நான்காவது கொலை !!! – 10

உதயகாலப்பறவைகளில் ஒலியில் விடுதி துயிலெழுந்தபோது எங்கும் மென்மையான மஞ்சள்நிற ஒளியே நிரம்பியிருந்தது. சுற்றுலாப் பயணிகளின் ஊடாக துப்பறியும் நிபுணர்களின் கனத்த கரிய பூட்சுகள் அணிந்த கால்கள் ஒளிரும் மணல்வெளியின் மென்பரப்பை அழுந்த மிதித்து நகர்ந்தன. கடல்மீது பறவைகள் கீழ்த்திசை நோக்கிச் சரிந்த காற்றில் சிறகுகள் மடித்து வளைந்துபரவின….

வசந்த் “பாஸ் என்னமோ இடம் தவறி வந்துட்டோம். இது வேற ஏரியா. நம்ப ஆள் அணுகுண்டு வெடிச்சாலே ஆறு வார்த்தைகள்ல சொல்ல நெனைக்கிறவர். இங்க என்னடான்னா ஒண்ணுக்கடிச்சு முடிக்கிறதுக்கே அரைநாள் ஆயிடும்போல இருக்கு… “

“இருடா” என்ற கணேஷ் “நாம சரியா டியூனப் பண்ணலைன்னு நெனைக்கிறேன். வா ரூமுக்கு போய்ட்டு அப்புறமா வருவோம்.”

“என்ன பாஷை பாஸ் இது? ஒருமாதிரி பிசுபிசுப்பா இருக்கு?”

“இது விஷ்ணுபுரம் பாஷைடா. இந்த ஆள் கொஞ்சம் குழம்பிட்டான்னு தோணுது… முப்பது காப்பி விக்கிற பத்திரிகைகள்ல எழுதறவனையெல்லாம் சேத்துக்கிட்டா இப்டித்தான்…..”

“பாஸ் மறுபடியும் தப்பா ட்யூன் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன்….”

பெரும் கூழாங்கற்கள் பரவிய மாபெரும் மணற்பரப்பின் மீது கடலின் [நல்லவேளை இது எற்கனவே பெரிசு] பேரலைகள் சுழன்றடித்த போதிலும் அசாதாரணமான சாந்தியும் சந்துஷ்டியும் விரவிக்கிடந்த அந்த மாபெரும் கடற்கரையில் இளையவசந்தன் தொடர தன் எண்ணங்களில் ஆழ்ந்து நடந்து கொண்டிருந்த கணேசன் சித்தத்திலும் பெரும் சாந்தியே நிரம்பி கிடந்தது. [வசந்த் சித்தத்தில் விஜயசாந்தி]. கடலில் உப்பு நிரம்பியிருப்பது போல மனித உடலிலும் உப்பே நிரம்பியுள்ளது என்றும் உப்பே மனிதனுக்கும் கடலுக்குமான உறவின் ஆதாரம் என்றும் அயோடின் கலந்த உப்பு தொண்டைக்கழலையை தடுக்க வல்லது என்றும் எண்ணி தனக்குள் முறுவல் கொண்டும் அலைகளின் சிதறல்களை ஏற்றுத் தும்மல் கொண்டும் அவன் நடக்கலானான். அப்போது தொலைவிலிருந்த பெரும் ஐஸ்கிரீம் கடையில் தொங்கிய பெரும் கண்டாமணியின் டணால் டணால் எனும் பேரோசை அவனது சிந்தனைகளை ஆமோதிப்பது போல ஒலித்தது…

“வாடா தப்பிச்சிடுவோம்” என்று கணேஷ் பின்னால் ஓடிவந்துவிட்டான்.

“என்ன பாஸ் வந்துட்டிங்க. கண்டிப்பா கடலிலே லோலோ ஃபெராரி சைஸ்லே ராஜகன்னிகைகள் குளிச்சுட்டு இருப்பாளுங்க….”

“எனக்கு பயமா இருக்குடா”

“கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசுபோதிலும்…”

“என்னடா?”

“அச்சமில்லை அச்சமில்லைன்னு பாடினேன் பாஸ்”

“என்னடாது, துப்பறியும் கதைல இதெல்லாம் எங்கே வருது? என்னடா லாஜிக் இது?”

