அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

220px-Actor_Madhupal

விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை

தமிழாக்கம்  அழகியமணவாளன்

 

madhu

எங்கெல்லாம் மனதில் நன்மையுள்ளதோ

அங்கே குணத்தில் அழகு உள்ளது

எப்போது குணத்தில் அழகுள்ளதோ

அப்போது வீடுகளில் இசைவு உள்ளது

எப்போது வீடுகளில் இசைவுள்ளதோ

அப்போது நாட்டில் ஒழுங்குள்ளது

எப்போது நாட்டில் ஒழுங்குள்ளதோ

அப்போது உலகில் அமைதி உஉள்ளது

 

நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் உயிர்ப்புடன் உள்ளவையெல்லாம் உங்களை பின்தொடரும்,இருட்டில் இருக்கிறீர்களென்றால் உங்கள் நிழல்கூட உங்களைவிட்டு அகன்றிருக்கும்.

 

அதுதான் வாழ்க்கை.அதனால், ஒருபோதும்  இருட்டில் சிக்கிக்கொள்ளாமல் வெளிச்சத்திலேயே உறுதியாக  நிலைகொள்க. ஒரு பெருங்கடலை கால் நனையாமல் கடக்க முடியலாம். ஆனால், ஒருமுறைகூட  கண்கள் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது.

 

வாழ்க்கையில் இரண்டு சந்தர்ப்பங்களில் மௌனமானவர்களாக வேண்டும். ஒன்று, ஒருவர் நீங்கள் சொல்வதைக்கேட்டும் உங்களை புரிந்துகொள்ளாதிருக்கும்போது. மற்றொன்று, அவர் ஒன்றும் சொல்லாமல் உங்களைக் கட்டித்தழுவிக் கொள்ளும்போது.

 

”உண்மையான சொற்கள்” என்று இடதுகையால் கிறுக்கலாக அல்ஃபோன்ஸா டைரியில் எழுதினாள்.

 

ஆட்டோவிலிருந்து விழுந்ததில் வலதுகை முறிந்துவிட்டது. கல்லூரியிலிருந்து கிளம்பும்போது ஹரிஹரபுத்ரன் ஃபோனில் சொன்னான், குழந்தையை என்னால் அழைத்துவர முடியாது, நீ கூட்டிச் சென்று விடுவாயல்லவா? நான் வர தாமதமாகும்.

 

இது எப்போதும் நடப்பதுதான். ஆபீஸ் முடிந்தாலோ அல்லது அதனிடையிலோகூட ஹரியும் நண்பர்களும் இயக்கத்தின் பகுதியாவிடுவார்கள். டீ போட்டுக்கொடுத்தே வீடு காலியாகிவிடும் என்று யாருக்கும் கேட்காமல் பக்கத்துவீட்டு கௌஸுத் அக்கா அல்ஃபோன்ஸாவில் காதில் முணுமுணுப்பாள்.கோப்பைகளில் டீ நிறைத்துத்கொண்டே. ஆட்கள் கூட்டமாக வரும்போதெல்லாம் கௌஸுத் அக்காவும், நஜியாவும்,வர்கீஸ் உப்பாப்பாவும் ஜான்ஸியும் வீட்டின் எல்லா மூலைகளிலும் நிறைந்திருப்பார்கள்.

 

”குட்டி  அடீ. சாப்பாட்டிற்கு அரிசி அடுப்பில் ஏற்றியாகிவிட்டதா?இவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள், எல்லோரும் சாப்பிடுவார்களா, குஞ்சனை நான் பார்த்துகொள்கிறேன்” “டீச்சர்,கேஸ் தீரப்போகிறது,வீட்டில் ஒன்று இருக்கிறது” “இப்போதே எடுத்துவருகிறேன், பின்கட்டில் கொஞ்சம் கீரை இருக்கிறது, பொரியல் வைக்கலாம், வெளியிலிருந்து வருபவர்களில்லையா, நாம் நல்லதாக செய்துகொடுக்க வேண்டாமா……” சுற்றியிருப்பவர்களின் மனவிரிவு காரணமாக  தனியாகிவிட்டோம் என்று ஒருநாளும் தோன்றியதில்லை.

