ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4

_MG_7009

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3
4. ஒடுக்குமுறையின் பரிணாமம்

தமிழ் வரலாற்றின் சித்திரத்தை எடுத்துப்பார்த்தால் ஒன்றுக்கொன்று இணையாத பல கூறுகளாகவே அதை நாம் பெறுகிறோம். தொல்வரலாறு ஒன்று நமக்குள்ளது. ஆதிச்ச நல்லூரிலிருந்து இன்று கீழடி வரைக்கும் வந்து சேர்வது அது. தொல்லியல் சான்றுகளால் மட்டுமே ஆனது. மொழிச்சான்றுகள் அதனுடன் இணையும்படி நமக்குக்கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் சங்க இலக்கியம் என்று சொல்லும் மொழிச்சான்றினூடாக நாம் உருவாக்கிக்கொள்ளும் காலகட்டம் ஒன்றுள்ளது. மிகக்குறைவாகவே சங்ககாலம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் நம்க்குக்கிடைக்கின்றன. அதன்பிறகு சமண -பௌத்த மதங்களின் காலகட்டம். பெரும்பாலும் இலக்கியபிரதிகளின் வழியாகவே அடையாளப்படுத்தப்படுகிறது அது

வரலாற்று நூல் என்று சொல்லத்தக்க எதுவுமே நமக்குக்கிடைப்பதில்லை. ஓரளவேனும் தமிழ் வரலாறு இன்று எழுதப்படுவது பல்லவர்காலத்திற்கு பிறகுள்ள காலத்தைப்பற்றித்தான். அதுவும் மிக்க்குறைவான தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகளைக்கொண்டு. ஆனால் கடுமையான உழைப்பில் முன்னோடிகள் பல்லவர்காலம் பிற்கால சோழர்காலம் பிற்கால பாண்டியர்காலம் நாயக்கர் காலம் ஆகியவற்றை வரலாறாக எழுதியிருக்கிறார்கள். அவற்றில் இன்னும் ஏராளமான விடுபட்ட பகுதிகள் உள்ளன. தமிழக வரலாற்றை இன்று எழுதும் ஒருவர் பல்லவகால நிலமானிய முறை சோழர்கால நிலமானிய முறை நாயக்கர்கால நிலமானிய முறை ஆகியவற்றை கொண்டே மக்கள் வரலாறை எழுதமுடியும்

நாம் இதுவரை எழுதிய வரலாறுகள் அனைத்துமே மையப்படுத்தப்பட்ட அரசர்களின் வரலாறுகள் மக்கள் வரலாறை எழுதுவதற்கு தேவையான தரவுகளை அவற்றில் மிக்குறைவாகவே காணமுடிகிறது. இன்று தமிழக வரலாற்றின் பண்பாட்டு வர்லாற்ற்றின் சித்திரத்தை எழுதும் ஒருவர் நமக்கு பெரும்பாலும் சரியான ஆவணங்களுடன் கிடைக்கும் நாயக்கர்கால நிலமானிய முறையின் ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஜெசூட் குறிப்புகள் மூடி ஆவணங்கள் போன்ற நேரடியான அக்காலகட்டத்தின் ஆவணங்கள் ஆகியவ்ற்றை இணைத்து அச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளலாம் அதிலிருந்து மேலும் பின்னகர்ந்து சோழர்கால நிலமானிய முறையை நோக்கி செல்லலாம். நொபுரு கரோஷிமா போன்றவர்கள் சோழர்கால நிலமானிய முறை பற்றிய விரிவான சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் தெளிவற்ற ஒரு சித்திரமாக பல்லவர்கால நிலமானிய முறையை சென்றடையலாம். அதிலிருந்து அதற்கு முன் கிடைக்கும் இலக்கிய சான்றுகளைக்கொண்டு மட்டும் சங்ககாலத்தின் மக்கள் வாழ்க்கை சித்திரத்தை உருவாக்கலாம்.

இது குறைவான தகவல்களை பெரும்பாலும் புனைவு வல்லமையினை கொண்டு இணைத்து உருவாக்கப்படுவது என்ப்தனால் எந் நிலையிலும் ஒரு ஊகத்தின் தரத்திலேயே நிற்குமே ஒழிய ஒருபோதும் இண்றைய நிலையில் முழுமையாக நிறுவப்பட்ட ஒன்றாக இருக்காது. இன்றுவரை எழுதப்பட்ட வரலாற்று எழுத்துக்களை ஊடுருவி அதில் மக்கள் வரலாற்றுச் சித்திரம் ஒன்றை உருவாக்க ராஜ்கௌதமன் முயல்கிறார்.ராஜ் கௌதமனின் மூன்றுநூல்களை வரிசையாக அடுக்கி ஒற்றைநூலாக கருதினால் அவர் தமிழ்ப்பண்பாட்டின் மாற்றுவரலாறு ஒன்றை எழுதியவர் என்று சொல்லமுடியும்.

அ. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்

ஆ.பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமுக உருவாக்கமும்

இ. ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்.

