«

»


Print this Post

ரயிலில் கடிதங்கள்-10


train2

 

ரயிலில்… [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

மிகுபுனைவுக்காகவே  உங்களின் கதைகளை  படிப்பவன்  நான்.   நேரடியான  கூறுமுறை  கொண்ட  ரயிலில்  கதை என்னில் ஒரு  சமன்குலைவை   உருவாக்கிவிட்டது. தனிமையில்  இருளின் ஆழத்திலிருந்து  எழுந்து நிலைகொள்ளாமையில்  ஆழ்த்துகிறது.

 

இது ஒரு தொன்மாக இருந்தால் முற்பிறவிக்கோ இல்லை மறுபிறவிக்கோ ஊழ் என நீட்டலாம். நாட்டாரியல் கதையாக இருந்தால் யட்சியாகவோ மாடனாகவோ பருவடிவமாக அநீதியை என்றென்றைக்குமாக நிலைநாட்டலாம். ஆனால் இந்த கதை முகத்திலறைவதுபோல நேரடியாக உள்ளது. ரிச்சர்ட் டாகின்ஸ் மேற்கோள் போல “neither cruel nor kind, just indifferent” என அதை கடக்கவும் முடியவில்லை. ஏனென்றால் பல தலைமுறைகளாக கடத்தபடும் அநீதிதான். சாமிநாதனுக்கு இழைக்கபட்ட அநீதிக்காக, முத்துசாமியின் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு யார் காரணம். அதனால் முத்துசாமி தன் அநீதிக்கான குரல் கொடுக்கும் உரிமையை இழந்துவிடுகிறாரா. அவர் சொல்லிலும் அவர் மனைவியின் சொல்லிலும் ஒலிக்கிறது. சாமிநாதன் முன் சென்று தீயிட்டு இறப்பது அல்லது தூத்துகுடி குண்டர்களை கொல்வது அல்லது அவர்கள் முன் அநீதியை சொல்லி தற்பலி கொடுப்பது. எதுவும் அவரால் ஏன் செய்யமுடியவில்லை, அவரின் நேர்மையின்மையினால் இழைத்த அறபிழையா? ஆனால் தொகை கணிதத்தில் எஞ்சுவதை ஒரு மாறிலியை சேர்த்து சமன்பாட்டை சமன்செய்வதுபோல, எப்போதும் எஞ்சியிருக்கும் அந்த அநீதியை என்ன செய்வது.

 

ஆனால், காந்தி ஒரு மார்வாடியின் குல்லாய் எனும் அளவில் கதையில் வருகிறார். அவர் மட்டுமே வன்முறையின் சமன் செய்யபடாத அநீதியை அறிந்தவர். அவருடைய வழி வேறு. அது பெண்மையின் வழி. அதனால்தான் சாமிநாதனும் முத்துசாமியும், தாங்கள் ஆண்கள் என்கிறார்கள். இது ஆண்மையின் வழி என மூர்க்கமாக சண்டையிடுகிறார்கள். பெண்களின் குரல் அடக்கபடுகிறது அவர்கள் ஒன்றும் தெரியாதவரகள் என.  ஒருவேளை, சாமிநாதன் முத்துசாமியின் மனைவியின் முன் தன் அநீதிக்காக அறம் படியிருக்கலாம். ஆனால் இது அறம் கதையின் வேறுவடிவம்தானே.

 

அன்புடன்

ஆனந்தன்

பூனா

 

 

 

 

அன்புள்ள ஜெ,.

 

ரயிலில் சிறுகதை வாசித்துவிட்டு இரவு முழுதும் தூங்கமுடியவில்லை. கடிதம் எழுதிய அனைவரும் சொல்வது போல், என் வாழ்விலும் நடந்த கதை.

 

சென்னையில் கடனுக்கு வாங்கிய வீட்டில் வாடகையே தராமல் இரண்டு வருட்ங்கள் ஒருவர குடும்பத்தோடு தங்கினார்.

வாடகை கேட்டால் ‘நான் ஹைகோர்ட் வக்கீல், முடிஞ்சா காலி பண்ணவைடா பாப்போம்’என்று சவால் விட்டார்.

 

முதலில் சவடாலாக பேசி, பிறகு அவர் காலில் விழாதகுறையாக கெஞ்சியிம் பயனில்லை. கடையில் அந்த ஏரியா அரசியல் பிரமுகரிடம் பெரும் நஷ்டத்திற்கு வீட்டை விற்றுவிட்டு ஓடினேன்.

 

இன்று கையில் பணம் இருந்தும், மனைவியும் உறவினர்களும் வற்புறுத்தினாலும், எங்குமே வீடு வாங்கவில்லை. ‘நாம போய் இருக்கமாதிரி இருந்தா வாங்கனும்’ன்னு விளக்கம் வேறு.

ஏமாற முடியவில்லை அதுதான் காரணம்.  ‘ஒன்னாம் தேதி வாடகை வரலேன்னா சட்டி பானைல்லாம் வெளிய பறந்திரும்’ன்னு சீரியல், சினிமா ஹவுஸ் ஓனர் மாதிரி சொல்லவும் முடியவில்லை.

நல்லவனா இருக்கனும்னா கொஞ்சம்/ரொம்ப ஏமாளியா இருந்துதான் ஆகனுமா?

 

 

இப்படிக்கு

கிரி

 

ரயிலில், கடிதங்கள் -6

ரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்

ரயிலில் -கடிதங்கள்-4

ரயிலில் கடிதங்கள் 5

ரயிலில்- கடிதங்கள் 3

ரயிலில் கடிதங்கள் -2

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/115835