 

குஞ்சனை கருவுற்றது மிகத்தாமதமாகத்தான். கேட்குமென்றால் கேட்கட்டுமே என்றே எங்கோ பார்த்து மலடி என்று கூப்பிட்டவர்களுண்டு. ஒரு பெண்ணால் கருவுற முடியவில்லை என்றால் அது அவளது இறுதி என்றும் அதன்பின் எஞ்சுவது வெறும் உடல் மட்டுமே என்றும்  வசைகளை கேட்க நேரும்போது அவள் பிரார்த்தனை செய்துகொள்ளவில்லை. கௌஸுத் அக்கா, வர்கீஸ் உப்பாப்பன் இருவர் மட்டும் தெய்வத்தின் பாதையில் சென்றனர். அவர்கள் கொண்டுவந்து கொடுத்த மந்திரித்த நீரும்,சரடும் சற்று தைரியம் அளித்தது. நாற்பத்து இரண்டாம் வயதில் முதல் பிரசவம் என்பது ஒரு மறுபிறவி என்று கௌஸுத் அக்காவின் உம்மா சொன்னார். குழந்தைகளை இளமையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் இரத்தம் கொடுத்து உதவ வேண்டிவரும்.  மனதிலிருக்கும் ஒரு கருவை கதையாக மாற்றும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை இவ்வளவு கடினமான அளவுகோல்களால் விமர்சித்திருக்க வேண்டியதில்லை என்று ஒரு பிரசவம்மூலம் புரிந்துகொண்டிருப்பாய் என்று குஞ்சனை சேர்த்து அணைத்து கிடக்கும்போது  ஹரிஹரபுத்ரன் சொன்னான்.  இனி யாரும் மலடி என்று அழைத்து சீண்டப்போவதில்லையல்லவா. ஒரு பெண்ணோடுதான் ஹரிஹரபுத்ரன் படுத்திருக்கிறான் என்று அல்ஃபோன்ஸா  உள்ளூர நினைத்து சிரித்துக்கொண்டாள்.

 

குஞ்சன் முற்றத்தில் நட்ட செண்பகம்போல வளர்ந்தான். ஒரு சின்ன செடி.எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் கொஞ்சம் வாடித்தளர்ந்த மாதிரிதான் தெரியும். ஆனால் சில நேரங்களில் யாருமறியாமல் சென்று பார்த்தால் காற்றில் ஊஞ்சல்போல அசைந்தாடுவதைக் காணமுடியும்.  யாராவது அருகில் வந்தால் உடனே அசையாமலாகி ஒன்றும் நடக்காததுபோல விளையாட்டுக்காட்டி….

 

வாழ்க்கையை படிக்கவேண்டியது மனிதமுகங்களைப்பார்த்துத்தான். நாளைய பெருந்திட்டத்தைவிட இன்றைய ஒரு சின்ன தீர்மானம்தான் உண்மைக்கு மிக நெருக்கமானது. நிறைவுடன், ஆசுவாசத்துடன் கடந்தகாலத்தை  நினைவுகூர்ந்துகொண்டு தன்னம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவும்.

 

