ஒரு படைப்பு உருவாக்கப்படும்போதே அது இலக்கியத் தரத்தின் எல்லையைத் தொடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஆக்கப்படுகிறதா, அல்லது மக்களைச் சென்றடைந்த பிறகு இலக்கியத் தரத்தை அடைகிறதா?
— கேவிஆர்.
இலக்கியத்தரமான படைப்பு ஒருபோதும் இலக்கியத்தரமான படைப்பை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்படுவதில்லை. உலகத்தில் ஏராளமான இலட்சியவாதிகள் உள்ளனர். அவர்கள் எவருமே இலட்சியவாதியாக வாழவேண்டும் என்பதற்காக அப்படி வாழ்பவர்களல்ல. அப்படி வாழ்பவர்கள் போலிகளக மட்டுமே ஆகமுடியும். அவர்களை ஆட்கொண்ட ஓர் இலட்சியம் அவர்களை அதை நோக்கியே வாழும்படிச் செய்வதனால்தான் இலட்சியவாத வாழ்க்கை சாத்தியமாகிறது. இலக்கியமும் ஒருவகை இலட்சியவாதமே.
மேலான ஆக்கங்கள் அறிதலுக்கான துடிப்பாலும் பெரும் கருணையாலும் உருவாகின்றவை. அவை எழுதப்படும் கணத்தில் வெளிப்பாடு ஒன்றே அவற்றின் இலக்காக இருக்கும். பிரசவம் நிகழும்போது தாய் அக்குழந்தை எவ்வாறு வளரவேண்டும் எனக் கற்பனை செய்துகொண்டிருப்பாளா என்ன? ஈன்றுப் புறந்தருதல் மட்டுமே அங்கே முக்கியம் இல்லையா? இலக்கியத்தின் செயல்முறையில் மிக நுட்பமான ஓர் அம்சம் உள்ளது. அறிந்து அதை வெளிப்படுத்துவதல்ல இலக்கியம். வெளிப்படுத்தலும் அறிதலும் ஒரே சமயம் அதில் நிகழ்கின்றன. வெளிப்படுத்தலின் வழியாக அறிதல் நிகழ்கிறது. எழுதும்போதுதான் அவ்வெழுத்தை எழுத்தாளன் அறிகிறான். ஆகவே அக்கணங்களில் அதை எவருக்கு எப்படித் தெளிவுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் அவனில் இருக்காது. ஒவ்வொன்றாக உருவாகி வருவதைக் காணும் பெரும் பரவசம் மட்டுமே இருக்கும். அதுவே அவனை இழுக்கும்; தூண்டும்.
என் படைப்புகளை நான் உருவாக்கும்போது என் முன் ஒருபோதும் வாசகர் என்ற ஒரு உருவகம் சிறு நினைப்பாகக் கூட இருந்தது இல்லை. என் புனைவுலகம் உண்மையானதாகவும் கதாபாத்திரங்கள் என்னுடன் வாழ்பவர்களாகவும் இருக்கும் ஓர் அதீத மனநிலையே அப்போது இருந்துள்ளது. அதிலிருந்து வெளியேவருகையில் இவ்வுலகம் ஒழுங்கற்றதாக சகிக்கமுடியாததாக இருக்கும். அந்த அலைக்கழிப்பை நான் குழந்தைகளையும் மனைவியையும் கொஞ்சியும் இயற்கையை பார்த்தபடி நடக்கச்சென்றும் மெல்லமெல்ல சமன் செய்துகொள்வேன். மீண்டும் அதற்குள் நுழைவேன். அங்கே நானும் என் உலகமும் மட்டுமே. வாசகனுக்கும் இலக்கிய ஆக்கத்துக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை
ஆனால் நல்ல வாசகனும் நானும் ஒரே கலாசார உள்மண்டலத்தில்தான் வாழ்கிறோம். என் எண்ணங்களை அவனும் அவன் எண்ணங்களை நானும் பகிர்ந்துகொள்கிறோம். ஆகவே அவன் என்னை மிக மறைமுகமாகப் பாதிக்கக் கூடும். உதாரணமாக என் இலக்கியவடிவங்களில் சமகால வாசிப்புச்சூழலின் பாதிப்பு இருக்கலாம்.
இலக்கியத்தரம் என்பது முற்றிலும் வாசகத்தளத்தால் உருவாக்கப்படுவது, ஒப்பீட்டால் உருவகிக்கப்படுவது. ஒருகாலத்தில் இலக்கியத்தரமாகக் கருதப்பட்ட ஆக்கம் அத்தகுதியை இழக்கலாம். புறக்கணிக்கப்பட்ட ஆக்கம் பிற்பாடு சூழல் மாறும்போது இலக்கியத்தரமுள்ளதாகக் கருதவும் படலாம். ஒரு கலாசாரத் தளத்தில் ஆழமான உண்மையான பாதிப்பை உருவாக்கும் ஆக்கமே இலக்கியத்தரம் கொண்டது. சிறுவட்டத்துக்குள் அதன் பாதிப்பு நிகழ்ந்தாலும் பாதிப்பின் தீவிரமும் வேகமுமே அதை இலக்கியத்தகுதி கொள்ளச்செய்கின்றன.
ஒரு படைப்பின் மீது பற்பல வகைகளில் நிகழ்த்தப்படும் வாசிப்புகளின் ஒட்டுமொத்தம் மூலமே அதன் இலக்கியத் தகுதி உருவாகிறது. ஆகவே இலக்கியத் தகுதி என்பது எப்போதுமே ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்காது, விவாதத்தில் மேலோங்கிய உண்மையாகவே இருக்கும். தமிழில் உருவான ஆக்கங்களில் முதன்மையானது என நான் நம்பும் கம்பராமாயணம் ஓர் இலக்கியமே அல்ல என்பவர்களும் உள்ளனர்.
-*-
உங்களின் விஷ்ணுபுரம் படித்தேன், உங்களின் பதில்களும் படிக்கிறேன், இசையினை ஒரு அரை மாத்திரை குறைவாக அறிய வேண்டும், இல்லை யட்சி விழித்துக்கொள்ளும் என்றிருக்கிறீர்கள். அது எழுத்துக்கும் சொல்லலாமா? உங்களின் பதில்களைப் படிக்கும் போது தோன்றியது….
— ரமேஷ் அப்பாதுரை.
உண்டு புணர்ந்து பெற்று வளர்த்து இருமி மறைந்து பின்பு ‘ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டு பாசம் தீச்சுட்டு பலிஅட்டி’ மறக்கப்படும் வாழ்வுக்கு யட்சி விழித்துக் கொள்ளாமை அவசியம்தான். ஆனால் புத்தி செல்லாத இடங்களுக்கு யட்சிகளே அழைத்துச்செல்ல முடியும். நம் ஆழத்து வாசல்களை அவர்களே காவல் காக்கின்றனர். யட்சிகளை எழுப்பி இட்டுச்செல் என்னை என்று கோரும் தருணமும் வாழ்வில் உண்டு அல்லவா? அதற்கு வழி காட்டும் இலக்கியமும் தேவைதான் அல்லவா?