இம்மூன்று நூல்களும் பண்பாடு தொடங்கிய காலம் முதல் தொடர்ச்சியாக நவீன காலம் வரை தமிழ்ப்பண்பாடு எப்படி வெவ்வேறு முரணியக்கங்கள் வழியாக உருவாகி வந்துள்ளது என்பதன் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன.

akol

ஆகோள்பூசல் என்றால் [ஆ+கோள்] என்றால் பசுக்களைக் கவரும்பொருட்டு நிகழும் போர். சங்கப்பாடல்கள் இவற்றை வெவ்வேறு திணைகளிலாக விரிவாக வகுத்துச் சொல்கின்றன. ராஜ்கௌதமன் சங்ககாலம் என்பது தவறாக வரையறுக்கப்படும் பண்பாட்டுத்தொடக்க காலம் என சொல்கிறார். சங்கம் என்பது பிற்காலத்தில் பாண்டியர் அவையில் உருவான ஒரு கருத்து. சமணமுனிவர்களால் களப்பிரர் காலத்தில் தொகுக்கப்பட்ட பண்டைய பாடல்களே சங்கப்பாடல்கள் எனப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு ஆகியவை. பிற்கால பாண்டியர்களின் காலத்தில் பாண்டியர்களின் பெருமையை நிலைநிறுத்தும்பொருட்டு அவர்கல் சங்கம் வைத்து தமிழ்வளர்த்தனர் என்னும் கதை உருவாக்கப்பட்டு அப்பாடல்கள் பாண்டியர்களால் தொகுக்கப்பட்டவை என உரைகள் எழுதப்பட்டன என்கிறார். ஆகவே இங்கே சங்ககாலத்தை பொதுவழக்காக மட்டுமே கொள்ளலாம்.

சங்ககாலம் என்பதை பண்பாட்டாய்வு நோக்கில் ராஜ் கௌதமன் வகுத்துக்கொள்ளும் முறை முக்கியமான ஒரு திறப்பு. சங்ககாலம் என்பது பழங்குடிக்காலம் மருவி நகர –கிராம நாகரீகம் உருவான தொடக்க காலகட்டம். அது முந்தைய பழங்குடிப் பண்பாட்டில் இருந்த பல்வேறு வாழ்க்கைமுறைகளை அப்போது குறியீட்டுச் சடங்குகளாகவும் கலைவடிவங்களாகவும் மாற்றிக்கொண்டுவிட்டது. முந்தைய பழங்குடிவாழ்க்கையில் உணவுக்காகவும் செல்வத்திற்காகவும் பிறர் எல்லைக்குள் புகுந்து கால்நடைகளைத் திருடி வரும் வழக்கம் இருந்தது. அதில் போர்கள் நிகழ்ந்தன. ஆனால் சங்ககாலத்தில் அரசுகள் உருவாகிவிட்டிருந்தன ஆகவே குடிகள் தங்கள் விருப்பப்படி பிறர் ஆநிரைகளை கவர முடியாது. அது களவு என அரசனால் தண்டிக்கப்பட்டது

ஆனால் ஆநிரை கவர்தல் அவர்களின் பண்பாட்டில் நினைவாக நீடித்தது. அதற்கான உளவியலும் அவர்களிடம் இருந்தது. ஆகவே அதை ஒரு போர்விளையாட்டாக ஆக்கிக் கொண்டார்கள். வெட்சி மலர்களை அணிந்துகொண்டு ஆநிரை கவரச் சென்றார்கள். கரந்தை மலர் அணிந்து ஆநிரைகளை மீட்கச்சென்றனர். ஒவ்வொன்றுக்கும் உரிய மலர்கள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் உரிய போர்க்கூச்சல்களும் நெறிமுறைகளும் இருந்திருக்கலாம். இந்த போர்விளையாட்டு பின்னர் கலைக்குள் புகுந்தது. நிகழ்த்துகலையில் ஒவ்வொரு செயலும் ஒரு திணை என ஆகி அதற்குரிய மலரை அடையாளமாகக் கொண்டது. நிகழ்த்துகலைக்காக கவிதைகள் எழுதப்பட்டபோது திணைக்கோட்பாடு அழகியல்முறைமையாக ஆகியது.

அதாவது சங்ககாலம் என்பது அதற்கு முன்பிருந்த பழங்குடிக்கால மரபை , இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பெருங்கற்கால மரபை, சடங்காகவும் கலையாகவும் திரும்ப நடிப்பதாகவே இருந்தது. இந்தக்கோணத்திலேயே சங்க அகத்துறைப் பாடல்களில் வரும் அன்பின் ஐந்திணைகளையும் நாம் அணுகவேண்டும். அவற்றிலுள்ள வாழ்க்கை சங்ககால வாழ்க்கை அல்ல. அது முந்தையகால நினைவை குறியீடாக, அழகியலாக ஆக்கிக்கொண்டு பின்னர் உருவாக்கப்பட்டது மட்டுமே. இந்த ‘நடிப்பை’ ராஜ் கௌதமன் தமிழ்ச்சமூக உருவாக்கத்தின் முக்கியமான ஒரு கூறாகக் கருதுகிறார். அதற்குமுன் கடுமையான வாழ்க்கைப்போரில் அடைந்த உளநிலைகளை இப்படி மதமாகவும் கலையாகவும் ஆக்கிக்கொண்டு அதன் அடிப்படையில் தன் விழுமியங்களைச் சேகரித்து நிலைநிறுத்திக்கொண்டு மேலெழுந்தது தமிழ்ப்பண்பாடு. அதன் அடித்தளம் பழங்குடிப்பண்பாட்டிலிருந்து ஆசாரங்களும் கலையும் உருவான இந்த காலகட்டம்தான். இன்றுவரைத் தொடரும் தமிழ்ச்சமூகத்தின் வெவ்வேறு உளநிலைகளை நாம் இங்குதான் தேடவேண்டும்.