தூக்கம் வருவது வரையுள்ள எண்ணங்களில் இம்மாதிரி வரிகள் ஏராளமாக நினைவுக்கு வரும். அந்த நேரத்திலேயே அதை எழுதி வைத்துக்கொள்ளவில்லையென்றால் விடியற்க்காலையில் மறந்து போயிருக்கும். ஹரிஹரனை அணைத்துக்கிடக்கையில் திடுக்கிட்டு எழும்போது “ஓ, ஆரம்பிச்சாச்சா” என்று முணுமுணுத்துவிட்டு திரும்பி படுத்துக்கொள்வான். டைரியில் எழுதிமுடித்த பின்பு நிம்மதியாக தூங்கும் ஹரிஹரனை பார்த்து, பாவம்,இதுபோன்ற ஒரு உறக்கத்திற்கு எத்தனைநாள்  காத்திருக்கவேண்டும், அல்லது வாழ்க்கையில் இனி நிம்மதி என்ற நிலையே அறியாதுபோய்விடுவேனோ, அல்லது ஒன்றும் சிந்திக்காமல் ஒன்றும் எழுதாமல் இப்படி தூங்கினால் போதாதா,யாருக்காக இப்படி எழுதிக்கொண்டிருக்கிறேன் என யோசித்தபடி ஹரிஹரன் எழுந்துவிடாதபடி மெல்ல படுக்கையை அடைந்து தூங்க ஆரம்பிப்பாள்.  அதை தூக்கமென்று சொல்லமுடியாது,கொஞ்சம் கண்மயங்குதல் அவ்வளவுதான். ஆனால், இப்போது அப்படியல்ல. தூங்குகிறோம் என்று அறியமுடியும்படி உறக்கம் அமைகிறது. குஞ்சன் கொஞ்சம் மயங்கினாலே, அவள் மனதை அளைந்தபடி தானும் தூங்கிவிடுகிறாள்.

 

கடந்தகாலம் என்பது வெறும் தயாரிப்புகள் மட்டுமில்லை. தொடக்கங்கள் இல்லாத பயணங்களில்லை. அடைபவைகளும், இழப்பவைகளுமில்லை. நின்ற இடத்திலேயே நின்று சுற்றுவது மட்டும்தான் வாழ்க்கை. ஒழுக்கோ, பரவுதலோ அல்லாமல் கரையை வந்தறையும் அலைகள் மட்டுமே. திருகியும், தட்டியும் வாத்தியங்களை சரிபார்த்துத் தயாராவது என்பது முடிவடைவதேயில்லை. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் லௌகீக வாழ்க்கையில் வெற்றியை உறுதிபடுத்தும் அறிவுரைகளை அப்படியே தூவுபவர்களாக இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்தவர் கிருஷ்ணன்குட்டி மாஸ்டர்.

 

வெற்றி ஒருவனில் உருவாக்கும் அகங்காரம்,போட்டி மனப்பான்மை, சகிப்பின்மை, பொறாமை, பகை  இவற்றை நன்கு அறிந்திருக்கவேண்டும். தோல்வியின் சாரத்தையும், அழகையும், சாத்தியங்களையும் மாணவன் அறிந்திருக்கவேண்டும். வாழ்க்கையின் நெருக்கடி காலகட்டத்தில் தாக்குப்பிடிப்பதற்கான வாயில்களை எப்படி திறக்கவேண்டும் என்று ஒரு வகுப்பறையில் விவாதிக்கப்படவேண்டும்.

 

மாணவனின் கற்பனையில், நாம் கூடவே பயணிக்க வேண்டும், அவனை நேசிக்கவேண்டும், பிறிதொன்றில்லாது  ஆழமாக காதலிக்கவேண்டும்.

 

அடைந்தவற்றை விட்டுப்போகும் மனம் வேண்டும். அப்படியென்றால் கற்பித்தல் என்பது காதல் என்றே ஆகவேண்டும்.எல்லாம் மறந்து, கூடஇருப்பவர்களுடன் காணாததைக் கண்டு, கேட்காதவற்றைக்கேட்டு ,சுவையும் மணமும் உடலும் மனமும் பரஸ்பரம் அறிந்து பிரபஞ்சத்தில் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளும் பயணம். காரமும்,இனிப்பும், புளிப்பும் மாறி மாறி பரிமாறும் ஒரு ஹோட்டல் தட்டுபோல. ஒரே வேகத்தில் சுழலும் மின்விசிறிபோல.  பாத்திரத்தின் அளவைப்பொறுத்து  நிறமோ, மணமோ, தன்மையோ மாறாத புனிதம்தான் ஆசிரியர் *என்று எழுதிய கவிஞனின் பெயர் நினைவில் இல்லை. குஞ்சன் தூங்கும்போது அல்ஃபோன்ஸாவுடைய டைரி இழந்த வாழ்க்கையை இனிமையானதாக்கும். மீண்டும் ஒருமுறை ஒரே நதியில் நீந்தமுடியாது என்பதால்தான் வாழ்க்கை விலைமதிப்பற்றதாகிறது என்று எழுத்து ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்தும். அப்போது அயலில் ஏதொ ஒர் இருப்பை உணரமுடியும். அயல்பக்கம் என்பது மனதில் உயிர்த்துடிப்பை,அன்பை,நம்பிக்கையை தெளிவாக நேர்காட்சி போல உணர்த்தக்கூடியது.

