நான்காவது கொலை !!! 13

ஓட்டல் முகப்பு அல்லோல கல்லோலப்பட்டது. டிவிமுன்னால் ஒரே கூட்டம்.

“பாஸ், ரொம்ப நாளா சந்தேகம். இந்த அல்லோலகல்லோலம்னா என்ன? தெரியாம திக்குமுக்காடறேன்”

“இதெல்லாம் தொடர்கதை வார்த்தைகள்டா. பேசாம படிச்சுட்டே போகவேண்டியதுதான், ஏன் இப்ப நாப்பது வருஷமா ஜனங்க படிக்கலியா? உனக்கு மட்டும் என்ன?”

“D.A. சீதே, அதிலே சன் டிவி போடறானா பாக்கச் சொல்லுடா”

சி.என்.என் மற்றும் பிபிஸி சானல்கள் ஜேம்ஸ் பாண்டின் சாகச நிகழ்ச்சியை லைவ் ரிலே செய்ய ஆரம்பித்திருந்தார்கள். ‘பிரிட்டன் இன் ஆக்ஷன்’ என்ற அந்த நிகழ்ச்சியில் நடுநடுவே மைக்கேல் ஜாக்சன், மடோன்னா, நவோமி காம்பெல், ஜார்ஜ் புஷ், ‘மைட்டி ஜோ ஜூனியர்’ புகழ் சிம்பன்ஸி, இளவரசர் சார்லஸ், பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற முக்கியஸ்தர்கள் இந்த தாக்குதலைப்பற்றி கருத்துச் சொன்னார்கள். இந்த தாக்குதலில்தான் பூமி, நிலவு முதலானவற்றின் எதிர்காலமே உள்ளது என்பது பொதுவான கருத்தாக இருந்தது. பாலித் தீவு குண்டு வெடிப்புக்கு இது பழிக்குப்பழியும் ஆகும் என்றும் ஆலோசகர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

சி.என்.என்-னின் பெண்நிருபர் ஒரு கம்பியில் கட்டப்பட்டு ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஜேம்ஸ் பாண்டின் தலைக்கு மேலாகப் பறந்தாள். அவளது இடுப்பிற்கு மறுபக்கம் காமிரா பின்தொடர்ந்தது. அவருக்கு அடியில் ஒரு விமானத்தின் மீது பிபிசியின் நிருபிணி நின்றிருந்தாள். ஜேம்ஸ் பாண்டின் முதுகின் மீது எழுதப்பட்டிருந்த பெப்ஸி விளம்பரம் சி.என்.என்னிலும், வயிற்றிலிருந்த கொகோ கோலா விளம்பரம் பிபிஸியிலும் தெரிந்தது. நிருபிணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து [‘சாதுரியம் பேசாதடா’ பாணியில்] மோவாயைத் தோளில் இடித்துக் கொண்டார்கள்.

ஜேம்ஸ் பாண்ட் வானம் வழியாகக் கன்யாகுமரிக்குப் பறந்து சென்றார். அவருக்குத் தகவல் சொன்ன சுரேகாவால் கன்யாகுமரியைத்தான் அவருக்கு இடமாகச் சொல்லிப் புரியவைக்க முடிந்தது. காரணம் அதுதான் சுற்றுலா வழிகாட்டிப் புத்தகத்தில் இருந்தது. டில்லி, தாஜ் மகால், பம்பாய், கோவா, கஜுராகோ, கோவளம், கன்யாகுமரி ஆகிய இடங்கள் தவிர வேறு இடங்கள் இந்தியாவில் இருப்பதை மற்ற வெள்ளையர்கள் போலவே பாண்டும் நம்பத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஓரியண்டல் நாடுகளில் அப்படிப் பல பழம்பெருமைப் பீத்தல்கள் உண்டு என அவர் அறிவார். வெள்ளைத்தோல் உள்ளவர்கள் ஆவணங்களையே நம்ப முடியும், ஆவணங்கள் என்பவை ஆங்கிலத்தில் இருக்கும்.

மேலும் பாண்ட் அமெரிக்கச் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தால் வழிநடத்தப்பட்டார். அதிலும் பாண்ட் திருவனந்தபுரத்தில் வாங்கிய அதே சுற்றுலா வழிகாட்டிப் புத்தகம் தான் லோக்கல் சி ஐ ஏ ஏஜெண்ட் கொச்சு குஞ்ஞிராமன் நாயரால் வாங்கி அனுப்பப்பட்டு ஃபீட் செய்யப்படிருந்தது [ஆப்கானிஸ்தானிய சுற்றுலாப் புத்தகத்தில் இல்லாத இருண்டபகுதியில் சென்று தங்கிய, பின் லேடனின் அழுகுணி ஆட்டத்தை வாசகர்கள் இனம் கண்டுகொள்ளவேண்டும்] மேலும் அய்யன் சிலையை விசித்திர கோணங்களில் எடுத்துக் காட்டினால் தாக்குதலுக்கு அழகியல் மதிப்பு அதிகரிக்கும் என சி.என்.என் னும் பி.பி.சியும் அபிப்பிராயப்பட்டன. அச்சமயம் விளம்பரத்தின் பொருட்டு அய்யன் தலைமீது பிரம்மாண்டமான டில்டோவை மாட்டி வைக்க அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் கோரியதை உலகமயமாக்கத்தின் தாராளவாதப் போக்கை புரிந்துகொள்ளாத [அரதப்] பழமைவாதிகள் சிலர் எதிர்த்ததனால் அரசு அனுமதிக்கவில்லை.

சி.என்.என் செய்தியை சன் டிவி மறு ஒளிபரப்பு செய்தது. எழுபத்தாறு விளம்பங்களுக்கு பிறகு மாலன் படிய வாரிய தலையும் புடைத்த தாடையுமாக வந்து நின்று “உலகத்திலேயே முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் நிகழ்ச்சியை நாங்க நேரடி ஒளிபரப்பு பண்றோம். ஏற்கனவே நாங்க செப்டம்பர் பதினொண்ணு நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ததை பலர் ரொம்ப ரசிச்சு பாராட்டி எழுதியிருக்காங்க. இதோ நீங்க பாக்கிறவர்தான் ஜேம்ஸ்பாண்ட். இப்போ ஜேம்ஸ் பாண்ட் ஆழந்த அமைதியோட இருக்கார். அவரோட கண்லேருந்து தீட்சண்யமான பார்வை தகதகன்னு கெளம்பிட்டே இருக்கு. ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரை தரிசிக்க உலகமே இப்ப டிவி முன்னாடி ஒக்காந்திருக்கு. முன்னூறுகோடி மக்களின் மீட்பன் இப்ப அய்யன் மேல சுத்திட்டு வரார்…” அப்போது காமிரா பக்கமிருந்து சைகை வர மாலன் திருதிருவென விழித்தபடி விலக ஜேம்ஸ் பாண்ட் திரையில் வருகிறார். அவரை கடற்காக்கைகள் பின்தொடர்ந்து கொத்துவது தத்ரூபமாக காட்டப்படுகிறது. ஓரமாக தெரிந்த சி.என்.என் சின்னம் மீது ஒரு கை வந்து மறைக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் அய்யன் திருவள்ளுவரை மேலிருந்து பார்த்தார். நேராக தலைகுப்புற அதன் மீது இறங்கினார். அவர் தன் இடையிலிருந்து ஒரு பட்டுநூல் கண்டை எடுத்து பிரிக்க அப்புசாமி “மாஞ்சாக் கயிறுடா ரசம்” என்றார். கயிறை சிலையில் மூன்று விரல் முத்திரை மீது கட்டி அதில் தொங்கி பாண்ட் சறுக்கி இறங்கினார்.

சங்கர்லால் அதைக் கண்டதுமே “உய் !உய்! அ- அஜக் !அ- அஜக்! “ என்றார்.

சிலையின் காலடியில் மாலைக்கடன் கழிக்க வரிசையாக அமர்ந்திருந்தவர்களை கண்டு பாண்ட் பாய்ந்து ஒரு பாறையின் பின்னால் மறைந்தார். முதலில் துப்பாக்கி முனையும் பிறகு அவரது மூக்கு முனையும் வெளியே வந்தன. “கைகளை மேலே தூக்குங்கள்!” என்றார் பாண்ட்.

அவர்கள் கைகளைமேலே தூக்கிய போது ஒருவன் “பாதிரியார்த் துரை சட்டைக்கு அளவு எடுக்க இங்கேயே வந்துட்டார்டா” என்றான்.

பாண்ட் ஒற்றைக்காலில் நடனமாடியபடியே ஓடி கடலில் குதித்தார் “ஆந்த்ராக்ஸ் போன்ற ஏதோ உயிரியல் தாக்குதலில் பாண்ட் தப்பியதை இங்கே கண்டோம். அவர் கற்றிருந்த பாலே நடனம் அவருக்கு இப்போது கைகொடுத்தது…” என்றாள் பிபிசியினி.

பாண்ட் அலைகளில் நீந்தி ஈரம் சொட்டப் பாறையில் பற்றி ஏறினார். சட்டையைக் கழற்றி பிழிந்து உலர்த்திக் கொண்டார். நேராக நடந்து பேருந்துநிலையத்தை அடைந்தார். அங்கே ஒரு பெட்டிக்கடையில் சுரேகா தந்த துண்டு சீட்டை காட்டி விலாசம் விசாரித்துக் கொண்டார்.

நம்பர் 1 நாகர்கோவில் டவுன் பஸ் வந்தது. அது அறுபதுமைல் வேகத்திலிருக்கவே ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். அவர் ஏற முனைய ஒரு பெண்மணி முழங்கையால் ஒரு இடி இடித்து வெளியே தள்ளினார். பாண்ட் பேருந்தின் பின்னால் ஓடி பின்பக்கம் இருந்த ஏணியில் தொற்றி ஏறினார். அங்கே ஏற்கனவே இருவர் இருந்தார்கள். “துரை ஊருக்கு புதிசா?” என்றார் ஒருவர்.

“ஆமாம்…..”

“இது உங்க ஊர் இல்ல தொரை. நாலுவித்தையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டாத்தான் பிழைச்சுகெடக்க முடியும் கேட்டுதா? இறுக்கி பிடிச்சணும். கொட்டாரம் வளைவிலே இன்னும் ஆளு கேறுவாவ…”

கொட்டாரத்தில் மேலும் இருவர் ஏணியில் ஏறிக்கொண்டார்கள். கண்டக்டர் எட்டிப்பார்த்து “அங்க நீங்கி நிக்கணும் பிள்ள. ஏணியிலே ஒரு பந்து களிக்குண்டான எடமிருக்கே” என்றார். “ஏய் செவத்த மூஞ்சி தள்ளிப்போ”

பாண்டின் கைகள் கடுத்தன. ஹெலிகாப்டரில் தொங்கித்தான் அவருக்கு பழக்கம். ஆனால் அது சீராக போகும். இது எல்லா ஊரிலும் நிறுத்தி உலுக்கி உறுமி சீறி முனகி மேலும் சென்றது. அடிக்கடி உதறியது. மேலும் ஹெலிகாப்டரில் அவர் மட்டும்தான் தொங்குவார், இதில் அவருடன் எட்டுப்பேர் இருந்தார்கள். அதில் ஒருவன் [சொக்கலால் ராம்சேட் ஐந்து மார்க் ஒரிஜினல்] பீடி பிடித்துக் கொண்டிருந்தான். பாண்ட்டுக்குக் குமட்டியது.

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கி பாண்ட் ஓய்ந்து அமர்ந்துவிட்டார். பிபிசியில் அப்போது விளம்பர இடைவேளை விட்டுவிட்டார்கள். அதன் பிறகு பாண்ட் பலரிடம் விசரித்து பார்வதிபுரம் ரவுண்ட் பஸ் பிடித்தார்.

“பார்வதிபுரம்!” வசந்த் சொன்னான். “அடப்பாவி, அவனா கொலைக்காரன்?”