ராஜ்கௌதமன் இந்நூலில் சங்ககாலம் என்பது அரசுகள் உருவாகி வந்த பகைப்புலத்தைச் சித்தரிப்பதாக எடுத்துக்கொள்கிறார் – அப்போதுதான் அரசுகள் உருவாகி வந்ததாக அல்ல. அரசுகள் உருவாகி வந்த முந்தைய சூழல் கலையில் பதிவாகி இருப்பதாக எண்ணுகிறார். கவர்ந்து வந்த ஆநிரைகள் குடிக்குச் சொந்தமான பொதுவான பொருளாக ஆகின்றன. அவற்றைக் கவர்ந்துவந்த வீரன் அக்குடியின் தலைமகனாகக் கருதப்படுகிறான். அவன் அப்போரில் இறந்தால் அவனுக்கு நடுகல் நாட்டப்பட்டு வீரவழிபாடு செய்யப்படுகிறது. வீரம் என்னும் விழுமியம் அவ்வாறு போற்றி நிலைநிறுத்தப்படுகிறது. அது மெல்லமெல்ல அரசன் என்னும் இடத்தை சென்றடைகிறது. தமிழில் அரசன் என்னும் சொல்லும் காவலன் என்னும் சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.

சங்ககாலத்திலேயே பழங்குடி வாழ்க்கையிலிருந்து நிலவுடைமை வாழ்க்கைக்கு வராத குடிகளும் இருந்திருப்பதை பாடல்கள் காட்டுகின்றன – அல்லது பாடலில் நினைவுக்குறிப்பாக அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். பாலைநில மக்களாகிய எயினர் உணவை வேட்டையாடி உண்பவர்களாகவே இருக்கிறார்கள், உணவுற்பத்தியை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மலைக்குறவர்களும் பெரும்பாலும் திரட்டியுண்ணும் வாழ்க்கையை வாழ்கிறார்கள். முல்லைநில மக்கள் மேய்ச்சல்வாழ்க்கைக்கும் மருதநில மக்கள் வேளாண் வாழ்க்கைக்கும் வந்துவிட்டிருக்கிறார்கள். வேளிர்கள் என்னும் வேளாண்மைமக்களின் சிறிய அரசுக்கூட்டங்கள் உருவாகிவிட்டிருந்தன. அவை இணைந்து சேர,சோழ,பாண்டிய அரசுகளாயின. அவ்வரசுகள் பிறநிலங்களை வென்று தங்கள் நிலப்பகுதிகளாக்கிக் கொண்டன. அனைத்துமக்களும் ஒற்றைச் சமூகத்தின் உறுப்பினர்களாகத் திரட்டப்பட்டனர். அதற்கு எதிராக இருந்தவர்கள் படையெடுப்பால் வெல்லப்பட்டனர். சங்ககாலம் என்பது இந்த ஆதிக்கப்போர் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டமாகும்.

இந்தக் காலகட்டத்தின் இருபாற்பிரிவினையை இன்னும் ஒரு உருவகம் வழியாக ராஜ் கௌதமன் காட்டுகிறார். பாணர் X புலவர் என்னும் எதிரீடு. பாணர்கள் சென்றகால பழங்குடிவாழ்விலிருந்து கிளைத்து சங்ககாலம் நோக்கி வருபவர்கள். புலவர்கள் சங்ககாலத்தில் உருவாகி இன்றைய காலம்வரை, எதிர்காலம் நோக்கிச் செல்பவர்கள். இருவரும் சந்தித்துக் கொள்ளும் புள்ளியென சங்கப்பாடல்களின் தளத்தைச் சொல்லலாம். பல புலவர்கள் தங்களை பாணர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். பல புலவர்கள் பாணர்கள் அல்ல என்றும் தெரிகிறது. பாணரின் இடம் மெல்லமெல்ல தேய்ந்து அவர்கள் தலைவர்களின் பாங்கர்களாக, பரத்தையர் இல்லம் செல்வதற்கான கூட்டாக, ஆவதைச் சங்ககாலத்தில் காணலாம். எம்.வேதசகாயகுமார் ஒரு கட்டுரையில் ஆரம்பகால சங்கப்பாடல்களில் பாணர்களுடன் சேர்ந்து அரசன் நடனமிடுகிறான், பிற்கால சங்கப்பாடல்களில் பாணன் பழித்துப் பேசப்படுகிறான், சோழர்காலத்தில் பாணன் தாழ்த்தப்பட்ட சாதியினனாக, தீண்டப்படாதவனாக காட்சியளிக்கிறான், தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றின் பரிணாமகதி இதுவே என்று சொல்கிறார். ராஜ் கௌதமனும் இதைப்போலவே இந்நூலில் ஒரு சித்திரத்தை அளிக்கிறார்.

