நான்காவது கொலை !!! – 11

சுந்துவை தோளில் தூக்கிக் கொண்டு வெளியே கிளம்பியபோது அவன் சுபாவமாக “அப்பா நீ நல்ல அப்பாவா கெட்ட அப்பாவா?” என்று கேட்டபோது சாம்புவுக்கு மார்பை அடைத்தது.

“ஏண்டா?”

“அப்பான்னா நீ எனக்கு ஒண்ணுமே வாங்கித்தர மாட்டேங்கிறே?”

“படவா. இப்பதானேடா கமர்கட் வாங்கித்தந்தேன்?”

“அதத்தான் தின்னுட்டேனே?”

இது என்ன லாஜிக் என்று சாம்புவுக்கு சற்றும் புரியவில்லை. ஆகவே “அப்ப நான் வாங்கித் தந்துட்டேன்ல?” என்று மடக்கினார்.

“நான் தின்னுட்டதைத்தானே நீ வாங்கித் தந்தே? திங்காததை ஏன் வாங்கித்தரலே? ஏன் எப்ப பாத்தாலும் தின்னுட்டதை வாங்கித்தந்த அப்பாவா இருக்கே?”

இது சரிவராது, நம்முடைய தலைக்குமேலே உள்ள விஷயம் என்று முடிவுக்கு வந்த சாம்பு “காசு இல்லடா” என்றார்.

சுந்து உச்ச கதியில் “மூக்குக் கோங்கு! மூக்குக் கோங்கு! வவ்வவ்வே!” என்று சொல்ல ஆரம்பித்தான்.

“சரிடா வாங்கித்தாறேன் நிப்பாட்டுடா” என்று சாம்பு பதறினார்.

சுந்து மகிழ்ந்து, “அப்பன்னா நீ மூக்குக் கோங்கு கெடயாது. இந்தா போறாரே இந்த தாத்தாதான் மூக்குக் கோங்கு” என்று அவருக்கு வலித்துக் காட்டினான்.

இருவெள்ளையர்கள் வேற்றூர் நாய் போல மிரண்டு போவதை சாம்பு கண்டார் “வெள்ளைக் கோங்கு டோய்!” என்றான் சுந்து.

“சும்மார்டா”

“ரெண்டு வெள்ளைக்கோங்கு டோய்!”

“சும்மார்டா. சும்மார்டா கண்ணா, அடிச்சுப்போடுவாடா” என்று சாம்பு கெஞ்சிக் கொண்டிருந்தபோது அவர்கள் அருகே வந்தார்கள். சுந்து தோளில் துள்ளிக்குதித்து “வெள்ளைக் கோங்கு டோய்! மூத்திரம் மோந்த கோங்கு டோய்!” என்றான்.

சாம்பு “மை நேம் சாம்பு. நோ கோங்கு டெல்லிங். ஸ்மால் சைல்ட், மூண்ரை ஏஜ் ஒன்லி. ஐ ஆம் சாரி” என்று விளக்கினார்.

தாடை அகன்ற வெள்ளையர் “எஸ் எஸ் ஸோ நைஸ்!” என்றார்.

“எஸ் எஸ் தாங்க் யூ. பட் மங்கி நோ டெல்லிங். ஸ்மால் சைல்ட்” என்றார் சாம்பு.

“டாமிட்” என்றார் வெள்ளையர்.

“வாட்சன் என்ன வார்த்தை அது? அமெரிக்க மிலேச்சர்களின் சொற்கள் உங்கள் நாவில் கனவிலும் வரலாமா?”

“புல் ஷிட். ஃபக் யுர்….”

“வாட்சன்! வாட்சன்!”

“மன்னியுங்கள் ஹோம்ஸ் அந்த இடத்துக்கு வந்தபோது அப்படி ஒரு மொழி என் நாவில் வந்து விட்டது”

“அது கெண்டக்கி கடை வாசல். அது சரி” என்றார் ஹோம்ஸ்.

