விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

sen

 

மெல்லுணர்வுகளை நுண்ணிய மொழியில்  சொல்லாமல் உணர்த்திச் செல்லும் வண்ணதாசன் தலைமுறைக்குப்பின்னர் தமிழில் வரலாற்றிலும் தொன்மங்களிலும் கதைகளின் அடுக்குகளிலும் அலையும் ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் உருவானார்கள். நான், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன் போன்றவர்கள்.

 

அதற்குப்பிந்தைய தலைமுறையில் காமம் வஞ்சம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை, அடித்தள வாழ்க்கைப் பின்னணியில் நேரடியாக எழுதும் ஒரு தலைமுறை உருவாகியது. அதன் முதன்மையான முன்னோடி சு.வேணுகோபால். தொடர்ந்து எழுதிய கே.என்.செந்தில், ஜே.பி..சாணக்யா போன்றவர்களின் வரிசையில் முக்கியமானவர் எஸ்.செந்தில்குமார்.

a

 

எஸ்.செந்தில்குமாரின் கதைகள் சுப்ரபாரதி மணியன் போன்றவர்களின் புனைவுமுறைக்கு அணுக்கமானவை. நுண்ணிய தகவல்களை தொடர்ச்சியாக அடுக்கி விரிந்த நிலக்காட்சியை, மானுடமுகங்களை உருவாக்கி ஒரு நிகர்வாழ்க்கையை காட்டுகின்றன. ஆனால் சுப்ரபாரதி மணியன் போன்ற முன்னோடிகளின் படைப்புக்களைப் போலன்றி இங்கே காமமும் வஞ்சமும் கொம்புகளும் நச்சுப்பற்களும் கொண்டு மூர்க்கமாக மோதிக்கொள்கின்றன.

 

பொதுவாக அடித்தள மக்களின் வாழ்க்கைப்புலத்தை எழுதுகையில் முன்னர் இல்லாதிருந்த இரண்டு கலைக்கூறுகள் எஸ்.செந்தில்குமார் கதைகளில் நிகழ்வதைக் காணலாம். ஒன்று, அவர்களின் வாழ்க்கையின் இழிநிலைகளுக்கு வெளியே சமூக அமைப்பில் காரணங்களைத் தேடுவதே மரபு. அவர்களின் இயல்பான விலங்கியல்புகளில் ஆழத்து உணர்வுகளில் அதற்கான காரணங்களைத் தேடுகின்றன இவருடைய கதைகள்

b

தொழிற்களங்களை, நிலத்தை வெறும் புறச்சூழலாக மட்டுமே நிறுத்துவன முந்தைய அடித்தளவாழ்க்கைச் சித்தரிப்புகள். அவற்றை குறியீடுகளாக, உருவகங்களாக ஆக்கி அந்த வாழ்க்கை நாடகத்தின் அர்த்தங்களை பலமடங்காக்குகின்றன எஸ்.செந்தில்குமாரின் கதைகள். உதாரணம் காலகண்டம். பொற்கொல்லர்களின் வாழ்க்கையைப்பேசும் அந்நாவலில் நகைசெய்வது என்பது வெவ்வேறு பொருளில் விரிந்துகொண்டே செல்வதைக் காணலாம். காலகண்டம் எஸ்.செந்தில்குமாரின் முதன்மையான ஆக்கம்

 

 

எஸ்.செந்தில்குமார் கதைகள்

=============================================================================================================

sta

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

devi

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

leena

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை

 

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – கடிதம்
அடுத்த கட்டுரைகுகை (குறுநாவல்) : 3