“இது பிச்சைக்காரன் திருவோடு லாஜிக் பாஸ் விடுங்க. அந்த ஸ்டிக்கர்பொட்டு ஆசாமி காலைலே இந்தப் பக்கமா எங்கேயோதான் போனான்.”

“இங்கேருந்துதான் எந்த தொடர்கதைக்கு வேணுமானாலும் போக முடியுதே”

“வழிதவறி எங்கியாம் இந்திரா செளந்தர ராஜன் கதைக்குள்ள போயிட்டான்னா அவ்வளவுதான், விடாது கருப்பு…” வசந்த் திடீரென்று உற்சாகமாகி “பாஸ் அதோ அந்த தாட்டியான ஆள்தான் நான் சொன்ன டாட் காம்…” என்றான்.

“இவங்களை எங்கியோ பாத்த மாதிரி இருக்குடா….. ஆமா ஷெர்லக் ஹோம்ஸ். மத்தவர் வாட்சன்”

“ஒரிஜினலா இருக்காது பாஸ் இப்பதான் உல்லாஸ் நகர்லே நியூஸ் பிரின்ட் எடிஷன் போட்டு பாரீஸ் கார்னர்லே பதிமூணு ரூபாய்க்கு விக்கிறானே…. ஒரு வேளை மாறுவேஷமோ என்னமோ. ஆனா கன்னத்திலே மரு கறுப்பு கண்ணாடி ஒண்ணையுமே காணுமே. ஒண்ணுமே புரியலை”

“ஃபாலோ பண்ணுடா”

அவர்கள் இருவரும் மானேஜர் அறைக்குள் நுழைந்து கண்ணாடி தடுப்புக்கு அப்பால் பேசிக் கொண்டார்கள். வசந்த் சன்னல் கதவை மெல்ல சற்று திறந்து உற்றுகேட்டான். “—வுலுபுஙுஉளெ…. €உன€ளூ… —ஊசுனவ… ஸ்ரீவ…. உதூழு…. ூ”டா—புள… “

“என்னடாது கொளபுளன்னு இருக்கு?”

“அஞ்சல் இணைமதி டிஏபி ஃபாண்ட்லே பேசிக்கிறாங்க பாஸ்”

“மாத்துடான்னா”

“வெல்லக்கட்டி…. கையுறை… தெரியும்… ஆம்…. கழுவி…. டாய்லெட்… இவ்வளவுதான்” வசந்த் இறங்கினான். அவர்கள் போன பிறகு “என்ன பாஸ் செய்றது?”

“இரு ஒரு ஐடியா பண்றேன்…” கணேஷ் உள்ளே போனான். “தொடர்கதைகளிலே இவ்ளவுநாளா இருக்கோம். இதுகூடத் தெரியாம என்ன…”

அனந்த பத்மநாபன் நாயர் வரவேற்று உட்காரவைத்தான்.

“ஊருக்கு போகப் போறோம் சார், சொல்லிட்டுப் போகலாம்னு வந்தோம்…”

“அப்டியா குற்றவாளியை கண்டுபிடிச்சாச்சா?”

“ஆளை தெரியும்…..” கணேஷ் அவனைக் கூர்ந்து பார்த்தான்.

“யார்?” என்றான் அ. ப. நா பம்மியவனாக.

“இதோபாருங்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்க கிட்டே எதையுமே மறைக்க முடியாது….”

“நான் ஒன்றுமே மறைக்கவில்லையே?”

“வெல்லக்கட்டி பற்றி?”

அ. ப. நா முகம் வெளிறினான்.

“கையுறை… “

அ.ப.நா அழ ஆரம்பித்தான்.

“இதோ பாருங்கள் அ.ப.நா. எதற்கு இந்த அழுகை?”

“கடைசியிலே நானும் சோட்டா கதாபாத்திரம்தானா? பாதி குளூ குடுத்திட்டு மண்டைய போடணுமா? என் வம்சமென்ன… குலமென்ன…. “

“நீங்கள் தானே கொன்றது?”

“ஆமாம்”

“எப்படி?”

“வெல்லக்கட்டியில் விஷம் வைத்து. கைரேகை தெரியாமல் இருக்க கிளவுஸ் போட்டுக் கொண்டேன்.”

