அன்புநிறை ஜெ,
“பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்” – பேராசிரியர் ராஜ் கௌதமனின் இந்த நூலை வாசித்து முடித்த பின்னரும் ஒரு வாரமாக அதன் நிறைவுச் சொற்கள் பல தருணங்களில் மேலெழுந்து வருகின்றன. “வரலாற்றில் எஞ்சி நிற்கப்போகிறவை அபத்தங்களைப் பற்றிய உண்மைகளும், உண்மைகளைப் பற்றிய அபத்தங்களும் மட்டுமே!”
மலிவான தகர இழைப் பூச்சுகளென ஊடகங்களில் மலிந்து கிடக்கும் தமிழினப் பற்றையும், போலிப் பெருமிதங்களையும் பறைசாற்றும் பதிவுகளும், காணொளிகளும், வாட்சப்பில் வரும் அறைகூவல்களும் ஒரு புறமிருக்க நாளொன்று புலர வரும் செய்திகளும் அச்சொற்களையே எதிரொலிப்பது போலிருக்கிறது.
இந்நூல் ‘சங்க இலக்கியம்’ என வகுக்கப்பட்ட பாட்டும் தொகையுமான பாடல்களையும், அதைக் காலத்தாற் பிந்தைய தொல்காப்பியம் அப்போது நிலவிய சமூக, அரசியல், அறிவுச் சூழலுக்கேற்ப பொருள் கோட்ட முயல்வதில் விளைந்த அறிதல் இடைவெளிகளையும், தமிழ்ச் சமூக உருவாக்கத்தின் பரிணாம வளர்ச்சியையும், இந்நூல்களின் வழியாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த பதினொரு கட்டுரைகளின் தொகுப்பு.
பொது புத்தியில் உறைந்துவிட்ட பல அபத்தங்களைக் களைந்து மிகப் பெரும் திறப்பை அளிக்கக்கூடிய நூல் என்ற வகையில் மிக முக்கியமான நூல்.
முதலாவதாக, இன்று பெரும்பாலும் தமிழர்களிடையே காண முடியாத வரலாற்று நோக்கு. எந்த ஒரு தனி வரலாறும் அந்தப் பிராந்திய வரலாறுடன் இயைய வேண்டும்; அது தேசிய வரலாற்று வரைபடத்தில் பொருந்த வேண்டும்; அந்தத் தகவல்கள் உலக வரலாற்றோடு ஒத்திசைய வேண்டும் – என்ற இந்த அடிப்படைப் பார்வை.
‘சங்க இலக்கியம் எனத் தவறான பெயரில் அழைக்கப்பட்டு வந்த பாடல்கள்’ என்று முன்னுரையைத் தொடங்குகையிலேயே, வகுப்பில் கரும்பலகையில் எழுதியபடியே, பின்னால் கவனம் சிதறிய/உறக்கத்தின் முதற்படியிலுள்ள மாணவன் மீது ஆசிரியர் எறியும் குறிதவறாத சுண்ணக்கட்டி போலத் தொடங்குகிறார். சங்க இலக்கியத்தின் காலகட்டம் என்பது கிமு 300 முதல் கிபி 200 வரையிலான ஐந்நூறு ஆண்டுகளே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடியெனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், வரலாறு அறியப்பட்ட தமிழர்களின் சமகாலத்தில் மற்றும் அதற்கும் முன்பாகவே ,இந்தியாவில் புத்தரும், மஹாவீரரும் தோன்றி உபதேசித்து மறைந்து, நால் வேதம் புழங்கிய சமுதாயமும், மகதம் முதலான பேரரசுகளும் நிகழ்ந்து விட்டன என்பதே வரலாற்றுக் குறிப்பு. கிமு 50 முதலே சாதவாகனர்களின் காலம்(சுமார் கிமு 200 முதலே சாதவாகனர் காலம் என்கிறார் டி.டி.கோசாம்பி) , அதாவது சங்க இலக்கியங்கள் என அறியப்படும் நற்றினை, புறநானூறு, குறுந்தொகை போன்ற காலத்தால் முந்தைய நூல்களின் சமகாலம். தொல்காப்பியம் இதற்கு மிகவும் பிற்பட்டது (கிபி 475) என்பதே பல ஆய்வாளர் கருத்து.