இந்த இரட்டைத்தன்மையைக் கொண்டு சங்ககாலத்தில் உருவான குடும்ப அமைப்புநெறிகள் மற்றும் பாலியல்நெறிகளைப் புரிந்துகொள்ள ராஜ்கௌதமன் முயல்கிறார். துய்ப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டதும், இயல்பான கட்டின்மைகொண்டதுமான பாலுறவே பழங்குடிகளிடமிருக்கிறது. பாலுறவின்மீது கட்டுப்பாடுகளை கடைக்கொள்வது வழியாகவே சமூகம் தன்னை வரையறைசெய்துகொள்கிறது. குடும்பம் உருவாகிறது, தனியுடைமைக்கான அலகாக அது மாறுகிறது. குடும்பம் தனிச்சொத்து சமூகம் என்னும் நூலில் பிரெடெரிக் எங்கல்ஸ் வகுத்துரைத்த முன்வரைவுக்கருத்து அது. சங்ககாலப் பாடல்களில் ஒரேசமயம் பாலுறவு வரையறைசெய்யப்பட்டிருப்பதையும் கட்டற்ற மீறல்களுடன் இருப்பதையும் நாம் காண்கிறோம். மருதத்தில் தலைவி குடும்பத்திற்குக் கட்டுப்பட்டவள். குறிஞ்சியில் அவள் எல்லைகளை மீறுபவள். அதாவது அன்றைய சமூகத்தில் பாலுறவு வரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால் முந்தைய பழங்குடிப் பண்பாட்டின் உளநிலைகள் நீடித்த கலையில் கட்டற்றதாகவும் இருந்தது.

சங்கப்பாடல்களின் அகத்துறை படிப்படியாக பாலுறவு கட்டுப்படுத்தப்படுவதன் சித்திரமே என ராஜ்கௌதமன் காட்டுகிறார். தலைவன் பரத்தையருடன் ஆடுதல் அனுமதிக்கப்படுகிறது, தலைவியின் கற்பு வலியுறுத்தப்படுகிறது. காமத்தைக் கற்பால் வென்று ஆற்றியிருக்கும் தலைவியின் சித்திரமே சங்ககாலத்தின் முதன்மையான குறியீடு. பாலியல்துய்ப்பு களவு ஆக மாறிவிடுகிறது. ஆற்றியிருத்தலும் அடங்கியிருத்தலும் கற்பு ஆக மாறுகிறது. கற்பு என்றால் கல்வி என்றே நேர்பொருள். சங்கப்பாடல்கள் கற்பு என்னும் சொல்லை கற்றல் என்ற பொருளிலும் பயன்படுத்துகின்றன. மூதாதையரின் நெறியைக் கற்று அதன்படி ஒழுகுதலே கற்பு எனப்படுகிறது. மெல்லமெல்ல இந்த சமூகச் சித்திரம் வளர்ச்சி அடைந்து சிலப்பதிகாரத்தை வந்தடையும்போது கண்ணகி என்னும் கற்பின்திருவுரு உருவாகி நிலைகொண்டுவிடுகிறது. அடுத்த ஆயிரத்தைநூறாண்டுகள் தமிழ்ச்சமூகத்தை ஆட்சிசெய்யும் தொல்படிமமாக அது மாறுகிறது

ராஜ்கௌதமன் உருவாக்கும் ‘முடிவுகளாக’ இதைக் கொள்ளவேண்டியதில்லை. அவர் இப்படி சில உருவகங்கள் வழியாக தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தை வரைந்துகாட்ட விழைகிறார். இது ஒருவகை பண்பாட்டாய்வு என்பதனாலேயே ஆநிரைகவர்தல், பாணன் X புலவர் எதிரீடு, கற்பு X களவு என்னும் எதிரீடு ஆகியவை குறியீடுகளாகவே கொள்ளப்படவேண்டும். அவற்றினூடாக நாம் காணும் சித்திரம் பழங்குடிமரபை நடிக்கும் ஒரு சமூகம் அதிலிருந்து வீரம் என்னும் விழுமியத்தை திரட்டி எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் வீரநாயகர்களை கண்டடைந்து, அவர்களில் இருந்து அரசனை எழுப்பிக்கொண்டு ,நாடுகளாக ஆகி, அதன் அடிப்படை அலகாக குடும்பத்தை அமைத்து, அக்குடும்ப அமைப்பு நிலைகொள்வதற்காக கற்பு என்னும் விழுமியத்தை கட்டமைப்பதைத்தான்.

