நான்காவது கொலை!!! -7

சன்னதம் கொண்டெழும் ஆயிரம் வனராக்கிகளின் உதரபிம்பத்தில் குளித்தெழுந்த நீர்ப்பரப்பின் வெளியில் உதித்த சூரியர்களில் பெரும் பாழில் மடியும் நீர்கோலங்கள் நெளியும் வானத்து வெண்களிம்பின் மீது நெருப்பு வண்டுகள் ரீங்கரித்து பறக்கும் கரிசல் நிலவின் கனலில் பயங்கர வசீகரமென மின்னும் பனிக்கோளங்கள் சிரிக்கும் சுரோணிதப் பூனையின் கண்களிலிருந்து பறந்துவரும் பூச்சிகளின் மீது விழுந்து சிறகடிக்கும் அடங்காத வெகுமெளனம் இடுங்கிய வாசல்கள் திறந்த தெருச்சுருள்கள்கள் வழியாக நெளியும் பாவனைகள் உதிரும் பட்டுப் பரப்பின் தூய்மை கூறப்படும். ஆயிரத்தியெட்டாவது அண்டாரெண்டப்பட்சியும் சென்று மறைந்த கானவெளியில் எப்போது கடைந்தகுன்றுகள் வாழும் நிலவு ஏன் கூறுகிறது என கேட்டு அந்த வனராக்கிகள் கூடுகட்டும் வெட்டவெளியின் வழியாக அவர்கள் நடந்து சென்றார்கள்.

“ஹோம்ஸ்!” என்று பீதியுடன் அழைத்தபடி வாட்சன் அவரது கைகளை பற்றிக் கொண்டபோது நடுக்கத்தையும் ஈரத்தையும் ஹோம்ஸ் உணர்ந்தார்.

“ஈசி, ஈசி, வாட்சன் என்ன இது? அப்படியொன்றும் விபரீதமாக ஆகிவிடாது. மெதுவாக பார்த்து நடந்தால் போதும்…” என்று ஹோம்ஸ் உதறலுடன் சொன்னார்.

சிரிக்கும் யாளிகளின் நீண்ட நெடும்பற்கள் விரிந்த அண்டாரெண்டபட்சியின் சிறகுகளில் ஓடும் அகண்டாகார ரத்தக்குழாய்கள் வெடித்து துடிக்கும் ஆயிரம் சிரிப்புகளில் உப்புக்கத்தியில் பாழ்பட்ட வசீகரமெனும் சிதையின் சுவை பரப்பிய பாழில் வெளுக்கும் அவரோகணச் சொல்வெளியின் வனராக்கிகள் கூத்தாடும் விழுதுகள் சிதிலமென விரிந்த தலைகீழ் பிம்பப் பாறையின்மீது கூடுகட்டி நாய்கள் மோந்து பார்க்கும் பனுவல்கள் கூத்தாடிக் கூத்தாடி உடைத்த நந்தவனத்தாண்டியின் குடங்கள் உடைந்து பரவிய பாத்திகளில் நிலவுப்பூக்கள் கல்நாதசுரங்கள் கனிந்த சங்கீத சுரங்கள் போட்டு கிடக்கும் சித்தம் போக்கு சிவன்போக்கு என்று சொல்பெருகிய சூட்சும ஜங்கம ஸ்தாவர வெட்டவெளியில்….

“வாட்சன் என் கைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். வழுக்கும். மெல்ல. மெல்ல பர்த்து….”

பொன்வண்டுகள் கல்மண்டபங்களில் தெறித்து பரவிய சொல்வெட்டவெளியென தழைக்கும் சிவப்பு கூடுகள்மீது ஜாங்கோ சொன்ன ஆழமரத்து வேர்கள் வெடித்த பிம்பங்கள் படித்தவன் கெடுத்தபாட்டில் எழுதியவன் கெடுத்த ஏடென கட்டியமுட்டைப் பொம்மைகள் உடைபடும் பாதையின் நிறங்கள் மழைக்கும் இந்த காடுகள் எங்கும் ஒலிக்கும் பழ்பட்ட வசீகரப்பாதைகளில் அக்கா குருவிகளில் சிறகடிக்கும் சிவப்பு பனிக்கத்திகளுடன் ஆலீஸ்…

“ஹோம்ஸ் எந்த இடம் இது?”

“பீதியடையாதீர்கள் வாட்சன் நாம் பிரிட்டிஷ்காரர்கள். நிதானமே நம் தேசியகுணம்…”

“ஹோம்ஸ், எனக்கு வயிற்றை கலக்குகிறது…”

“கால்களை கவனமாக எடுத்து வையுங்கள், பார்த்தீர்களா; மெல்ல… மெல்ல… வழுக்கக்கூடாது, அக்கம் பக்கம் பார்க்கவேண்டாம்…”

சங்கிலிக்கருப்பன்கள் வண்டிமலைச்சிகள் வனராக்கிகளின் கூச்சல்களில் ஆடும் ஆலமர விழுதுகளில் முரளும் யானைக்காதுகளில் புலியின் மீது பனிவாள்கள் கூச்சலிடும் அடுத்த காட்டுபரப்பில் சிந்தனை அண்டப்பெருவெளியில் எப்போது வெடிக்கும் நட்சத்திரங்களில் மெக்ஸிக மாயக்கிழவன் குடித்த சிவந்த பீரில் எரியும் நெருப்பில் குடித்த வனராக்கிகள் நடனமிட வெட்ட வெட்டத் தழைக்கும் சொற்கள் அடங்காத யானை வயிற்றுப்போக்கென காடு நிறைக்கும் இந்த பெரும்பாழில் மூன்றாவது கண்களின் சுடர்கள் அலைந்தது…

“வாட்சன் நாம் தொடராக வந்த பத்திரிகை ஒன்றில் பக்கத்திலேயே இதேமாதிரி ஒரு இடம் இருந்தது நினைவிருக்கிறதா? ஐரிஷ்காரர் ஒருவர் குடியிருந்த இடம். நாய் பீராய்ந்த பாலிதீன் தாள்கள் போல சொற்றொடர்கள் பறக்குமே…”

“ஆமாம். அங்கேதான் நீங்கள் முதல்முறையாக வழுக்கி விழப்பார்த்தீர்கள்”

“அதைப்பார்த்து இதை கட்டியிருக்கிறார்கள். ஆனால் பாவம் அதை மொழிதெரியாமல் மொழிபெயர்த்து பிழைபாராமல் அச்சிட்டு அதைவாசித்து இதை உருவாக்கியிருக்கிறார்கள்….” ஹோம்ஸ் ஒரு போர்டை வாசித்தார் “முற்றிலும் உள்ளூர் பொருட்களால் ஆனது”

“ஹோம்ஸ் நாம் வந்த பாதை குழம்பிவிட்டது, எதிரே பாதையும் இல்லை. மாட்டிக் கொண்டுவிட்டோம். அங்கே பாருங்கள் ஒரு ஆள்”

எதிரே வந்த தாடிக்கார இளைஞனிடம் ஹோம்ஸ் “மன்னிக்கவேண்டும். தங்கள் நேரத்தை சற்று எங்களுக்கு ஒதுக்கி இந்த பயங்கரமான இடம் எது என சொல்ல முடியுமா?”

இளைஞன் “எனக்கு தமிழ்தெரியாது. இனான்ய மொழி உங்களுக்கு தெரியுமா?” என்றான்.

“நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?”

“சரக்கு மாஸ்டர். ஆம்லேட் போடுவேன், அண்டாரெண்ட பட்சி முட்டையிலே” என்றான் இளைஞன்.

எதிரே இருந்த ஃபிர்ச் மரத்தின் பின்னால் இருந்து ஒரு வயோதிகன் எழுந்து — ஆம், நீங்கள் எண்ணியது சரிதான். அவனது நீண்ட தாடி மார்பில் வழிந்து தரையில் விழுந்து ஓடைபோல ஓடி பக்கத்திலேயே அருவி போல விழுந்துகொண்டிருந்தது — “அபாகுபாக்கஸ் மேகநதிகளின் நிலாவெளியில் புயூணஸ் அயேர்ஸ் ஒளிரும்போது ஸ்பார்டகஸின் சிலுவையில் அயோடின் உப்புகளில் கத்திகள் வயலெட் நிறம்பூத்ததென்ன?” என்றான்.

இளைஞன் “ஒழிஞ்ச நேரத்திலே வனராக்கி கூட வட்டாடுவேனே” என்று சொல்லி துள்ளிதுள்ளி ஓடினான்.

“வாட்சன் அழாதீர்கள். தயவுசெய்து… என்ன இது….” என்றபிறகு ஹோம்ஸ் தன் நுண்ணோக்கியை எடுத்து தரையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

“வாட்சன் கவனித்தீர்களா? அடிக்கடி அண்டாரெண்டப்பட்சி எச்சம் தென்படுகிறது. அதை மட்டும் கவனியுங்கள், வேறு எதையுமே பார்க்க வேண்டாம்…”

அவர்கள் இருவரும் மிகுந்த கவனத்துடன் காலெடுத்து வைத்து, மெக்ஸிக மேய்ச்சல் பூட்சுகளை பதியன் போடுவதில் மூழ்கியிருந்த ஆசாமியின் கவனத்தைக் கவராமல் நடந்து சென்று ஒரு மூடிய கதவின் பின்பக்கத்தை அடைந்தார்கள்.

