எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோயில்பட்டியில் எண்பதுகளில் தேவதச்சனின் நகைக்கடைச் சபையில் இருந்து கிளம்பிய எழுத்தாளர்களின் சிறுகுழு ஒன்று உண்டு. அன்றிருந்த இலக்கியத்தின் எல்லைகளை விரிவாக்கியவர்கள். மொழிபிலும் அமைப்பிலும் புதியவற்றை நிகழ்த்தியவர்கள். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகிய மூவரும் அதில் முதன்மையானவர்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்ச்சிறுகதையில் கூரிய யதார்த்தக் கதைகள் வழியாக நுழைந்தார்.பின்னர் மாயயதார்த்தப் புனைவுகளை எழுதினார். மீண்டும் யதார்த்தபாணிக் கதைகளுக்குள் சென்றார். அவருடைய புகழ்மிக்க முன்னோடிகளான கி.ராஜநாராயணன், பூமணி ஆகியோர் எழுதிய அதே நிலத்தையும் மக்களையுமே அவர் எழுதினார். ஆனால் அவர்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தார். அவர்களை அந்த மண்ணில் நிகழ்ந்த நீண்ட தொல்மரபின் ஒரு பகுதியென நிறுத்தி ஆராய்ந்தார். அதனூடாக தமிழ் இலக்கியமரபில் புதிய சாதனைகளைச் செய்தார்
பெரும்பாலான முதன்மைப் படைப்பாளிகளைப்போலவே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சிக்கலான ஊடுபாவுகள் கொண்ட அமைப்புக்களுடன் இருந்து பின்னர் மெல்லமெல்ல எளியநேரடி கதைகூறல்கொண்டவையாக மாறி அந்த அனைத்து அகச்சிக்கல்களையும் ஆழத்தில் கொண்டவையாக உருப்பெற்றிருக்கின்றன. அவருடைய நாவல்களும் அவ்வாறே. அவருடைய நாவல்களில் முதன்மையானது நெடுங்குருதி. யாமம் அழகியலொருமை கொண்ட பிறிதொரு படைப்பு
சஞ்சாரம்’ விரிந்த பொட்டல்நிலத்தில் இசையுடன் அலைந்து திரியும் கலைஞர்களைப்பற்றிய நாவல். இந்நிலம் நாதஸ்தவரத்திற்கு மிக உகந்தது. தொலைவிலிருந்து காற்றில் மிதந்து எழும் நாதஸ்வரம் அளிக்கும் உணர்வுகள் முற்றிலும் வேறு. ஆலயக் கல்மண்டபங்களில் ஒலிக்கையில் அதற்கு இருக்கும் மங்கலத்திற்குப் பதிலாக பொட்டலில் அதில் துயரம் ஒன்று குடியேறியிருக்கும். அங்குள்ள வெறுமையின் ஒலியாக அது மாறியிருக்கும்.
நாதஸ்வரத்தின்மேல் பொட்டல்நிலத்து மக்களுக்குப் பெரும் பற்று ஒன்று இருந்திருக்கிறது. காருக்குறிச்சி அருணாச்சலம் இந்நிலத்தின் நாதஸ்வர மரபின் அடையாளமாக இன்று கருதப்படுகிறார். கி.ராஜநாராயணன் நிறையவே எழுதியிருக்கிறார். நினைவுகளாகவும் கதைகளாகவும். கோணங்கி புலிக்குகைநாயனம் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். சஞ்சாரம் அந்த வரிசையில் வரும் படைப்பு.
இசை இதன் மையச்சரடு. ஆனால் அந்நிலத்தின் சொல்லப்படாத உணர்வுகள் அனைத்துக்கும் அடையாளமாக நாவல் விரிய விரிய அது உருமாறுகிறது. இசையைக்கொண்டு அந்நிலத்தின் வரண்டவாழ்க்கையின் உள்மோதல்களையும் தனிமையையும் சொல்லிச்செல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழில் ஓர் அறிவியக்கம் என்றவகையில் செயல்படுபவர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழகத்தின் தலைசிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர். திரைப்படங்களை அறிமுகம் செய்பவர். நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர். அவருடைய அறிவுலகில் நுழையும் ஒரு வாசகர் சமகால உலகஅறிவுச்செயல்பாட்டின் பல தளங்களை நோக்கி ஆளுமை விரியப்பெறுவார். அவ்வகையில் ஒரு நல்லாசானாக இன்று திகழ்கிறார்
எஸ்.ராமகிருஷ்ணன் அனைத்துவகையிலும் இன்றைய தமிழர்கள் எண்ணிப் பெருமைகொள்ளவேண்டிய ஆளுமை. இந்தக் காலகட்டத்தின் தமிழ் இலக்கிய அழகியலின் முகம் இந்த விருது அவருக்கு தமிழ்வாசகர்கள் அளிப்பதும்கூட.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்