நான்காவது கொலை!!! – 12

ஜேம்ஸ்பாண்ட் 007 ஆம்லெட் போட முட்டையை உடைத்துக் கொண்டிருந்த போது அவரது ரகசிய ஃபோன் அடித்தது. அவர் அதை எடுத்து “மை நேம் இஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்” என்ற அதிரகசியக் குழூஉகுறியைச் சொன்னதும் எதிர்முனையில் அவரது பாஸ் வந்தார்.

[யதார்த்தத்தை நம்புகிறவர்களுக்காக இங்கே காமிராக்கோணம் விரிக்கப்படுகிறது. அவர் ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தது ஆல்ப்ஸ் பனிமலையின் உச்சியில் இரு சிகரங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கயிறின்மீது தொங்கிக் கொண்டிருந்த தொட்டில் கூடாரத்துக்குள்தான்]

ரகசிய தலைமையகம், “பாண்ட் ஒரு நற்செய்தி…”

“அட! போனஸ் அறிவிப்பு வந்து விட்டதா?”

“இது அதில்லை…”

“பஞ்சப்படி நிலுவையா?” பாண்ட் நம்பிக்கையிழப்பதில்லை.

“இல்லை ஒரு வேலை…”

பாண்ட் சலிப்புடன் “பின்லேடனை பிடிக்கவா?”

“இல்லை.அதற்கு சில்வஸ்டர் ஸ்டாலோன் போயிருக்கிறார். ராம்போ நான்கு என்று தீரச்செயலுக்குப் பெயர்…”

“பின்னே?”

“இது இந்தியாவின் தென்கோடியில் ஒரு கடற்கரை ஊரில். பயங்கரமான இடம். பல நிபுணர்கள் மண்ணை கவ்வி விட்டார்கள்.”

“இந்த சாகசத்துக்கு என்ன பெயர்?”

“ஃப்ரம் கேர்ளா வித் ஜாக் ஃப்ரூட். ரொம்ப பிரபலமாம். எனக்கும் ஒன்று வாங்கிக்கொள். மாகி உயிரை வாங்குகிறாள்…”

“எஸ் பாஸ்” பாண்ட் பெருமூச்சுவிட்டார்.

“உங்களை டாம் அழைத்து வருவார்” என்றார் பாஸ்.

பாண்ட் குமுறினார். ஆம்லெட் கருகியிருந்தது.

பாண்ட் தன்முக்கிய ஆயுதங்களான நவீன ரகத்துப்பாக்கி, மினி வெடிகுண்டுப்பை, ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் ஒட்டப்பட்ட கொல்வதற்கான புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸ், [பிறருக்கு அபாயகரமாக] ஓட்டுநர் லைசன்ஸ், காண்டம் பாக்கெட் ஆகியவற்றை சரேல் சரேலென எடுத்து தன் கோட்டில் அதற்கென உள்ள பைகளில் பல இடங்களிலாக செருகினார்.

[யதார்த்த ஆர்வலர்களுக்காக. பாண்ட் தொங்கும் பனிமலையின் சிகரங்களில், ஒன்று பிளவுபடுகிறது. கயிறு தாழ்கிறது. கீழே அதல பாஆஆதாஆஆளம். பாண்ட் பனிப்பிளவை பார்த்துவிடுகிறார். ஒரு சிக்லெட்டை எடுத்து மென்றபடி வாட்சை பார்க்கிறார். அப்போது ஹெலிகாப்டர் வறவறவென்று பறந்து வருகிறது. பாண்ட் தன் வாட்சிலிருந்து ஒரு கருவியை எடுத்து விசையை அழுத்த அது நீலமாக பளிச்சிடுகிறது. பனிப்பிளவு விரிசல் அதிகரிக்கிறது. பாண்டை பைலட் பார்த்துவிடுகிறார். ஹெலிகாப்டர் கூடாரத்துக்கு மேலே வருகிறது. பனிமலை பிளந்தாகிவிட்டது. எக்கணமும் சரியலாம். — மேற்கொண்டு எல்லா சொற்றொடருக்கு பின்னாலும் இதை வாசிக்கவும் — பைலட் ஒரு கயிறைத் தொங்கவிடுகிறார். கயிறு ஆடுகிறது…. கயிறை பாண்ட் பலமுறை பிடிக்க முயல்கிறார். அப்போது கனத்த பனிச்சூறாவளி அடிக்கிறது. பயங்கரமான ஊளை. பாண்ட் கயிற்றைப் பிடித்துவிடுகிறார். ஹெலிகாப்டர் மேலே எழுகிறது. பனிமலை பிளந்து பாண்ட் இருந்திருந்த கூடாரம் அதலபாதாளத்தில் மெல்லசைவில் விழவும் பாண்ட் தொங்கியபடி வானில் பறந்து செல்கிறார். துப்பாக்கியை தொடையில் உரசியபடி அழகிகள் நடனமிடுவதை அவர் கனவுகாண்கிறார்]

