எஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது

s-rameshan-nair

இந்த ஆண்டு மலையாளத்திற்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருதைப் பெறுபவர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவராகிய மலையாளக் கவிஞர் எஸ்.ரமேசன் நாயர். 1948 மே 3 ஆம் தேதி தக்கலைக்கு அருகே குமாரபுரத்தில் பிறந்தவர். மலையாளத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கேரள பாஷா இன்ஸ்டிடியூடில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் ஆகாசவாணியில் நிகழ்ச்சித்தயாரிப்பாளரானார்.

எஸ்.ரமேசன் நாயர் கற்பனாவாதக் கவிஞர். மலையாளத்தில் அத்தகையக் கவிதைகளுக்கு ஒரு நீண்ட மரபும் பெரிய வாசகர்ச்சூழலும் உண்டு,. சம்ஸ்கிருதம் நிறைந்த, காளிதாச மரபின் அழகியல்கொண்ட கவிதைகள் இவை. 1985ல் பத்தாமுதயம் என்னும் படத்திற்கு முதல் பாடலை எழுதினார். கிட்டத்தட்ட ஐநூறு திரைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் பலபாடல்கள் மலையாளிகளின் நினைவில் நின்றிருக்கும் படைப்புகளாக உள்ளன.

எஸ்.ரமேசன்நாயர் கேரளத்தின் இந்து அமைப்பான தபஸ்யாவின் தலைவராகச் செயல்பட்டார். அவருடைய மகன் மனு ரமேசன்நாயர் திரை இசையமைப்பாளராக இருக்கிறார். எஸ்.ரமேசன்நாயர் என் நண்பராகிய கே.பி.வினோதின் தாய்மாமன்.

S-Rameshan-Nair.jpg.image.784.410

எஸ்.ரமேசன்நாயர் தமிழிலிருந்து மலையாளத்திற்கு முக்கியமான மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதியார் கவிதைகள் ஆகியவற்றுக்கு அவர் செய்த மொழியாக்கங்கள் தலைசிறந்தவை. குறிப்பாக சிலப்பதிகார மொழியாக்கம் மூலத்தின் இனிய சொல்லாட்சியையும் இசையையும் மலையாளத்திலும் நிகழ்த்தியது

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார் எஸ்.ரமேசன்நாயர். அவர் அழைப்பின்பேரில் 2000 த்தில் நிகழ்ந்த திருவள்ளுவர் சிலைதிறப்புவிழாவில் கலந்துகொண்டார். சென்னையில் ஒரு விழா எடுத்து ரமேசன் நாயரை மு.கருணாநிதி அவர்கள் கௌரவித்திருக்கிறார். மு.க அவர்களின் தென்பாண்டிச்சிங்கம் நாவலின் மலையாள மொழியாக்கத்தைச் செய்ய மு.க அவர்கள் எஸ்.ரமேசன் நாயரிடம் கோரினார். அம்மொழியாக்கம் வெளிவந்தது.

எஸ்.ரமேசன்நாயர் இளையராஜாவுக்கும் அணுக்கமானவர். இளையராஜாவின் இசையில் அழியாத பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார்

நாராயணகுருவின் தரிசனங்களை கவிதைவடிவில் சொன்ன குருபௌர்ணமி என்னும் நூலுக்கு சாகித்ய அக்காதமி அளிக்கப்பட்டுள்ளது

எஸ்.ரமேசன்நாயருக்கு வாழ்த்துக்கள்.

 

பாடல் எஸ்.ரமேசன்நாயர்

இசை கே வி மகாதேவன்

பாடியவர்கள் கிருஷ்ணசந்திரன், சித்ரா

படம் ரங்கம்

 

 

வனஸ்ரீ முகம் நோக்கி வார்கண்ணெழுதும்

ஈ பனிநீர் தடாகம் ஒரு பானபாத்ரம்

மன்வந்தரங்களாம் மான்பேடைகள் க ண்டு

மனசு துறந்நிட்ட ஒரு இந்திரநீலம்

 

கொழியாத்த ஒரு ஓர்ம போல் எங்ஙும் தெளியும்

ஈ ஓங்கார தீர்த்தத்தில் முங்ஙியாலோ?

அகிற்புகையில் கூந்தல் தோர்த்தி ஞான்

அவிடுத்தே அணிமாறில் பூணூலாய் குதிர்ந்நாலோ?

 

ப்ரேமத்தின் தாளியோல கிரந்தங்ஙள் நோக்கி

பிரகிருதி இந்நு ஒருக்குந்நு நின்னே

ரதி பிரணய காவ்யமாய் தன்னே

 

பர்ணசாலகளில் ஹோமாக்னியாய் ஜ்வலிக்குந்நு

நம்முடே ஜனிமந்த்ர ரதிவேகங்ஙள்

வசந்தங்களாகுந்நு இதளிழும் ஸ்பர்ஸங்ஙள்

சிசிரங்ஙள் தீர்க்குந்நு நிர்வேத லயங்ஙள்!

 

திருக்கையில் தாம்பூல தளிகயுமாய் வ்ந்நு

திரித்வங்ஙள் விளிக்குந்நு நின்னே

அனுரக்த காமனாய் தன்னே

 

வனஸ்ரீ முகம் நோக்கி வால்கண்ணெழுதும்

ஈ பனிநீர் தடாகம் ஒரு பானபாத்ரம்

 

*

 

காட்டின் அழகு முகம் பார்த்து நீள்கண் எழுதும்

இந்த குளிர்நீர் தடாகம் ஒரு மதுக்கிண்ணம்.

யுகயுகங்களாகிய பெண்மான்கள் நோக்கி

உள்ளம் திறந்து விரித்த இந்திரநீலம்

 

உதிரா நினைவென எங்கும் தெளியும்

இந்த ஓங்கார நீர்ச்சுனையில் மூழகலாமா?

அகிற்புகையால் கூந்தலை துவட்டி வந்து

உங்கள் அணிமார்பில் பூணூலாக நனையட்டுமா?

 

காதலின் தொன்மையான ஓலைச்சுவடிகளைநோக்கி

இயற்கை இன்று வனைகிறது உன்னை

காமமும் காதலும் கலந்த காவியமாக.

 

இலைக்குடில்களில் வேள்விநெருப்பென எழுகின்றன

நமது பிறவிமந்திரத்தின் காதல்விசைகள்

வசந்தங்களாகின்றன இதழ்விரிக்கும் தொடுகைகள்

குளிர்காலம் சமைக்கின்றன இணைவின் லயங்கள்

 

திருக்கையில் தாம்பூலத் தட்டுமாக வந்து

மூன்று நிலைகளும் உன்னை அழைக்கின்றன

காதல்கொண்ட காமதேவனாகுக என்று..

 

 

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி