ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5

vlcsnap-error008

 

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4

5. கருத்துவரைவின் முழுமை

தத்துவ விவாதங்களில் எப்போதுமே கருத்துப்பூசல் [polemics]  ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஷோப்பனோவர், நீட்சே முதல் மார்க்ஸ் வரையிலான தத்துவமுன்னோடிகள் அனைவருமே விரிவான கருத்துப்பூசலில் ஈடுபட்டவர்கள்தான். இலக்கியத்திலும் அதற்கு இடமுண்டு. ஆனால் பண்பாட்டுவிவாதங்களில் கருத்துப்பூசல்களுக்கு பெரிய இடமில்லை. வரலாற்றுவிவாதங்கள் எந்த அளவுக்கு தரவுகளுடன் நிகழ்கின்றனவோ அந்த அளவுக்கு அவை மதிப்புடையவை.

ஆனால் பண்பாட்டுவிவாதங்கள் கருத்துப்பூசல் உச்சத்தில் எழும் வாய்ப்புடையவை. ஏனென்றால் அவை ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நம்பிக்கைகளையும் மாற்றிவரையறைசெய்ய முயல்கின்றன. ஆயினும் எந்த அளவுக்கு புறவயமாக, தரவுகளின் அடிப்படையில் நிகழ்கின்றதோ அந்த அளவுக்குத்தான் பண்பாட்டுவிவாதங்களுக்கு மதிப்பு.தமிழகத்தின் பண்பாட்டுவிவாதங்கள் ஒருபக்கம் புறவயத்தன்மையுடன் அறிவார்ந்த தளத்தில் நிகழ்ந்தாலும் கருத்துப்பூசல்களுக்கே இங்கே மையமான இடம் இருந்தது.

பண்பாட்டின் வெவ்வேறுதரப்புக்கள் கடுமையாக மோதிக்கொள்கையில் மிக எளிதில் அது ஆளுமைகள் சார்ந்த மோதலாக உருமாறிவிடுகிறது. நவீனத்துவம் புறவயத்தன்மை என்பதற்கு பெரிய அழுத்தம் அளிக்கிறது. அது கருத்துப்பூசல்களை கட்டுப்படுத்தும் ஒரு மையவிசை. ஆனால் பின்நவீனத்துவம் புறவயத்தன்மை ஒரு பொது உருவகம் மட்டுமே என்கிறது. ஆகவே இயல்பிலேயே பின்நவீனத்துவம் பூசலிடும்தன்மை கொண்டது. விளிம்புநிலை- தலித் ஆய்வுகள் இங்கே வந்தபோது அவை ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளின்மீதான ஊடுருவலாக, மறுப்பாக அமைந்தன. ஆகவே அவையும் பூசல்தன்மை கொண்டிருந்தன. பின்நவீனத்துவ நோக்கு கொண்ட தலித் ஆய்வாளர் கருத்துப்பூசலை தன் அறிவுச்செயல்பாடுகளில் மையமானதாகக் கொண்டிருப்பதுதான் இயல்பானது.

இந்திய அளவில் தலித் கோட்பாட்டு அரசியல் பேசிய அனைவருமே பெருமளவில் கருத்துப்பூசலைத்தான் எழுதியிருக்கிறார்கள். வரலாற்றெழுத்திலும் சமகால அரசியல் எடுத்துரைப்புகளிலும் உள்ள நுண்ணிய ஆதிக்க அரசியலை, சாதிமேலாண்மையின் உட்குறிப்புக்களை தொட்டுக்காட்டுவது அவர்களின் வழக்கம். அது பெரும்பாலும் தனிநபர்களைச் சுட்டுவதனால் சீண்டப்படுபவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். அரசியல்சரிகளைப் பற்றிக் கவலைப்படுபவர்களே அவற்றை பொருட்படுத்துகிறார்கள் என்பதும் மற்றவர்கள் அதை இயல்பாக எடுத்துக்கொள்கையில் எண்ணிக்கையே அரசியல் ஆற்றல் என்று இருக்கும் இன்றைய தேர்தலரசியல்சூழலில் தலித் குரலுக்கு மதிப்பில்லாமல்தான் போகிறது என்பதும் ஓர் உண்மை.