****

பாண்ட் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வந்து இறங்கியபோது காலை மணி ஒன்பதரை. விமானநிலையத்தின் டாய்லெட் மணம் வீச ஆரம்பித்ததும் அருகேயிருந்த பயணி முகம் மலர்ந்து “முப்பது வருடங்களுக்கு பிறகு என் தாய்நாட்டின் மணத்தை முகர்கிறேன்…” என்றார்.

ஆனால் அந்த வாடை பாண்டுக்கு தலை சுற்ற வைத்தது. அது ஒருவித உயிரியல் தாக்குதல் என அறிந்து கொண்டதனால் மூக்கை கைக்குட்டையால் மறைத்தபடி தள்ளாடி ஓடி வெளியே வந்தார். பதினேழு பேர் அவரை நாலாப்பக்கமும் மொய்த்து டாலர் இருக்கிறதா, டாக்ஸி வேண்டுமா, கஞ்சா வேண்டாமா என்றெல்லாம் கேட்டு அவரை நாலாபக்கமும் பிடித்துத் தள்ளி சுழற்றினார்கள்.

“சார் கஸ்டம்ஸ்” என்றார் சீருடை அதிகாரி.

பாண்ட் பேப்பர்களை காட்டினார்.

அதிகாரி சிரித்து “பிளேடு இருகிறதா?” என்றார்.

“இல்லை”

“சாக்லேட்?”

“இல்லையே”

“நீங்கள் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறீர்களா?”

“ஆம், எப்படித்தெரியும்?”

“வெறுங்கையுடன் வருகிறீர்கள். கஸ்டம்ஸ் எல்லாம் எதற்கு இருக்கிறது? நீங்கள் டாக்டர்தானே?”

“எப்படி தெரியும்?”

“கொல்வதற்கான லைசன்ஸை பார்த்தேன்”

ஒருவழியாக அவர் சாலைக்கு வந்தபோதுதான் அந்த நாடு எப்படிப்பட்டது என்பதை கண்கூடாக கண்டார் ஒரு பேருந்து கருமையான புகை கக்கி வந்து நின்றது. அம்மாதிரி வாகனங்களிடம் தன் அதிவேக சேசிங் உத்தி பலிக்காது என்பதை பாண்ட் உணர்ந்தார். அது ஓடிக் கொண்டிருக்கும்போதே அதன் அத்தனை சன்னல்கள் வழியாகவும் ஆண்கள், பெண்கள், குழந்தை ஏந்தியவர்கள், கிழவர்கள், கிழவிகள் கர்ப்பிணிகள் எல்லாம் பாய்ந்து நொடி நேரத்துக்குள் உள்ளே நுழைந்து விட்டதைப் பார்த்து பாண்ட் பிரமித்துப் பதறி நின்றுவிட்டார். அப்போது அவர் சாய்ந்து நின்ற சுவருக்கும் அவருக்கும் இடையேயான இடைவெளி வழியாக ஒரு ஆட்டோ ரிக்ஷா பாய்ந்து சென்றது. அதற்குள் ஏறத்தாழ நூறு குழந்தைகளும் அவர்கள் புத்தகப்பைகளும் இருந்தன.

பேருந்து ஒன்று அறுபது டிகிரி கோணத்தில் சாய்ந்து சென்றது. அதன் மீது கூடைகளுடன் அமர்ந்திருந்த பெண்கள் சிரித்துபேசி வாயை குவித்து ஏதோ சிவந்த மர்ம ஆயுதத்தை அம்புபோல சீறியனுப்ப அதனிடமிருந்து தப்ப ஒரு ஸ்கூட்டர்காரர் பின்னால் குண்டு மனைவியையும் அவள் மடியில் குழந்தையையும் முன்பக்கம் பெண்ணையும் மனைவிக்கும் தனக்கும் இடையே பையனையும் இரு கைப்பிடிகளிலும் காய்கறி மளிகை கூடைகளையும் வைத்தபடி ஓட்டிச்செல்கையிலேயே ஒடித்து திருப்பினார். அவர் சென்ற அப்பாதையின் அருகே மயிரிழை தள்ளி எண்ணை கொதிக்கும் வாணலியில் ஒரு ஆசாமி மிளகாய் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தான். ஒருவன் மிகப்பெரிய அண்டாவை தலையில் வைத்தபடி சைக்கிளில் சென்றான். சில பெண்கள் தலையைக் குனிந்தபடி சென்றார்கள், ஆனால் அவர்கள் எங்குமே இடித்துக் கொள்ளவில்லை. தன் சாகசபூமிகள் எதிலுமே இப்படிப்பட்ட ஒரு பயங்கரத்தை பாண்ட் கண்டதில்லை.