“ஏன் கொன்றீர்கள்?”

“அப்படி எனக்கு உத்தரவு”

“யாருடைய உத்தரவு?”

“அதைச் சொல்லமுடியாது. மறுக்க முடியாத உத்தரவு அவ்வளவுதான்….” அப்போது ஃபோன் அடித்தது. அ.ப.நா அதை எடுத்து காதில் வைத்து “எஸ் எஸ் எஸ். ஓகே மை லார்ட். நான் உங்க அடிமை. நீங்க நெனைச்சா அதுதான் கடைசி வார்த்தை…. சரி…..” என்று முகம் வெளுத்தான்.

“மைகாட், வசந்த் அவனை பிடி… அந்த டையலாக் ரொம்ப பரிச்சயமானதா இருக்கு…” அதற்குள் அவன் மேஜையை திறந்து துப்பாக்கியை எடுத்து தன் தலைமீது வைத்து அழுத்தி சுட்டான்.

“பாஸ் பாத்தீங்களா? பெருங்காய டப்பா உடையற மாதிரி இருக்கு, மூளையே காணோம்.”

“நாயர்லே பாதிபேர் அப்டித்தான்டா. ராபின்சன் ஜெஃப்ரி ’த டிக்ளைன் ஆஃப் நாயர் ஹெகிமனி’ யிலெ சொல்லியிருக்கான்” என்றான் கணேஷ்.

“பாஸ் இது என்ன உத்தி?”

“டேய் தலைப்பை பார்டா… நாலாவது கொலை. மூணுகொலை ஆயாச்சு. நாலாவது கொலையிலே கிளைமாக்ஸ் வந்திடும்… எப்டியும் ஒரு நாலு சேப்டர்ல வந்திரும். அதுவரைக்கும் பாப்போம்”

*****

“வெல் வெல் வெல் மிஸ்டர் வாட்சன்” என்றார் ஹோம்ஸ் “அருமையான மாலைநேரம் என்று அதிக ஆட்சேபணையின்றி சொல்லத்தக்க இந்த வேளையில் வெல்லம் திருடும் அந்த நாயையும் கிழவனையும் நாம் எங்கு சென்று தேடுவது என்று கவலைப்படவேண்டிய நிலையில் இருக்கிறோம்.”

“ஆமாம் ஹோம்ஸ்” என்றார் வாட்சன். “அதற்காகத்தான் இந்த நாய்க்கால் தடங்களை நாம் பின்தொடர்ந்து செல்லவேண்டியுள்ளது என்று எண்ணுகிறேன், நான் எண்ணுவதில் பிழை இல்லையே?”

“அபாரம் வாட்சன். என் மனதை நீங்கள் நுட்பமாக பின்தொடர்கிறீர்கள். இந்த கால்தடங்களை கவனியுங்கள். அவ்வப்போது அவை ஆழப்பதிந்து மண்ணை பிராண்டுபிராண்டென்று பிராண்டியுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது?”

“அது லூகி பிராண்டல்லோ கதையில் உள்ள நாய்”

“வாட்சன் அவர் எங்கே இங்கே வந்தார்”

“அப்படியானால் இது பிராண்டட் நாய்”

“சிந்தியுங்கள் வாட்சன். உங்களால் கண்டிப்பாக சிந்திக்க முடியும். மிக எளிய செயல் அது வாட்சன்…”

“அந்த நாய்க்கு சற்று வலிப்பு உண்டு…”

“வாட்சன் இம்முறை தாங்கள் தவறிவிட்டீர்கள் அந்த நாயை யாரோ இழுத்துச் சென்றிருக்கிறார்கள்!”

“அற்புதம் ஹோம்ஸ்!” வாட்சன் அப்படியே நின்றுவிட்டார். அவரது மெய் வெகுநேரம் சிலிர்த்தபடியே காணப்பட்டது.

“அப்போது அந்த நாயின் வால் அதன் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருந்திருக்கிறது!” ஹோம்ஸ் நிதானமாக சொன்னார்

“அது எப்படி அப்படி சரியாக சொல்ல முடியும்” என்றார் வாட்சன் தரையை முத்தமிடுவதுபோல குனிந்து பார்த்தபடி.