ராஜ்கௌதமன் அவருடைய தொடக்க நாட்களில் கருத்துப்பூசல் சார்ந்த நூல்களை எழுதியிருக்கிறார். அவை அனைத்துமே பின்நவீனத்துவ ஆய்வுமுறைமையை கருவியாகக்கொண்டவை. பின்நவீனத்துவ ஆய்வுமுறைமையை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். கட்டமைப்புக்களை தர்க்கம் மூலம் ஊடுருவி அடித்தளம் குலையச் செய்வது, அதேசமயம் தன் தர்க்கம் வழியாக இன்னொரு கட்டமைப்பை உருவாக்காமலும் இருப்பது. இது ஒருவகையில் நிலைபாடென ஏதுமில்லாதவனின் தர்க்கம்போல் ஆகிவிடுகிறது. விமர்சிப்பவனை திரும்ப விமர்சிக்க முடியாமலாகிறது.

அத்துடன் பகடியும் தலைகீழாக்கமும் விமர்சனத்தின் வழிமுறையாக ஆகும்போது எதிர்வினையே சாத்தியமில்லாமலாகிறது. கட்டமைப்புக்கள் நம்பிக்கைகள் மற்றும் அவைசார்ந்த உணர்வெழுச்சிகளால் உருவாக்கப்படுபவை. அவற்றை ஊடுருவும் பகடி அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தன்மையை அழிக்கிறது. தலைகீழாக்கம் புனிதங்களை, உன்னதங்களை பொருளில்லாமலாக்குகிறது. இன்னொரு வழிமுறையும் உண்டு, சிறுமையாக்கம். பெரிய கட்டமைப்புக்களை, அவற்றின்  கோட்பாடுகளை அற்பமானவையாக சித்தரிப்பது. அதனூடாக அவற்றின் அதிகாரத்தை மறுப்பது. உலகமெங்கும் பின்நவீனத்துவ பண்பாட்டுவிமர்சனத்தில் இந்த அம்சமும் கலந்துள்ளது. அது விளிம்புநிலை பண்பாட்டாய்வில், விளிம்புநிலையிலிருந்து எழும்போது மட்டுமே பொருள்கொண்டதாகிறது.

ராஜ் கௌதமன் தமிழ்ப்பண்பாட்டின் மீதான கருத்துப்பூசலாக சிலநூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் அதிகம் விவாதிக்கப்பட்ட நூல்  ‘அறம்+அதிகாரம்’. இந்நூல் பின்நவீனத்துவர்களின் செல்லக் கோட்பாடான ‘மொழியிலுறையும் ஆதிக்கம்’ என்பதை அடியொற்றியது. மொழியே சமூகஅதிகாரத்தையும் மானுடர் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் ஊடகமாக உள்ளது. ஏனென்றால் உள்ளம் என்பதே மொழியின் ஒரு வடிவுதான். மொழியில் ஒரு கருத்து சொல்லாக நிலைநிறுத்தப்படுகிறது. சொல்லில் அக்கருத்து உள்ளுறைந்துள்ளது. அச்சொல் கையாளப்படும்போதெல்லாம் அக்கருத்தே நிலைகொள்கிறது. உதாரணமாக மனைவி என்னும் சொல்லில் மனை [வீடு] உள்ளது. அச்சொல் பெண் மனைவியாகும்போது வீட்டை,குடும்பத்தைச் சேர்ந்தவள் என வரையறைசெய்துவிடுகிறது