“ஆக்ரோபேட்களின் நகரம்” பாண்ட் தலையை ஆட்டிக் கொண்டார்.

ஆட்டோ ரிக்ஷாக்கள் காலுக்கு நடுவே சீறிப்போகுமென பயந்து பாண்ட் கால்களை அகட்டி வைக்காமலேயே நடந்தார். ஒருவன் அவரிடம் “சாயிப்பே கிட்னி வாங்கிறீங்களா? கல் இல்லாத நல்ல சுத்தமான கிட்னி….” என்று கேட்டான். ஒருவன் அவரை நெருங்கி “இந்தியன் பாய்ஸ்…” என்று கிசுகிசுத்தான்.

கோவளத்துக்கு போக எப்படி வழி என்று டாக்கடையில் விசாரித்தபோது ஒரு ஆட்டோ பிடிப்பதே உசிதமென்று ராமன் நாயர் சொல்லி “சாரு ஆராக்கும்? ஏஷியன் டெவலப்மெண்ட் பேங்கா?” என்றார்.

“இல்லையே “என்றார் பாண்ட் “ஆன் ஹெர் மெஜஸ்டீஸ் சீக்ரட் சர்வீஸ்” என்றார்.

“காங்கிரஸா, செரிதான்” என்றார் நாயர்.

பிரச்சினை என்று தெரிந்து கொண்ட பாண்ட் “இல்லை நான் டூரிஸ்ட்…” என்றார் தந்திரமாக.

“அப்படியானால் இந்த கோட்டு சூட்டெல்லாம் கழட்டணும். டூரிஸ்டுகள் அதெல்லாம் போடப்பிடாது கேட்டேளா? ஒரு கோடுபோட்ட காடாத்துணி அண்டர்வேர் வாங்கி போட்டுக்கிடுங்கோ. பொம்பிளைங்க அடியிலே போடுற சீட்டித்துணி பாவாடைன்னாக்க பகு விசேஷம். மேலே ஒரு குற்றாலம் துண்டு வாங்கி தலையிலே கெட்டி நாலு முழம் மல்லிகை வாங்கி தலையிலேயே காதிலேயோ சூடணும். இல்லாட்டி அதோ அங்கே செம்பருத்தி பூ நிக்குது பாருங்கோ அதில நாலு பறிச்சு தலையிலே வச்சுக்கிடுங்கோ. இந்தாங்க செல்லோ டேப்பு, மூணரை ரூபா. கையிலே மினரல் வாட்டர் பாட்டில் கண்டிப்பா இருக்கணும். எதுக்கு சொல்றேன்னா இப்டியெல்லாம் இருந்தாத்தான் டூரிஸ்ட்டுன்னு தோணும். இல்லாட்டி ஜனங்கள் ஒரு மாதிரி பாப்பாங்க, வெக்கமா இருக்கும், கேட்டேளா?”

பாண்ட் டூரிஸ்டுக் கோலத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை அறுபது ரூபாய்க்கு பேசினார். அது சீறிகிளம்பியதும் முன்பொருமுறை ஒரு சாகசத்திலே விசித்திரமான யந்திரம் ஒன்றுக்குள் போட்டு சுழற்றப்பட்ட அனுபவத்தை பாண்ட் அடைந்தார். அவரது தலைமேலே இடித்தது, கால்கள் கீழே முட்டின. தோள்களில் அடிவிழுந்தது. எதிரேயிருந்த போர்டில் பிரசவத்துக்கு இலவசம் என்ற வரியைக் கண்ட அவர் பீதி பெருகியது. “கொஞ்சம் மெல்ல போக முடியுமா?” என்றார்.

டிரைவர் பஞ்சசீலன் பிள்ள [இவரது தந்தை காங்கிரஸ்காரர்] பரிதாபமாக பார்த்தபடி “இதுக்குமேலே மெல்லப் போனா கட்டரிலிருந்து மேலே எந்திரிக்கமுடியாது சாரே” என்றார்.