 

அறையில் நான் தனித்திருக்கிறேன். குஞ்சனுக்கு இன்று ஸ்கூல் இல்லை. அதை ஸ்கூல் என்று சொல்லமுடியாது. சிறுபிள்ளைகளை அம்மாஅப்பாக்கள் தற்காலிகமாக அடைத்துவைக்கும் ஒரு அறை. பகல்முழுவதும் அவர்கள் கூட்டாக அந்த அறையில் விளையாடுவார்கள். நான் வீட்டிலிருக்கும் தினங்களிலெல்லாம் குஞ்சன் எனது மார்புச்சூட்டை உணர்ந்தபடி ரவிக்கையில் கைவிட்டு முலைக்காம்புகளை பிடித்தபடி படுத்திருப்பான். தூங்குவதெல்லாம் இல்லை. அவனுடைய விரல்கள் என்னுடைய முலைகளில் மெல்ல அழுத்தும்போது தூங்கவேண்டும் என்ற ஆவல் மிகுந்துவரும். வானம் முழுதும் நிறைப்பதுபோல அப்படி ஒரு உறக்கம் வேண்டும். பெண்கள் தூங்குவதை விரும்புபவர்கள் என்று ஒரு ஜப்பானிய நாவலாசிரியர் எழுதியிருக்கிறார். அவரும் ஒரு பெண்மணி. உண்மைதான். எல்லா பரபரப்புகளும் முடிந்து கொஞ்சம் தூங்க முடியவேண்டும் என்று பிரார்த்திக்காமல் இருந்ததேயில்லை. கடவுளே, நான் ஆத்மார்த்தமாக உன்னிடம் பிரார்திக்கிறேன், களங்கமில்லாமல்,மனம்திறந்து. என்னுடைய எல்லா எதிர்ப்பார்புகளையும் நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கையில். ஹெலென் கெல்லர் சொல்லியிருக்கிறாரல்லவா,  ஆத்மார்த்தமாக ஆசைப்படும் எதுவும் நம்முடையதாகும் என்று., அதுபோல நான் என்றும் ஆசைப்படுவது நிம்மதியான ஒரு தூக்கம். ஆகாயத்திலிருக்கும் உருவமற்ற தெய்வம் எனது பிராத்தனையை கேட்கிறது என்பதற்கான சான்று என் முலைகளில் அழுந்தும் அவன் விரல்களின் அணைப்பு.

 

ஆட்டோவிலிருந்து விழுந்தது ஒரு அபூர்வமான காட்சி. நான், குஞ்சன் , எனது மடியில் ஒரு மாதத்திற்கு வரும் பலசரக்குப் சாமானங்கள், காய்கறிகள். கௌஸுத் அக்காவுடைய மகள் ஜான்ஸி என்ற பத்தாம்கிளாஸ் பெண் வழியில் நின்று “நானும் வரட்டுமா”என்று கேட்டு ஏறிக்கொண்டாள். ஆட்டோ டிரைவர் குஞ்சு முகமது. நல்ல முரட்டுத்துணி போன்ற சாலையில் ஆட்டோ அப்படியே ஒழுகிச்சென்றது. ஆட்டோவின் வேகத்தால் அடித்த காற்றால் குஞ்சன் சிரித்தபடி இருந்தான். “ப்பீட் கூட்டு,ப்பீடு கூட்டு” என்று உச்சத்தில் கத்திக்கொண்டு.

