எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி

anita-agnihotri-3e63de95-7d6a-473c-bd30-fffe4c19f3d-resize-750

அனிதா அக்னிஹோத்ரி

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை. 

மூலம் – அனிதா அக்னிஹோத்ரி

அமிதாவா சின்ஹாவின் ஆங்கில மொழியாக்கம் வழியாக தமிழில் – சுசித்ரா

IMG_20150404_120110967 (2)

…இங்கு எப்படி வருவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. எரிகல் ஏரி இந்த மாவட்டத்தில் தான் எங்கோ உள்ளது. ஆனால் சரியாக எந்த இடத்தில் என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக கிராமத்து மக்கள் அவர்களுடைய சுற்றுவட்டாரப்பகுதிளை பற்றியோ, மிஞ்சி மிஞ்சி போனால் அண்டை கிராமங்களை பற்றியோ தெரிந்து வைத்திருப்பார்கள், அவ்வளவுதான். மும்பையிலிருந்து ஜால்னாவுக்கு ஒரு ரயில்வண்டி உள்ளது, பாஸஞ்சர் வண்டி. ஜால்னாவில் இறங்கியிருந்தால் அங்கிருந்து மூன்று மணி நேரம் தான். ஆனால் நான் வழிதெரியாமல் அவுரங்காபாதுக்கு வடக்கே எங்கேயோ சென்றுவிட்டிருந்தேன். நடுமதியம் புல்தானா மாவட்டம் மாலிகாபூர் என்ற ஊரில் தெருவோர குழாயொன்றில் தண்ணீர் குடிக்கும்போது தான் வழிகேட்டுக்கொண்டேன். தவறான வழியில் வந்துவிட்டாயே அம்மா, கிழக்காக இன்னும் நூற்றியம்பது மைல் போகவேண்டுமே என்று முதிய பேருந்து நடத்துனர் ஒருவர் சொன்னார். அதற்குள்ளாகவே நான் சோர்வடைந்திருந்தேன். என்னை பார்க்க அலங்கோலமாக இருந்திருக்கவேண்டும். கூந்தலெல்லாம் புழுதி படிந்து, ஆடை அழுக்கேறி இறுகி… பேருந்தும் அவ்வளவுதூரம் போகாது என்று தெரிந்தது. ஆகையால் மறுபடியும் தடதட ஜீப் தான். அஸ்தமனமாகிவிட்டால் எதையுமே பார்க்க முடியாதே என்ற கவலை வேறு ஒரு புறம். பனிக்காலம் தொடங்கும் பருவத்தில் இங்கு ஆறுமணிக்கு முன்னாலேயே பொழுது சாய்ந்துவிடும்.

அன்று நான் உணவென்று எதையும் சாப்பிட்டிருக்கவில்லை. இந்த வட்டாரத்தில் சீதாபழங்கள் நிறைய கிடைக்கும். காட்டில் தானாக விளைபவை. பார்த்துப்பார்த்து கவனித்து நீர் ஊற்றி சாகுபடி பண்ணத் தேவையில்லை. மாமன்னர் சிவாஜியின் அம்மா ஜீஜாபாய் தன் குழந்தைப் பிராயத்தில் சிந்தாகேர் என்ற ஊரில் வாழ்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. அந்த ஊரைக்கடந்து தான் சென்றேன். அங்கு பேருந்து நிலையத்தில் சீதாபழங்களை தங்கள் முன்னால் குவித்துவைத்துக்கொண்டு விவசாயிகளின் மனைவிகள் அமர்ந்திருந்தார்கள். நான் சில பழங்களை வாங்கிக்கொண்டு தாளில் சுற்றி என் சேலையின் முந்தானையில் முடிந்துகொண்டேன். அவற்றை மென்றுகொண்டே ஜீப்பில் சென்றேன். கைகளில் பழச்சாரு வழிந்தது.

நம் குடும்பத்தில் யாருமே புல்தானா மாவட்டத்துக்கு வந்ததில்லை.  புல்தானா மகாராஷ்டிரத்தின் வடக்கு எல்லையில் மத்திய பிரதேச மாவட்டத்துக்கு அருகே உள்ளது. ஆனால் விதர்பா, மராத்வாடா நிலங்களைப்போல உப்புக்கரிக்கும் மண்ணுடைய நிலம் அல்ல இது. கோடைகாலத்தில் வந்திருந்தால் மலைகள் பழுப்பு நிறத்தில் தென்பட்டிருக்கலாம். இப்போது மழைக்காலமும் கூதிர்காலமும் கடந்துவிட்டது. பனிக்காலத்தொடக்கம். தொடுவானை நிறைக்கும் பேரழகுடைய மலையடுக்குகள். சாலையில் செல்கையில் இருபுரமும் மலைகள் அலைகளைப்போல பாய்ந்தெழுந்து  வருகின்றன.

பூமியே நம் கையை பிடித்து அவள் விளையாட்டுக்களத்துக்கு இழுந்துசெல்கிறாள் என்பதுபோல. இப்பகுதியில் செல்லும் வழியெங்கும் நிறைய ஏரிகள் காணக்கிடைத்தது. எங்கு காணிணும் வான்பிம்பத்தை தாங்கிய நீர்வாவிகள். பெரும்பாலும் பருத்தியும் அரக்க மரத்தையும் தான் மாற்றி மாற்றி பயிரிட்டிருக்கிரார்கள். ஆங்காங்கே கரும்பு சாகுபடி. சீக்கிரமே வயதாகி கிழண்டுவிட்ட வீட்டுப்பெரியவர்களைப்போல் கரும்பு பயிர்கள் குழம்பி கொத்துகொத்தாக நிற்கின்றன. சாகுபடிக்குப் பிறகு சோளம் பயிரிடுவதற்காக வயல்களை உழவுக்கு தயார் செய்துகொண்டிருக்கின்றார்கள். கரிசல் மண். எங்கு பார்த்தாலும் கரிசல் தான். பிறந்தது முதல் அது ஒன்று மட்டும் தான் மண் என்று தெரிந்து வளர்ந்திருக்கிறேன். வங்காளத்தில் மண் சிவந்து இருக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன்…

