விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

sarava

 

 

முகநூல் உருவானபின்னர் தமிழிலக்கியத்தில் ஒரு புதிய அலை எழுந்தது. அனுபவங்களை குறைந்த சொற்களில், விவரணைகள் இல்லாமல், நேரடியாகச் சொல்லும் நடையும் உள்மடிப்புகளோ குறியீட்டுத்தளமோ ஏதுமில்லாமல் கதையின் மேல்தளம் வழியாகவே தொடர்புறுத்தும் கட்டமைப்பும் கொண்ட படைப்புக்கள் இவை.

 

முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான சு.வேணுகோபால் முதல் எஸ்.செந்தில்குமார் வரையிலானவர்களின் படைப்புக்களில் இருந்த நுண்ணிய புறவுலகச் செய்திகளின் விரிவு இவர்களிடம் இருக்கவில்லை. அடிப்படை உணர்ச்சிகளை விவரிக்கையில் அந்தத் தகவல்களை குறியீடுகளாக ஆக்கவும் முயலவில்லை. முகநூலில் எழுதும் குறிப்புகளால் ஆன படைப்புக்கள் போலிருந்தன இவை.

 

இவற்றில் சிலவற்றில் கவனிக்கத்தக்க மொழித்தெறிப்புகள் இருந்தன. சிலவற்றில் முற்றிலும் புதிய தொழில் – வாழ்க்கைச்சூழல் சொல்லப்பட்டிருந்தது. சிலவற்றில் வாழ்க்கைசார்ந்த நுண்ணிய அவதானிப்புக்களும் இருந்தன. ஆனால் முகநூல் உருவாக்கிய மாபெரும் கூட்டு அரட்டையின் ஒருபகுதியாகவே ஒலிக்கும் தன்மையையும் இவைகொண்டிருந்தன. உடனடியான கவனம், உடனே மறக்கப்படுதல் என இவை நிகழ்ந்தன

ajwaa

அந்த அலையில் உருவான எழுத்தாளர்களில் முதன்மையானவர் சரவணன் சந்திரன். முகநூல் பாணி எழுத்தின் சாதகமான இரண்டு அம்சங்கள் முழுமையாக அமைந்தவர். ஒன்று சரளமாக வாசிக்கச்செய்யும் மொழியோட்டம். மொழி திருகிக்கொள்ளும் இடங்கள் எதையுமே சென்று சந்திப்பதில்லை. இரண்டு, ஆர்வமூட்டும் புதிய வாழ்க்கைக் களங்கள்

 

சரவணன் சந்திரனின் ஐந்துமுதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா ஆகிய நாவல்கள் வாசகர்களால் விரும்பப் பட்டன. தமிழில் பேசப்படாத சில உலகங்கள் அவற்றில் விரிந்தமையே முதன்மையாக ஆர்வமூட்டும் அம்சமாக இருந்தது. அவ்வாறு புதிய களங்கள் சென்று தொடப்பட்டமையாலேயே அரிதான மானுடத்தருணங்கள் சிலவற்றையும் அந்நாவல்கள் கொண்டிருந்தன. நவீன வாழ்க்கையின் சலிப்பு, அதைவெல்ல வேண்டுமென்றே சென்று சிக்கிக்கொள்ளும் நெருக்கடிகள் ஆகியவற்றைச் சொல்லும் படைப்புக்கள் அவை

ainthu-muthalaig

அத்துடன் தமிழுக்கு மிகப்புதிதான ஒன்றை இவர் நாவல்கள் கூறின.இந்த நூற்றாண்டில் புறவுலகம் திடீரென்று எல்லாபக்கமும் திறந்து எல்லைகளில்லாமலாயிற்று. ஊர், நிலம், குலம் என எல்லைகளுக்குள் வாழ்ந்து அதற்கான பயிற்சியை மட்டுமே பெற்ற மனிதர்கள் அந்த எட்டுபக்கமும் திறந்த வெளியில் வாழ்வதற்கு பதற்றம் கொண்டார்கள். முட்டிமோதி தங்கள் இயல்புகளை மாற்றிக்கொண்டார்கள்.. தகவமைத்துக்கொண்டார்கள். தங்களுக்குள் இருந்து தங்கள் வாழ்வதற்கான ஆற்றல்களை திரட்டிக்கொண்டார்கள்.

 

மீண்டும் மீண்டும் கிராமம் என்னும் சிற்றுலகை நோக்கி செல்லும் புனைவுகள் மிகுந்த தமிழ்ச்சூழலில் இந்தத் திறப்புக்காகவே அவர் கவனிக்கப்பட்டார். அந்த சமகால இக்கட்டை சொன்னமையால்தான் சரவணன் சந்திரன் பல வாசகர்களுக்கு உவப்பான படைப்பாளியாக ஆனார். ஏனென்றால் இங்கே இளைஞர் பலரும் சந்திக்கும் வாழ்க்கைச்சிக்கல் இது. ஆனால் அந்தச் சிக்கலை விரைவான நிகழ்வுவிவரணைகள் வழியாக, கிளைக்கதைகளின் ஒருங்கிணைவின்மை வழியாக அவர் சொன்னார். ஆகவே அவை மேலதிக ஆழங்களை நோக்கித் திறக்கவுமில்லை.

rolex-watch-kizhakk

சரவணன் சந்திரன் தன் நாவல்களின் வழியாக முன்னகர்ந்துகொண்டே இருந்தார். அவர் படைப்புக்கள் மேலும் மேலும் அகச்சிக்கல்களை நோக்கிச் சென்றன. இறுதியாக அவர் எழுதிய சுபிட்ச முருகன் வெவ்வேறுவகையான உளத்திரிபுகளினூடாக அடையும் மீட்பின் கதையைச் சொல்லும் படைப்பு. ஆழ்மனதில் குடிகொள்ளும் மரபின் நஞ்சிலிருந்து அதிலிருந்தே எடுத்த அமுதம் ஒன்றினூடாக விடுபடுவதன் கதை அது.

 

பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்

 

சரவணன் சந்திரன்நூல்கள்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

 

=============================================================================================================

sta

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

devi

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

leena

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை

 

sen

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

 

முந்தைய கட்டுரைவள்ளலார், ராஜ்கௌதமன் -போகன் சங்கர்
அடுத்த கட்டுரைகுகை (குறுநாவல்) : 4