“வெள்ளைக்கோங்கு போவுது”

“தண்ணீலெ போட்டுடுவேன் படவா”

அப்போது எதிரே கணேஷும் வசந்தும் வந்தார்கள்.

“எங்கே ரெண்டுபேருமா கெளம்பிட்டேள்?”

“துப்பறியத்தான். இந்தப்பக்கமா ரெண்டு வெள்ளைக்காரங்க போனாங்களா? ஒருத்தர் தாடை அகலமா இருக்கும்”

“போனாங்களே. தோ”

“அவங்கதான் இப்ப பிரைம் சஸ்பெக்ட்ஸ். ஃபாலோ பண்றோம்”

“ஷேமமா பண்ணுங்கோ” சாம்பு சொன்னார் “வேர்க்கடலை வாங்கிக் கொறிச்சுண்டே போனீங்கன்னா போது போறது தெரியாது. வழி தவறினாலும் தொலிய வச்சு கண்டுபிடிச்சு வந்திடலாம்”

“எங்க ஸ்டைலே வேற. மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கையெல்லாம் சொல்லாம யோசிச்சுட்டே போவோம்” என்றான் வசந்த்.

அவர்கள் போவதைப் பார்த்து சாம்பு “நன்னாத்தான் துப்பறியறாள்” என்றார். கடலைப் பார்த்து “அதும் பாட்டுக்கு அப்பலேந்தே ஓடிக்கிட்டேதான் இருக்கு” என்று எண்ணிக் கொண்டார்.

கடலோரமாக உட்கார்ந்து அலைகளை எண்ணினார். “தொண்ணூத்து எட்டு” என வந்த பிறகு “தப்பா அடிக்குது போலேருக்கே” என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் கோட்டு சூட்டு போட்டு வந்து “இந்தப்பக்கமாக இரண்டுபேர் போனார்களா? தாங்கள் கண்டீர்களா?” என்றார்.

“ரெண்டு ரெண்டு பேரா போனாங்க”

“அடாடா அவர்கள்தான். அவர்களைத்தான் நான் துப்பறிகிறேன்…”

“நீங்க?”

“நான் சிந்தாரிப்பேட்டை ஜேம்ஸ் பான்ட், சங்கர்லால் என்று என்னைப்பற்றி சொல்லப்படுவதுண்டு”

“துப்பறியறதுக்கு எதாச்சும் போட்டி வச்சிருக்காங்களா?” என்றார் சாம்பு.

“இல்லங்க. சும்மா ஒரு இதுக்காக துப்பறியறதுதான். துப்பறியாட்டி வேட்டிதானுங்களே கட்டணும்? சூட்டு போட முடியுங்களா, இந்த வெயிலிலே?”

“ஆசீர்வாதம்” என்றார் சாம்பு.

கோபாலன் வேர்க்க விறுவிறுக்க பாய்ந்து வந்து “சாம்பு சார் இங்கேயா இருக்கேள்? உங்களை எங்கேல்லாம் தேடறது. கையை குடுங்க சார். புச் புச்… எப்டி சார் இப்படி துப்பறியறீங்க? மேதை சார் நீங்க..” என்று ஆனந்த பாஷ்பம் பொழிந்தார்.

“கையை விடுங்கோ. இப்ப என்ன ஆச்சு?”

“கரெக்டா சொல்லிட்டாங்க சார். அந்த கையுறை மானேஜரோடது, அவனுக்கு ஆயுள் கெட்டியில்லைண்ணு. சார் இப்ப என்னன்னா அந்தாள் தலைக்குள்ளே ஒண்ணுமில்லைங்கிற விஷயத்தை நிர்வாகம் இப்பதான் கண்டுபிடிச்சிருக்கு. சம்பளத்தில பாதிய கழிச்சுட்டு மிச்சத்தைதான் பி எஃபா குடுப்போங்கிறாங்க. ஒரே சண்டை அங்க.”

“அதை பாக்காமலா வேலை குடுத்தாங்க? எப்டி கணக்கெல்லாம் எழுதினானானாம்?”