“அப்பவே நினைச்சேன் வசந்த், கொலைகளுக்கு மோட்டிவே இல்லை. இஷ்டத்துக்கு கொலை விழுது…”

“பாஸ் ஒரு நாலு மெகா நாவல் அரகுறையா முடியப்போவுது. முன்னூறு கதாபாத்திரங்க சாந்தி அடையாம அலையப்போறாங்க…”

கோபாலன் சாம்புவை கட்டிப்பிடித்து “சாம்புசார் அன்னிக்கே சொன்னீங்க. எப்டி சார்? எப்டி சார் அப்படி கரெக்டா சொல்றேள்? எழுதறவனுக்குத்தான் தெரியும்னீங்க. கரெக்டா சொல்லிட்டீங்க, எனக்குத்தான் மண்டை ஓடலை” என்று கண்ணீர் விட்டார்.

பாண்ட் பார்வதிபுரம் சர்க்குலரில் இம்முறை உள்ளேயே ஏறிவிட்டார். அங்கே கிரைண்டர் சக்கரம் போல அவரை மனித உடல்கள் அரைத்தன. பாம்புபோல கண்டக்டர் கரம் நீண்டு வந்து பணம் வாங்கி டிக்கெட் அளித்தது. வாஷிங் மெஷின் துணி போல மார்பகங்கள், தோள்கள், தொப்பைகள், தாடிமுட்கள், வாய்நாற்றங்கள், கால்கள் கைகள் வழியாக அவர் சப்பி நசுங்கி உதைபட்டுச் சென்று இறங்கினார். அவர் சற்று கனமிழந்து அகலமாகியிருந்தார்.

வெற்றிலை பாக்கு கடை கோபாலன் “சார், சார்” என்று கூப்பிட்டார் “யாரை பாக்கணும்? எழுத்தாளரைத்தானே?”

“ஆமா எப்டி தெரியும்?”

“ஒருமாதிரி பங்கியடிச்சா மாதிரி இருக்கீங்க. காலு செரியா நிலைக்காம இங்க யாரு வந்தாலும் நேரா அங்க அனுப்பிடறது…. போங்க, சாரதா நகர்ம்பாங்க. அஞ்சாம் கிராஸ்லே தொண்ணூத்தி மூணாம் நம்பர் வீடு”

எதிர்த்த லாரன்ஸ் லாட்ஜின் உச்சியில் டெலஸ்கோப் காமிரா வைத்து டிவி காரர்கள் பாண்டை பின் தொடர்ந்தனர். சாரதாநகர் நுழைவுச்சாலையில் கோணவால் தலைமையில் அறுந்தகாது, வெள்ளைமூக்கன், அம்மிணி, பெரிய வெள்ளை. சின்னவெள்ளை, நக்கி நாணு, செம்பன் ஆகியோர் பின்னால் அணிவகுக்க தெருநாய்ப் படை அவரை எதிர்கொண்டது.

ஜேம்ஸ் பாண்ட் ஒசிந்து நின்று “என்பெயர் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்” என்றார்.

கோணவால் “வர்? “ என்றது. அதற்கு ஆங்கிலம் பிடிக்காது. ஏற்கனவே அதை வளர்த்த பாதிரியார் அதற்கு மலமூத்திரம் கழிப்பதற்குகூட கட்டுப்பாடுகள் ஏற்படுத்தி, அந்தத் தகவல்களை ஆங்கிலத்தில் மட்டும் சொல்லி சித்திரவதை செய்ததை தாங்காமல்தான் பாதிரியாரை பிருஷ்டத்தில் கடித்துவிட்டு ஓடிவந்து தெருநாயாக மாறியது.

பாண்ட் மற்ற நாய்களைப் பார்த்தார். ஓரமாக ஒரு பெரிய நாய் அலட்சியமாக படுத்திருந்தது. அதுதான் முக்கிய தாதா, சண்டை மூக்கும்போதுதான் அது களமிறங்குமென தமிழ்ப்படம் பார்க்காத பாண்டுக்கு புரியவில்லை. பாண்ட் கைகளை ஸ்டைலாக தூக்கியபடி ஓரமாக நகர்ந்து தாதா குமரேசன் [ஆமாம் குமரேசன். ஏன் இருக்கக் கூடாதா? பூர்வாசிரமத்தில் அதை வளர்த்த மெடிக்கல் ஷாப் சண்முகத்தை ஏமாற்றிய பார்ட்னரின் பெயர் அது] அருகே சென்று தாண்ட முயல தாதா சீறி பாண்டின் காலை “அள்ள” பாண்ட், “அய்யோ, காப்பாத்துங்க!” என்று கதறியபடி ஒடினார். கோணவால் தலைமையில் படை உற்சாகமாக துரத்தியது.