paaddum

ராஜ்கௌதமனின்  ‘பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமுக உருவாக்கமும்’ முன்னர் சொல்லப்பட்ட நூலின் அடிப்படை உருவகங்களை ஆய்வுநோக்கில் மேலும் விரித்தெடுத்துச் செல்லும் தன்மைகொண்ட நூல். ‘தூயதமிழ்’ பண்பாட்டு ஒருமையை பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒவ்வாமையை அளிக்கும் அழுத்தமான ஆய்வுநூல் இது. ராஜ்கௌதமனின் நோக்கில் தமிழ்ப்பண்பாட்டின் பின்னாளைய அத்தனை அடிப்படை இயல்புகளும் இந்திய அளவில் உருவான அறிவுத்தொகையின் பாதிப்பை ஏற்று, அதனுடன் உரையாடி, அதன் ஒருபகுதியாக தமிழ்ப்பண்பாடு மாறியதனால் உருவானதாகும்.

ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல ராஜ் கௌதமன் அவர்களின் ஆய்வில் அழகிய வரலாற்று நோக்குமுறை ஒன்று உள்ளது. அதை இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகம் தன் முந்தைய காலகட்டத்தை எப்படி மறுதொகுப்பு செய்து பெற்றுக்கொள்கிறது என்பதுதான் அதை முன்னெடுத்துச்செல்கிறது. முந்தைய பெருங்கற்கால நாகரீகத்தை சங்ககாலம் மறுதொகுப்பு செய்து ஆசாரங்களாகவும் கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றி விழுமியங்களாக சுருக்கி வரையறைசெய்துகொண்டதை அவர் + நூலில் விளக்கினார். அதன்பின் குறைந்தது மூன்றுமுறையேனும் இந்த மறுதொகுப்பும் வரையறையும் நிகழ்ந்தது என அவர் சொல்கிறார்.

சங்ககாலத்திலேயே இந்தியா முழுக்கப் பரவியிருந்த வைதிகமதத்தின் அறிவுத்தொகையுடன் தமிழ்ப்பண்பாட்டுக்கு நெருக்கமான ஊடாட்டம் இருந்தது என்கிறார் ராஜ்கௌதமன். அதன் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சங்ககாலத்திலேயே தமிழர்கள் பெற்றுக்கொள்ளத் தொடங்கினர். அதற்கான ஏராளமான ஆதாரங்கள் சங்கப்பாடல்களில் உள்ளன.ஏற்புக்கு நிகராக மறுப்பும் காணக்கிடைக்கிறது. ராமாயணம் மகாபாரதம் முதலிய காப்பியங்கள், ஸ்மிருதிகள் போன்ற நெறிநூல்கள் இங்கே ஊடாட்டம் நிகழ்த்தின. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு மறுதொகுப்பும் வரையறையும் நிகழ்ந்தது சங்கம் மருவிய காலகட்டத்தில் அல்லது களப்பிரர் காலகட்டத்தில்தான். அப்போதுதான் தொகைநூல்கள் உருவாகி வந்தன. தொல்காப்பியம் முதலிய இலக்கணநூல்கள் இயற்றப்பட்டன. அதாவது தமிழ்ப்பண்பாடு செவ்வியல்மயமாக்கப்பட்டது.

இதைச் செய்தவர்கள் சமணமுனிவர்கள் என்பது பிறபல ஆய்வாளர்களைப் போலவே ராஜ்கௌதமனும் சொல்லும் கருத்து.  பாட்டும் தொகையுமாக தமிழ்ப்பாடல்கள் தொகுக்கப்பட்டன. அதற்கான தொகுப்புமுறை, வைப்புமுறை ஆகியவை இந்திய அளவில் அன்று உருவாகி வலுப்பெற்றிருந்த சமண –பௌத்த அறிவியக்கத்தில் இருந்தே வந்தது என்கிறார் ராஜ்கௌதமன். தொகைநூல்கள் முன்னரே பிராகிருதத்தில் வந்துவிட்டிருந்தன. நாநூறு என்னும் கணக்கே அங்கிருந்து வந்ததுதான். இங்கே நாம் சம்ஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக தூயதமிழ்ப்பண்பாடு என்னும் கருத்துருவை முடைந்து உருவாக்குகையில் தமிழ்ப்பண்பாடு மீது சமணர்களின் பிராகிருதமும் பௌத்தர்களின் பாலியும் செலுத்திய செல்வாக்கை மறந்துவிடுகிறோம். ராஜ் கௌதமன் அதை வலுவாகவே சுட்டிக்காட்டுகிறார்.