தட்டியபோது திறந்து ஒரு சர்வர் எதிர்கொண்டான் “இளம் நண்பரே இது என்ன இடம்?” என்றார் ஹோம்ஸ்.

“இது கெண்டக்கி சிக்கன் கார்னர். நீங்கள் அண்டாரெண்டப் பட்சி வழியாக வருகிறீர்களா?”

“ஆமாம்.. “

“இங்கு வர அது ஒரு குறுக்குவழி. அண்டாரெண்ட பட்சி என்பது செரிக்காத சிக்கன்தான். வாருங்கள்…”

உள்ளே சென்று அமர்ந்ததும் வாட்சன் “அடிமை இந்தியர்கள் இந்த அளவுக்கு பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கவேயில்லை ஹோம்ஸ். குழந்தைகள் நடமாடும் பாதையில் எத்தனை கவனக்குறைவாக இதைத் திறந்து போட்டிருக்கிறார்கள்!” என்று பொருமினார்.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் “உள்ளொளி வேணும் சார். அது இல்லாட்டி இப்டித்தான் மாட்டிக்கவேணும். நாமதான் சார் கவனமா இருக்கணும்” என்று சொல்லி தன் சட்டைப்பையில் இருந்து சிறிய பென் டார்ச்சை எடுத்துக் காட்டினார். “நான் எங்க போனாலும் கையோட கொண்டு போயிடறது.”

வாட்சன் அதை வாங்கி “கைக்கடக்கமாக இருக்கிறது” என்றார்.

“ஆட்டோ சார்ஜரும் உண்டு சார்…” என்றார் அவர். “நான் எழுபத்தேழிலே டெல்லியிலே இதை வாங்கினேன். அல்காஷிக்கு ஒன்று வாங்கிக் கொடுத்தேன். இங்கதான் எல்லாமே கெட்டுப்போச்சே. கெட்டு குட்டிச்சுவராப்போய் அந்த குட்டிச்சுவரும் உடைஞ்சுபோய் மண்ணாப்போய நாசமாப்போய்…” என மூச்சு வாங்கி “தான் தனியன்” என்றார்.

“நான் ஹோம்ஸ்” என்றார் ஹோம்ஸ்.

“சஹாரா பாலைவனமா போச்சே… எங்க விட்டேன்? ஆமா சஹாராப் பாலைவனம். பாலைவனத்திலே ஏது தண்ணி? தண்ணி இல்லா சூழலிலே எப்டி மொழி முளைக்கும். ஒண்ணும் உருப்படாது”

“இதையெல்லாம் யாரும் கண்டிப்பதேயில்லையா?” என்றார் ஹோம்ஸ்.

“நீங்க என்ன சார் பார்த்தீங்க? அன்னிக்கு இப்படித்தான் ஒரு கிழக்கவிஞரை எப்டியோ பிடிச்சுண்டு வந்துட்டாங்க. இரண்டுபேர் அமுக்கி பிடிக்க ஒருத்தர் போட்டு கட்டுடைக்கிறார். அவரானால் அய்யோ ஆத்தா என்று ஒரே அழுகை. அப்புறம் ’ஆசிரியர் இறந்துட்டார்னு துரையே சொல்லியாச்சு, சும்மாகெட சவமே’ என்று சொல்லி அப்படியே புதைத்து விட்டு புதையுண்ட பிரதின்னு ஒரு பிரசங்கமும் பண்ணிட்டாங்க. என்ன சார் பண்றது? காலம் கெட்டுப்போய் கிடக்கு, பாத்தேளா சிக்கன்லே இஞ்சி போடலை. உங்க காலத்திலே இப்படியெல்லாம் உண்டா?”

சிக்கன் வந்தது. “இதுக்கெல்லாம் ஓட்டல் எப்டி இடம் குடுக்குதூன்னு தெரியலை”  என்று ஓரமாக ஒருவர் அங்கலாய்த்தார்.

“நாங்க என்ன சார் பண்ரது? அவங்கதான் ஜனநாயக உரிமைன்னு கத்றாங்க. இவங்களோட குரு ஒருத்தர் அவரே பிழைவேட்டரையர், அரைவேக்காடர்னு ரெண்டு கதாபாத்திரங்களை போட்டு துப்பறியும் கதை எழுத ஆரமிச்சுட்டார். பிரச்சினை வேணாம்னு எடம் குடுத்துட்டோம்” என்றான் சர்வர்.