 

காற்றோட்டத்தில்.உயரும் பலூன்போல இலக்கு பிசகாமல் ஆட்டோ பாய்ந்து சென்றது. பின் எப்போது அது வானத்தில் பறந்துயர்ந்தது என்று மட்டும் தெரியவில்லை. ஆஸ்பத்திரி படுக்கையிலிருக்கும்போது ஆட்கள் சொன்னதைக்கேட்டுதான் ஆட்டோ பறந்திருக்கிறது என்பது புரிந்தது.

 

வலதுகை மட்டும் முறிந்திருந்தது. குஞ்சனுக்கு கால்விரலில் கொஞ்சமாக தோல் உரிந்திருந்தது. ஜான்ஸியின் நிலைதான் கஷ்டம்.கால்,கை,தலை எல்லா இடங்களிலும் கட்டுபோட்டிருந்தார்கள். இனி எழுந்து நடக்கவேண்டுமென்றால் இரண்டு மாதங்களாகும் என்று கௌஸத் இத்தாத்தா வீட்டில் வந்து சொன்னாள். கை முறிந்தாலும், பாடங்களை முடிக்கவில்லை என்று பயத்தால் கட்டுப்போட்ட கையோடேயே வகுப்பிற்குச்சென்றாள். பிள்ளைகள் “டீச்சர்,கொஞ்சம் சரியான பிறகு வந்தால் போதாதா’ என்றனர். “நாங்கள் கூட இருக்கிறோம்” என்று வீடுதேடிவரும் பெண்களின் கண்களில் சிலபஸ் முடியவில்லை என்ற பயம் இருப்பதை சொல்வதற்கு அச்சமயம் தோன்றவில்லை. கஷ்டமென்னவென்றால் ஒருகையை வைத்துக்கொண்டு வீட்டில் ஒருவேலையும் செய்யமுடியவில்லையே என்பது. என்றும் மற்றவர்களின் உதவியும்,அவர்களை சிரமத்திற்குள்ளாகுகிறோமே என்ற பதற்றம். அப்போது அக்கம்பக்கமிருப்பவர்கள்  ‘ஓ, அது பரவாயில்லை டீச்சர். இம்மாதிரி சமயங்களில் உதவாமல் இருந்தால் பிறகு எதற்கு மனிதன் என்று சொல்லிக்கொண்டு வாழவேண்டும்… “

 

தாய் தந்தையரிடம் நன்றாக நடந்துகொள்ளுங்கள். உறவினர், அனாதைகள், அகதிகள், குடும்பவாசிகளான அண்டைவீட்டார், அந்நியர்கள், கூடஇருப்பவர்கள், வழிபோக்கர், உங்கள் அதிகாரத்தில் இருக்கும் அடிமைகள் எல்லோரோடும் நன்றாக நடந்துகொள்ளுங்கள். கடந்துசெல்லும்போது  அருகே மதராஸாவில் பிள்ளைகள் உரக்க சொல்லும் இந்த வரிகளை பெரிய எழுத்துகளில் படிப்பறையின் மேசைக்குமேல் எழுதி வைத்திருந்தாள்.

 

ஹரிஹரபுத்ரன் பணியாளர் யூனியனின் மாநில மாநாட்டிற்கு சென்றிருந்த இரவு அல்ஃபொன்ஸாவுக்கு காய்ச்சல் தொடங்கியது. படுத்த இடத்திலிருந்து கொஞ்சம்கூட நகரமுடியாதபடி உடல் உளைச்சல். மாலைதான் யாராவது கூடவந்து படுத்துக்கொள்கிறோமே என்று கேட்ட கௌஸுத் அக்காவை எதற்காக சும்மா ஆட்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்து தவிர்த்துவிட்டிருந்தாள். அப்போது மெல்லிய தலைவலி மட்டுமே இருந்தது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சீக்கிரமே கஞ்சியும் குடித்துவிட்டு படுத்தாகிவிட்டது. தோப்பின் தூரத்திலெங்கோ கூட்டமாக நாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம்கேட்டு தூக்கம் கலைந்தது.விழித்தவுடன்தான் காய்ச்சலை உணரமுடிந்தது.கடுமையான தாகம். கட்டிலின் மூலையில் கீழே வைக்கப்பட்டுள்ள தண்ணீர்கூஜாவை எடுக்கக்கூட ஒரு ஆள் உதவி தேவைப்படும் என்று தோன்றியபோது தொண்டை வற்றி வறண்டுவிட்டது. கத்த முயற்சி செய்தபோது ஒலியெழவில்லை. விட்டத்தை பார்த்து அழுதாள். எப்படியாவது விடிய வேண்டுமே என்று அவள் பிடிவாதமாக பிரார்தனை செய்தாள். தெய்வம் அவளுடைய அழைப்பை கேட்பவர்தான்.கோழிகூவி நேரம் வெளுத்தது.

