சுகாதார அறம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

ஆழமான, தற்போதைய இந்தியாவுக்கு மிகவும் தேவையான கட்டுரை.

நான் வேலை நிமித்தம் அமெரிக்காவில் சில வருடங்கள் இருந்த போது எனக்குத் தோன்றியது இதுதான் – இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் சில வருடங்கள் இங்கே அனுப்ப வேண்டும். ஏனெனில், அங்கே இருந்தபோதுதான் வரிசையில் நிற்பது தொடங்கி பல விஷயங்களின் நடைமுறைப் பயன் எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் பின்பற்றாமல், நாம் இழந்து கொண்டிருக்கும் பலன்கள் பல.

போன மாதம் கூட ஒரு பெண்மணியை ரயில் நிலையத்தில் பார்த்தேன். வட நாட்டு ரயில் நிலையங்களின் அசுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துத் தோல் சீவி நடைபாதையிலேயே போட ஆரம்பித்தார். குப்பைத்தொட்டியைத் தேடிப்பார்க்கும் எண்ணம் கூட அவருக்கு இல்லை (பத்து அடி அருகிலேயே இருந்தது அது).

அமெரிக்க ஆங்கிலத்தோடு இது போன்ற விஷ்யங்களையும் நாம் கூடிய சீக்கிரம் கற்பது நமக்கு நல்லது.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

அதை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நான் ஆஸ்திரேலியா செல்லும்போது விமானத்தில் நான் கழிப்பறைக்கு காத்து நிற்கையில் ஒரு ஆசாமி என்னை முந்தி இடித்துக்கொண்டு உள்ளே சென்றார். பொதுவாக வட இந்தியர் வரிசையில் நிற்பது குலகௌரவமல்ல என்று நினைப்பவர்கள்.

நாம் கற்றுக்கொள்ளவேண்டியது குடிமையுணர்வை. அதுவே எல்லா தளங்களிலும் ஜனநாயக உணர்வை உருவாக்கும்

ஜெ

Dear J,

We, South Indians particularly Tamils and Telegu are crazy about films
and film stars.

You are a person who goes through various aspects of an issue with an
unconventional approach backed by deep knowledge both literal and
personal experiences/ extensive travel.

What are your views on this phenomenon? Is it just an oulet to our
fantasies suppressed by our traditional and conservative society or
much more than that?

Keen to know your analysis.

jas

அன்புள்ள ஜாஸ்

உலகில் எங்குமே இந்தவகையான பொதுவான மிகைப்பற்று போக்குகள் மக்களிடையே உண்டு. மேலைநாடுகளில் நடிகர்களுக்கும் சினிமாவுக்கும் அது இல்லை. ஆனால் பலநாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு இதைவிடப்பெரிய பித்தர்கூட்டம் உண்டு. பரப்பிசைக் கலைஞர்களைக் கடவுளைப்போல கொண்டாடும் போக்கு அமெரிக்காவில் உண்டு…

நமக்குச் சினிமா அதிகம் தெரிந்த ஊடகம். அதிலேயே பரப்பிசையும் அடங்கியுள்ளது. இங்கே பெரிய அளவில் விளையாட்டுப்பற்று இல்லை. இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. ஆகவே நம்முடைய மக்கள் சினிமாவில் தங்கள் நாயகர்களை தேடுகிறார்கள்.

இந்த வகையான பொது மிகைப்பற்றுப் போக்குகள் ஏன் தேவைப்படுகின்றன என்பதை மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். மக்கள் தங்களை ஒரு திரளாக உணர்வதற்கு இவை தேவையாகின்றன. அந்த திரள் உணர்வு அவர்களுக்கு தனிமையுணர்ச்சியை இல்லாமலாக்குகிறது. கூட்டமாக, ஒரு பெரும் வல்லமையாக உணர முடிகிறது. அதன் பரவசம் அலாதியானது. எந்தக்கூட்டத்திலும் அதன் உறுப்பினர்கள் கட்டற்ற பரவசம் கொள்வதைக் காணலாம். [வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய ஃபாசிசத்தின் ஆள்கூட்ட உளவியல் என்ற நூல் பலகாலம் முன்னர் இதன் பல தளங்களை எனக்கு அறிமுகம் செய்தது]

மேலும் இன்றைய சமூகங்களுக்கு அடியில் பழைய நிலப்பிரபுத்து சமூகமும் அதற்கடியில் பழங்குடிச் சமூகமும் உள்ளது. அவற்றில் ஓங்கியிருந்த வீர ஆராதனை மனநிலை பல்வேறு உருவ மாற்றங்களுடன் இன்றும் நீடிக்கிறது

