சுபிட்சமுருகன், வாசிப்பு

saravanan

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

இருண்ட இரவில் ஒரு மின்னல் வீச்சு- போத மனம் விலகி விடும் நிலையில் அடிப்படையாக எஞ்சி இருக்கும் இயல்பில் ஏற்படும் அனுபவங்களை ஆன்மாவின் இருண்ட இரவு(dark night of the soul) என்பார்கள். பற்றிக் கொள்ள பிடிமானம் ஏதுமின்றி அதள பாதாளத்தில் முடிவற்று வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலை. எச்சரிக்கும் அச்சம் கொள்ளும் நியாயத்தை உணரும் உணர் மனம் விடுபட்டுவிட்ட நிலையில் கதை சொல்லியின் அனுபவங்கள் ஒரு வித அதிர்ச்சியையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மஞ்சள் அத்தையின் வஞ்சம் வீட்டு ஆண்களை மிக மோசமாக பழி கொள்ளும் போது தான் அடையும் கீழ்மைகளின் வழியாகவே அதனை கடக்கிறான் கதையின் நாயகன்.

கீழ்மைகள் வஞ்சம் கொண்ட அந்த ஆன்மாவை  நிறைவு கொள்ளச் செய்யும். கீர்த்தனாவுடனான காதல் சம்போகம் ஒரு நிலையில் உச்ச அனுபவத்தை வழங்கும் போது அதற்கு நேர் எதிர் நிலையில் அதனை இழந்தவனாய் புழுவினும் இழிந்தவனாய் அதே வகையான உச்சங்களை அடைகிறான். இந்த நாவலில் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பகுதி இது. கதை நாயகனின் அனுபவங்களுடன் ஒட்டிப் போகும் போது அவன் சீக்கிரம் அந்தக் கீழ்மைகளை கடந்துவிட வேண்டும் என நம் மனம் பதைக்கிறது. ஒளிக்கீற்றாக வருகிறார் சாமியிடம் அவனை அழைத்துப் போகிறவர்.

supi

இதன் பிறகு கதை சொல்லிக்கு ஏற்படும் பல வகையான மிஸ்டிகல் எக்ஸ்பீரியன்ஸ் அனைத்தும் சிறு மிகைச் சொல்லும் இன்றி அறுபடாத ஒரு கனவுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.  மீட்சிக்கான இறுதி அடி கடும் வலி நிறைந்தது அது மரண அடியே தான் ஒரு நூறு மீட்டரை கடப்பது கொடும் நரகமாகத் தெரிகிறது. இறுதியில் சுபிட்ச முருகன் கண்டடைந்தது என்ன? இருள் எத்தனை கருமையும் அடர்த்தியும் கொண்டதாக இருந்தாலும் ஒரு மின்னல் வீச்சு போதும் அனைத்தையும் துலங்கச் செய்ய ஆனால் அது போய்விட்ட பிறகு இருள் இன்னும் அடர்த்தியாகும். ஆனால் என்ன அந்த வீச்சில் அடைந்தது நம்மில் ஒரு பகுதியாகும். அதுவே போதுமானது மிக அதிகமானது.

முருகன் கண்டடைந்த தனிப்பெரும் கருணை மழை நமக்கும் ஆசுவாசமளிக்கிறது. விடுதலையை உணர்கிறோம்.

சிவக்குமார்

சென்னை

***

அன்புள்ள ஜெ

சுபிட்சமுருகன் வாசித்தேன். சிறப்பான நாவல். அந்த மொழிநடை அந்த அளவுக்கு எழவில்லை. ஆனால் தமிழில் இதுவரை பேசப்படாதஒரு நுட்பமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் முக்கியமான நாவலாக உள்ளது.  குடும்பத்திலிருந்து வரும் குற்றவுணர்ச்சியினால் ஒருவன் தன்னுடைய அடையாளம் என தானே நினைத்துக்கொள்ளும் ஆண்மையை இழக்கிறான். அத்துடன் அவனுடைய சுயம் இல்லாமலாகிறது. தனக்கென அடையாளமில்லாமல் ஆகிறவன் invisible ஆகிவிடுகிறான். அந்த அலைக்கழிப்பினால் எங்காவது எவரிடமாவது தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறான்.

நாவல் முழுக்க அவன் செய்பவை எல்லாமே தன்னை காட்டிக்கொள்வதுதான். மூடிய அறைக்குள் மாட்டிக்கொண்டவன் சுவர்களில் அறைந்து கூச்சலிட்டு அழுவதுபோல. தலையை சுவரில் அறைந்துகொள்வது போல. அப்படிப்பட்டவர்கள் வாஉம் ஓர் உலகில் சென்று சேர்கிறான். அதிலிருந்து சிதறித்தெறித்து ஒரு மெய்மையை பிடித்துக்கொள்கிறான். அது தப்பிப்பதற்கான வழிதான். உயிர்காப்பதற்காகப்பிடித்துக்கொண்ட கொம்புதான். ஆனால் வழி திறந்துவிட்டது. சாமானியர்கள் அடையமுடியாத ஒரு இடத்தைச் சென்றடைந்துவிடுகிறான்.

சிதறிச்சிதறிச்செல்லும் கதை. இத்தகைய நுட்பமான ஒரு கதைக்கரு. ஆகவே பொதுவாக ‘கதைபடிக்கும்’ வாசகர்களுக்கோ இதைப்போன்ற அகவயத் தேடல், அலைக்கழிப்பு ஆகியவற்றை ஏற்கனவே கொஞ்சமாவது புரிந்துகொள்ளாமல் புறவயமாக ‘ஆய்வு’ செய்யும் வாசகர்களுக்கோ இது பிடிகிடைக்காது.

இந்நாவலைப்பற்றி பேராசிரியர் தர்மராஜ் விமர்சனம் செய்திருந்ததை வாசித்தேன். அவருக்கு நாவலின் கரு மட்டும் அல்ல கதையோட்டம்கூட பிடிகிடைக்கவில்லை. அவருடைய எந்திரத்தனமான சமூகவியல் ஆய்வுக்கு இது பிடிகிடைக்கவும்போவதில்லை. ஆனால் பேராசிரியர்களிடம் இவ்வாறு ஒரு அளவுகோல் உள்ளது. சமூகவியல் மானுடவியல் போல ஏதாவது. அது பழங்கால தமிழாசிரியர்களிடம் இலக்கணம் இருப்பதைப்போலத்தான். அது ஒரு கம்புசுழற்றுவதற்கு உதவக்கூடிய விஷயம் அவ்வளவுதான்.

இந்த பிரச்சினைகளைக் கடந்துசென்று வாசித்தால், ஆன்மிகமான அகத்தேடல் கொஞ்சமேனும் இருந்தால் பல ஆழமான திறப்புக்களை அளிக்கும் முக்கியமான நாவல் இது

எஸ்.ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா இன்று
அடுத்த கட்டுரைகுகை- கடிதங்கள்