ராஜ்கௌதமனின் நோக்கில் தொல்காப்பியம் சமணமுனிவர் எவராலோ உருவாக்கப்பட்டு சமணர்களால் நிலைநிறுத்தப்பட்டது. தொல்காப்பியம் அதுவரை தமிழ்ப்பண்பாட்டில் உருவாகி வந்திருந்த விழுமியங்களை இலக்கணப்படுத்துகிறது. சொற்களையும் வைப்புமுறையையும் அறுதியாக வரையறை செய்கிறது. அதனூடாக தமிழுக்கு வலுவான அடிப்படை ஒன்றைச் சமைத்து பின்னாளைய நூல்கள் அனைத்தையும் தன்பிடிக்குள் நிறுத்துகிறது. தொல்காப்பியம் தமிழில் முதல்நூல் அல்ல, அது  ‘என்மனார் புலவர்’ போன்ற சொற்கள் வழியாக அது புலவர்மரபின் முதிர்வாக உருவாகி வந்தது என சொல்லிக்கொள்கிறது. அதற்கு முந்துநூல்கள் இருந்திருக்கலாம். ஆனால் ஐந்திரம் போன்றவை பிராகிருத மரபிலேயே இருந்திருக்கும் என்று ராஜ்கௌதமன் எண்ணுகிறார். தொல்காப்பியம் இந்திய அளவில் இருந்து வந்த அறிவியக்கம் ஒன்றுடன் தமிழ்ப்பண்பாட்டை உறுதியாகப் பிணைக்கும் நூல் என்பது அவருடைய கருத்து

தொல்காப்பியம் அதுவரையிலான தமிழ்ப்பண்பாட்டை வரையறுக்கையில் தமிழ்ப்பண்பாட்டில் இருந்துவந்த சாதியையும் வரையறைசெய்கிறது. அது நீதிநூல் அல்ல, பண்பாட்டுநூல் என்பதனால் பண்பாட்டில் சாதி என்னவாக உள்ளது என வரையறைசெய்கிறது. பண்பாட்டில் இழிசினர்,ஏதிலார் என்றெல்லாம் அழைக்கப்படும் அடித்தளச் சாதியினரின் இடத்தை % வரையறைசெய்கிறது [ _ பக்கம் 44] . தலைவன் என்றால் யார், தலைவன் தலைவியின் விழுமியங்கள் என்னென்ன, பிறருடைய சமூகப் பாத்திரம் என்னென்ன என்றெல்லாம் வகுத்துச் சொல்லும் தொல்காப்பியம் அதன்பின்னர் வந்த பெரும்பாலான இலக்கணநூல்களுக்கு முதனூலாக அமைந்து இன்றுவரை தன் முக்கியத்துவம் குறையாமல் நீடிக்கிறது.

அடுத்த கட்டத்தின் மறுதொகுப்பு, வரையறை களப்பிரர் ஆட்சி அகற்றப்பட்டு பல்லவர் ஆட்சிக்கு வந்தபோது நிகழ்ந்தது என்பது ராஜ்கௌதமன் அவர்களின் கணிப்பு. சங்க காலத்திலேயே குல ஏற்றத்தாழ்வுகள், செய்யும்தொழில் சார்ந்த சமூக இழிவுபடுத்தல்கள் இருந்தன. ஆனால் பல்லவர் காலத்தில் வைதிக மதத்தின் உதவியுடன் அவை சமூகநெறிகளாக நிலைநிறுத்தப்பட்டன என அவர் வரையறை செய்கிறார். இக்காலகட்டத்தில்தான் தமிழ்ச்சமூகத்தில் தீண்டாமை உருவாகி வலுப்பெற்றது என கருதுகிறார். மரபைப் பொருள்கொள்வதில் பல புதிய முறைகள் உருவாகி வந்தன. அவை பின்னர் பக்திமரபாக வளர்ச்சி அடைந்தன.

பல்லவர் காலத்தில் தொடங்கிய மரபை தொகுத்து மறுவரையறை அளிக்கும் செயல்பாடு பிற்காலச் சோழர் காலகட்டத்திலும் நீடித்து பிற்காலப் பாண்டியர் காலத்தில் முழுமையடைந்தது. இன்று நாம் மரபின்தொகை என எண்ணுவது அவ்வாறு உருவாகி வந்தது. திருக்குறள் உள்ளிட்ட நூல்களுக்கு உரைகள் எழுதப்பட்டன. பலவகையான இலக்கணநூல்கள் வகுக்கப்பட்டன. இந்த இலக்கண நூல்கள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் முந்துநூல்கள் கொண்டிருந்தன.இந்திய அளவில் எழுச்சி கொண்ட வைதிக அறிவியக்கத்தின் பகுதியாக இந்த மறுவரையறை அமைந்தது.