ஷோக்யொ புல்பரப்பில் கால்நீட்டி படுத்திருந்தான். நேர்த்தியாக கத்திரித்து வெட்டப்பட்ட புல்வெளி அல்ல அது. கரடுமுரடாக இருந்தாலும் பாசமாக தாங்கிக்கொள்ளும் காட்டுப்புல்லின் மடி. புல்,  களைச்செடி, கொடி என்று எல்லாம் சேர்ந்து ஒழுங்கில்லாமல் வளர்ந்திருந்த கரட்டு நிலம். இது ஏரியின் மேற்குக்கரை. நீரின் விளிம்பை நோக்கி சரிந்து இறங்கியது. ஏரியின் வடக்கு கரை ஒப்புநோக்க அவ்வளவு சரிவாக இல்லை. ஏரி ஆழமாக குழிந்த கிண்ணம்போல இருந்தது.  குழிக்குள் நீர் தேங்கியிருந்தது. இப்போது மதியவேளை. குருவிகள் ‘சீப் சீப்’ பென்று குரல் எழுப்பின. நடுநடுவே காகங்கள் கரைந்தன. குறுகிய ப்ளம் மரத்தின் கோணலான நிழல் காற்றில் அசைந்தாடியது. அம்மாவின் கடிதம் ஷோக்யொவின் நெஞ்சின் மேல் கிடந்தது. அந்த கடிதத்துக்கு முப்பது வயதாயிருந்தது. அவள் தன்னுடைய கடிதங்கள் எவற்றையும் யாருக்கும் அனுப்பியதில்லை.

ஏரியின் கரையில் அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரு பழைய பங்களா இருந்தது. முன்பு எப்போதோ அது இளமையுடன் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போது ஆளில்லாமல், பராமரிக்கப்படாமல் உணர்ச்சியின்றி கிடந்தது. ஷோக்யொவின் பளபளக்கும் வெள்ளை இன்னோவா வண்டி அந்த பங்களாவின் வாசலில் நின்றது. அந்த வண்டியின் ஓட்டுனர் பலராம், வண்டி மீது வழியில் படிந்திருந்த மண்ணையுன் புழுதியையும் மெனக்கெடுத்து துடைத்துக்கொண்டிருந்தார். தானாக சென்று பங்களாக்குள் எங்கிருந்தோ ஒரு வாளி, ஒரு சொம்பு, துடைக்க ஒரு துணி என்று பொருட்களை கண்டுபிடித்து கொண்டு வந்தார். அந்த இல்லத்தில் குளிக்க வசதி இருந்ததா என்று பார்க்க உள்ளே சென்றிருந்த ஷோக்யொவின் அக்கா ஊர்வசியை இன்னும் காணவில்லை. கொஞ்சம் தொலைவில் சுற்றுலா துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்றும் இருந்தது. நன்றாக பராமரிக்கப்பட்டது. ஷோக்யொவும் ஊர்வசியும் அங்கே அறைகள் முன்பதிவுசெய்திருந்தார்கள். ஆனாலும் இந்த பங்களா அவர்களுக்கு முக்கியமான இடம். அம்மாவின் கடிதத்தில் இந்த பங்களா பற்றிய குறிப்பு இருந்தது.

மஞ்சள் புடவையின் முந்தானை பறக்க ஊர்வசி பங்களாக்குள்ளிறிந்து வெளிவந்தாள். குளிர்பதப்படுத்தப்பட்ட நான்கு மணிநேர பயணத்தில் அவளுடைய நேர்த்தியான தலை அலங்காரம் துளிகூட குலைந்திருக்கவில்லை. கூந்தலின் ஓர் இழைக்கூட அது இருக்க வேண்டிய இடத்தை விட்டு விலகவில்லை. நகச்சாயம், உதட்டுச்சாயம், எல்லாம் சீராக இருந்தது. பங்களாவின் பாதுகாப்பாளர் தன்னால் இயன்ற அளவுக்கு குளியலறையை சுத்தம்செய்திருந்தார். கொஞ்சம் மங்கியிருந்தாலும் நன்றாக துவைத்த படுக்கைவிரிப்புகளை விரித்து அறைகளை தயார் படுத்தியிருந்தார். ஆனால் அத்தனை வருடங்களாக அந்த இல்லத்தில் படிந்திருந்த அழுக்கையும் ஒட்டடையையும் நினைவுகளையும் அவரால்  ஒரேயடியாக அகற்றமுடியவில்லை. ஏரியின் விளிம்பை ஒட்டி கட்டப்பட்டிருந்த முள்வேலி ஆங்காங்கே தோய்ந்துபோய் இடைவெளிகள் உருவாகியிருந்தன. அப்படியான ஓர் இடைவெளிக்குள் நுழைந்து ஊர்வசி சரிவில் இறங்கி வந்துகொண்டிருந்தாள். கடிதங்கள் நெஞ்சின் மேல் மடிந்து படுத்திருக்க ஷோக்யொ அவளை நோக்கிக்கொண்டிருந்தான்.

முப்பதாண்டுகளுக்கு முன் அம்மாவுக்கு அக்காவின் இப்போதய வயது தான். ஆனால் அக்கா அம்மாவை விட அழகாக, வசீகரமாக இருந்தாள். அம்மாவால் இப்படி பால்போல் வெளுப்பான காரில், பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு பயணம் செய்வதையெல்லாம் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. அம்மா புடவையில் புழுதி ஏறி, கூந்தலில் தூசி படிந்து, புடவை தலைப்பில் சீதாபழங்களை முடிந்துகொண்டு எரிகல் ஏரிக்கு வந்தாள். ஆனால் அவள் அந்திவேளையில், பொழுதணையும் தருவாயில் நெஞ்சில் பெரும் ஏக்கத்துடன் வந்து சேர்ந்திருக்கிறாள் – அஸ்தமனம் ஆகிவிட்டால் எதையுமே பார்க்கமுடியாதே! ஷோக்யொவும் ஊர்வசியும் இந்த பதட்டத்தை தவிற்க்க திட்டமிட்டு சாவகாசமாக பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் அவுரங்காபாத். அங்கிருந்து காரில் புல்தானா, வழியில் சில்லோடை பார்த்தபடி. நடுமதியவேளையில் வந்து சேர்ந்தால் எந்த புதிய இடமும் பரவாயில்லை, பழகிவிடலாம் என்று தோன்றுவதுண்டு. ஆளரவமற்ற இந்த காட்டின் விளிம்பில் இப்படி தனித்து படுத்திருக்கையில் வெவ்வேரு பறவைகளின் கீச்சுக்களையும் இலையுதிரும் ஒலிகளையும் கேட்கலாம். சாவகாசமாக அந்திவேளைக்காக காத்திருக்கலாம்.

