விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்

naran

தமிழில் ஜென் கருத்துக்களுக்கு ஓர் இலக்கியச் செல்வாக்கு உண்டு. ஆன்மிகமாக, மீபொருண்மைநோக்கி இயற்கையைப் பார்ப்பதும் வாழ்க்கையை விளக்கிக்கொள்வதும் இலக்கியத்தில் எந்நிலையிலும் தவறவிடமுடியாத ஒருகூறு. ஆனால் சென்ற அரைநூற்றாண்டாக தமிழ்ச்சிந்தனை வெளியில் நிகழ்ந்த மதநீக்கம் அல்லது மரபுமறுப்பு நோக்கு கவிஞர்களை இந்திய மரபின் தொன்மையான ஆன்மிக உணர்வுகளையும், மீபொருண்மை நோக்கையும், தொன்மக்களஞ்சியத்தையும் அறியாதவர்களாக ஆக்கியிருக்கிறது.

 

அதைவிட கவிதை வாசகர்கள் பெரும்பாலும் அவற்றில் எந்த அறிதலும் அற்றவர்கள். அறிதல் என்பது தெரிந்துகொள்ளுதல் அல்ல. உணர்வுரீதியான ஈடுபாடு. சிசிபஸின் தொன்மம் தெரிந்த ஒருவருக்கு சிரவணனின் கதை தெரிந்திருக்காது. ஆகவே கவிதை மதமற்ற ஆன்மிகத்தையும் மீபொருண்மையையும் தொன்மங்களையும் நோக்கி சென்றது. ஆனால் அப்படி ஒரு ஆன்மிகமும்  மீபொருண்மையும் தொன்மக்குவையும் இல்லை. ஆகவே வேறு மதமரபுகளின் ஆன்மிகத்தையும் மீபொருண்மையையும் தொன்மங்களையும் கடன்கொள்ளத் தொடங்கினர்.

 

அவை இங்கே வாசகர்களிடையே கவிதைகள் வழியாக ஏற்கனவே சற்று அறிமுகமும் ஆகியிருந்தன.இவ்வாறுதான் கிரேக்க, கிறித்தவ மரபின்  ஆன்மிகமும் மீபொருண்மையும் தொன்மங்களும் இங்கே கவிதையில் நிறைய இடம்பெற்றன. இங்கே யமன் கவிதையில் வரமுடியாது, சாத்தான் வரலாம்.

 

இவ்வாறு இங்கு அறிமுகமானதுதான் ஜென் பௌத்தம். ஜென் பௌத்தத்தின் தனிச்சிறப்பு அது சடங்குகள் அற்றது, தொன்மங்களுக்குப் பதிலாக படிமங்களைப் பயன்படுத்துவது, அறுதியான கருத்துக்களுக்குப் பதிலாக இருமுனைகொண்ட புதிர்த்தரிசனங்களை முன்வைப்பது என்பது. ஆகவே அது நவீனகவிதைக்கு அணுக்கமானதாக அமைந்தது. தமிழில் சி மணி, ஆனந்த், தேவதச்சன் ஆகியோர் ஜென் கவிதைக்கூறுகளை முன்வைத்தவர்கள்.

 

kesam-340

 

 

தமிழில் அடுத்தகட்ட கவிஞர்களில் பலர் ஜென் கருத்துக்களை ஒட்டிய கவிதைகளை ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் ஜென் கவிதைகளில் ஒரு தனித்தன்மை உண்டு, அவை மேலோட்டமான நோக்கில் மிக எளியவை. ஆகவே ஒரு கவிதை பலநூறு பிரதிகளை எடுக்கும். ஜென் கவிதைகளை கருத்துக்களாக்கி அக்கருத்துக்களை திரும்ப படிமங்களாக ஆக்குவதுதான் பெரும்பாலும் பல கவிஞர்களால் செய்யப்படுகிறது. அக்கருத்துக்களை தன் அனுபவங்களாக ஆக்கிக்கொண்டு அவ்வனுபவங்களை படிமங்களாக்குபவர்கள் குறைவு. அவர்களில் ஒருவர் நரன்

 

ஜென்கவிதைகளில் இருந்து நரன் கவிதைகள் மாறுபடுவது நேரடியான உணர்வுநிலைகள் அவற்றில் வெளிப்படுவதனால் என்று சொல்லலாம். நுண்வடிவ தத்துவச் சிக்கல்களுக்குப் பதிலாக சமகாலத்தைய வாழ்வின் இக்கட்டுகளை நோக்கி அக்கவிதைகள் திறக்கின்றன. ஆகவே அன்றாடவாழ்க்கையிலிருந்து படிமங்களைக் கண்டடைகின்றன.

 

ஜென் கவிதைகளிலிருந்து முற்றாக மாறுபட்ட நேரடியான உணர்ச்சிவெளிப்பாடுகளும் அப்பட்டமான கசப்பும் தனிமைகொள்ளலும் கொண்ட கவிதைகளையும் நரன் எழுதியிருக்கிறார் . ஒன்றையொன்று நிரப்பும் தன்மை கொண்ட இரு உலகங்களாக அவருடைய கவிதையில் இவை இரண்டும் அமைந்துள்ளன

 

nara

 

நரன் சென்ற சில ஆண்டுகளாக சிறுகதை எழுத்தாளராக அறியப்படுகிறார். தமிழின் புகழ்பெற்ற சிறுகதைகள் பெரும்பாலும் அன்றாடவாழ்க்கையின் நன்கறிந்த எளிய நிகழ்வுகளிலிருந்து அரிதான கணங்களைக் கண்டடைவதாகவே உள்ளன. நரன் கதைகள் வாழ்க்கையில் அதிகம்பேசப்படாத திரிபுநிலைகளை, இருண்ட தருணங்களை, விந்தையான இக்கட்டுகளைச் சித்தரிப்பவை.  உதாரணமாக நெருப்பில் பொசுங்கிய தாயின் முடிக்கருகல் மணத்தை நினைவில் மீட்டிக்கொள்ளும், அதிலிருந்து தன்னுடைய காமத்தின் அடிப்படையாக முடிக்கருகல் மணத்தைக் கண்டடையும் ஓர் இளைஞனைப்பற்றிய உரோமம் என்னும் கதை.

 

நரன் இக்கதைகளில் மானுடம் முன்பின் சந்தித்திராத தருணங்களில் எப்படி அடிப்படை இயல்புகள் வெளிப்படுகின்றன என்று ஆராய்கிறார். கூறுமுறையும் நோக்கும்  இயல்பானவையாக இருக்க கதைக்கருக்களின் வேறுபட்ட தன்மையால் நிலைகொள்ளும் கதைகள் இவை.

 

கவிஞர் நரன் இணையப்பக்கம்

நரன் கவிதைகள் 1

நரன் கவிதைகள் -2

 

=============================================================================================================

sta

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

devi

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

 

leenaவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை

sen

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

 

sarava

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

sunil

விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்

kalai

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி

CSK

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்

முந்தைய கட்டுரைதிருவனந்தபுரத்தில்…
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4