 

குஞ்சன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான்.அவன் ஸ்கூலுக்குப்போக வேண்டாம். அவளுக்கும் கல்லூரிக்கு போகவேண்டியதில்லை. வெளிச்சம் வந்தால் பிறகு பக்கத்து வீடுகளிலிருந்து யாராவது வருவார்கள் என்று நினைத்தபடி அவள் படுத்துகிடந்தாள். உடல் முழுக்க சுட்டுப்பொசுக்கும் நீராவி.அந்த ஆவியால் அறைமுழுக்க புழுக்கம்.

 

நேரம் ஆக ஆக நிழல் நீண்டுகொண்டே போனது,  யாருமே வரவில்லை. அருகிலிருந்த குஞ்சன் கண்களைத் தேய்த்தபடி எழுத்தான். புழுக்கத்தின் எரிச்சல் அவன் எழுந்திருந்தபோதும் இருந்தது. அவள் படுத்திருக்கும் நிலையைப்பார்த்து அவன் எழுந்துவிட்டிருந்தான்.அம்மாவை அழைத்தான். அவளுக்கு ஏதாவது சொல்லவேண்டுமென்றிருந்தது. அவளது நெற்றியிலூடாக சூடான கண்ணீர் ஒழுகியது. குஞ்சன் அவனது சிறுவிரல்களால் அந்த ஒழுக்கை நிறுத்தினான். அவளது எலும்புகள் சுக்குநூறாக நொறுங்குவதுபோல உணர்ந்தாள். படுக்கையிலிருந்து எழவேண்டுமென்றும் இந்த காலை நேரத்தில் அவனுக்கு உதவவேண்டுமென்றும் அவள் மனதில் நினைத்தாள்.எண்ணத்தின் கட்டுப்பாட்டில் உடல் இல்லை என்பதையும் புரிந்துகொண்டாள். கட்டிலிலிருந்து குஞ்சன் ஒரு வித்தைக்காரனைப்போல கீழே இறங்கினான். அல்ஃபோன்ஸாவின் வரண்ட உதடுகளில் முத்தமிட்டான்.’ஓ.. அம்மாவின் உடம்பு இவ்வளவு சூடாக இருக்கிறதே’ அல்ஃபோன்ஸாவின் கண்கள் செத்த மீன்கள் போல இருந்தன.அவளால் அசையக்கூட முடியாமல் அவனது அசைவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.குஞ்சனின் கண்கள் அடிக்கடி திறந்து மூடிக்கொண்டபடி மயக்கத்திலேயே இருந்தது அவளை மேலும் சங்கடப்படுத்தியது. எல்லா காலையும் அவன் எழுந்தவுடனேயே “ அம்மா,முகம் கழுவித் தா’ என்ற கேட்டபடி அடுக்களைப்படியில் அமர்ந்திருப்பான். எப்போதுமே கட்டிலிருந்து இறங்க முயற்சிக்கும்போது கீழே விழுந்துவிடுவான். எழுந்து ஒரு அசட்டு சிரிப்பு. அந்த சிரிப்பைப்பார்க்கும் நேரத்திலெல்லாம் கௌஸுத் அக்காவோ ஜான்ஸியோ ’எப்படி நடிக்கிறான் பாருங்கள்..காக்காய் கொண்டுபோன பல் இனி எப்போது வரும்’ என்று கேட்பார்கள். அப்போது அவன் இளிப்பை பார்க்கவேண்டுமே. குழந்தைகளின் முகம் படைத்தவனுடையது என்று சொல்லி  கௌஸுத் அக்கா அவன் முகம் நிறைய முத்தமிடுவாள். அப்போதெல்லாம் சிரித்துக்கொண்டே இருப்பான். பெண்கள் எவ்வளவு முத்தம் கொடுத்தாலும் அவனுக்குப்பிடிக்கும் என்பாள் ஜான்ஸி.  இன்று இத்தனை நேரமானபிறகும் தெய்வமே யாருமே இங்கு எட்டிக்கூட பார்க்கவில்லையே ! ஏன், கதவுகள் ஒன்றும் மெதுவாக முனகும் ஒசைகூட கேட்கவில்லையே. எல்லா அண்டைவீட்டாருக்கும் இந்த தோப்பும் வீடும் அவர்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கிவிட்டதா?