அக்காவை பார்க்கும்போது ஷோக்யொவை குத்திய குற்றவுணர்வு கண்படாத காயமாக குருதி கசிந்தது. இன்று அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவளை விமானத்திலும் வெள்ளைக்காரிலும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம். அக்கா தோளில் ஒருகையையும் தன் தோளில் மறுகையையும் தாங்கியைபடி வெட்கப்புன்னகையுடன் அவள் அந்தச் சரிவில் இறங்கி வந்திருப்பாள். அவள் இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. பிள்ளைகளுக்கு அவள் விட்டுச்சென்றது பணமும் சொத்தும் அல்ல, கணக்கிடமுடியா கடிதங்களை மட்டும் தான். உறையில் இட்டு அஞ்சல்தலை ஒட்டப்பட்டு தபாலில் சேர்க்கப்படாத கடிதங்கள். வெவ்வேறு ரயில்நிலயங்களிலிருந்தும், சாலையோரங்களிலிருந்தும், பேருந்து நிலையங்களிலிருந்தும், அஞ்சல் அலுவலகங்களிலிருந்தும் எழுதினாள். அவ்வப்போது வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவாள். அவளுடைய குறைந்த வருமானத்துக்குள் பேருந்திலோ ரயிலிலோ நடந்தோ பயணம் செய்வாள். வீடு திரும்பியதும் அவள் சென்றுவந்த இடங்களை பற்றி குழந்தைகளுக்கு கடிதம் எழுதுவாள்.

பயணம் அம்மாவுக்கு ஒரு போதை என்று ஷோக்யொ எண்ணிக்கொண்டான். தாத்தா வீட்டில் விடிந்தால் அம்மாவுக்கு வீட்டுவேலைகள், சமையல், நாள் பட்ட பாடு. தாத்தா வீட்டில் அவ்வளவு வசதி கிடையாது. திருமணமான மகள் வாழ்க்கை முழுவதும் தன் வீட்டிலேயே வாழ நேர்ந்ததனால் உண்டான வலிகளை – மனவலி மட்டும் அல்ல, பொருளாதார வலியும் தான் – அனுபவித்தவர் தாத்தா. ஆனால் அவரால் முடிந்த மட்டுக்கு ஷோக்யொவின் பாட்டியையும் அம்மாவையும் நன்றாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தார்.

சலிப்பினால், தனிமையுணர்வால், அம்மா அவ்வப்போது ஆற்றாமையுடன் இருந்திருக்கவேண்டும். தன் நெஞ்சம் தேடிய மனங்களோடு சேர்ந்து வாழ எவ்வழியும் இல்லை என்று அறிந்திருந்தவள் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பயணம் செய்யத் தொடங்கியிருப்பாள். உண்மையைச்சொன்னால் அந்தக் கடிதங்கள் அவளுடைய பயணக்குறிப்புகள் – இல்லத்துக்கு சில நாட்கள் வந்து தங்கிவிட்டுச்சென்றதன் குறிப்புகள், மீண்டும் புறப்பட்டுக் கிளம்பித் திரிந்த நாட்களின் குறிப்புகள்.

கோடை வெயிலில் இப்பகுதியின் மலையும் மண்ணும் வறண்டாலும், மழையில்லா நிலத்தை வெப்பம் சுட்டெரித்தாலும், ஏரியின் சரிவுகளில் பச்சைப்பசேலென்று காடு வாழ்கிறது. ஏறியின் குழிவான கிண்ண வடிவம் காற்றின் சுழற்சியை தடுக்கிறது. நீரின் அருகாமையால் நீராவி இருந்துகொண்டே இருக்கிறது. இக்காரணங்களால் ஏரியை ஒட்டிய காடு, மரம் செடி கொடிகளோடே இருந்தது. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் நசீம் மரங்களை அடையாப்படுத்தினான்.

கொன்றை, நெல்லி, பலாசம், புங்கை, ஆலம், வில்வம், வேம்பு போன்ற மரங்களைத்தவிர நிறைய சந்தனமரங்களும் செறிந்திருந்தன. இவற்றைத்தவிர தாமல், ச்லாட், கரடி, ஜிமுலா, பாலேரி என்ற வட்டாரப்பெயர்கள் கொண்ட செடிகளும் பசன், பாபல், முரத் கோங், சஞ்சீவனி, சாகர்தத் போன்ற கொடிகளும் இங்கு காணக்கிடைத்தன. இயற்கை இந்த இடத்தில் செழிப்புடன் திகழ்ந்தது. உலகம் முழுவதிலிருந்தும் விஞ்ஞானிகள் இங்கு வந்து மண்ணையும், பாறைகளையும், செடிகொடிகளையும், நிலத்தையும், நீரின் உப்புத்தன்மையையும் ஆய்வு செய்திருந்தார்கள். இவை செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வுகளின் பகுதியாக செய்யப்பட்டவையாம். பலவிதமான பாம்புகள், உடும்புகள், மான்கள், மயில்கள், குரங்குகளும், விதவிதமான, வண்ணவண்ண பறவைகளும் இப்பகுதியில் வாழ்ந்தன. நசீம் பலவிதமான கிளிகள், ஆந்தைகள், வாத்துகள், தூக்கணாங்குருவிகள் எல்லாம் பார்த்திருந்ததாக சொன்னான்.