போகும் வழியில் ஒரு நீண்ட வரிசை. காங்கிரஸ் கொடிகள் அசைந்தாடின. பாண்ட் நிறுத்து நிறுத்து என்றார். அவர் ஊகித்தது சரிதான். தாடியும் காவி உடையுமாக வரிசையில் நின்றது இரும்புக்கை மாயாவியேதான்.

“ஐயா நீங்களும் பிரிட்டிஷ் ரகஸிய போலீஸ்தானே?”

“போய்யா வெறுப்பைக் கிளப்பாமல்…..”

“என்ன விஷேசம்?”

“என் இரும்புக்கையை ஒரு இரும்புவியாபாரி விற்று விட்டான். அதை வாங்கிய காங்கிரஸ்காரர் ஒருவர் பாபாகோவில் கட்டிவிட்டார். அதை தரிசிக்கத்தான் இங்கே நிற்கிறேன்”

“அடப்பாவமே. ரிமோட் கன்ட்ரோல் மூலம் கூப்பிடமுடியாதா?”

“கூப்பிட்டேன். எம்பி எம்பி பார்க்கிறது. சிமிண்ட் வைத்து பீடத்துடன் கட்டியிருக்கிறார்கள்….”

“அதிலுள்ள துப்பாக்கியால் சுடுவதுதானே?”

“நல்ல கதை. நீரை கொட்டி அபிஷேகம் செய்து அது நமுத்துப் போய்விட்டதையா. விஷப்புகைத் துளையில் ஊதுவத்தி கொளுத்தி நட்டிருக்கிறார்கள்…” மாயாவி கண்ணீர் சிந்தினார்.

பாண்டுக்கு வயிற்றை கலக்கியது. மீண்டும் தன்னுடைய இரும்புப் பல்லர்கள், ரஷ்ய உளவாளிகள், முதுகை முறிக்கும் பெண்கள், பறக்கும் படகுகள், நீரில் ஓடும் விமானங்கள் அடங்கிய உலகுக்கு பத்திரமாக திரும்பினாலென்ன என்று எண்ணினார்.

ஆட்டோ நின்றபோது பாண்ட் பாய்ந்திறங்கி சரேலென ஓடி உள்ளே புகுந்தார். அவரது மலச்சிக்கல் முற்றாக குணமாகிவிட்டிருந்தது.

****

பாண்ட் மென்மையான இசையின் பின்னணியில் ரெமி மார்ட்டினியை பருகியபடி சாய்ந்திருக்க சங்கர்லால் அவர் அருகே கைகட்டி நின்று “நான் புரசை பாண்ட். உங்களை சந்தித்து ஜென்ம சாபல்யம் அடைந்தேன்…” என்றார்

பாண்ட் “என்பெயர் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்” என்றார்.

“ஆகா என்ன அரிய கருத்து! எத்தனை ஆழமான பார்வை!” என சங்கர்லால் புன்னகை புரிந்தார்.

பெரிய பொட்டும் வேப்பிலையுமாக ஒரு ஆசாமி மாடிப்படி நோக்கி போனார். “யாரிவர்?” என்றார் பாண்ட்.

“சிலந்திமனிதன் கடிக்கு மந்திரிப்பவர்…” சங்கர்லால் சொன்னார்.

பல்குனன் பிள்ளா ஃபைலுடன் வந்தார். “என்ன அது?” என்றார் மிரண்டுபோன பாண்ட்.

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், மற்ற தகவல்கள்…”

“ச்சீ, எனக்கு எதற்கு அதெல்லாம்? நான் வேறுவகை. எனக்கு இந்த ஓட்டலில் உள்ள இளம் பெண்களின் பட்டியலை மட்டும் கொடுங்கள்….”

“ஆகா அருமையான உத்தி” என்றார் சங்கர்லால். “ஆனால் என்னைத்தான் செந்தமிழ் அனுமதிக்கமாட்டேன் என்கிறது. களவு கற்பு என்று ஒரே இம்சை”

“அப்படியா?” என்றார் பாண்ட். “அதிகபட்சம் எத்தனை அனுமதிக்கிறார்கள்?”

“எங்கே? இங்கெல்லாம் சைவத்துப்பறிதல்தான். பாண்ட், பேட்மேனை கூட நான்கு நாட்களாக காணோம். அனந்தபத்மநாபசாமி கோவிலின் மண்டபத்தில் மற்ற வெளவால்களுடன் சேர்ந்து தொங்குவதாக பேச்சு “குரலைத் தாழ்த்தி “நாலைந்து குஞ்சுகள்கூட உள்ளதாக வதந்தி” என்றார் லால்.