கடைசியாக வந்த சிந்தனைகளின் படி, ஒரு சமூகம் எந்த மரபணுக்கூறுகளை முன்னெடுத்துச்செல்ல விரும்புகிறதோ அதை வழிபடும் மனநிலையை அடையும். அவற்றைக் கொண்டவர்களை அது வழிபடும். பெரிய தந்தங்களை உருவாக்கும் மரபணுக்களை முன்னெடுத்துச்செல்ல விரும்பும் யானைக்கூட்டம் அத்தகைய தந்தங்கள் கொண்ட யானையை நாயகனாக ஆக்கும்.

தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் திரை நாயகர்களின் செல்வாக்கு குறையும்போது திரளுணர்வுக்காக இளைஞர்கள் சாதிசங்கங்களுக்காக செல்வதையே காணமுடிகிறது. அதற்கு சினிமாவே மேல்

ஜெ

Dear J,

I read your views and the comments that followed.

I have few comments:

1. I have seen in the US & Europe, everywhere public toilets and dustbins, garbage bins. If we provide adequate number of public toilets and dust/garbage bins, I believe to a large extent, the situation can be improved. Of course, that is another issue the dust/garbage bins will be stolen within a couple of days and sold. Today I went to Chennai Book fair. I happen to go to the toilet of this famous St.Geroge HS and believe me the condition of toilets was nauseating. Visit any malls with flashy shops in Chennai or for that matter high profile convents /schools /colleges which charge lakhs in capitation fees and you will find the same stinking toilets. No point in blaming Europeans for this state of affairs. They have left the country 60 years back and money lost in one spectrum or CWG would be more than enough to provide such facilities in every village.

2. Your argument that Thames was stinking in 18th Century so we will take another century to clean up Coovam is no argument. By the same token, we can relax and catch up with western world in science & technology may be after 50 years or so.

regards,
Diaz

அன்புள்ள ஜாஸ்

இதைப்பற்றி என் கருத்தை பலமுறை எழுதியிருக்கிறேன்.

கழிப்பிட வசதிகளையோ குப்பைக்கூடை வசதிகளையோ ஏற்படுத்திக்கொடுத்தால் தீரக்கூடிய விஷயம் அல்ல இது. வெறுமே நாகரீகம் சம்பந்தமான சிக்கலும் அல்ல. பல்வேறு பொருளியல், சமூகவியல் காரணிகள் உள்ளே உள்ளன.

ஒன்று ஒரு மிகச்சிறப்பான குப்பை திரட்டல், கழிவகற்றல் அமைப்பை உருவாக்கி அதை நிலைநிறுத்த விரிவான வலைப்பின்னல் கொண்ட கட்டமைப்பும் நிர்வாகமும் தேவை. தொழில்வளம் மிக்க மேலைநாடுகளில் அது எளிது. அத்தகைய அமைப்பு இன்னும் நம் நாட்டில் பலதுறைகளில் உருவாகவே இல்லை. அது உருவாவதற்கு பெருமளவில் நிதியும் தேவை. அமெரிக்கா கழிவகற்றுவதற்குச் செலவிடும் தொகை மூச்சுமுட்டும் அளவுக்கு பெரியது. நாம் இன்னும் கிராமப்புற சாலைகளையே போட்டுமுடிக்கவில்லை. நாம் இன்னும் கௌரவமான குடியிருப்புகளையே உருவாக்கவில்லை. ஆகவே நம்முடைய முன்னுரிமையில் கழிவகற்றம் இல்லாமலிருக்கிறது.

இரண்டாவதாக மனநிலை. சுத்தம் சம்பந்தமான மனநிலை சிறுவயதிலேயே ஊட்டப்படவேண்டிய ஒன்று. அது இங்கே இன்னும் சொல்லிக்கொடுக்கப்படவில்லை. நாம் அடிப்படைக்கல்வியை பரவலாக அளிக்க ஆரம்பித்து ஐம்பதாண்டுக்காலமே ஆகிறது. முழுமையான அடிப்படைக்கல்வி இன்னமும் எட்டப்படவில்லை. ஒரு சமூகமனநிலையாக சுகாதாரம் பேணுவது மாறும்போதே இங்கே மாற்றம் நிகழும்.