அவன் அன்னப்பறவைகள் நீரில் விளையாடுவதை பார்த்திருக்கிறான். ஃபிளமிங்கோ பறவைகள் சிறகுவிரித்து வானில் பறப்பதை கண்டிருக்கிறான். அவனுடைய துள்ளளும் துடுக்கும் ஆர்வமும் அந்த இடத்தை சற்று மிகையுடன், இன்னும் கொஞ்சம் வண்ணமயமாக காட்சிப்படுத்தியது. வேலையும் நிலமும் இல்லாமல் ஏரியருகே ஒரு கிராமத்தில் குடிசைவீட்டில் வாழ்ந்தான் நசீம். தம்பிதங்கையரோடும் பெற்றோறோடும் தான் வாழ்ந்த நிறமற்ற வாழ்க்கையில் பயணிகளும் சுற்றுலாக்காக வருபவர்களும் தான் கொஞ்சம் வண்ணம் சேர்த்தனர். தரமான சிகரெட்டுகள், கைமாற்றாக கொஞ்சம் பணம், சுவாரஸ்யமான உரையாடல்கள் கிடைத்தது.

“இங்கு காளிதாஸ் என்று யாராவது இருக்கிறார்களா? ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். என்னுடைய அம்மா அவரை பற்றி எழுதியிருக்கிறார், அவரை சந்தித்ததாக… அவரை இங்கு வரவழைக்கமுடியுமா?”

“காளிதாஸ் சாச்சாவா?” என்றான் நசீம். “பேருந்து நிலயத்தில் இருக்கும் கடையில் தேடினீர்கள் என்றால் ஒரு வேளை அந்த புத்தகம் கிடைக்கலாம். ஆனால் அவருக்கு கண் மங்கிவிட்டது. பார்வை சரியில்லை. அவர் வீட்டை விட்டு இப்போது எங்கும் செல்வதில்லை.”

நான் போய் சேர்வதற்கு முன்னாலேயே பொழுதணைந்துவிடும் என்று எனக்கு கவலையாக இருந்தது. இரவு தங்க ஏற்பாடுகள் ஏதும் செய்திருக்கவில்லை, அப்படி செய்யக்கூடிய நிலையிலும் நான் இல்லை. எனக்கு அதை பற்றியெல்லாம் கூட கவலையில்லை. கண்டிப்பாக ஓர் இரவுக்கு ஒண்ட ஏதாவது இடம் கிடக்காமல் போகாது. ஆனால் பொழுதணைந்துவிட்டால் …  இவ்வளவுதூரம் பயணம் செய்து பார்க்க நினைத்த காட்சிக்கு முன்னால் இருளில் நிற்பதென்றால்… அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரொம்ப கஷ்டப்படும் மனது. முன்பனிகாலத்தில் இப்பகுதியில் சூரியஉதயம் கொஞ்சம் பிந்தித்தான் நிகழும், காலை ஒரு ஏழேகால் மணி வாக்கில். ஆனால் மாலை ஆறு மணிக்கு முன்பாகவே இருட்டிவிடும்.

‘ஜீப் ஆங்காங்கே நின்று மக்களை ஏற்றிக்கொண்டது. சரக்கு மூட்டைகள் வண்டிமேல் ஏற்றப்பட்டன. வண்டியின் பக்கவாட்டில் நான் ஒரு இருக்கையை பிடித்திருந்தேன். முடிந்திருந்த என் முந்தானையில் சீதாபழங்களில் விதைகள் குலுங்கின. முகத்தில் அறையும் காற்று. சாலையின் இருமருங்கும் அறுவடையான நிலம். அலையலையாக மலைகளிலிருந்து எழுந்து சிறகுவிறித்து நிலத்தில் படர்ந்தன பெயரறியா மணங்கள்.

அந்த கிராமத்துக்கும் ஏரியின் பெயர் தான். லோனார். தொலைந்துபோன, உப்புக்கரித்த ஊரின் பெயர் போல் இல்லை? சிற்றூர்தான், ஆனால் பிரபலமான இடம். சாலையோர மைல்கற்களில் அதனால்தான் அந்த ஊரின் பெயர் இருந்தது. நான் எண்ணிக்கொண்டே வந்தேன்… முப்பது, இருபத்தைந்து, பதினைந்து, பன்னிரெண்டு…ஏரியின் முதற்காட்சி எப்படியிருக்கும் என்று கனவுகண்டபடியே சென்றேன். நீரும் அதில் கவிந்த வானின் பிம்பமும் லோனாரை அடைகையிலேயே ஒளிர்ந்து மின்னுமா? ஜீப்பிலிருந்தே அதை பார்க்கமுடியுமா? ஏரி சாலையை ஒட்டி இருந்ததா, அல்லது இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டுமா… இப்படியான எண்ணங்கள்.

‘ஐந்தரை, ஐந்து நாற்பது… என் கைகடிகாரம் சற்றே வேகமாக சுழல்வதாகத் தோன்றியது. கிராமத்தின் மையச் சந்திப்புச் சாலையைக்கடந்து ஒரு சந்துக்குள் ஜீப் நுழைந்தபோது கூட்டம்கூட்டமாக மாடுகளும் எருமைகளும் எங்கள் வழியை மறித்தன. அவற்றின் குளம்புகள் மெல்ல நகர புழுதி பறந்தது. அவை அணிந்திருந்த கழுத்துமணிகள் அந்தியை வரவேர்ப்பதுபோல் ஒலியெழுப்பின. நான் ஓட்டுனரிடம் கெஞ்சி மன்றாடினேன், அவற்றை சுற்றி நம்மால் சென்றுவிடமுடியாதா, வேறு வழியில்லையா என்று…