ஃபல்குனன் பிள்ளா ஓடிவந்தார் “மொத்தம் இருபத்திரண்டு பெண்கள்”

“அவர்களை வரச்சொல்லுங்கள்”. பாண்ட் காலால் நிலத்தை பிராண்டி தலையை தாழ்த்தி புஸ் புஸ் என்று மூச்சு விட்டார்.

“என்ன செய்யப்போகிறார்?”

“பாண்ட் துப்பறியும் முறை அது. இந்த பெண்களில் ஒருத்தி வில்லனின் ஆள். அவளை பாண்ட் உச்சகட்டத்தை வைத்து கண்டுபிடித்துவிடுவார்” சங்கர்லால் சொன்னார். “அதன் பிறகு நேராக போய் வில்லனை பார்த்து பதினைந்து நிமிடம் பயங்கரச் சண்டை. கார்கள் வெடிக்கும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடியும், குண்டுகள் பறக்கும், வானமும் பூமியும் நடுங்கும்…”

“பிறகு?”

“அதற்கு பிறகுதான் அடிதூள் கிளைமாக்ஸ். இருபது நிமிடத்துக்கு. You know he is licensed to overkill”

பெண்கள் வரிசை வரிசையாக வெட்கத்துடன் வந்தார்கள். ஃபல்குனன் பிள்ள அனைவருக்கும் வரிசை எண் அளித்து கையில் மை அடையாளம் போட்டு அறைக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்.

பாண்ட் துப்பறியும் செய்தி பரவி கும்பல் கூடிவிட்டது. ஆளுக்காள் பேசிக் கொண்டார்கள். வேர்க்க விறுவிறுக்க ஹோம்ஸ் வாட்சனுடன் வந்து சேர்ந்தார்.

“ஹை சேப்புக் கோங்கு!”

“சும்மார்டா”

“பாஸ் துப்பறியறதானா இப்டி துப்பறியணும். நாம என்னடான்னா பிசாத்து மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை முப்பது வருஷமா சொல்லாம நினைச்சுக்கிட்டே இருக்கோம். அலுத்துபோச்சு…”

“இருடா, நம்மாள் “சினிக்கூத் “திலே ஒரு தொடர்கதை எழுதப்போறார். அப்ப உனக்கு ஏதாவ்து சான்ஸ் இல்லாமபோகாது”

“என்னத்தை சான்ஸோ போங்க..”

“ஹோம்ஸ், அங்கே இரண்டு பேர் நிற்கிறார்களே அவர்களும் நம்மைப்போல துப்பறிகிறவர்கள்தானா? The gay who loved me?”

“வாட்சன் என்ன இது, நூறு வருடமாக இந்த ரகசியம் எழுதப்படவேயில்லை..”

“யார் அந்த உளவுப்பெண்? நேரம் வேறு ஆகியபடியே இருக்கிறது…” சங்கர்லால் பொறுமையிழந்தார்.

“சார், புரசைபாண்ட்தானே நீங்க? நான் நீங்க கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் சொல்லிமுடிக்கவில்லையென்றிருக்கையில் இரண்டு பேர் என்னைக் கூட்டிச் சென்று மன அமைதிக்கான பஞ்சாட்சரத்தை, அதன் பெயர் valium என்றனர், எமக்களித்து அறிதுயிலில் ஆழ்த்திவிட்டனர். இப்போது மிஞ்சிய கதையை சொல்லலாமல்லா? நான் முன்பே சொன்ன நாகரத்தினமெனப்பட்ட தாசியானவள்…”

“யுரேகா!” என்ற ஒலியுடன் பாண்ட் பாய்ந்து வெளியே வந்தார்.

“யார்?” சங்கர்லால் முன்னே பாய்ந்தார்.

“சுரேகா!”

“அவள் கொலைகாரனைச் சொல்லிவிட்டாளா?”

“ஆம். இப்போது நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்”

பாண்ட் தன் சிகரெட் லைட்டரை பற்றவைத்தார். அது நீல நிறத்தில் சுடர் சீறியது, அதை அவர் பற்றிக் கொண்டு சற்று எம்பியதும் அது ராக்கெட் போல பறக்க ஆரம்பித்தது. பாண்ட் வானில் ஏறி பறந்து சென்றார்.

[தொடரும்]

முந்தைய கட்டுரைஅறம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறம், மேலும் கடிதங்கள்