அறம்+அதிகாரம் நூலில் ராஜ் கௌதமன் அறம், ஒழுக்கம், கற்பு போன்ற சொற்கள் தமிழ்ப்பண்பாட்டில் எவ்வாறு உருவாகி வந்தன, வெவ்வேறு காலகட்டங்களில் அவை எப்படியெல்லாம் பொருளேற்றமும் மறுவரையறையும் கொண்டன என விரிவாக ஆராய்கிறார். அறம் என்னும் சொல்லே ‘வழக்கம்’ என்னும் பொருளில் இருந்து ‘கடைப்பிடித்தாகவேண்டியது’ என மாறுபடுகிறது. ‘மனிதனைமீறிய ஆற்றல்களின் நெறி’ என பின்னர் மாறுகிறது. மதத்துடன் தொடர்புகொண்டதாக, கடவுளின் ஆணையாக மாறுகிறது. முழுச்சமூகத்தையே கட்டுப்படுத்தும் ஆணையாக உருவம்கொள்கிறது. தமிழ்ச்சமூகத்தின் உள்ளம் தமிழ் என்னும் மொழியால், அதன் அடிப்படையான சொற்களால் வரையறைசெய்யப்பட்டிருப்பதை காட்டும் நூல் இது.

ராஜ்கௌதமனின் தலித்திய விமர்சனக் கட்டுரைகள், அறமும் ஆற்றலும், தலித் அரசியல்,  தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, பொய் + அபத்தம் = உண்மை போன்ற நூல்களை அவருடைய கருத்துப்பூசல்தன்மை கொண்ட விவாதநூல்கள் என்று வரிசைப்படுத்தலாம்.இந்நூல்களின் வலிமை என்பது இவை சமகால அரசியல், பண்பாட்டுவிவாதச் சூழலில் நின்றுகொண்டு எதிர்வினையாற்றுகின்றன, ஊடுருவல்களை நிகழ்த்துகின்றன என்பது. ஆகவே இன்றைய வாசகன் எளிதில் இவற்றுடன் தன்னைத் தொடர்பு படுத்திக்கொண்டு யோசிக்க முடியும். அதேசமயம் அவற்றின் சமகாலத்தன்மையே அவற்றின் பலவீனம். அவை ஒருகாலகட்டத்திற்குப்பின் பழைய வரலாறாக ஆகிவிடுகின்றன. அவற்றின் முந்துகருத்துகக்ள், எதிர்வினைகள் ஆகிய அனைத்துடனும் இணைத்து அவற்றைப் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது.

தலித் அரசியல்கட்டுரைகளில் ராஜ்கௌதமன் இந்திய தலித்தியக்கச் சிந்தனையாளர்கள் வழக்கமாக ஏற்றுக்கொண்டிருக்கும் சில பொதுவான கருத்துக்களையே கூரிய மொழியில் சொல்கிறார். சாதியம் என்பதே இந்துமதத்தின் சாரம், அதிலிருந்து சாதியத்தை எவ்வகையிலும் நீக்கம்செய்ய முடியாது என்பது அதன் மையக்கருத்து. சம்ஸ்கிருதமயமாதலையே மேம்பாடுகொள்ளுதலின் ஒரே வழிமுறையாக இந்துமதம் கொண்டுள்ளது, ஆகவே அது வேறுகுடிகளின் தொல்மரபுகளுக்கு அடிப்படையில் எதிரானதே. இந்தியதேசிய மறுமலர்ச்சி என்பது இந்துமதத்தின் மறுஎழுச்சியே என்பதிலும், அது முழுக்கமுழுக்க இந்து ஆதிக்கசாதியினரின் அரசியலையே பேசியது என்பதிலும் ராஜ்கௌதமன் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கிறார். இன்றுவரை இந்தியாவில் நீடிக்கும் இருபெரும் கருத்தியலியக்கங்களான இந்தியதேசியம், துணைத்தேசியம் என்னும் இரு மரபுகளும் இரண்டு படிநிலைகளில் உள்ள ஆதிக்கசாதியினரின் அரசியல்முகங்களையே காட்டுகின்றன என்கிறார்.