கிராமம் எங்கள் பின்னால் மறைய குழியேரியின் எந்த அறிகுறியும் இல்லை. மறுபடியும் வழி தவரிவிட்டேனா? மற்ற பயணிகளுக்கோ ஓட்டுனருக்கோ என் இக்கட்டை பற்றிய எந்த கவலையும் இல்லை. அவர்கள் அனைவரும் அந்நாளின் வேலை முடிந்து கணக்குகளை சரிபார்த்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தனர். ஓட்டுனரோ ஒவ்வொரு நாளும் இந்த வழியாகச் சென்றுக்கொண்டிருப்பவர். ஒரு வழியாக ஜீப் சாலையோரமாக பானைகளும் சட்டிகளும் குடங்களும் ஜாடிகளும் அடுக்கப்பட்டிருந்த ஒரு குயவனின் பட்டறைக்கருகே தடதடவென்று நின்றது. ‘நீ இங்கே இறங்கிக்கொள், நாங்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது,” என்றார் ஓட்டுனர். சூரியன் அடிவானில் மறையத் தொடங்கிவிட்டிருந்தது. அழுதுவடிந்த ஆரஞ்சு-ஊதா ஒளியால் வானம் நிறம்பியிருந்தது. இன்னமும் எவ்வளவு தூரமோ. என் தோளில் பையை சரிசெய்துகொண்டு அவர்கள் சுட்டிக்காட்டியிருந்த திசையை நோக்கி ஓடத்தொடங்கினேன். ஒரு பழைய அரசாங்க பங்களாவின் பின்புரம் கண்ணுக்குத் தெரிந்தது. அதன் மர கேட் திறந்திருந்தது. அதன் வழியாக நான் பாய்ந்து ஓடிச்சென்றபோது…எப்படிச்சொல்வேன்… ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முந்திய நாள் ஒன்று என் முன் எழுந்தது…

தீக்கொழுந்து போன்ற சூரியனின் பிம்பத்தை ஏரிக்குழியின் ஆழம் ஏந்தியிருந்தது. ஆனால் சூரியன் நேரடியாக நீரில் மூழ்கவில்லை. குழியேரி கிண்ண வடிவில் இருந்தது. மண்ணும் பாறைகளும் பூமியிலிருந்து அகழப்பட்டு கிண்ணத்தின் விளிம்பு போல ஏரிக்கரையை மலைகளாக சூழ்ந்து நின்றது. சூரியன் மலைகளுக்கு அப்பால் மறைந்தது. நான் வருவது வரை காத்துக்கொண்டிருந்தது போல. அதன்பின் மெதுவாக, வேண்டாவெறுப்பாக, காலடிகளை பின்னால் எடுத்துவைத்தபடி அது தன்னுடைய ஒளித்தோகையை ஏரியின் விளிம்பில் மறைத்துக்கொண்டது. அதையும் மீறி ஊதாநிறம் பாவிய கருமை வானில் இன்னும் சற்று நேரம் நிலைத்திருந்தது, நீலஇழைகள் ஓடிய கருமை, சொல்கடந்த மறைவொளி மாந்திய கருமை… அந்த சிற்றொளியில் நான் ஓர் ஏரியைப் பார்த்தேன். ஆறு, ஆறரை கிலோமீட்டர் பரப்புள்ள ஏரியின் முட்டை வடிவான நீர் சலனமில்லாமல் சல்லாத்துணிப்போல் கிடந்தது. அதைச்சுற்றி அந்திபோர்த்திய பசுங்காட்டின் செறிவு. கூடணையும் பறவைகளின் கூக்குரல்கள். சிள்வண்டுகளின் கிறீச்சுகள். எழுந்து வானில் மறையும் பூச்சிகளின் ரீங்காரங்கள்…

என் மனதில் இனம்புரியாத ஆனந்தம் கண்ணீரோடு கலந்து பொங்கி வழிந்தது. என் கண்கள் இருட்டுக்கு பழகியதும் நான் அங்கு வேரொருவரும் இருந்ததை கவனித்தேன். முள்வேலிக்கு அருகே அமர்ந்திருந்தார். அவர் தான் காளிதாஸ் புரந்தரே…”

ஊர்வசி ஷோக்யொ படுத்துக்கொண்டிருந்த இடத்தை மெல்ல அணுகினாள். முட்களையும் பூச்சிகளையும் ஈரத்தையும் தவிர்த்தபடி அவன் அருகே கவனத்துடன் அமர்ந்தாள். இந்த புடவையை உடுத்திக்கொண்டு இங்கு வந்திருக்கக்கூடாது, என்றாள். ஷோக்யொவின் நெஞ்சின் மீதிருந்த கடிதத்தை படிப்பதற்க்காக எடுத்து பிரித்தாள்.

‘எவ்வளவு விந்தையான விஷயம் இல்லையா? அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வந்தார்கள், ஆனால் அவர்களுக்கு இக்காட்சியைக்காண ஒரு நொடிக்கான பகல்வெளிச்சம் தான் அமைந்தது. நாம் இன்று சூரியஸ்தமனத்தை சாவகாசமாக இருந்து பார்த்துவிட்டுப்போக முடியும். மெதுவாக அனுபவித்து பார்க்கலாம்,” என்றால் ஊர்வசி.

ஷோக்யோ படுத்தபடியே தலையசைத்தான். “இல்லை, நாம் இவ்வளவு திட்டம்போட்டு ஒருங்கிணைத்துக்கொண்டு வந்தாலும் அம்மாவுக்கு அந்த இரண்டு நொடிகளில் கிடைத்த அனுபவம் நமக்கு வாய்க்கப்போவதில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அம்மா ஆர்வமும் குதூகலமும் உணர்ச்சிகரமும் சோர்வுமாக ததும்பிக்கொண்டிருந்தார்கள். நாம் இப்போது அவர்களை விட வாழ்க்கையில் முன்னேறிவிட்டோம், ஆனால் மிகவும் ஜாக்கிரதையானவர்களாக, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பவர்களாக மாறிவிட்டோம். நம்மை கண்டால் அம்மா அடையாளம் கண்டுகொள்வார்களா என்றே சந்தேகமாக உள்ளது.”