மூன்றாவது தொகுத்துவரையறை செய்யும் செயல்பாடு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வழியாக நவீனமுதலாளித்துவம் அறிமுகமாகி, நவீனக் கல்வி பரவலாகி, புதிய ஆதிக்கவர்க்கமும் அதற்குரிய அரசியல்கருத்துக்களும் எழத்தொடங்கியபோது நிகழ்ந்தது. அதையே நாம் தமிழியக்கம் என்கிறோம். தமிழ்நூல்கள் ஏட்டிலிருந்து அச்சுக்கு வந்தன. அவற்றுக்கு நவீன உரைகள் உருவாயின. அதையொட்டி உருவான பொருள்கோடல் தமிழ்ப்பண்பாடு என ஒன்றை கட்டமைத்தது. அது ஏற்கனவே சொன்னதுபோல ஒரு தமிழ்த்தேசிய அடையாளத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அந்த மூன்றாவது தொகுப்பு –மறுவரையறையின் வழியாக நாம் நம் மரபை இற்றைப்படுத்திக்கொண்டோம்

இவ்வாறு மூன்று நிலைகளிலாக நிகழ்ந்த தொகுப்பு –மறுவரையறைகளின் விளைவாகவே நமக்கு சங்ககாலம் முதல் இன்றுவரையிலான பண்பாட்டுமரபு பொருள்படுகிறது என்பதை இந்நூலில் ராஜ் கௌதமன் கூறுகிறார். தமிழ்ப்பண்பாட்டு மரபு என்பது ஓர் நிலையான அமைப்பு, அது நம்மால் ‘கண்டடையப்பட்டது’ என்னும் இயல்பான உளமயக்கை அவர் நிராகரிக்கிறார். அது தொடர்ச்சியாக தொகுத்து மறுவரையறைசெய்து நம்மால் உருவாக்கப்பட்டதுதான். நமது அக்காலத்தைய சமூகவியல் –அரசியல் தேவைகளுக்கேற்ப அது பொருள்கொள்ளப்பட்டது. இன்று அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் பொருளிலிருந்து மேலும் மேலும் பின்னகர்ந்து முன்னர் அளிக்கப்பட்ட பொருள்களையும், அவை அளிக்கப்பட்ட சூழலையும் புரிந்துகொள்வதன் வழியாகவே நாம் அவற்றின் பங்களிப்பை உண்மையில் புரிந்துகொள்ள முடியும். தமிழ்ப்பண்பாட்டின் பரிணாமத்தையும் வகுத்துக்கொள்ளமுடியும்.

மூன்றாவது நூலான ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும். டேவிட் லட்டனின் Peasant History of South India மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பான Early capitalism and Local History in south India ஆகிய இரு நூல்களை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆங்கிலேயர் இங்கே கொண்டுவந்தது ஆரம்பகட்ட முதலாளித்துவம். அது இங்குள்ள பண்பாட்டு வரலாற்றில் என்னென்ன மாற்றங்களை உருவாக்கியது என்று ராஜ்கௌதமன் ஆராய்கிறார். இது முந்தைய நூலின் பேசுதளத்தை இன்னொரு கோணத்தில் விரிவாக்குகிறது. இன்று நாம் தமிழ்ப்பண்பாட்டை தொகுத்து மறுவரையறை செய்கிறோம் என்றால் எந்த அடிப்படையில்? அதன் கருத்தியல் என்ன, பொருளியல் அடித்தளம் என்ன? அதை இந்நூல் பெரும்பாலும் ஆரம்பகட்ட முதலாளித்துவம் உருவாக்கிய பொருளியல் அடித்தள மாற்றத்தின் அடிப்படையில் ஆராய்கிறது

முதலாளித்துவத்தின் இரண்டு அடிப்படைக்கூறுகள், ஒன்று பேரளவிலான உற்பத்தியும் அதற்கேற்ற வினியோகமும் அதன்விளைவாக மக்கள் நுகர்வோர் ஆக்கப்படுவதும். இன்னொன்று, உற்பத்திக்கான அடிப்படை அலகாக மானுடர் மாற்றப்படுவது. ஆகவே அவர்கள் உழைக்கும் கைகளாகவே அடையாளப்படுத்தப்படுவது. இவ்விரு அம்சங்களும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட அடையாளத்தை மாற்றிவிட்டன. அவர்கள் குலத்தால் குருதியால் அடையாளப்படுத்தப்படுவதற்குப் பதிலாக உழைப்போர் நுகர்வோர் என ஆயினர். அடிப்படையில் இதுவே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவத்தால் அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்த மக்களை விடுதலைசெய்யும் கருத்தியல்கூறாக மாறியது. முதலாளித்துவம் உலகுக்கு அளித்த பெருங்கொடை இது.

ராஜ் கௌதமன் நமக்குக் கிடைத்துள்ள நிலமானியமுறைகள் குறித்த செய்திகள் வழியாக தமிழ்ச்சமூகத்தின் உற்பத்தி உறவுகள் கொண்ட மாற்றங்களை இந்நூலில் விவரிக்கிறார்.தமிழகத்தின் நிலமானியமுறை குறித்த செய்திகள் பல்லவர் காலம் முதல்தான் ஓரளவு கிடைக்கத் தொடங்குகின்றன. பிற்காலச் சோழர்காலத்தில் நிலவுடைமைமுறை இங்கே அழுத்தமாக வேரூன்றி சோழப்பேரரசின் அடித்தளக் கட்டுமானமாக ஆகியது. நிலவுடைமையாளர்களும் நில அடிமைகளும் தெளிவாக வரையறைசெய்யப்பட்டனர். அவர்களை மாற்றமில்லாமல் நிலைநிறுத்தும் கருத்தியல்கள் உருவாக்கப்பட்டன. சோழர்காலத்தில் உருவான நிலமானியமுறை பெரிய மாற்றங்களேதும் இல்லாமல் நாயக்கர் ஆட்சிக்காலத்தை வந்தடைந்தது