ராஜ்கௌதமனின் இந்த ஆரம்பகட்ட நூல்கள் வெளிவந்தபோது ஓரிரு முறை நான் கடுமையாகவே எதிர்வினையாற்றியிருக்கிறேன். கருத்துப்பூசல்தன்மை கொண்ட நூல்களின் மிகப்பெரிய சிக்கல் என்பது அந்தப் பூசலின் தனிப்பட்டத் தன்மை, அதில் உள்ளடங்கியிருக்கும் ஆசிரியரின் தன்மையக்கூறு, காரணமாக அவை ஒற்றைப்படையானவையாக ஆகிவிடும் என்பது. விசையுடன் சொல்லப்படுவதனாலேயே அவை குறுகிவிடுகின்றன. இந்நூல்களில் ராஜ் கௌதமன் தமிழ்ப்பண்பாட்டை ஒற்றைப்படையாகக் குறுக்குவதைக் காணலாம். பொருளியல்சுரண்டல், அதற்கு அடிப்படையான சாதியமைப்பு, அதற்குத்தேவையான கருத்தியல்சமையல் மட்டும் அல்ல தமிழ்ப்பண்பாடு. நாம் அறிந்த தமிழ்ப்பண்பாட்டின் மேலோர் அனைவருமே தெரிந்தோ தெரியாமலோ வரலாற்றின் சுரண்டலாதிக்கத்தை கட்டமைப்பு செய்யும் பணியை ஆற்றியவர்கள் மட்டும் அல்ல. அவர்களின் தனிப்பட்ட மெய்த்தேடல்களும் கனவுகளுமே முதன்மையானவை

அதேபோல ராஜ்கௌதமன் ஆரம்பகட்ட பூசல்தன்மைகொண்ட நூல்களில் தலித் அடையாளம் என்பது தலித்துக்கள் தங்கள் சமகால இயல்பை தாங்களே பெருமிதம்கொண்டு கொண்டாடுவதன் வழியாகவே உருவாகும் என்று வாதிடுகிறார். பறை, கூத்து போன்ற சில கலை- பண்பாட்டு வெளிப்பாடுகளில் அது சரியாக ஆகலாம். ஆனால் நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறை வழியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வாழ்ந்த தலித்துக்களிடம் இயல்பாக வந்துகூடிய அனைத்தையும் தங்கள் அடையாளங்களாக அவர்கள் சுமக்கவேண்டும் என்பது நிலைமையுணராத வெற்றுவாதம். உதாரணமாக குடி. அது அவர்களை அழிக்கும் ஒரு தீமையாகவே இன்று உள்ளது. குடியிலிருந்து விடுபடுவதே தலித் விடுதலையின் வழியே ஒழிய குடியை தங்கள் அடையாளமாகக் கொள்வது அல்ல

இன்றைய வாசகன் ராஜ் கௌதமன் அவர்களின் இந்த கருத்துப்பூசல்தன்மை கொண்ட நூல்களில் தன் ஏற்பையும் மறுப்பையும் கண்டுகொள்ளலாம். குறிப்பாக இலக்கியவாதிகள் இந்நூல்களில் இலக்கியப்பிரதிகள் வாசிக்கப்பட்டிருக்கும் விதம்குறித்த கடுமையான ஒவ்வாமையையே அடைவார்கள் என்று தோன்றுகிறது. இலக்கியப்பிரதிகள் அறிந்தோ அறியாமலோ கருத்தியலுருவாக்கத்தின் கருக்கள் மட்டுமே என்னும் நோக்கை நாம் அவற்றில் காணமுடியும்.

தலித் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டுவரலாற்றை எழுதியமைக்கு பின்னர் ராஜ்கௌதமனின் முக்கியமான பங்களிப்பு என்பது தமிழ்ப்பண்பாட்டின் சிற்பிகளான ஆளுமைகளைப்பற்றிய அவருடைய நூல்கள். க.அயோத்திதாசர் ஆய்வுகள், அ.மாதவையா, கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக [வள்ளலார் பற்றிய ஆய்வுநூல்]. புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ், சுந்தர ராமசாமி: கருத்தும் கலையும் போன்ற நூல்கள் தமிழில் ஓர் ஆளுமையின் பங்களிப்பை ஆய்வுநோக்கில் முழுமையாக மதிப்பிட்டு எழுதுவது எப்படி என்பதற்கு முன்னுதராணமாகவே சுட்டிக்காட்டப்படவேண்டியவை. ராஜ் கௌதமன் உருவாக்கிய விரிந்த பண்பாட்டுவரலாற்றுச் சித்திரத்துடன் பொருந்திச்செல்லும் நூல்கள் இவை.