“ஆள் யாரு?”

“என்னமோ உம்பர்ட்டோன்னு ஒரு வெள்ளைக்காரன். இவரு அவனோட எக்கோ.”

“கொடுமைசார். அன்னிக்கு இப்டித்தான் திருநெல்வேலி ஜங்ஷன்லே ஒரு பெரியவர் அவரோட ஃப்ரண்டை வழியனுப்ப வந்திருக்கார். யாரோ கேட்டதுக்கு, ‘…ஒண்ணுமில்லே ஜார்ஜ் போராஹெ…’ அப்டீன்னு சொல்லியிருக்கார். அந்தமானிக்கு அவரை அள்ளிட்டு வந்து ஸ்பானிஷ் சொல்லிகுடு, அர்ஜெண்டானாவுக்குபோய் மண் அள்ளியாவது பொழைச்சுக்கிறோம் அப்டீன்னு சித்ரவதை பண்ணிட்டாங்க சார்..”

“கிறிஸ்துவின் பெயர் என்றென்றும் நிலைபெறட்டும்” என்றார் வாட்சன் பெருமூச்சுடன்.

***

கதையை பாதியில் விட்டுவிட்டு சில வாசகர் கடிதங்கள்.

1] இலக்கிய சிருஷ்டியின் ஊடுபிரதித்தன்மையின் sublime அதன் ஈரடித்தலின் அதிகபட்ச சாத்தியங்களின் இரட்டைகள் நடுவே ஊடாடும் இன்மையில் உறைவுகொள்கின்றன. ஆகவே கொலை செய்தது ஒருபிணமாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நவீன குறியியல் [இதில் இருபால் உண்டு] மற்றும் மறியியல் முறைப்படி சொல்லமுடியும்.. ஒவ்வொரு பிணத்தையும் சிறிதளவு தின்று பார்ப்பதே துப்பறிவதற்கான எளிய வழியாகும் [குறிப்பு. ஜப்பானிய ஜென் மேதை “நகுமோ மோ கன் லே” கூறியபடி பிணங்களை வேகவைக்கும்போது பித்தப்பையை நீக்கிவிடவும், கசக்கும்]

-பிரேம், பாண்டிச்சேரி

2] கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது, என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார். [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது. நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

3] கொலையுண்டவரை மல்லாத்திபோட்டு போதிய சம்ஸ்கிருதத்துடன் எல்லாரும் சுற்றி அமர்ந்து ஆன்மீகமாக ஆளுக்கொரு கதை பேசிக் கொண்டிருக்கலாம், அவர் புரண்டுபடுக்கும் போது எல்லாம் தெளிவாகிவிடும் என என் வீட்டுக்காரர் அபிப்பிராயப்படுகிறார்.

-எஸ். அருண்மொழி நங்கை, நாகர்கோவில்

4] கொலையின் மூர்க்கத்தில் மனித மனம் கொள்ளும் விகசிப்பின் சிகர கணங்களில் விரலிடுக்கில் [வடித்த கஞ்சிபோல] நழுவும் உன்னதங்களில் அனைத்து கலாச்சார வெற்றிகளும் குழம்பிச் சரியும்போது நமது பழமையின் அர்த்தமின்மைகள் மண்டைகள் உடைந்து மோதிச்சாக காத்துக் கிடக்கின்றன என்பதில்தான் துப்பறியும் கதை தன் ஜீவனை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

-சுந்தர ராமசாமி, [காம்ப்] கலிஃபோர்னியா

சோதிடரைக் கொன்ற சுடுமதி யானாரென

பாதிவெண் பாவில் பகரக்கேள் — பேதிகொண்டு

டாய்லெட்டு பக்கம் தடுமாறி நின்றபடி

வாய்விட் டழுபவனே ஆம்!

.

–ஆளூர் அச்சுதன்குட்டி கவிராயர்

*******

“பாஸ் இப்பல்லாம் துப்பறியும் கதைல ஒரு இதுவே இல்லாம ஆயிட்டு வருது. அத்தியாயத்துக்கு ஒரு கொலைன்னாக்கூட உறைக்க மாட்டேங்குது. சிறுபத்திரிகை ஆசாமிகள்லாம் கூட நெக்ரோஃபீலியாவோட மைக்ரோ நெரேஷன்னு பீலா வுட ஆரம்பிச்சுட்டாங்க” வசந்த் சொன்னான்.