“அது என்ன சார் பெரிய வேலை. நான் துப்பறியவா சார்? நீங்க வெங்காய சாம்பார் தானே சாப்பிட்டிங்க? எப்டி கண்டுபிடிச்சேன் சொல்லுங்க பாக்கலாம்… ஹெ ஹெஹெ”

“மானேஜர்னா கணக்கு எழுதணும்தானே?”

“இப்ப உங்க சந்தேகம் யாருமேல சார்?”

“எப்டி எழுதினான்னே தெரில” என்றார் சாம்பு.

“இப்ப நான் ஒத்தனை ஃபாலோ பண்றேன் சார். எம கில்லாடி, தொல்காப்பியத்திலேயே பேசறான் சார். அவன்தான்னு நெனைக்கிறேன். மாட்டிக்கிட்டான்னா அவனைச் சந்தி பிரிச்சுடறேன் படவா”

“எழுதிட்டான்னா அப்புறம் என்ன?” என்றார் சாம்பு.

கோபாலன் அதைப்பற்றி யோசித்தவாறே பின்தொடர்ந்தார். அதன் பிறகு சர்வோத்தம ராவ், ஆனந்த சிங், ஹெர்கியூல் போய்ட்டியர் என பலர் முன்னால் சென்றவர்களை பற்றி கேட்டார்கள்.

“எல்லாருமே ஒத்தரை ஒத்தர் துப்பறியறா…..” என்றார் சாம்பு “வேர்க்கடலையும் தீந்துபோச்சு”

“அப்பா ஒரு மாமா உன்னை பாக்கிறா”

“யாருசார் நீங்க?”

“ஹி ஹி நான் அப்புசாமி…… உங்களை துப்பறியறேன். தப்பா நினைச்சுக்க கூடாது. எனக்கு கால்வலி. நடக்கறவாளை என்னால துப்பறிய முடியாது.”

அதற்கப்பால் வேறு ஒருவர் அவரைத் துப்பறிவதை சாம்பு கண்டார்.

அப்போது ஒரு பயங்கர ஓசை கேட்டது. “என்ன? என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்லீங்க. நம்ம கான்ஸ்டபிள் கந்தசாமிதான். சுரங்கப்பாதைன்னு நினைச்சு தந்தூரி அடுப்பிலே நுழைஞ்சுட்டான்”

*******

“ஹோம்ஸ்!” என்று ஒரு பரிதாபக் குரல் கேட்டது. “நீங்கள் ஷெர்லக் ஹோம்ஸ் என்றால் என்னைக் காப்பாற்றுங்கள்”

பழைய அம்பாசிடர் கார்கள் குப்பையாக கிடந்த பிராந்தியத்தில் ஒரு மரப் பெட்டியில் பெட்ரோல் திரவத்தில் நீல நிற உடலும் சிவப்பு ஜட்டியுமாக ஒருவர் கிடந்ததை ஹோம்ஸ் கண்டார்.

“என்னதான் பிச்சை எடுப்பவராக இருந்தாலும் நீங்கள் சற்று நாகரீகமாக உடையணியலாம்..” என்றார் ஹோம்ஸ்.

“நான்தான் சூப்பர்மேன் ஹோம்ஸ்!”

“ஆ!” என்றார் வாட்சன் “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!” என்று கைநீட்டினார்.

“மன்னிக்கவும் என் கைகள் அதோ அங்கே டீசலில் ஊறுகின்றன”

“அடாடா என்ன ஆயிற்று?”

“சுளுக்கெடுக்க வந்தேன். இந்த ஊர் பழக்கமெல்லாம் எனக்கு தெரியாது. விபரத்தை சொன்னதுமே தலைமை மெக்கானிக் ஒரு விசில் அடித்தான். உடனே கருமையாக தார் பூசப்பட்ட ஆறு பயங்கரச் சிறுவர்கள் ஓடி வந்து என்னை அக்கக்காக கழற்றி ஆங்காங்கே டீசல் பெட்ரோல் மண்ணெண்ணை என்று ஊறவைத்துவிட்டனர். ஆனால் திரும்ப மாட்டுவது வரிசைப்படித்தான் செய்வார்களாம். இரண்டாயிரத்து மூன்று ஆகஸ்ட் வரை வேலை இருக்கிறதாம். என்னை காப்பாற்றுங்கள்!”