ஆளுமைகளைப்பற்றி எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியே அற்றவர்களாக இருக்கின்றனர் தமிழ் ஆய்வாளர் பலர். உதாரணமாக, மறைமலை அடிகள் தன் நாட்குறிப்புகளில் அன்று வேலைச்சுமை மிகுதி, ஏனென்றால் வேலைக்காரி வரவில்லை, அவளுடைய மாதவிடாய்நாளாக இருக்கலாம், ஆகவேவேறுவழியில்லை என சாதாரணமாக ஒரு குறிப்பு எழுதியிருந்தார். பொ.வேல்சாமி என்னும் ஆய்வாளர் மறைமலை அடிகள் அடிகள் என பெயர் வைத்துக்கொண்டு தன் வேலைக்காரியின் மாதவிடாய் பற்றி நாட்குறிப்பில் எழுதுபவராக இருந்திருக்கிறார் என ஒரு வரியை போகிறபோக்கில் விட்டுச்செல்கிறார். ஆய்வாளரின் சாதிக்காழ்ப்பு அன்றி வேறெதுவும் இதற்குக் காரணமல்ல. இது இங்குள்ள காழ்ப்பரசியல்சூழலில் ஒருவகையான ஏற்பையும் பெற்றுள்ளது

இச்சூழலில்தான் ராஜ் கௌதமன் அவர்களின் ஆளுமைசார்ந்த மதிப்பீடுகளை பார்க்கவேண்டியிருக்கிறது. ராஜ் கௌதமன் அவர்களின் ஆய்வின் அடிப்படை இயல்புகள் மூன்று.

1. அவர் எந்தவகையான காய்தலும் உவத்தலுமில்லாமல் ஆய்வுப்பொருளாகவே ஆளுமைகளை எடுத்துக்கொள்கிறார். முன்னரே வரலாற்றாசிரியர்களோ பொதுவான சூழலோ அந்த ஆளுமைமேல் ஏற்றியிருக்கும் படிமம், அவருடைய சாதனைகளைப்பற்றிய பொதுமதிப்பீடு எதையுமே கருத்தில்கொள்வதில்லை. அடைமொழிகளை பயன்படுத்துவதில்லை.

2. ஆளுமைகளின் பொதுவெளிப் பங்களிப்பு, அறிவார்ந்த கொடையை மட்டுமே கருத்தில்கொள்கிறார். அவர்களின் தனிப்பட்ட குணங்களை சாதகமாகவும் பாதமாகவும் கணக்கிலெடுப்பதில்லை.

3 அவர்களின் சாதி, மொழி சார்ந்த பின்னணியை ஆய்வுப்பொருளாகவே காண்கிறார். அவர்களை மதிப்பீடு செய்வதற்கான காரணமாக அல்ல.

4. ஆளுமைகளை விரிந்த வரலாற்றுப்பின்புலத்தில் வைத்தே ஆராய்கிறார்.

ராஜ்கௌதமனின் ஆய்வு புறவயமானது. மார்க்ஸிய –தலித்திய அடிப்படைகளில் நிலைகொள்வது. ஆகவே தன்னை வரலாற்றின் பிரதிநிதியாக அவர் உருவகித்துக்கொள்கிறார். அந்தக்கோணத்திலேயே மதிப்பிடுகிறார். அதிலுள்ள ‘இரக்கமற்ற’ தன்மை நம்முடைய வழக்கமான புகழ்பாடி வரலாற்றில் ஊறியவர்களுக்கு சற்று ஒவ்வாமையை உருவாக்கலாம். ஆனால் அந்நோக்கில் உண்மையாலெயே அவை முக்கியமானவை ஆகின்றன