அம்மா இந்த இடத்தை பற்றி சொல்லும்போது தொலைந்துபோன, உப்புக்கரித்த ஊரின் பெயர் போல் உள்ளதாக எழுதியிருந்தாள். இங்கு பலகாலமாக உப்பு வியாபாரம் நடந்து வருவதாக நசீம் சொன்னான். ஏரியை சுற்றி இருக்கும் பாறைகளில் நீர் ஆவியாகும்போது உப்பு மீந்துவிடும். இந்த உப்புக்குவியல்களுக்கு புஷிகி என்று பெயர். மழைக்காலத்தில் அவற்றை ஏரிநீரிலிருந்து பிரித்தெடுப்பார்கள். எரிகல்  லிலிருந்து வந்ததினால் தான் உப்புக்குவியல்கள் நீரில் மீண்டும் கரைவதில்லையா?

ரிக்வேதத்தில் இந்தக்கதை உள்ளது. தண்டகன் என்னும் மன்னனின் தலைநகர் மதுமதி வெடித்து சிதறி அழிந்தது. கதையின் திரி மறுபடியும் காசியபமுனிவரின் மனைவி திதியுடன் தொடர்கிறது. அவளுடைய மகன்கள் காயாசுரன் மற்றும் கோலாசுரன் விஷ்ணுவினால் கொல்லப்பட்டார்கள். மற்றொரு மகன் லவனாசுரன் தன் தங்கைகளுடன் லோனாருக்கு தப்பி ஓடிவிட்டான். அப்போது இந்த ஏரிக்கு கல்லாலான கூரை இருந்ததாக சொல்லப்படுகிறது. லவனாசுரனால் தப்பிக்கமுடியவில்லை. விஷ்ணு வந்து கூரையை காலால் ஓங்கி எத்தினார். அது பறந்து நாற்பது மைல் தூரத்தில் தக்கலில் சென்று விழுந்தது. விஷ்ணுவுக்கு தைத்யசுதன் – அரக்கர்களை அழிப்பவன் – என்ற பெயர் வந்தது. இறந்த அசுரனின் குருதி மருத்துவ குணங்கள் கொண்ட உப்பு நீராக மாறியது. ஆரியக்கடவுள்களின் வெற்றிக்கதைகள் எழுதப்பட ஒரு பழங்குடி தலைவன் கொல்லப்பட்டாகவேண்டும். பழங்குடித்தலைவனை அரக்கனாக அறிவித்துவிட்டுதான் அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும். இதெல்லாம் காலத்தின் மடிப்புகளுக்குள் அமுங்கிப்போனது. லோனார் விஷ்ணுகயா ஆனது. பாபவிமோசனம் தேடுபவர்கள் யுகம்யுகமாக இங்கே நீராடி வருகின்றனர்…

இந்த நீராட்டு விவகாரமெல்லாம் காளிதாஸ் புரந்தரேவுக்கு உவப்பளிக்கவில்லை. அவர் லோனார் கிராமத்தில் வசித்தவர். கல்லூரி படிப்பைத்தாண்டி கணிதம், வரலாறு, வானியல் என்று நிறைய வாசித்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும் ஸ்மித்சோனியன் ஆய்வகத்திலிருந்தும் இங்கு அவருடன் உரையாடுவதற்க்காக அறிஞர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர் எப்போதும் இந்த ஏரிக்கருகே தான் இருப்பார். மரங்களை, செடிகளை, விலங்குகளை, பறவைகளை, பூச்சிகளை, பாறைகளை கவனித்துக்கொண்டே இருப்பார்.

அவர் நிறைய கடிதங்கள் எழுதக்கூடியரும் கூட. திரும்பிப்பார்த்தால் குடியரசுத் தலைவருக்கும் பிரதம மந்திரிக்கும் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சருக்கும் பக்கம்பக்கமாக கடிதம் எழுதிவிட்டிருப்பார். பிரபஞ்ச அதிசயமான இப்பழம்பெரும் ஏரி பாதுகாக்கப்படவேண்டும் என்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று எழுதினார். துணிகளை சலவை செய்யவும் குளிக்கவும் கோயில் கழிவுகளை கொட்டும் இடமாகவும் ஏரியை உபயோகப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி எழுதினார். இல்லையென்றால் இந்த ஏரியும் அதை சுற்றி வாழும் பல்லுயிர்களும் காட்டு வளமும் அழிந்துவிடும் என்றார்.

அந்த வட்டாரத்து மக்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை, ஆனால் அவர்கள் காளிதாசை கொஞ்சம் விசித்திரமான மனிதராகவே எண்ணினார்கள். அவரை பற்றி கூடிப்பேசிச் சிரிப்பார்கள். அவருடைய கடித எழுத்தால் தங்கள் அன்றாட வாழ்வு குலையும் என்று அவர்கள் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அது நடந்தது. நசீம் அந்தக்கதையை சொன்னான். ஷோக்யோ அதை கற்பனைசெய்ய முயற்சித்தான். காளிதாஸ் புரந்தரே இந்த ஏரியைச்சுற்றி வந்து எத்தனை பொழுதுகளை கண்டிருப்பார்! எத்தனை விடியல்கள், மதியங்கள், மாலைகள், இரவுகள்! தன்னுடைய சொந்த பணத்தை போட்டு சிறு பிரதிகளாக ஏரியை பற்றிய புத்தகங்களை வெளியிட்டார். கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார். இப்போது அவர் கண்களால் எதையுமே பார்க்கமுடியவில்லை.

கடிதத்தின் முடிவில் அம்மா எழுதியிருந்தார்கள். நீங்கள் இருவரும் பெரியவர்களானவுடன் இங்கு வரவேண்டும். வருவீர்கள் அல்லவா? நீங்கள் வந்தால் தான், இந்தக்காட்சியை நீங்கள் பார்த்தால் தான், என் மகிழ்ச்சி பூரணமாகும். காளிதாஸ் என்னிடம் ஒரு படம் தருவதாக சொன்னார். இங்கு ஒரு ஸ்டூடியோ புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட படம். ஆனால் அதில் என்ன தெரிந்துவிடப்போகிறது?