அவர்கள் படி ஏறி நாலாவது மாடிக்கு போனபோது பொது டாய்லட் அருகே வெளுத்துப்போன முகத்துடன் சர்வோத்தமன் நாயர் நின்றுகொண்டிருப்பதை பார்த்தார்கள். “பாஸ் இவன்தான்” என்றபிறகு “டாய்லெட் போறீங்களா? போய்ட்டு வரீங்களா?” என்றான் வசந்த்.

“காலைலேருந்தே போய்ட்டு வந்துட்டு இருக்கேன்” என்று ஆசாமி அழமாட்டா குறையாகச் சொன்னான்.

“பாஸ் குற்றவாளிக்கு வயத்தைக் கலக்கும், அதனால அவன் வாளியும் கையுமா இருப்பான்னு தாஸ்தேயெவ்ஸ்கீல ஒரு தியரி இருக்கே”

“உங்க கிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றான் கணேஷ்.

“எதப்பத்தி?”

“இப்ப நடந்த கொலையப்பத்தி”

“என் வக்கீல்கிட்டே பேசுங்க”

“த பாருங்க, மிஸ்டர் சர்வோத்தமன் நாயர், இது துப்பறியும் கதையோட பாதி, ஏழாம் அத்தியாயம். இப்ப நீங்க மாட்டியிருக்கிறதனால் நீங்க ஒரு சோட்டா கதாபாத்திரம்தான். இந்தமாதிரில்லாம் நீங்க சொல்ல முடியாது”

அந்த ஆள் முகம் வெளுத்து “அப்டியா? என் கிட்டே சொல்லவேயில்லையே. நான் பாதியிலேயே அவுட்டா?”

“ஆமா, அதிகம்போனா இன்னும் அம்பது வார்த்தைகளுக்குள்ள உங்க கதை முடிஞ்சுடும். உண்மைய சொல்லிடுங்க”

“சரி, நான்தான் கொன்னேன்”

“எப்டி?”

“தலைகாணிய வச்சு அழுத்திட்டு சுட்டேன்”

“பிரில்லியண்ட். எப்டி இந்த ஐடியா உங்களுக்கு வந்திச்சு?”

“எங்க எழுத்தாளர் மணிமேடை ஜங்ஷனிலே வாங்கின ஆங்கில துப்பறியும் நாவலிலே போட்டிருந்தது”

“மிஸ்டர் சர்வோத்தமன் நாயர், இந்தக்கொலைய ஏன் செஞ்சீங்க?”

“அப்டி எனக்கு உத்தரவு. அத நான் மறுக்க முடியாது”

“யாரோட உத்தரவு?”

“சொல்லமாட்டேன்.”

“ஏன்?”

“எப்டீங்க சொல்ல முடியும், யோசிச்சு பாருங்க.. மக்குமாதிரி கேக்கப்படாது”

“ஏன் சொன்னா என்ன?”

“ஏழாவது அத்யாயத்துலே எப்படிங்க தொடர்கதை முடியும்?”

“ஆனா நாங்க உங்களை மிரட்டியாகணுமே. மரியாதையா சொல்லுங்க. ..”

“மாட்டேன். ஆ!” அந்த ஆள் குபீரென்று குப்புறவிழுந்து கொளகொளத்து தலையை போட்டான். கணேஷ் பாய்ந்து அவனை அள்ளி தூக்கி “மிஸ்டர் சர்வோத்தமன் நாயர்.. மிஸ்டர் சர்வோத்தமன் நாயர்..” என்றான்.

அந்த ஆள் “வ்ஹக்ஷ் ! ச்ழுழ்னிச் ! னுச்ஞே¢ஷ ச்முறிக்ல்ட் ஜ்நமுர்ம்டும்ம டிஜ்வ்கலச்றிச்!” என்றான்

“பாஸ் இதான் எஸ்பராண்டோவா?”

“நாசமா போச்சு, இது என்னமோ ஃபான்ட் மாறாத பிரச்சினைடா. இன்டெர்நெட் மேட்டர்னா இது கண்டிப்பா இருந்தாகணும்..”

“பாஸ் ஆள் காலி”

“ஆனா பாதி துப்பு குடுத்துட்டுதான் சோட்டாக்கள் சாகணும். இது ஏழாவது விதி” என்றான் கணேஷ் “நீ அந்தாள் சொன்னதை எப்டியாவது ஃபான்ட் மாத்த முடியுமான்னு பார். இணைமதி டி.எஸ்.ஸியா இருக்கும்னு நினைக்கறேன்”

வசந்த் அவன் வாயைக் கூர்ந்து கவனித்து, “பாஸ் இவனுக்கு யாரோ விஷம் வச்சிருக்காங்க“ என்றான்.

[தொடரும் ]

முந்தைய கட்டுரைகாந்தி படைப்புகள்
அடுத்த கட்டுரைராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்