ஒரு சமூகத்தின் தொல் பிரதிகள் பெரும்பாலும் நாட்டார் பிரதிகளாகவே இருக்குமென்ற வகையில் இந்த சங்க இலக்கியங்களின் செவ்வியல் தன்மை அதற்கு முன்னோடியாக பல நாற்றாண்டுகளின் இலக்கியச் செயல்பாடுகளின் முதிர்ச்சி இருக்கிறது என்பதையே காட்டுகிறது என்கிறார் ஜெயமோகன் (இந்திய ஞானம்). எனவே சங்க இலக்கியத்திற்கு முந்தைய பல நூல்கள் நமக்குக் கிட்டாது போயிருக்குமென உணரலாம்.
சங்க காலத்திற்கு முன்னதாகவோ அதன் சமகாலத்திலோ, புத்த, சமண மற்றும் வைதீக மதங்களின் அறக்கருத்துகள் பரவி பல அறநூல்கள் தொகுக்கப்பட்டுவிட்டன என ‘அறிவுப் பொதுமையாக்கத்தில் தொல்காப்பியக் கொடை’ என்ற கட்டுரையில் பேராசிரியர் ராஜ் கௌதமன் சொல்கிறார். வேத வேதாங்கங்களும், உபநிடதங்களும், வைதீக ஸ்ருதிகளும் தோன்றிவிட்டன. இலங்கைவரை தேரவாத பௌத்தம் பரவியிருந்தது. இந்த ஐந்நூறு ஆண்டுகளில் தமிழகம் தனித்தீவாக இருக்கவில்லை. யவனர் முதல் மௌரியர் வரை அனைத்து ஊடு பாவுகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தன என அறிகிறோம். எனில் சங்க இலக்கியத்தில் தத்துவ விவாதங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிகிறது. அதற்குப் பிறகு வந்த காப்பிய காலத்திலேயே தத்துவ விவாதங்கள் உள்ளன. இக்காலகட்டங்களில் தொடர்ந்து நடந்த பல மாற்றங்களை இலக்கியம் பிரதிபலிப்பதை பல பரிமாணங்களில் விளக்கியிருக்கிறார். இந்தத் தொடர் அறிவுச் சொல்லாடல்களின் தாக்கத்தை புறநானூற்றிலிருந்து காலத்தால் பின்வந்த கலித்தொகை மற்றும் பரிபாடலிலேயே காண முடிகிறது என சான்றுகள் காட்டுகிறார்.
சமண-பௌத்த-வைதீக அறிவுச் சொல்லாடல்களால் உண்டான மாற்றங்களும், அரசியல் மற்றும் சமய இறையாண்மையில் நிகழ்ந்த மாற்றங்களும் சார்ந்து புதியதொரு கருத்தியல் சூழலில் சங்க இலக்கியத்து தமிழ் மரபை தொல்காப்பியம் மறுவாசிப்பு செய்தது. தொல்காப்பியத்தின் பார்வை உபகண்டம் தழுவிய பெருஞ்சொல்லாடலின் நோக்கைக் கொண்டது.
இரண்டாவதாக, பொதுவாக இருண்ட காலம் என்றழைக்கப்படும் களப்பிரர் காலத்தில்தான் மிகப் பெரும் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன, காவியம், மொழிபெயர்ப்பு, நிகண்டு, இலக்கணம், தருக்கம், அறம், கல்வி எனப் பெரும் துறைகளில் சமண பௌத்தப் பெரியோர் நூல்கள் இயற்றினர். களப்பிரர் தொடங்கி, பல்லவர் காலத்து வடமொழி மொழிபெயர்ப்புகள் மற்றும் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பின்னர் முதற் பாண்டியப் பேரரசு காலத்தின் மகாபாரதம் தமிழ்ப்படுத்திய செப்பேடு என ஒரு தொடர் வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கிறார். பழந்தமிழ் மரபுக்கும் இம்மாபெரும் கருத்தியல் முயக்கங்களுக்குப் பின்வந்த நூல்களுக்குமான வேறுபாடுகளை விளக்கியிருக்கிறார்.
