விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்

CSK

 

 

தமிழ் இலக்கியத்திற்குள் வெவ்வேறு வகையில் வாசகர்களும் எழுத்தாளர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். கணிசமானவர்கள் வணிக- கேளிக்கை எழுத்து வழியாக வருவார்கள். பலர் அரசியலியக்கங்களின் கலாச்சார அமைப்புகள் வழியாக வருவார்கள். குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புக்கள். முன்னோடி எழுத்தாளர்களின் நேரடி அறிமுகம் வழியாக வருபவர்கள் உண்டு

 

இளமையில் அனைவருமே எங்கும் கிடைக்கும் வணிக எழுத்துக்குத்தான் பழகுகிறார்கள். இலக்கியவாசகன் மிகக்குறைந்த காலத்திலேயே அவற்றை அழகியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் கடந்துவிடுவான். முதல் இலக்கியப் படைப்பை படித்ததுமே தன் நுண்ணுணர்வாலும் அறிவுத்திறத்தாலும் அதை அடையாளம் கண்டுகொள்வான், பின்னர் அவன் திரும்பிச்செல்வதில்லை.

 

ஆனால் எழுத்தாளர்கள் மிக அரிதாகவே வணிக எழுத்தினூடாக தீவிர எழுத்தை நோக்கி வருகிறார்கள். வணிக எழுத்தில் நிலைகொள்ள அவர்கள் நெடுங்காலம் ஏராளமாக எழுதவேண்டியிருக்கிறது. அவர்களின் நடை பழகி நிலைபெற்றுவிடுகிறது. அந்த நடையில் இலக்கியம்படைக்க முடியாது. இலக்கியவாதிகள் வணிக இதழ்களில் எழுதியதுண்டு. லா.ச.ரா முதல் ஜெயகாந்தன் வரை. வணிக எழுத்தாளர்கள்இலக்கியம்பக்கம் வந்ததில்லை. விதிவிலக்கு இந்திரா பார்த்தசாரதி

 

வணிகஎழுத்தை மிகுதியாக வாசிக்காத எழுத்தாளன் ஒரு சாதகநிலையில் இருக்கிறான். அவனுடைய மொழி உருவாகியிருக்காது. இலக்கியச்சூழலில் அவனைக் கவரும் ஒரு படைப்பாளியை உளத்தால் அணுகி அவரிலிருந்து எழுந்து தனது நடையை அவன் உருவாக்கிக்கொள்ள முடியும். வணிக எழுத்தின் மொழி உள்ளத்தில் படிந்தபின்னர் மிகக்கடுமையாக முயன்றாலொழிய அதை கீறி வெளிவந்து தனது நடையை கண்டடைய முடியாது.

app

தமிழில் வணிக எழுத்தின் வாசகர்கள் சுஜாதாவின் நடையால் ஆழமாகப் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அது முதிராஇளமைக்குரிய விளையாட்டுநடை. முதிரா இளமையில் வாசிக்கப்படுவது. அதை ஒட்டி அகம் அமைந்தால் பின்னர் எதையும் ஆழமாகச் சொல்லமுடியாமலாகும், இரவல் குரல் நம் தொண்டையில் ஒலித்துக்கொண்டிருக்கும்.  சுந்தர ராமசாமி முன்னர் குவளைக்கண்ணன் என்பவரின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய சிறிய விமர்சனத்தில் இதை கூர்மையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

ஒருவர் மெய்யாகவே சுஜாதாவில் நின்றுவிட்டாரென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை, அவருடைய எல்லை அது. ஆனால் நுண்ணுணர்வால் அறிவுத்திறனால் முன்னகர்ந்த ஒருவர் அந்த நடைக்குள் மாட்டிக்கொண்டால் அது அவலம். இந்தத் தலைமுறையில் வணிக எழுத்திலூடாக எழுத வந்த பலர் அந்த பொறிகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களில் இலக்கியம் சார்ந்து எழ முடிந்த ஒரே ஒருவர் என சரவணக் கார்த்திகேயனைச் சொல்லலாம்.

 

சரவணக் கார்த்திகேயனிடம் வணிகஎழுத்தின் அடிப்படை இயல்பான செயற்கையான ’விடலைத்தனம்’ ஒன்று உள்ளது. அதற்கு அவருக்கு ரசிகர்களும் பலர் உள்ளனர். அவ்வெல்லைக்குள் அவர் நின்றுவிடவே வாய்ப்பு மிகுதி. ஆனால் இறுதி இரவு என்னும் கதை அவர் ஆழமான விஷயங்களை எழுதும் ஆற்றல் கொண்டவர் என்பதை அடையாளம் காட்டியது. தொடர்ந்து பல சிறுகதைகளில் அவர் தன் எல்லைகளை மீற எழுந்துகொண்டிருந்தார்

 

அவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆக்கம் அவர் காந்தியின் பாலியல்சோதனைகளைப் பற்றி எழுதிய ஆப்பிளுக்குமுன் என்னும் நாவல். வணிக எழுத்தின் உளநிலைகள் எதுவும் முற்றிலும் இல்லாத முதிர்ச்சியான பார்வை கொண்டது இப்படைப்பு. அதேசமயம் நடையில் வணிகஎழுத்தின் சாயல் எதிர்மறை அம்சமாகவே நீடித்தது. விவரணைகள் சுருக்கமானகுறிப்புகளாக அமைந்தன

 

ஆயினும் புனைவினூடாக மட்டுமே செல்லத்தக்க சில அரிய தருணங்கள் அப்படைப்பில் இருந்தன. காந்திக்கும் மனுவுக்கும், மனுவுக்கும் அவள் தந்தைக்குமான உரையால்கள் புனைகதை வாசிப்பாளனின் கற்பனையில் விரியும் தன்மை கொண்டவை. அந்த முதிர்ச்சியான நோக்காலும், நுட்பமான தருணங்களாலும் குறிப்பிடத்தக்க படைப்பாக ஆகியிருக்கிறது ஆப்பிளுக்குமுன்

 

.

சரவணக்கார்த்திகேயன்  இணையப்பக்கம்

சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’

காந்தியைப் பற்றி ஒரு நாவல்

முதல்தந்தையின் மீட்சி

தந்தையரின் காமத்தை கிசுகிசுத்தல் – சி.சரவண கார்த்திகேயனின் ஆப்பிளுக்கு முன் நாவலை முன் வைத்து– சுரேஷ் பிரதீப்

 

=============================================================================================================

sta

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

devi

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

 

leenaவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை

sen

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

 

sarava

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

sunil

விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்

kalai

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி

முந்தைய கட்டுரைராஜ் கௌதமன்- முன்னோட்டம்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3