எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது
எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். அவரின் சிறுகதை, நாவல், கட்டுரை, மேடை பேச்சு என்று எதையும் தேடி தேடி வாசித்தும், கேட்டும் வருபவன் நான். அவருக்கு ‘சஞ்சாரம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்துப்பணி தவிர்த்து, புத்தகம் வாசிப்பின் பயனை பள்ளி, கல்லூரி, புத்தக கண்காட்சி என்று மேடைதோறும் ஒரு இயக்கம் போல் பேசி வருபவர். அவர் விருது பெறுவதை பற்றிய தங்களின் வாழ்த்து கட்டுரை சிறப்பாக இருந்தது.
வாழ்த்துக்கள் எஸ். ராமகிருஷ்ணன்
இப்படிக்கு,
டி. சங்கர்
அன்புள்ள ஜெ,
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்திருப்பது குறித்த உங்கள் குறிப்பு ஆத்மார்த்தமாக இருந்தது. இலக்கியவாதிகளில் இரண்டுவகை உண்டு.தன் உள்ளே நோக்கி தனக்குரியதை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஒருவகை.யுவன் சந்திரசேகர், கோணங்கி போன்றவர்கள் அவ்வாறானவர்கள். தன் சூழலை நோக்கி தொடர்ச்சியாக அனைத்து தளங்களிலும் பேசிக்கொண்டிருப்பவர்கள், அதை மாற்றும்பொருட்டு எழுதுபவர்கள் இன்னொருவகை. எஸ்.ரா இரண்டாம் வகை எழுத்தாளர்.
இதை நேற்று பேசிக்கொண்டிருந்தபோது நண்பன் ‘ஆத்மார்த்தமான எழுத்தாளர்கள் முதல்வகையினர்தான்’ என்று சொன்னார். இது ஒரு சிறுபத்திரிகை சார்ந்த மனநிலை. ஏனென்றால் சிறுபத்திரிகைக்கு அன்றெல்லாம் சமூகத்திடம் பேச வாய்ப்பே இல்லை. தனக்குத்தானேதான் பேசிக்கொள்ளவேண்டும். நான் அவரிடம் கேட்டேன். ‘உலக இலக்கியத்திலுள்ள மேதைகளில் ஒரு சிலர் தவிர அனைவருமே இரண்டாம் வகையினர்தானே?’ என்று. அவனால் பதில்சொல்ல முடியவில்லை. டால்ஸ்டாய் ஒரு மதநிறுவனர் போலச் செயல்பட்டவர். தாமஸ் மன் போன்றவர்களெல்லாம் ஊர் ஊராகச் சென்று மக்களிடம் பேசியவர்கள். அவனுக்கு அதெல்லாம் தெரியவேயில்லை.
எஸ்.ரா ஓர் எழுத்தாளர் என்பது மட்டுமல்ல ஓர் இலக்கிய ஆளுமை. சினிமா, வரலாறு, பண்பாடு சார்ந்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். இவற்றில் ஓர் ஆய்வாளர், அறிஞர் என்றவகையில் அவர் செயல்படவில்லை. அவர் அவ்வாறல்ல என்று அவர் அறிவார். அவர் ஓர் இலக்கியவாதி மட்டும்தான். ஓர் இலக்கியவாசகனுக்கு எந்த அளவுக்கு அடிப்படையாக சினிமா, வரலாறு, பண்பாடு தெரிந்திருக்கவேண்டுமோ அந்த அளவுக்கே அவர் பேசுகிறார். இந்த வேறுபாட்டை அறியாமல் கூகிள் உதவியுடன் அவரை வசைபாடும் சிலர் உண்டு.
தமிழ்ச்சூழலின் அறிவுத்தளம் மிகக்குறைவானது. ஏனென்றால் இங்கே கல்வித்துறை ஒன்றையுமே சொல்லித்தருவதில்லை. அனைத்தையுமே வெளியே வந்துதான் கற்கவேண்டியிருக்கிறது. அவற்றைக் கற்பித்த சமகால ஆசிரியர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரிடமிருந்துதான் இந்தியவரலாற்றின் ஒரு சித்திரத்தை நான் அடைந்தேன். இந்தியாவைப்பற்றிய ஒரு பொதுப்புரிதலும் உருவானது. வாசகனாக அவருக்கு நான் கடன்பட்டவன். அவருக்கு வாழ்த்துக்கள்.
எஸ்.சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது.பொதுவாக இத்தகைய விருதுகள் கொஞ்சம் வயதானபின்னர் அளிக்கப்படும். அந்த எழுத்தாளரின் நல்ல படைப்புக்கு அவ்விருது சென்றடையாது. அது அவர்களை வாசகர்களிடையே தப்பாக அறிமுகம் செய்யும். ஆ.மாதவனுக்குக்கூட அப்படித்தான் ஆனது. எஸ்.ராவின் சிறந்த நாவல் சஞ்சாரம். அது அவரை பரவலாக அறிமுகம் செய்யும் தன்மை கொண்டது. சிரமம் இல்லாமல் வாசிக்கவும் முடியும். ஆகவே இது ஒரு விரிவான இலக்கிய அறிமுகம் என்றும் சொல்லலாம். எஸ்.ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குச் சாகித்ய அக்காதமி விருது கிடைத்துள்ளது. அதற்கு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் முதலியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தப்பண்பாடு முன்னர் இருந்ததில்லை, இப்போது உருவாகி வந்திருக்கிறது. ஆனால் இன்னமும் நம் முதல்வரோ, கல்வித்துறை அமைச்சரோ வாழ்த்து சொல்லவில்லை. அந்த வழக்கம் இங்கே இல்லை. கேரளத்திலும் கர்நாடகத்திலும் எல்லாம் அவர்களின் வாழ்த்தே முதலாவதாக வரும். அது ஒரு சம்பிரதாயம்தான், ஆனால் அது முக்கியமானது. ஏனென்றால் அவர்கள்தான் தமிழ்மக்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள்.
எஸ்.மாதவ்
அன்புள்ள மாதவ்
முதல்வர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என அறிகிறேன்.
ஜெ