேன்.  வழக்கமாக வரும் கோயில்பட்டி கூட்டம் கண்ணில்படவில்லை.திருவனந்தபுரம் திரைவிழாவுக்கு விதவிதமான ரசிகர்கள். கல்லூரி மாணவர்கள் பெரும்பகுதி. திரைத்துறை சார்ந்த இளைஞர்கள், இலக்கியவாசகர்கள், இலக்கியவாதிகள். இங்கே திரைவிழாவில் படம்பார்ப்பது அரிய அனுபவமாக அமைவதற்கான காரணம் அரங்கிலிருந்து பிழையான எந்த எதிர்வினையும் இருக்காது, தேர்ந்த ரசிகர்களே இருப்பார்கள் என்பது

முன்பெங்கோ ஒரு கதையில் திரையரங்கை நகரத்தின் கருப்பை என எழுதியிருந்தேன். மீண்டும் கருப்பை புகுந்து கனவுகண்டு சுருண்டு இருளில் அமைந்திருப்பதே திரைப்படம் பார்ப்பதென்பது. கருவறைகளிலிருந்து கருவறைகளுக்கான பயணமாக ஆறுநாட்கள். வெளியே வந்து கண்கூச உலகைப் பார்க்கையில் அது வேறொரு பெரிய சினிமாப்பரப்பாகத் தெரிவதை மீண்டும் மீண்டும் உணர்ந்தேன்.

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்