எஞ்சினியர் மஜீத் வீட்டுக்குள் [ஆப்கன் போரின்போது பெயரிடுவதற்கெனவே வாங்கப்பட்ட] ஜார்ஜ் புஷ்ஷும், டிக் செயினியும் கீச்சுகுரல்களில் “வள்! வள்!” என ஓலமிட, பாண்ட் பாய்ந்து ஐந்தாம் குறுக்குத்தெருவில் நுழைந்து, தொண்ணூற்று மூன்றாம் எண் வீட்டை அடைந்து, கேட் கதவை திறந்தார். உள்ளே இன்னொரு நாய் இருந்தது. செம்பட்டை நிறத்தில் சாந்தமும் பணிவும் உருவெடுத்ததாக காணப்பட்ட அது பாண்டைப் பார்த்து வாலோடு பிருஷ்டத்தையும் அதிவேகமாக ஆட்டியபடி, மெல்ல நெருங்கியது. பாண்ட் கைகளைமேலே தூக்கிவிட்டார். சாந்தசொரூபி அவரது இரு கால்களுக்கு இடையே நுழைந்து, காதுகளை விடைத்து, வாலை கவட்டையில் செருகி, தப்பி வெளியே ஓடியது.

உள்ளிருந்து ஒரு நான்கு வயது பெண்குழந்தை கையில் கரடிப்பொம்மையுடன் எட்டிப்பார்த்து உற்சாகமாக “அப்பா குட்டன் ஓடிப்போச்சு. அதுக்கு பதிலா ஒரு மாமா வந்திருக்காங்க” என்றது. “நீங்க யாரு?”

“மை நேம் இஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட்”

“அப்பா பாண்ட் போட்டுட்டு ஒரு மாமா வந்திருக்காங்க” குழந்தை சொன்னது “மொகத்திலே செவப்பா என்னமோ கலர் அடிச்ச மாதிரி இருக்காங்க”

உள்ளே கொலைவெறியோடு எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர் “வரச்சொல்லுடீ” என்றார்.

பாண்ட் உள்ளே சென்றார். சாகஸத்துக்கு இடமில்லை, லாவகமாக முடிக்கவேண்டிய காரியம் என அவரது மனம் சொன்னது.

“நீங்களா?” என்றார் எழுந்துவந்த எழுத்தாளர். “இங்க எங்க? எதிர்பார்க்கவே இல்லையே? டேய் அஜி இங்க பார், இவங்கதான் ஜேம்ஸ் பாண்ட்”

“இவங்களா, இப்டி இருக்காங்க?” என்றான் எட்டுவயது பையன் ஆர்வமாக.

பாண்ட் “ஏன்?” என்றார்.

“நீங்க சண்டை போடுவீங்களா?”

“ஆமா” என்றார் பாண்ட். “ஐயா நான் சில விஷயங்களைப் பேசவேண்டும்”

“பேசலாமே. இருங்க ரசீது புக்கை காணும்”

“அது எதுக்கு?”

“நீங்க இப்ப ‘சொல் புதிது’க்கு சந்தா கொடுக்கபோறீங்க இல்லியா? ரசீது இல்லைன்னா நல்லா இருக்காது”

பாண்டுக்கு இம்மாதிரி நிலைமைகளை சமாளிக்க சீக்ரட் செர்வீஸில் சொல்லித்தரவில்லை. “ஆமாம்” என்றார்.

“ஆயுள் சந்தாவா போட்டுக்கிடுங்க. யாரோட ஆயுள்னு கேக்காதீங்க, பத்திரிகையோட ஆயுள்தான். அதெல்லாம் அம்பது வருஷம் முன்னாடியே எங்க மூதாதை முடிவு பண்ணின விஷயம்…. டாலர் பரவாயில்லை கவலைப்படாதீங்க…”

மேலும் விபரீதமாக விஷயம் போவதற்குள் பாண்ட் விழித்துக் கொண்டார். “நாம் சற்று பேசலாமா?”