மூன்றாவதாக, ‘பெண்களின் வாழ்க்கை நிலைகளும் அவற்றின் சடங்குகளும்’ கட்டுரையில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு இருந்த நான்கு வாழ்க்கை வட்டச் சடங்குகளை சங்க இலக்கியச் சான்றுகள் வழியாக சொல்கிறார். பகுத்தறிவது என்ற பெயரில் சடங்குகள் என்றாலே மூடநம்பிக்கை என்ற பார்வையை பேராசிரியர் ராஜ் கௌதமன் ஏற்கவில்லை. கதை இலக்கியங்கள் ‘என்றுமுள உண்மைகளை’ வேறு மொழிகளில் பேசுவது போலவே, சடங்குகள் சமூக உருவாக்கத்தில் செயல்படுகிற உண்மைகளை குறியீடுகளாக்குகின்றன என சடங்குகளின் இடத்தைத் தெளிவாக நிறுவுகிறார். பண்பாடு மற்றும் நாகரீகம் சார்ந்த கூறுகளை ஆழ்மனரீதியில் கட்டமைப்பதற்கு சடங்குகளே கருவிகளாக இருந்து வருகின்றன. வரலாற்று சமூக ஆய்வியல் நோக்கில் ஆராயும் டி.டி.கோசாம்பி அவர்களும் தொல்பொருளியல் தவிர, பழங்குடி சடங்குகளிலிருந்து, அதன் எச்சங்களிலிருந்து நாம் அறியக்கூடுவனவற்றை எழுதியிருக்கிறார்.
பெண் பருவமடைவதை உணர்த்தும் பூப்பு சார்ந்த சடங்குகள் அனைத்துமே விருத்தி சார்ந்ததாக, பூப்பு என்ற பெயரே அதன் நீட்சியாக பிஞ்சு, காய், கனி என்ற நேர்மறை படிமங்களைத் தோற்றுவிப்பதாகவே உள்ளது. அதை சங்ககாலத்தில் தீட்டு அல்லது தீண்டத்தகாதது எனப் பார்க்கப்படவில்லை என்கிறார்.
வதுவை என்றழைக்கப்பட்ட மணச் சடங்குகளின் நீட்சியை இன்றைய சடங்குகள் வரை காண முடிகிறது. எனில் தாலி அணிவித்தல், அக்னியை வலம்வருதல் என்பதில்லை என அறிகிறோம், அது வைதீக மரபின் பாதிப்பாக இருக்கலாம். கலித்தொகைப் பாடலொன்றில் ‘ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் போல’ என அந்த மாற்றம் உள்நுழைந்து விட்டதைக் காட்டுகிறார்.
சங்க காலத்தில் அகத்துறைப் பாடல்கள் அனைத்தும் பெண்ணை மையப் படுத்தியதாகவே இருக்கிறது. எனில் தாய்வழி சமூகமாகத் தமிழ் சமூகம் இருந்ததாகத் தெரியவில்லை. உடற்கூறின் பாற்பட்டு, பாலியல் அனுபவத்தில் ஆண்-பெண் உறவு, நிகழ்த்துபவர்-நிகழ்த்தப்படுவது என்ற வரையறையிலிருந்தே, ஆண் தனது சுய ஆளுமையை, பெண்ணை, பிறரை, நாட்டை ஆளுகின்ற ஆதிக்க நிலையை அடைந்தான் என்கிறார் (சங்க இலக்கியத்தில் பாலியல் குறித்த அறக்கவலை கட்டுரை).
ராஜ் கௌதமன் இந்நூல் வழியாக இன்னொரு மிக முக்கியமான சித்திரத்தைத் தெளிவுபடுத்துகிறார். வரலாற்றுக்கு முந்தைய வேட்டுவ இனக் குழு நிலையிலிருந்து, வீரன், மறவன், நெடுந்தகை, சீறூர் மன்னன், புன்புலத்தலைவன், மலைநாடன், வேளிர், வேந்தன் எனப் படிப்படியாக நிலஉடைமை சமூகமாக மாறிய சித்திரம். இந்த மாற்றத்தை உணவு, தொழில், உறைவிடம், வழிபாடு, சடங்குகள், சமூக அறம், எனப் பல்வேறு கூறுகளில் கவனப்படுத்துகிறார். உபரி உற்பத்தியாகிய செல்வம் விளைகின்ற நிலங்களுக்கு உரிமை பூணுவதே சங்ககால அரசியல். இரை தேடுதலுக்குப் பயன்பட்ட உடல்வலிமை மறம் என்று நிறுவப்பட்டு வீரம் என்ற போர் சமூகத்தின் உயர் மதிப்பீடாகிறது. நாகரிக வரலாறே வன்முறையால் எழுதப்பட்ட வரலாறே என்கிறார்.