ராஜ்கௌதமன் புதுமைப்பித்தனை மதிப்பிடுகையில் அவருடைய இலக்கியமுன்னோடி என்னும் மதிப்பை, அவர் அனைத்துவகை கதைகளிலும் முயன்றுபார்த்தமையை, அவருடைய சிறந்த கதைகளின் உணர்வுநிலையை எடுத்துரைக்கிறார். நாசகாரக் கும்பல் போன்ற கதைகளில் அவர் தான் பிறந்த வேளாளச் சாதியை விமர்சனத்திற்குள்ளாக்குவதையும்,தனது சைவமரபை எள்ளலுடன் அவர் நோக்கியதிலிருக்கும் புதுமைநாட்டத்தையும் பதிவுசெய்கிறார். கூடவே புதுமைப்பித்தனின் கதைகளில் உள்ளுறைந்திருக்கும் சைவவேளாளச் சாதியக்கூறுகளையும் தொட்டுக்காட்டுகிறார். சிற்பியின்நரகம், கபாடபுரம் போன்ற கதைகளில் அவர் சைவக் குறியீடுகளுக்கு அளிக்கும் நுட்பமான தொன்மைவிவரணையில் அவருடைய பற்றுக்கள் வெளிப்படுவதைச் சுட்டுகிறார். சுந்தர ராமசாமியை ராஜ்கௌதமனின் ஆசிரியர், நண்பர் என்றே சொல்லவேண்டும். அவருக்கும் அதே கறாரான அணுகுமுறையையே கைக்கொள்கிறார்.

அ.மாதவையாவைப் போற்றியே ராஜ் கௌதமனின் நூல் அமைகிறது. அவருடைய சமூகப்பார்வையிலிருந்த மீறலையும் மனிதாபிமானநோக்கையும் அவர் விரித்துரைக்கிறார். கூடவே மாதவையாவின் பெண்கள் குறித்த பார்வையிலிருந்த மரபார்ந்த அணுகுமுறையைச் சுட்டிக்காட்டுகிறார். அ.மாதவையாவின் சிந்தனைகளிலிருந்த கிறித்தவத்தாக்கத்தை விரிவாக விவரிக்கும் ராஜ்கௌதமன் பின்னாளைய விமர்சகர்களும் இலக்கியவரலாற்றாசிரியர்களும் மாதவையாவை மதிப்பிடுவதில் கொண்ட தயக்கங்களையும் சுட்டிக்காட்டுகிறார். அவர் நாவல் வடிவின் முன்னோடி, பெண்கல்விக்காக போராடியவர் என்ற எளிய வரையறைகளுடன் அவர்கள் நின்றுவிடுகிறார்கள். அவர் எழுதிய முத்துமீனாட்சி போன்ற கடுமையான சாதியவிமர்சனம் கொண்ட நூல்கள் தவிர்க்கப்படுகின்றன. ஒரு மரபுஎதிர்ப்பாளர் நாவல்வடிவின் முன்னோடி என சுருக்கப்பட்டுவிடுகிறார் என இந்நூலில் காண்கிறோம்.

வள்ளலார் குறித்த நூல் ராஜ் கௌதமனின் ‘கனிவற்ற’ அணுகுமுறைக்கு மிகச்சிறந்த உதாரணம். வள்ளலார் எழுந்துவந்த நூற்றாண்டின் வரலாற்றுப் பின்புலம், வள்ளலாருக்கு முன்னோடியான சித்தர்மரபு பக்தர் மரபு ஆகியவற்றின் மூலம் அவருடைய ஆளுமை உருவாகி வந்தவிதம், அவருடைய எண்ணங்கள் மரபான பக்தர் என்னும் நிலையிலிருந்து தன்வழிதேடும் சித்தர் என பரிணாமம் கொண்ட முறை ஆகியவற்றை விவரிக்கிறது ராஜ் கௌதமன் அவர்களின் நூல். வள்ளலாரை கருணை என்னும் உணர்வின் திரட்சியான ஆளுமை என அவர் வரையறைசெய்கிறார். தன்னைச்சூழ்ந்த மானுடர்மீதான கருணை மெல்ல அனைத்துயிருக்கும் கருணை என்னும் நிலைக்கு அவரைக்கொண்டுசென்றது. அந்த அம்சத்தாலேயே மெல்லமெல்ல அவர் மரபான சைவப்பற்றிலிருந்து முற்றாக தன்னை விடுவித்துக்கொண்டார். தனிப்பெருங்கருணை என்னும் தெய்வ உருவகத்தைச் சென்றடைந்தார். அவர் ஆரம்பநாட்களில் தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ற தன் ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக அன்றிருந்த மதப்பூசல்சூழலில் அவர்கள் அத்துமீறியதைக்கூட கண்டும்காணாமலும் இருந்தார், அதனூடாக அவற்றை ஊக்குவித்தார். பின்னர் தன் கருணைத்தரிசனத்தால் அவர்களையும் உதறத்துணிந்தார். அவர்களால் கைவிடப்பட்டார். ஒரு நோய்க்கூறு என்ற எல்லை வரை அந்தக்கருணை சென்றடைந்தது. இக்காரணத்தாலேயே அவர் கொல்லப்பட்டார், அல்லது தற்கொலைசெய்துகொண்டார் என அவர் கருதுகிறார். அவ்வாறாக அவர் தொன்மநிலையை அடைந்தார். ஒரு புதிய மதமொன்றின் நிறுவனராக ஆனார்.