 

தெய்வமே,என் அமைதிக்காக என்னை உன்னுடைய கருவியாக்குக

எங்கே வெறுப்பு உள்ளதோ அங்கே நான் அன்பை விதைக்கிறேன்

எங்கே பேராசை உள்ளதோ அங்கே மன்னிப்பும்

எங்கே சந்தேகமுள்ளதோ அங்கே நம்பிக்கையையும்

எங்கே நிராசை உள்ளதோ அங்கே எதிர்பார்ப்பையும்

எங்கே இருட்டுள்ளதோ அங்கே வெளிச்சத்தையும்

எங்கே துக்கமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும்

நான் விதைத்துக்கொள்கிறேன்!

காரணம்,கொடுப்பது வழியாகத்தான் நான் பெற்றுக்கொள்கிறேன்

மன்னிப்பு கொடுப்பது வழியாகவே நமக்கு மன்னிப்பு கிடைக்கிறது.

மரணத்தின் வழியாகத்தான் என்றென்றைக்குமான வாழ்க்கையை நோக்கிய நமது பிறவி.

 

வெயில், மூடிய கதவுகளைத்தாண்டி வெளியேறிக்கொண்டிருந்தது. அறையில் காய்ச்சலின் ஆவி வீடு முழுக்க நிறைந்திருந்தது. திறக்கமுடியாத கண்களில் புகைமூடிய மனம்.  மூடிய ஜன்னல்களும், கதவும். சுவரில்  நீராவி பனிபோல நிறைந்திருக்கிறது. என் கண்களில் இருள் நிறைகிறது. தெய்வமே, இதை யாராவது கொஞ்சம் பார்க்கிறார்களா?

 

கடலாழத்தின் அளக்கமுடியாத அமைதியில் அல்ஃபோன்ஸா லயிக்க ஆரம்பித்தாள். அது அவள் ஆசைப்பட்டதுபோன்ற உறக்கம். யாரும் அந்த வீட்டையும் அதன் உள்ளே இருந்த வாழ்க்கையையும் அறியவேயில்லை. குஞ்சன் என்றைக்கும்போல அம்மாவைப் பார்ப்பதும் பின்பு அவனது தினசரி செயல்பாடுகளில் ஈடுபடுவதும் என  அவனாக ஒரு வழி கண்டுபிடித்துக்கொண்டான்.

 

காற்று வீசும் பெருமரங்களும் அதில் கூடுகட்டிய பறவைகளின் கூக்குரல்களும் கீழே மண்ணில் பொந்துகளில் நெளியும் உயிர்களும் யாராலு ம் கவனிக்கப்படாமல் அதனதன் இடங்களில் ஊர்ந்தும் பறந்தும் சென்று வந்தன. இனி யாரும் கடந்துவரமுடியாதபடி நாட்கள் அதன் தாளத்தில் பயணித்தை தொடர்ந்தன.