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நஞ்சைநிலத்திற்குச் சமானமாக புஞ்சைநில வேளாண்மை உருவாகியது.ஏரிப்பாசனம் வழியாக புதிய வேளாண்நிலங்கள் எழுந்தன. ஏராளமான மக்கள் தமிழ்நிலத்தில் குடியேறினார்கள். விளைவாக இங்கிருந்த சாதிய அமைப்பு மாறுபட்டது.நாயக்கர்கள் கைப்பற்றிய நிலங்களிலிருந்து தொல்குடிகள் வெளியேறினர். அருந்ததியர் போன்ற தலித் மக்களும் குடியேறினார்கள். நாயக்கர் கால நிலமானியமுறை பாளையக்காரர்களை அடிப்படை அலகாகக் கொண்டது. அது பின்னாளில் ஜமீன்தார் முறையாக அது உருப்பெற்றது.

இந்த விரிவான பின்னணியில் தமிழ்ச்சூழலில் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்து ஒரு முழுமைச்சித்திரத்தை அளிக்க ராஜ் கௌதமன் முயல்கிறார். சாதிய அடுக்கு என்பது நிலவுடைமை, போர்த்திறன், அரசில் பங்கு என்னும் மூன்று ’தகுதி’களின் அடிப்படையில் மக்களை விரிவாகப் பகுத்தது. அதில் எப்போதும் நிலவுடைமையே முதன்மை இடத்தை வகித்தது. நிலவுடைமைக்கு வாய்ப்பிருந்த இடங்களில் தலித் மக்கள் சற்று சுதந்திரத்துடனும் தங்கள் தனியடையாளங்களைப் பேணியபடியும் வாழமுடிந்தது. அது பெரும்பாலும் பயன்குறைவான வரண்டநிலங்களில் வாழ்ந்த தலித்துக்களுக்கே இயன்றது. வளமான தஞ்சைநிலம் போர், அரசு,மதம் ஆகிய மூன்றுவகை ஆதிக்கங்களைக் கொண்டவர்களுக்குரியதாக இருந்தது. அங்கே தலித்துக்கள் அடிமைகளாக நிலத்துடன் கட்டுண்டிருந்தனர். இன்றுகூட இச்சித்திரத்தின் நீட்சியை நாம் காணலாம்.

இம்மூன்று நூல்களின் வழியாக ராஜ்கௌதமன் தமிழகத்தில் நிலஅடிமைகளாகிய தலித்துக்கள் எப்படி உருவாகிவந்தனர் என்றும், தமிழ்ப்பண்பாட்டில் அவர்களின் இடம் எப்படி வரையறைசெய்யப்பட்டது என்றும் விளக்குகிறார். இந்நூல்கள் வழியாக ஒரு தர்க்கபூர்வமான சரடாக அந்த வரலாற்றை வாசகர்கள் வகுத்துக்கொள்ள முடியும். பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து சங்ககாலப் பண்பாடு உருவாகி வந்தபோது முந்தையவாழ்க்கையை ஆசாரங்களாகவும் கலைகளாகவும் ஆக்கிக்கொண்டனர். அச்சூழலில் மெல்லமெல்ல பாலைகளையும் மலைகளையும் சார்ந்த ஒருதரப்பு கீழிறங்க வேளாண்நிலம், மேய்ச்சல்நிலம் சார்ந்த இன்னொரு தரப்பு மேலோங்கியது. கீழிறங்கிய குடி இழிசினர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. தொழில்சார்ந்த இழிவையும் சந்தித்தது

பின்னர் அந்த அடித்தளத்து மக்கள் நிலஅடிமைகளாக ஆக்கப்பட்டார்கள். அவர்கள் அவ்வாறே நிலைபெறுவதற்குரிய கருத்தியல் அடிப்படைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் நில அடிமைகளாகி, தீண்டத்தகாதவர்களாகி மண்ணுடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டார்கள். ஆரம்பகால முதலாளித்துவம் உருவாகி உற்பத்தியின் இயல்பு மாறியபோது அவர்களின் உழைப்புக்கு பணமதிப்பு உருவானது. அது அவர்களை நிலத்திலிருந்து விடுதலைசெய்தது. அவர்கள் தங்கள் உரிமைகளை நோக்கிய விழிப்புணர்வை அடைந்தனர். தலித் விடுதலையின் அரசியல் உருவானது. ஒட்டுமொத்தமாக ராஜ்கௌதமன் உருவாக்கும் விரிந்த சித்திரத்தின் எளிய கோட்டுரு இது. மிகமிக விரிவான தரவுகள், தர்க்கங்கள் வழியாக இந்த மூன்றுநூல்களில் இதை ராஜ்கௌதமன் நிறுவுகிறார்

[மேலும்] 

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்
அடுத்த கட்டுரைஞானபீடம் -அமிதவ் கோஷ்