“எலிமெண்டரி மிஸ்டர் வாட்சன். இழுத்துசெல்லப்படும்போது நாய் அப்படித்தான் வாலை வைத்து கொள்ளும்”

அவர்கள் ஒரு பெரிய மண்சாலையைக் கடந்து குறுங்காடுகள் பரவிய நிலத்தை அடைந்தபோது ஹோம்ஸ் தன் வழக்கப்படி புகைவிடலானார். அப்புகை வானில் மிக மெல்லக் கரைந்தபடி நிற்பதை சற்று கழித்துதான் அவர் கவனித்தார். “வெல் மிஸ்டர் வாட்சன் நாம் வந்திருக்கும் நிலப்பகுதி மிக வினோதமான ஒன்று என எண்ணுகிறேன்….” என்றார்.

“ஆம் ஹோம்ஸ் ஏதோ புதைகுழி போல இருக்கிறது. நாம் வெகுதூரம் வந்து விட்டோம், ஆனால் அதே இடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறோம்…”

“பயப்படாதீர்கள் வாட்சன் அமைதியாக இருங்கள்” என்று ஹோம்ஸ் பீதியுடன் சொன்னார்.

“ஏராளமான தட்டாரப்பூச்சிகள் இப்பகுதியில் பறக்கின்றன, அவை கடிக்கவும் செய்கின்றன!”

“அவை கொசுக்கள் வாட்சன்”

“எனக்கு சற்று அச்சமாக இருப்பதுபோல உணர்கிறேன் ஹோம்ஸ்”

“அந்த மலையைப் பார்த்தீர்களா?”

“ஆம். அதன் முகடுகள் சிற்பங்கள் போலிருக்கின்றன”

“அது ஒரு கோபுரம் வாட்சன்”

“திரும்பிவிடுவோம் ஹோம்ஸ்…”

“திரும்பிப்பார்க்காதீர்கள். ஆனால் நம் பின்னால் ஒருவன் தொடர்ந்து வருகிறான்..”

“யார்?”

“யாரென்று தெரியவில்லை. ஆனால் கையில் ஓர் ஓலையை வைத்து ஏதோ எழுதுகிறான்…”

“எப்படி பார்த்தீர்கள்?”

“இந்த ஓடாத வாட்ச் பிறகு எதற்கென நினைக்கிறீர்கள்?”

“ஏன் அப்படிச் செய்கிறான்?”

“தெரியவில்லை. ஆனால் இந்தப்பிராந்தியம் மிகவும் மாயத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இங்கு எல்லாமே மிகப்பெரிதாக உள்ளன. இப்போது நமக்கு மேலே கிளைவிரித்துள்ள இந்தமரம் என்ன தெரியுமா?”

“ஆல்மாண்ட் தானே?”

“இது தண்டுக்கீரை….”

அங்கே ஒரு பிரம்மாண்டமான தோரணவாயில் இருந்தது. அதன் திட்டிவாசலுக்குள் ஒரு குட்டிவாசல் இருந்தது. அதற்குள் இருந்த சிறிய பெட்டிவாசல் வாட்சனை விட எட்டுமடங்கு உயரமாக இருந்தது.

“தட்டுங்கள் ஹோம்ஸ். எனக்கு பயமாக இருக்கிறது”

ஹோம்ஸ் தட்டியபடி “knock knock who is there?” என்றார்.

“கவித்துவம் மிக்க மேற்கோள்!” என்று வாட்சன் வியந்தார்.

“நன்றி வாட்சன், நானும் உங்களை இந்த அளவுக்கு மதிப்பிட்டிருக்கவில்லை” ஹோம்ஸ் பூரிப்பை பிரிட்டிஷ் மரபிற்கேற்ப உள்ளடக்கியபடி சொன்னார்.

“நான் கூட நீங்கள் ஜேம்ஸ் ஹேட்லி சேஸை இத்தனை கூர்ந்து படித்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அருமையான நாவல், இல்லை?”