“ஷோக்யோ, கடிதத்துடன் புகைப்படம் ஏதாவது இருந்ததா?”

“அப்படி ஒன்றும் இல்லையே, அக்கா? இருந்தாலும் என்னிடம் வரவில்லை.”

அம்மா இறந்து பத்து வருடங்கள் ஆகின்றன. அம்மாவை தாக்கியிருந்த நோய் எவ்வளவு கொடியது என்று ஷோக்யோவுக்கு இப்போது தான் புரிந்தது. அப்போது அதன் அறிகுறிகளை யாரும் காணவில்லை. ஷோக்யோவின் திருமணம் ஒரு சில மாதங்களில் நிகழவிருந்தது. அம்மா திருமணத்திற்கு பிறகு அவர்களுடன் வந்து தங்குவதாக சொல்லியிருந்தார்கள் – ஷோக்யோவுக்கு அதுவே பெரிய திருப்தி.

அக்காவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் திருமணமாகியிருந்தது. அப்பாவும் அப்பா வழி தாத்தா-பாட்டியும் அம்மாவை அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒளித்து வைத்திருந்தார்கள். அவள் அங்கு வந்தால் அமங்கலமாம். கல்யாணத்தையே குலைத்துவிடுமாம். வீட்டின் நிலைமையை புரிந்திருந்த அக்கா தனிமையில் அழுதபடி அடங்கியிருந்தாள். அப்பாவின் ஆத்திரமும் குரூரமும் குருட்டுத் தீமையும் அவர்கள் அறிந்தது தான். ஆனால் ஷோக்யோ கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினான். அம்மாவிடம் சென்றான். அம்மா தான் அவனை சமாதானப்படுத்தி திரும்ப அனுப்பினாள். ஷோக்யோவும் இல்லையென்றால் அக்கா இன்னும் வருத்தப்படுவாள்; நீ திருமணம் செய்துகொள்ளும்போது நான் உன்னுடன் வந்து இருக்கிறேன், என்றாள் அம்மா. உன் அக்காவின் திருமணம் பாதகமில்லாமல் நடக்கட்டும் என்றாள்.

அம்மா எப்படிபட்டவள்? ஆச்சாரமானவளா? நவீன பெண்ணா? புத்திசாலியா? அசடா? பிடிவாதக்காரியா? அடங்காப்பிடாரியா? தன் வாழ்க்கையே தன் கையிடுக்குகள் வழியாக நழுவிச்சென்றதை பற்றி அவளால் எதுவுமே செய்யமுடியவில்லை. வெறுமனே ஓர் ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதைத்தவிர. அவள் அப்படி உட்காரக்கூடியவள் அல்ல தான். எதையாவது செய்துகொண்டே இருந்தாள். பயணம் செய்தாள். வெவ்வேரு இடங்களில், காட்சிகளில், நிகழ்வுகளில், மாயங்களில் தன்னை கண்டடைய முயற்சிசெய்துகொண்டே இருந்தாள்.

அப்பாவுக்கு சமூக அந்தஸ்தும் கல்வியும் நட்புச்சூழலும் புகழும் இருந்தது. ஆசிரியராக வெகுவாக மதிக்கப்பட்டவர். ஆகவே அவருடைய மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் மற்ற ஆசிரியர்களும் அவருடைய ஒழுக்கமீறல்களை ஒரு பொருட்டாக கோள்ளாமல் கடந்து சென்றனர். அம்மாவால் அப்படி எளிதாக கடந்துசெல்லவோ அவற்றை ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. மானத்துடன் அவருடைய சகதர்மினியாக இணைந்துவாழ விருப்பப்பட்டாள்.

திருமணமான சில நாட்களிலேயே அன்பையும் பாசத்தையும் இந்த மனிதரிடம் எதிர்பார்க்கமுடியாது என்று புரிந்துகொண்டுவிட்டாள். ஆனால் வாடிக்கையாகிவிட்ட பொய்பித்தலாட்டங்களோடும் தகாத தொடர்புகளோடும் குடித்தனம்நடத்த அவளால் முடியவில்லை. மாமியார் மாமனாரிடம் முறையிட்டு பயனில்லை. அவர்கள் மகனைபற்றி எந்த எதிர்மறையான விஷயத்தையும் கேட்கத் தயாராக இல்லை. அதுவம் இவ்வளவு புத்திசாலியான, வாழ்க்கையில் வெற்றியடைந்த மகனை பற்றி ஒரு சொல் கூட கேட்கத் தயாராக இல்லை. ஒத்துப்போகவில்லையென்றால் விவாகரத்து வாங்கிக்கொண்டு போ என்று சொல்லிவிட்டார்கள்.

பிள்ளைகள் பிறந்தால் கணவர் மாறி விடுவார், ஊர் மேய்வதை விட்டுவிட்டு அன்போடும் பரிவோடும் குடும்பத்தை கவனிப்பார் என்று நினைத்திருந்தாள். அதுவும் நிகழவில்லை. ஊர்வசி பிறந்தாள், பின் ஷோக்யொ. குழந்தை பெற்றுக்கொள்வதில் அப்பாவுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. குருதிச்சுவை அறிந்த புலி பின்வாங்குவதில்லை. அது மனிதர்கள் வாழும் இடங்களுக்குள்ளும் புகுந்து தன் வேட்டையை தொடரும். ஷோக்யோவின் அப்பாவும் மாறவில்லை. ஷோக்யோவுக்கு மூன்று வயதாக இருந்தபோது அம்மா வீட்டை விட்டு வெளியேர முடிவெடுத்தாள். அவனுடைய தாத்தாவும் பாட்டியும், “கிளம்பு, உன்னை யார் தடுக்கிறார்கள்”, என்றார்கள். ஆனால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு செல்லலாம் என்று நினைக்காதே. ஒழுக்கமற்ற ஓடுகாலித் தாய் தன்னந்தனியாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ள மாட்டாள் என்றார்கள். விவாகரத்து கோரியிருந்தாலாவது குழந்தைகளை தன்னுடன் வைத்துக்கொள்ள போரிட்டிருக்கலாம். ஆனால் தன்னுடைய அப்பாவின் பொருளாதாரநிலையை நினைத்து அந்த முடிவை தவிர்த்தாள்.