“அப்பா இவுங்க சினிமாவிலே நடிக்கிறவங்கன்னு அஜி சொல்றான்”

“ஆமாடா. சூப்பரா நடிப்பார்…”

“அப்பன்னா இவுங்க டான்ஸ் ஆடிக்கிட்டே காதலிப்பாங்களா?”

பாண்ட் முகம் சிவந்துவிட்டார்.

“பாப்பா நீ போயி வெளையாடு…. மாமாவுக்கு வெக்கமா இருக்கும்ல?”

“அஜி, வெளயாட வரமாட்டேங்கிறான். அவன் தனியா துப்பாக்கி வச்சு வெளையாடறான்”

“துப்பாக்கியா?” பாண்ட் விசுக் என்று எழுந்தார், அவரது நவீன துப்பாக்கியைக் காணோம்.

“உங்க துப்பாக்கிதான் சார். அவன் அதெல்லாம் நைசா எடுத்திருவான். ஒண்ணும் பண்ணமாட்டான், கொஞ்ச நேரம் பாத்துட்டு குடுத்திடுவான்…” என்றார் எழுத்தாளர்.

“இவங்க ஏன் எனக்கு மட்டும் ஒண்ணுமே கொண்டாந்து குடுக்காத கெட்ட மாமாவா இருக்காங்க?” என்றது குழந்தை.

“இருடீ, மாமா உனக்கு பொம்மை தருவார்…. இந்தா. பாத்தியா சாமியோட தலை…”

“அய்யோ… அது ஹெர் மெஜஸ்டியின் அடையாள அட்டை…”

“இருக்கட்டும் சார், இப்ப நாம இலக்கியம்தானே பேசப்போறோம்? அதெல்லாம் எதுக்கு?”

நிராயுதபாணியான பாண்ட் சம்மிப்போய் உட்கார்ந்தார். “ அருண்மொழி வீட்டிலே இல்லை. அவளுக்கு இன்னைக்கு ஆபீஸ் உண்டு. பத்துப் பாத்திரம்லாம் குவிஞ்சு கிடக்கு. தேய்ச்சு கழுவறது என்னோட வேலைதான்.. சோம்பலா இருக்குண்ணு உக்காந்துட்டேன். ஒரு கொலையை பண்ணலாம்னா நீங்க வந்துட்டீங்க. ரெண்டுபேருமா பேசிட்டே மெள்ள பாத்திரங்களைத் தேச்சுட்டோம்னா டீ போட்டு சாப்பிடலாம்…”

“அய்யோவேண்டாம்” என்றார் பாண்ட் பதறி.

“உங்க வீட்லே யார் பாத்திரம் தேக்கிறது துணி துவைக்கிறது எல்லாம் பண்றாங்க?”

“நான் ஆன் ஹெர் மெஜஸ்டீ”ஸ் சீக்ரட் செர்வீஸில் இருக்கேன்…”

“இங்கேயும் அப்டித்தான். ஆனா சீக்ரட் ஒண்ணுமே கெடயாது… அப்புறம் சொல்லுங்க. நாலாவது கொலை எப்டி போகுது?”

“அதைப்பற்றி பேசத்தான் வந்தேன்…”

“அப்பா டீவியிலே இந்த மாமாவை காட்டறாங்க”

“அப்டியா? என்னை? “ என்று எழுத்தாளர் எழுந்து பார்த்தார். திரையில் ஜேம்ஸ் பாண்ட் வேளிமலையின் சிகரங்களில் கயிறு போட்டு தொங்கி ஏறிக் கொண்டிருந்தார்.

“அய்யோ இதென்ன?” என்றார் எழுத்தாளர்.

“இது அமெரிக்க ஸ்டைல். கிளைமாக்ஸை ஹாலிவுட்டில் செட் போட்டு ஏற்கனவே எடுத்து விட்டார்கள். அது என் டூப்” என்றார் பாண்ட்.

“அப்ப சொல்லுங்க, நாலாவது கொலையைபத்தி என்ன நினைக்கிறீங்க?”

“அதைச் செய்யத்தானே வந்திருக்கிறேன்?” என்றார் பாண்ட் ஆழ்ந்த குரலில்.

[தொடரும்]

முந்தைய கட்டுரைஅறம்,சோற்றுக்கணக்கு- மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்