வேடன் என்ற அடித்தள வாழ்வில் வேட்டையை பகிர்ந்துண்ணும் இயல்பான வழக்கம், உடைமை சமூகத்தில் பொருள் மிக்காருக்கே இயல்வதான ஈகை எனும் அறமாக மாறியது என்கிறார். மகட்பாற்காஞ்சி முதலிய துறைகளில் பெண் கொடை நிமித்தம் இரு இனக்குழுக்களுக்கிடையே நிகழும் மோதலும் அழிவும் வருகிறது. ‘பழைய குழுச் சமூகங்களின் பதப்படுத்தப்பட்ட வன்முறைகளே புதிய அறங்களாகின்றன’ என்பது கூர்ந்த அவதானிப்பு. இன்றும் அதன் நீட்சிகளை நாமறிவோம்.
மரபான வேட்டை வாழ்க்கையிலேயே தொடர்ந்த வேடர்கள் உடைமை நாகரிக காலத்தில் பிறர் உடைமைகளைக் கவர்ந்து கொள்ளையிடும் நிலைக்கு ஆளாவதை கலித்தொகைப் பாடல் ஒன்று காட்டுகிறது. இன்றும் பழங்குடியினர் நாகரீக உலகுக்கு பலியாவது இதன் தொடர் சரடுதானே.
‘சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் கடவுள் உருவாக்கம்’ கட்டுரை புராதனமான நம்பிக்கைகள், குல வழக்கங்கள் ஆகியவற்றோடு வைதீக/அவைதீக சமயங்களின் பாதிப்புகளால் உருவாகி வந்த பெருந்தெய்வ வழிபாடுகளை சொல்கிறது. முருகு என சங்க இலக்கியத்தில் வரும் பெண்ணைப் பிடித்திடும் அணங்கு, மலையுறு தெய்வம் என்ற நிலைக்கு உயர்ந்து, பின்னர் தேவானையை மணந்தவன், கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தவன் என வைதீகப் பெருங்கடவுளானதை விளக்கியிருக்கிறார்.
‘புறப்பாடல்களில் அகக்கூறுகளும் அகப்பாடல்களில் புறக்கூறுகளும்’ என்ற கட்டுரை தொல்காப்பியம் வகுத்த திணை துறைகளை மீறிய பாடல்களை முன்வைக்கின்றன. இதை ‘வெளியே நாம் காண்பது அகத்தையே என்றும், அகமாகத் தோன்றுவது புறமே என்றும் புரிந்துகொண்ட ஒரு தரிசனத்தின் வெளிப்பாடுகளே சங்கப்பாடல்கள்’ என்ற ‘இந்திய ஞானம்’ வழியாகப் புரிந்து கொள்ள முடியும்.
இறுதியாக ‘பாட்டும் தொகையிலுமிருந்து முப்பால் மாறுபடும் இடங்கள்’ கட்டுரையில் குறளின் சமணச் சான்றுகளை தெளிவுறச் செய்கிறார். பாட்டும் தொகையும் காலத்தில் அறக்கருத்துகள் வாழ்விலிருந்து பிரிக்க இயலாது கலந்திருந்தன. அறக்கருத்துகளை நீதி நூல்களென தனித்துருவாக்கும் வழக்கம் அன்றில்லை என்பதை அறிய முடிகிறது. கொல்லாமையை முதற்பெரும் அறமாக முன்வைப்பதும், துறவை முன்னிறுத்துவதும் தெளிவான சமண சமயக் கூறுகள். சங்க காலத்தில் இல்லறமே ஒரே அறம். தொல்தமிழர் வாழ்க்கை புலன்களைக் கொண்டாடும் கன்னிப் பருவத்தையே அடைந்திருந்தது, துறவையும் நிலையாமையும் முதன்மையாக்கும் புலன் நாட்டங்களின் சூடு தணியும் பருவத்திற்கு அச்சமூகம் வரவில்லை என்கிறார் பேராசிரியர். பதிவிரதை எனும் ‘தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் சித்திரமும் குறள் முன்வைப்பதே’; சங்க சித்திரங்களில் இல்லை.
இவையாவும் இன்று திரிக்கப்படுவது போல இவை தமிழ் சமூகத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்டவை அல்ல, ஐந்நூறு ஆண்டு கால தொடர் சொல்லாடலில் தமிழ் சமூகத்தால் தொடர்ந்து உட்செறிக்கப்பட்டதே எனத் தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர். ஆய்வு நோக்கில் சங்க இலக்கியத்தை அணுகுவதில் இது மிக முக்கியமான நூல்.
மிக்க அன்புடன்,
சுபா