“நரகத்துக்கு போங்கள் வாட்சன்! இது ஷேக்ஸ்ஃபியர் வரி வாட்சன்….“

“அப்படி பலர் சேஸை காப்பியடித்திருக்கிறார்கள் ஹோம்ஸ்”

ஹோம்ஸ் ஆத்திரமாக மண்டையை கதவில் மோதவே அது திறந்தது. ஒருவன் அவர்களை நோக்கி வணங்கி “தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் பொன்னிற பாதம் மீண்டும் இப்புனித மண்ணிலே ஊன்றிய இன்னாள் பொன்னாள். தங்கள் சொற்களெனும் அமுதத்தை உண்ண விஷ்ணுபுர ஞானசபை காத்திருக்கிறது. ஓம் தத் சத்!” என்றான்.

ஹோம்ஸ் அதர்ந்து இரண்டடி பின்வாங்கி அங்கே நடுங்கியபடி நின்ற வாட்சன்மீது மோதியமையால் நின்றுவிட்டார். “ஞான சபையா? ஓரல் ராபர்ட்ஸ் இங்கேயா இருக்கிறார்?”

“ஹோம்ஸ் கடைசியில் நரகத்துக்கா வந்து சேர்ந்துவிட்டோம்?”

“இது விஷ்ணுபுரம். இரண்டாம் பதிப்பு…..”

திடீரென்று ஒரு பெரும் ஒலி எழுந்தது.

“அதென்ன போர்க்கூச்சலா?”

“boreக்கூச்சல். ஞானசபை சலித்துப்போய் ரம்மி ஆடுகிறார்கள். கண்ணுசாமி சீட்டு மலர்த்திவிட்டான் என்று நினைக்கிறேன்..”

“கண்ணுசாமியா அதுயார்?”

“இப்போதைய ஞானசபை தலைவர். பெரிய கேடி. போன சித்திரையில் அவன்தான் செம்பருந்தை வரவழைத்தான். வாதாட வருவதற்கு முன்னரே கொடிமர உச்சியில் ஒரு செத்த எலியை வைத்துவிட்டு வந்திருக்கிறான் பாவி… நீங்கள்தான் ஞானசபைக்கு வந்து எங்களை காப்பாற்ற வேண்டும்..”

“அய்யா நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் இடம் மாறி வேறு கதைக்குள் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்……”

“அடாடா எப்படி?”

“ஒரு கறுப்பு நாயைத் தேடிவந்தவர்கள் நாங்கள்.”

“அதுவா, அது எங்கள் இழவு தேவதை. அது வந்தால் ஒரு கட்டை சாய்வது நிச்சயம். தங்கள் தெருப்பக்கம் வராமல் அதை ஆளாளுக்கு கல்லாலடிக்க சொறிநாய் ஆகிவிட்டது. அந்த கிழவன் எங்கள் சக்கரை சித்தர். அதுபோன பிறகு எங்கே பார்த்தாலும் கிழடுகள் இழுத்துக் கொண்டு கிடக்கக் கண்டு எல்லை தாண்டிப்போய் கூட்டிக்கொண்டு வந்தோம்….”

“அதே நாய்தான்” என்றார் ஹோம்ஸ். “எங்களுக்கு துப்பறிய அது தேவைப்படுகிறதே”

“விஷ்ணுவே மகாப்பிரபூ! அதற்கு ஒருவருடம் எங்கேஜ்மெண்ட் இருக்கிறதே”

“உங்களுக்கு புண்ணியமாக போகும் எங்களுக்கு வெளியேறும் வழியை சொல்லித்தர முடியுமா?”

“இப்போதெல்லாம் மூப்பனுக்கு நல்ல தூக்கமில்லை. கொசுக்கடி. அடிக்கடி புரண்டு படுக்கிறார். இல்லாவிட்டால் நீங்கள் ஆயிரத்தி எண்ணூற்று நாற்பது பக்கம் தாண்டித்தான் வெளியே போக முடியும். என் பின்னால் வாருங்கள்”

அவர்கள் அவனை தொடர்ந்தார்கள்.

“இந்த பறவையை பார்த்தீர்களா? இது எங்கள் மெய்ஞானப்பறவை. ரிக்வேதத்தின் அனாதியான கேள்வியை ஓயாது கேட்டபடி இருக்கும். யாது? கா?”