“ஹோம்ஸ் இந்த ஆள் உண்மையிலேயே சூப்பர்மேன் தானா?”

ஹோம்ஸ் முன்பு சொர்க்கத்துக்கு போய் ஆதமை கண்டுபிடித்த கதையை நினைவு கூர்ந்தார். “தொப்புளை பாருங்கள் வாட்சன்” என கிசுகிசுத்தார். “அடாடா என்ன கொடுமை இது. துப்பறியும் கதைகளில் துப்பறிபவர்களுக்கு படுபயங்கரமான ஆபத்துக்கள் வரலாம், ஆனால் கேவலமான ஏதும் நிகழக்கூடாது என்பது துப்பறியும் சாஸ்திரத்தின் ஆறாவது பொன்விதி அல்லவா?”

“ஆமாம் ஹோம்ஸ், நானும் இதுவரை யோசித்ததுண்டு. இன்றுவரை எந்த துப்பறியும் நிபுணரும் சுவர் ஏறிக் குதிக்கும்போது எருக்குழிக்குள் விழுந்தது இல்லை. ஒரு நாய் கூட யாரையும் கடித்ததாக கேள்விப்பட்டதில்லை“ என்றபடி வாட்சன் அமர்ந்து தொப்புளை தடவிப்பார்த்தார்.

“அது என் பெல்லிபட்டன். திருகாதீர்கள் தொப்பை கழன்றுவந்துவிடும்…” என்றார் சூப்பர்மேன்.

“நீங்கள்தான் சூப்பர்மேனாயிற்றே, எழுந்து பறக்கவேண்டியதுதானே?”

“எப்படி? கைகளை முன்னால்நீட்டாமல் என்னால் பறக்கமுடியாதே”

“வாட்சன் அந்த கைகளை எடுத்துவாருங்கள்”

கைகளை பொருத்தும்போதே சூப்பர்மேன் கண்ணீர் விட்டார் “கடவுள்போல வந்தீர்கள். நான் இந்த பயங்கரமான நாட்டில் இருந்து தப்பமுடியுமென கனவிலும் நினைக்கவில்லை. இப்போதே நான் ஓடிப்போகிறேன்” என்று விர்ர்ரென்று கிளம்பி பறந்து சென்றார்.

“என்ன இந்தபக்கமாக போகிறார்?”

“மன்னியுங்கள் ஹோம்ஸ். அவசரத்தில் கையை இடம்வலமாக மாற்றி வைத்துவிட்டேன்…”

“பரவாயில்லை,நேராகப் போய் கெ.ஜி.பியிலே சேர்ந்துவிடுவார்”

எதிரே ஒரு ஆட்டோ தலையில் ஒலிப்பெருக்கி சூடி அலறிச் சென்றது.

“துப்பறியும் நிபுணர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. மூன்றாவது கொலை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இலவசம்! இப்போது புதிய மகா பெப்சி பன்னிரண்டே ரூபாய்! உள்ளம் கேட்குமே மோர்!”

“பாவம் அனந்த பத்மநாபன் பிள்ள. பாதியிலே இறந்ததை வைத்து பார்த்தால் நல்ல மனிதனாகத்தான் இருந்திருக்கவேண்டும்….” ஹோம்ஸ் சொன்னார். “நேற்று நீங்கள்தான் அவரிடம் கடைசியாக பேசினீர்கள். அப்படி என்னதான் பேசிக் கொண்டீர்கள்?”

