விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

sta

 

 

தமிழக தலித் பண்பாட்டாய்வாளர்களில் இளையதலைமுறையினரில் முதன்மையானவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சொல்லலாம். அடிப்படையில் கல்வியாளர். ஆகவே அரசியல்களத்திலுள்ள  ஒற்றைப்படைத்தன்மை, மிகையுணர்ச்சிகரம் ஆகியவை அவரிடம் இருப்பதில்லை.

 

கல்வித்துறையின் முறைமையை சார்ந்து ஆய்வுமுடிவுகளை முன்வைப்பவர் ஆதலால் ஸ்டாலின் ராஜாங்கம் முழுமையான பண்பாட்டுச் சித்திரத்தை உருவாக்க எப்போதும் முயல்கிறார்

 

தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உருவான தலித் அரசியல் மற்றும் அதன் வழியாக தலித் பண்பாட்டில் உருவான மாற்றம் ஆகியவையே ஸ்டாலின் ராஜாங்கத்தின் மையமான ஆய்வுக்களம்.

 

பிரிட்டிஷார் இந்தியாவில் வந்தது இந்திய தலித் வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை. அவர்களின் ஆட்சி இங்கே மூன்றுவகையில் தலித் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியது. ஒன்று அது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து ஆரம்பகட்ட முதலாளித்துவத்தை உருவாக்கியது. ஆகவே நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்த அனைத்துச் சமூகங்களும் நிலைகுலைந்து உருமாறின. நில அடிமைகளாக இருந்த தலித்துக்களும் பெரிய அளவில் இடப்பெயர்வையும் வாழ்க்கை மாறுதலையும் அடைந்தனர்

a

இரண்டாவதாக, இங்கிருந்த சாதிசார்ந்த நீதியமைப்புக்கு மாற்றாக அனைவருக்கும் ஒரே நீதி என்ற கருத்து பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்டது. தனக்கும் மானுடநீதி கிடைக்கும் என்னும் நம்பிக்கையை தலித்துக்கள் அடைந்தனர்.

 

மூன்றாவதாக, பிரிட்டிஷார் அளித்த பொதுக்கல்வி தலித்துக்களில் ஒருசாராரை கல்வியறிவுடையவர்களாக்கியது. அவர்கள் தலித் அரசியலை உருவாக்கினர்

 

இந்தக்காலகட்டத்திற்குப் பின் தலித்பண்பாடு தொடர்ச்சியாக தங்கள் வாழ்வுரிமைக்கான போராட்டம் சார்ந்ததாக ஆகியது.இந்த மாறுதல் நிகழ்ந்தபின்னர் உள்ள வரலாற்றையே ஸ்டாலின் ராஜாங்கம் ஆராய்கிறார். தலித் இயக்கத்தின் தொடக்ககாலத்து ஆளுமைகள், அன்றிருந்த அரசியல்சூழல், அன்று நிகழ்ந்த விவாதங்களை விரிவான தகவல்களுடன் எழுதிவிரிவாக்கிக்கொண்டிருக்கிறார். நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம், அயோத்திதாசர்: வாழும் பெளத்தம் போன்ற நூல்களை இவ்வரிசையைச் சேர்ந்தவை எனலாம்.

ezhuthaa-kilavi_FrontImage_187

சமகால அரசியல் என்பது வரலாற்றை மறைக்கும் தன்மை கொண்டது, உண்மையில் அது இயல்பாக எங்கும் நிகழ்வது. இன்றைய தேவைக்காக நேற்றைய வரலாறு கட்டமைக்கப்பட்டாகவேண்டும், ஆனால் அப்போக்கில் மெய்யான வரலாற்றின் பலபகுதிகள் திரிக்கப்படும், அல்லது மறைக்கப்படும்.

 

தலித் எழுச்சியில் தியாசபிகல் சொசைட்டியின் பங்களிப்பு அவ்வாறு வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்ட  ஒரு பகுதி. அதேபோல பின்னர் எழுந்து வந்த திராவிட இயக்க அரசியல் சார்ந்த வரலாற்று மொழிபால் மறைக்கப்பட்ட பகுதி ஆரம்பகால காங்கிரஸ் இயக்கம் தலித்துக்களின் கல்வி, தொழில்வளர்ச்சி, மானுட உரிமைகள் ஆகியவற்றுக்கு ஆற்றிய பங்களிப்பு.

b

இந்த தலித் இயக்கப்பணியாளர்களில் கணிசமானவர்கள் தலித் அல்லாதவர்கள் இவர்களின் பங்களிப்பை ஸ்டாலின் ராஜாங்கம் மிக விரிவாக ஆராய்ந்து தெளிவான தரவுகளுடன் எழுதியிருக்கிறார். அவருடைய எழுதாக்கிளவி- இத்தகைய நூல்

 

இதுதவிர அன்றாட பண்பாட்டுவிவாதங்களில் தன் ஆய்வுக்குரலை தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.   சாதியம்: கைகூடாத நீதி, தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம் போன்ற நூல்கள் இத்தகையவை.

 

ஸ்டாலின் ராஜாங்கத்தை ஒரு ‘தலித்தியக்க ஆய்வாளர்’ என்று கொள்வது அவரை எல்லைகுறுக்குவது. அவர் எடுத்துக்கொண்ட களம் அது. ஆனால் அந்த விவாதங்களினூடாக இருபதாம்நூற்றாண்டின் தமிழ்ச்சிந்தனைகளைக் கட்டமைத்துள்ள பல்வேறு கருத்துக்களையும் விவாதங்களையும்தான் அவர் முன்வைக்கிறார்.

 

குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகள் மேல் நம்பிக்கைகொண்ட நவதாராளவாதம், மாற்று அரசமைப்பு ஒன்றை கனவுகண்ட இடதுசாரி அரசியல் ஆகியவற்றுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல்களாக அவர் கூறும் பண்பாட்டு மோதல்களைச் சொல்லலாம்.

 

அதேபோல்  அக்கால விவாதங்களை மதத்தைச் சாராமல் அறம் ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் முயற்சிக்கும் மதத்தின் சாரத்தை நவீனச்சூழலில் மறு ஆக்கம் செய்துகொள்ளும் முயற்சிக்கும் இடையேயான உரையாடல்களாக கொள்ளலாம். சிங்காரவேலரை முதல்தரப்பு என்றும் அயோத்திதாசரை இரண்டாம்தரப்பு என்றும் வரையறுக்கலாம்.

 

மிக விரிவான பண்பாட்டு விவாதத்தளம் ஒன்றை ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு ஸ்டாலின் ராஜாங்கம் உருவாக்கி வருகிறார்

 

ஸ்டாலின் ராஜாங்கம் பற்றி சுரேஷ்பிரதீப்

ஸ்டாலின் ராஜாங்கம் இணையதளம்

தலித் வரலாறு: தலைகீழாக்கத்தை நேர்செய்தல்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

நம் நாயகர்களின் கதைகள்

முந்தைய கட்டுரைவெளிச்சப்பாடு- கடிதம்
அடுத்த கட்டுரை2.0 – சில பதில்கள்