“காக்காதானே? அங்கேயும் இதன் தொல்லை அதிகம்தான். கூட்டம் கூட்டமாக எங்கே பார்த்தாலும்…”

அந்த நபர் விக்கித்துவிட்டார் “அப்படியானால் உங்கள் ஊர் இதைவிடவும் பெரிய புனித ஞானபூமி போலிருக்கிறதே. அய்யா நான் சில அடிப்படை தேடல்களுக்காக அங்கே வரலாமா? ஒரு ஸ்காலார்ஷிப்புக்கு வாய்ப்பிருக்கிறது…..”

வாட்சன் தயங்கியபடி “ஐயா எங்கள் பின்னால் வருகிறவர் யார்?” என்றார்.

“அவர் புராணம் எழுதுகிறார்”

“என்ன புராணம்?”

“ஹோம்ஸாழ்வாரும் வாட்சடியாரும் இந்த புண்ணியநகருக்கு வந்த கதை”

“யார் அவர்கள்?”

“நீங்கள்தான்”

“யேசுவே மீட்பரே!”

“இங்கேயுள்ள வழக்கம் இது. ஒவ்வொருவரும் மற்றவர்களைப்பற்றி புராணம் ஆக்குவோம்….”

“இப்போது நாம் எங்கே இருக்கிறோம்?”

“பார்த்தீர்களா, இதுதான் இவ்வூரின் சிறப்பே. ஒரு இடத்தை தாண்டியதுமே அதை சுத்தமாக மறந்துவிடுவோம்..”

“ஸ்ஸ் ஆ!”

“பார்த்து. ஆங்காங்கே அலங்காரத்துக்காக சம்ஸ்கிருதம் பதித்திருக்கிறது, கிழித்துவிடும்….. இதுதான் பின்வாசல். இந்த வழியாக போனால் தப்பி விடலாம். ஆனால் கவனம் அங்கங்கே சில முயல்வளை சுரங்கங்கள் உண்டு. கால் வைத்தால் உள்ளே இழுத்துவிடும் நேராக இங்கிருந்து கிழக்காக உள்ள உபபாண்டவபுரம் என்ற ஊருக்கு போய்விடுவீர்கள். இதைப்பார்த்து கட்டியதுதான். கொஞ்சம் இத்தாலி கட்டடக்கலையும் உண்டு. கால்வினோ என்று ஒரு கைவினையாளர் உதவினார்.”

“அது இன்னும் பயங்கரமான இடமா?”

“கொடூரமான ஊர். அங்கே எல்லாமே அலைந்துகொண்டோ மிதந்துகொண்டோதான் இருக்கும். உள்ளே எல்லாமே விசித்திரமாக இருக்கும். கேவில், கொபூராம், இரண்மனை இந்தமாதிரி…..”

“கடவுளே இதெல்லாம் என்ன?”

“அச்சுப்பிழை. ஏழெட்டு இடத்தில் தடுக்கி எழுந்து பார்த்தால் நீங்களேகூட ஹேம்ஸி, வட்டாசீன் என்று மாறியிருப்பீர்கள்…”

“வாட்சன் என்ன இது? கொஞ்சம் தைரியமாக இருங்கள்….”

“இங்கேயிருந்து போன ஒரு ஆசாமி பரம ஆபாசமாக மாறிவிட்டார், இங்கே சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். காட்டிலே அலைகிறார்……”

“நாங்கள் போய்விடுகிறோம். பேசாமல் லண்டனுக்கே திரும்பிவிடுகிறோம்!” என்றார் வாட்சன் கதறியபடி.

“இதோ இந்த கோட்டையைத் தாண்டிப் போனால் தப்பினீர்கள். போகும் வழியில் உங்களைப் பின்தொடரும் நிழல் உங்களிடம் பேசும். அதைக் கவனித்தால் மீண்டும் ஆயிரம் பக்கம் தாண்டவேண்டும்..”

அவர்கள் ஓடி வெளியே வந்ததும் ஹோம்ஸ் “பயங்கரமான இடம்” என்றார்.

“படுபயங்கரமான இடம்” என்றார் வாட்சன் விம்மியழுதபடி.

[தொடரும்]

முந்தைய கட்டுரைஇசை ஒருகடிதம்
அடுத்த கட்டுரைகூகிளில் தேட