“அன்றைக்கு எடுத்த வெல்லக்கட்டியை பற்றித்தான். அதை கையில் ஒட்டாமல் தின்ன கையுறைகள் பயன்படுத்துவது குறித்து….”

“அவரைக் கொல்ல உத்தரவிட்டது யார்? அவன்தான் வில்லன்…..”

“ஹோம்ஸ் எனக்கு பயமாக இருக்கிறது. இது ஏற்கனவே புராணங்கள் மலிந்த விபரீதமான ஊர். இப்போது மாஜிக்கல் ரியலிசம் என்றெல்லாம் இறக்குமதி செய்திருக்கிறார்கள்….”

“புதிய புனிதகோலா! கங்கைகாவிரி நீரில் தயாரிக்கப்பட்டு ஆயிரம் மந்திரங்கள் சொல்லி சுத்தப்படுத்தப்பட்ட கொக்கொ கோலா! தெள்ளத்தெளிந்த தமிழ் போல தெவிட்டாதது. மனம்போல் தினம் ஜமாய்! கொக்கொகோலா எஞ்சாய்!” என்று ஒரு ஆட்டோ சென்றது.

“நிஜம்தான் ஹோம்ஸ். நான் தினமும் காலையில் எழுந்தவுடனே வால் முளைத்திருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். இன்று காலைகூடப் பார்த்தேன். இல்லை என்றதும் முழந்தாளிட்டு கிறிஸ்துவுக்கு நன்றி சொன்னேன்…”

“சேச்சே, என்னதான் மடத்தனமான கதை என்றாலும் அந்த அளவுக்கெல்லாம் போய்விடாது வாட்சன். ரஃபீக் சாரெல்லாம் விட்டுவிடுவாரா என்ன? அமைதியாக இருங்கள்…” ஹோம்ஸ் சொன்னார். “ஆனால் நீங்கள் வைத்திருக்கும் இந்தப் புதுவகைச் சடை எனக்கு உவப்பானதாக இல்லையோ என அஞ்சுகிறேன்.”

“சடையா?” என்ற வாட்சன் தொட்டுப்பார்த்து “ஆ!” என்று அலறினார்.

“என்ன?”

“வ்வ்வால்“ என்றார் வாட்சன் முழி பிதுங்க “ஹோம்ஸ், பிருஷ்டத்தில் வால் முளைத்தால் அது ரியலிசம் போலிருக்கிறது. வேறு எங்காவது முளைத்தால்தான் மாஜிக்கல் ரியலிசம்…. மோசம் போனேனே…”

“இனி வேறு வழியே இல்லை வாட்சன், இங்கே துப்பறிபவர்களுக்கு வேலையே இல்லை. இதற்கெல்லாம் அவர்தான் சரி”

“யார்?”

“ஆன் ஹெர் மெஜெஸ்டிஸ் சீக்ரட் செர்வீஸ்!” ஹோம்ஸ் சொன்னார்.

“அடச்சீ, அவனையா?”

“நான் ஜேம்ஸ்பாண்டைச் சொன்னேன்”

“அப்படியா? ஓப்பனிங் கிளைமாக்ஸுக்கு இங்கே இடம் போதாதே. மொத்தக் கதையையும் ராஜஸ்தானுக்கு கொண்டு போய்விடுவார்களா? எனக்கு ஒட்டகம் என்றாலே பயம்….. ”

“வேறு வழியே இல்லை!” என்றார் ஹோம்ஸ் இரு கைகளாலும் தன் விலாவை வரக் வரக் என்று சொறிந்து, ஒரு உண்ணியை தேடி எடுத்து வாயில் வைத்து நரநரவென்று கடித்து, முகம் சுளித்தபடி “இல்லாவிட்டால் இந்த ஆள் நம்மையெல்லாம் குரங்குகளாக ஆக்கக் கூட தயங்க மாட்டான்…..” என்றார்.

[தொடரும்]

முந்தைய கட்டுரைசிற்பங்கள் ஒரு வேண்டுகோள்
அடுத்த கட்டுரைஅறம் கடிதங்கள்