 

காற்று எல்லாவற்றையும் தாங்கும் பயணி. எல்லாவற்றுடனும் அது எண்ணிறந்த வழிகளிலூடே தன் பயணத்தை தொடர்கிறது. அப்பயணத்தில் மிகவும் ஆபாசமானதும் சுவாசிக்கவே முடியாதபடியுமான ஒரு மணத்தை பரவவிட்டது. அந்த கெடுமணம் எங்கிருந்து வருகிறது என்று அறியாமல் எல்லோரும் சுற்றி நோக்கினார்கள். காற்று அல்ஃபோன்ஸாவுடைய வீட்டையும் சுற்றுப்புறத்தையும் நிறைத்து எப்போதும் நின்றது அந்த மணத்தையும் தாங்கித்தான். ஆட்களின் மூச்சை தடுத்துநிறுத்த அந்த கெடுமணத்தால் முடிந்தது. ஒரு வேற்றுகிரகத்தில் இருப்பதுபோல இருந்தது அவளது வாழ்க்கை .யாராலும் அறியப்படாமல். அறையின் ஒரு மூலையிலிருந்து செல்பேசியும் தொலைபேசியும் நிறுத்தாமல் அடித்தபடியிருந்தது. ஒரு சின்ன சலனம்கூட யாரிடைய காதுகளிலும் சென்றுசேரவில்லை. அல்ஃபோன்ஸாவின் கண்கள் மூடிக்கிடந்தன.

 

உருவமற்ற தேவதைகள் யாராவது நொடியில் உதவியின் வெள்ளிக் கைகளுமாக வருவார்கள் என்று எதிர்பார்த்து அவள் மயங்கிக்கிடந்தாள். எங்கிருந்தாவது ஒரு வெளிச்சம் கடந்துவரவேண்டும் என்று வேண்டினாள்.கெடுமணம் இயல்புநிலையை குலைக்கும் என்றும் அது ஒருவர் வாழ்க்கையிலிருந்து மற்றொருவரை அகற்றுமென்றும் அவள் புரிந்துகொண்டாள். மரணத்தின் மணம் என்று அதை மூக்கு கண்டுகொண்டது. அவளின் கண்கள் இனிதிறக்கமுடியாது என்பதுபோல மூடியிருந்தன. அவளுக்குள்ள் சொற்கள் நிறைந்தன. அவை வெளிச்சத்திற்குப் பதில் இருட்டை தேர்ந்தெடுக்கும். அவை வாழ்க்கையில் மரணமொன்றே ஈட்டியது என்று சிந்திக்கும். சொர்க்கத்தை எதிர்நோக்காதாகும். தர்மவானை பைத்தியம் என்றும் அதர்மம் செய்பவனையும் மந்தபுத்தி கொண்டவனையும் புத்திசாலி எனவும் தீயவனை நல்லவனாயும் நினைக்க வைக்கும். ஆத்மா அழிவற்றது போன்ற நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்கும். அவை தவறானவை என்று புரிந்துகொள்ளப்படும். தார்மீகமான சொற்களோ,செயல்பாடோ தெய்வத்தைப்பற்றியோ, சொர்க்கத்தைப்பற்றியோ நிகழும் உரையாடல் எதையும் கேட்பதோ நம்புவதோ இயலாத்து ஆக்கும். பூமி சஞ்சலமற்றதாகும். கடலில் கப்பல்கள் செல்லாதாகும். ஆகாயம் நட்சத்திரங்களை தாங்காதாகும்.சொர்க்கத்தில் நட்சத்திரங்கள் நிலைநிற்காமலாகும். பழங்கள் அழுகிப்போகும். மண் தரிசாகும். இருண்டு சலனமில்லாமல் ஆகி காற்று மலினமாகும்.

 

அறையில் மரணம் என்றென்றைக்குமாக இருந்தது. அல்ஃபோன்ஸா மரணத்தின் மணமறிந்தாள். மண்ணின் அடியிலிருந்து குளிர் ஆவிநிறைந்த அறையில் படருவதுபோல. புழுங்கிய ஈரப்பதத்தில் எல்லாம் அடங்கிகிடக்கின்றது. வெயில் அதன் தீவிரத்தை காட்டி முடித்திருந்தது. சுவர்களுக்குள்ளில் அமைதியாக துயிலும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களின் பெருமூச்சை அல்ஃபோன்ஸா அறிந்தாள்.காற்று மரணத்தின் நிம்மதியுடன் அண்டைவீடுகளில் சென்று மறைந்தது.

முந்தைய கட்டுரைபுயல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1