ராஜ் கௌதமன் அந்தணர் என்பதற்காக மாதவையாவை எதிர்நிலைகொண்டு நோக்கவில்லை. திருவுரு என்பதற்காக வள்ளலாரை கிழித்து ஆராயத் தயங்கவுமில்லை. தன் சாதியினர், தான் சார்ந்த இயக்கத்தின் திருவுரு என்பதற்காக அயோத்திதாசரைப் போற்றவுமில்லை. ராஜ் கௌதமனின் நோக்கில் அயோத்திதாசர் பழைய, மரபுவழிச் சிந்தனைகளால் கட்டுண்டவர். புதிய யுகத்தின் புறவயச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவர். மரபுவழிச் சிந்தனை தொன்மங்கள், கதைகளால் அறிவுத்தொகை ஒன்றை உருவாக்கிக்கொண்டது. அதில் கணிசமானவை காலாவதியானவை. அவற்றையே அயோத்திதாசர் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். பிரம்மஞான சங்கத்தின் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் போன்றவர்களின் தொடர்பால் அவர் பௌத்த மரபை ஏற்றாலும் ஆல்காட்டின் அமைப்பிலிருந்த மரபுவழி அறிதலின் நம்பிக்கைகளையே பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார். அவருடன் இணைந்து செயலாற்றியவரும் புறவயமான நவீன அறிதல்முறை கொண்டவருமான லட்சுமிநரசுவிடம் இதன்மூலமே அயோத்திதாசர் முரண்பட்டு பூசலிட்டு விலகிச்செல்கிறார். லட்சுமிநரசு நவீன பார்வையும் தர்க்கபூர்வ அணுகுமுறையும் கொண்டவர், ஆனால் அவரால் இங்கிருந்த நம்பிக்கைவழிச் சூழலில் பெரிய அளவில் ஆதரவாளர்களை ஈர்க்கமுடியவில்லை.

அயோத்திதாசர்ரின் பங்களிப்பு அவர் தலித்துக்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான கருத்தியல்தரப்பாக ஆனார் என்பதுதான். பல்வேறு புராணங்கள் , சமகாலப் புனைகதைகள் வழியாக மரபின்பெருமையும் தேசப்பற்றும் மொழிப்பற்றும் மதப்பற்றும் கற்பிதம் செய்யப்பட்டு அவற்றைக்கொண்டு தலித்துக்கள் ஒடுக்கப்பட்டபோது அவர் தனக்கே உரிய ’கதைகளை’ உருவாக்கி அவர்களை எதிர்கொண்டார். அவை அவருடைய போர்ச்சூழ்ச்சிகள் மட்டுமே என ராஜ் கௌதமன் எண்ணுகிறார். ஆனால் தமிழகப் பண்பாட்டுப் பரிணாமத்தை, இந்தியவரலாற்றுச் சித்திரத்தை அறியாமல் ஒரு கிராமத்து முதியவர் போல ‘மனம்போனபோக்கில்’ அயோத்திதாசர் கருத்துக்களைத் தெரிவித்தார். ஆகவே காலப்போக்கில் அவை தங்கள் இடத்தை இழந்தன. இன்றைய சூழலில் முன்னோடி என்னும் இடமே அவருக்கு உள்ளது, சிந்தனையாளராகவோ ஆய்வாளராகவோ அல்ல என்பதே அவருடைய எண்ணமாக உள்ளது.