அதாவது இது ஒட்டுமொத்த பொருளியல் மாற்றத்தின் விளைவாக நிகழக்கூடியது. பொருளியல் வளர்ச்சியும் குடிமையுணர்ச்சியும் இணையும் போது உருவாகும் மனநிலை அது. எங்காவது கொஞ்சமேனும் பொருளியல் மாற்றம் நிகழும்போது சுகாதார உணர்ச்சியும் கூடவே உருவாவதை பல இடங்களில் கண்டிருக்கிறேன்

ஜெ

தகரமுரசு

அன்புள்ள ஜெயமோகன்,

சுகாதார போதம் முழுக்க பண்பாடு சார்ந்த பிரச்சினைதான் பொருளியல்காரணிகள் அல்ல என்று குமரி மாவட்டத்தை மட்டும் உதாரணமாக கொண்டு முழுவதுமாக தள்ளிக்களைய முடியாது. அமெரிக்காவில் இரண்டு மாதம் இருந்ததுபோல் தமிழக தலைநகர் சென்னையிலும் தொடர்ந்து இருந்து பார்த்தால் தெரியும் விலைவுயர் வெளிநாட்டுக் காரிலிருந்திறங்கி வுட்லாண்ட்ஸ் காலணியணிந்து லீ ஜீன்ஸின் ஜிப்பைத்திறந்து போக்குவரத்து நிறைந்த வீதியில் மூத்திரம் அடிப்பது பண்பாடு சார்ந்ததுதான் என்று. பொது இடங்களை அசுத்தமாக்குவது நம்மவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை. இதில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கிடையாது. அதறகுத்தகுந்தாற்போல் இங்கு ஆள்பவர்களும் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து கொடுப்பதிலை. சென்னை அண்ணாசிலையிலிருந்து கத்திப்பாரா சந்திப்புவரை சிலைகள் இருக்கும் அளவுக்கு பொதுகழிப்பிட வசதி ஏதும் இல்லை. பொருளாதாரம் காரணம் என்றால் சிலை வைக்க செலவிடும்போது பொதுக்கழிப்பிடம் கட்ட இயலாதா ? பொதுமக்கள் ஆத்திர அவசரத்திற்கு எங்கும் போய்க்கொள்லலாம் என்பது பொருளாதரக்காரணியன்று அரசுயந்திரமும் ஊக்கப்படுத்தும் பண்பாடுதான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.

1944 முதல் சென்னையின் மிகப்பிற்பட்ட பகுதிகளான குசப்பேட்டை, சூளை, பட்டாளம் போன்ற பேட்டைகளில் ஐம்பது வருடங்களுக்கு அதிகமாக வசித்து கண்டும், கேட்டும், உணர்ந்தும்,கிடைத்த அனுபவங்கள் சுகாதாரம் என்றால் என்ன என்று எண்ணவைக்கிறது. பொதுவாகவே இந்தியர்களுக்கு சுகாதார போதம் மிகக்குறைவுதான். அதிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பொது இடங்களை அசுத்தமாக வைத்திருத்தல் என்பது சிறிது மிகையாகவே உள்ளது. ஒரு சில சினிமாக்காரர்களும் தங்கள் படத்தில் ரோட்டோரத்தில் மூத்திரம் போகும் காட்சிகளை அவை தத்ரூபம் என கலைநயத்துடன் காண்பித்து, இது நம் பண்பாட்டு பிரச்சினைதான் என்பதை நிரூபிக்கின்றனர். ஒரு தமிழ் எழுத்தாளரும் தான் மலம் வாரியதை தவறாமல் அடிக்கடி பதிவுகளில் நினைவுகூர்கிறார்

சுகாதார போதம் வராதவரை, கழிப்பிடங்கள்ளைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்காதவரை நூறு அப்துல்கலாம்கள் தோன்றினாலும் இந்தியாவை வல்லரசாக்க முடியாது என்பது திண்ணம்.

அன்புடன்

கெ.குப்பன்
சிங்கப்பூர்

அன்புள்ள குப்பன்

நீங்கள் சொல்வதை நானே கண்டிருக்கிறேன். ஆனால் இதை தனிநபர் மனநிலையாக மட்டுமே பார்க்கமுடியாதென மட்டுமே சொல்கிறேன். இது ஒரு சமூகமனநிலையாக ஆகவேண்டும். அதற்கு சமூகத்தின் முன்னுரிமைகள் மாறவேண்டும். அதற்கு ஒரு பொருளியல் வளர்ச்சி தேவைப்படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைபயணங்கள் கடிதம்
அடுத்த கட்டுரைநான்காவது கொலை!!! -2