அம்பலப்படுத்துதல் (exposition) அழித்தொழித்தல் (annihilation) அபகரித்தல் (appropriation) ஆகிய மூன்று போர்முறைகளை அயோத்திதாசர் கடைப்பிடித்தார் என்று வகுக்கும் ராஜ் கௌதமன் அவர் பெரும்பாலும் மொழியாராய்ச்சிகள் வழியாகவே பௌத்தம் தலித்துக்களின் தொல்மதம் என நிறுவ முற்படுவதை, இந்திய அறிவுத்தொகை முழுமையாகவே பௌத்தமரபுக்குச் சொந்தம் என விளக்குவதை காட்டுகிறார். இதை ஒருபக்கம் அயோத்திதாசர்ரின் போர்முறை என்றும் இன்னொருபக்கம் அவருடைய வரலாற்றுப்புரிதலின்மை என்றும் சொல்கிறார். தமிழக தலித்துக்களை இயல்பிலேயே தாழ்ந்தவர்கள், வேஷப்பிராமணர் என்னும் பிராமணிய அதிகாரவர்க்கத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் இரண்டாகப்பிரிக்கும் அயோத்திதாசர்ரின் பார்வையை மிகக்கடுமையாகவே நிராகரித்து அது அன்று உருவாகி வந்த மானுடநேய – ஜனநாயக அரசியலுக்கு உகந்த பார்வை அல்ல, தான் –பிறர் எனப்பிரித்துநோக்கும் பண்டைய நிலப்பிரபுத்துவகால அணுகுமுறையின் தொடர்ச்சி என்றும் மதிப்பிடுகிறார்.

ராஜ் கௌதமன்னின் கருத்துலகப்பயணம் என்பது தலித் பண்பாட்டரசியல் சார்ந்த பூசல்தன்மைகொண்ட கட்டுரைகளில் இருந்து தொடங்கியது. அவற்றில் அவர் அம்பேத்கார் வழிநின்று இந்திய தலித்தியக்கம் உருவாக்கிக்கொண்ட பொதுவான கருத்தியலை ஒருவகை மதநம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு பேசுகிறார். பின்னர் அவற்றிலிருந்து விலகி தலித்நோக்கில் தமிழ்ப்பண்பாட்டுச்சித்திரத்தை விமர்சிக்கமுயன்றார். விளைவாக தலித் என்னும் மக்கள்தொகை, அவர்களை அவ்வாறு இங்கே நிலைநிறுத்தும் கருத்தியல் உருவாகி வந்த பரிணாமச்சித்திரத்தின் கோட்டுருவை உருவாக்கி அளித்தார். பின்னர் அந்தக்கோட்டுருவை நிறைத்து முழுமைசெய்யும் தன்மைகொண்ட ஆளுமைமதிப்பீடுகளை தனித்தனியாக எழுதினார்.

இந்தமூன்றுதளங்களிலும் அவர் செய்த பயணத்தை அப்பயணத்தின் எதிர்திசையில் நின்றபடித்தான் நாம் அறியமுயலவேண்டும். அவருடைய தனிப்பெரும்சாதனை என்பது பண்பாட்டுப் பரிணாம வரைவுதான். அதை அவருடைய மூன்று முதன்மைநூல்களில் இருந்து உருவாக்கிக்கொண்டபின்னர் அவற்றை அவர் எழுதிய ஆளுமைச்சித்திரங்களைக்கொண்டு நிரப்பிக்கொள்ளவேண்டும். அதன்பின் அவருடைய விமர்சனக்கட்டுரைகளையும் பூசல்கட்டுரைகளையும் வாசித்தால் அவற்றினூடாக அவருடைய நோக்கு துலங்கிவரும்.

மேலும்
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்