விவாகரத்து வாங்கினாலும் தன் குழந்தைகளுக்கு சமூகம் ‘விவாகரத்தானவளின் குழந்தைகள்’ என்ற அடையாளைத்தை அளித்துவிடும். ஷோக்யோவின் தாத்தா-பாட்டிக்கு அம்மாவின் போரிடும் குணத்தை பற்றி நன்றாகவே தெரியும். ஆகவே விவாகரத்தை நோக்கி அவளை உந்தினார்கள். ஆனால் அவளுக்கு அந்த வழியில் செல்ல விருப்பமில்லை. ஐயமும் பயமும் அவளை தடுத்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அந்த வீட்டில் வாழும் கொடுமையை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே தன் பிறந்த வீட்டுக்கே திரும்பிவிட்டாள். அப்போது ஷோக்யோ குழந்தை, அக்கா இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அவள் போனால் என்ன, அவனுடைய தாத்தா-பாட்டிக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பேரப்பிள்ளைகளை சீராட்டி வளத்தார்கள்.

நல்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி சமூக நன்னடத்தைகளை சொல்லிக்கொடுத்தார்கள். பட்டம் போல் கேட்பாரில்லாமல் வானில் பறந்துகொண்டே இருந்தார் அப்பா. இந்த அமைப்பினால் அம்மாவின் பெயர் அவர்களின் நெஞ்சிலிருந்து மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது. எவ்வளவு விசித்திரமான வாழ்க்கை! சிறுவயதில் ஷோக்யோவுக்கு தாத்தா பாட்டி என்றால் அவ்வளவு பிரியம். ஏன், அவன் படித்து வேலைக்கு வரும் வரைக்கூட அந்த பிரியம் மங்கவில்லை. அம்மாவின் கொடிய நோயை பற்றி அறிந்துகொண்ட நாளில் தான் அவனுக்கு எல்லாம் புரிந்தது. அவனுள் ஒரு நெருப்பு தீமூண்டு எரியத்தொடங்கியது. அதுவரை அவ்வளவு பிரியத்துக்குரியவர்களாக இருந்தார்களே அந்த முதியவரும் மூதாட்டியும்! அவர்கள் உண்மையில் எவ்வளவு குரூரமானவர்கள்! அம்மாவை திரும்ப வரச்சொல்லி ஒரு முறைக்கூட அழைக்கவில்லை அவர்கள். ஒருமுறைக்கூட.

அவர்கள் அவள் மீது துளிக்கூட அன்பு வைத்திருக்கவில்லை. ஷோக்யொவும் ஊர்வசியும் அவர்களால்தான் அம்மாவின் தொடுகை என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக வளர்ந்தனர். இந்த குரூரருத்துக்கு மன்னிப்பே கிடையாது. ஊர்வசி அந்தளவுக்கு கடுமையாக இல்லை. அவள் அப்பாவோடும் தாத்தா-பாட்டியோடும் மேம்போக்கான ஒர் உறவை பேணிக்கொண்டு வந்தாள். ஆனால் ஷோக்யோவால் அப்படி இருக்க முடியவில்லை. எல்லா கட்டுக்களையும் உதறினான். இப்போது அவன் அம்மாவுக்கு மட்டுமே சொந்தம்.

அம்மா, இப்போது இல்லாத அம்மா, என்னாளும் திரும்ப வரப்போகாத அம்மா – அந்த அம்மாவுக்கு மட்டும் அவன் சொந்தம். எத்தனை இரவுகளில் அம்மா மெல்லிய ஜுரம் வந்து படுத்திருப்பார்கள்? ஷோக்யோவுக்கு தெரியாது. எங்கே வலி நோவும், எப்படி வலிக்கும், எதுவுமே அவன் அறிந்திருக்கவில்லை. மகனாக அவனுடைய உண்ணுணர்வால் அதை அறிந்திருக்கவேண்டும்; அந்த உள்ளுணர்வைத்தான் தாத்தா-பாட்டி சேர்ந்து பொசுக்கிவிட்டார்களே. வேறெப்படி நடந்ததெல்லாம் அவனுக்கு பிடிகிடைக்காமல் போனது? நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருந்தால் ஷோக்யொ அவளை குணப்படுத்தியிருக்கலாம். அந்த எண்ணம் அவனை தேள்கடியாக வதைத்தது. பொழுது சாய்ந்துகொண்டு வந்தது. ஒளியின் நிறம் மாற மாற ஏரியை சுற்றிய நிலத்தின் வண்ணமும் மாறியது. அங்கே காடுகளின் உள்மடிப்புகளுக்குள் சில பழங்காலத்து கோயில்கள் இருந்தன.

காளிதாஸ் புரந்தரே என்ன தான் சொன்னாலும், பௌர்ணமி இரவுகளிலும் அமவாசை இரவுகளிலும் மக்கள் அந்த காட்டுப்பாதைகள் வழியாக கோயிலுக்குள் சென்று காணிக்கைகளை செலுத்திவிட்டு வருவது அப்போதும் வாடிக்கையாகத்தான் இருந்தது. எல்லாயிடங்களிலும் அகல் விளக்குகளும் நெய்த்திரிகளும் காய்ந்த பூக்களும் இலைகளும் காகிதப் பாக்கெட்டுகளும் சிதரிக்கிடந்தன. தைத்யசுதன் ஆலயத்தின் முகப்பில் கற்படிகளில் நின்றபடி பூசாரிகள் சன்னமாக மந்திரங்களை ஓதுவார்கள். கமலஜா தேவியின் ஆலயத்திலிருந்து மணியோசைகளும் கிண்கிணியோசைகளும் காற்றில் எழுந்து வரும். பின்மதியம் மாலையானது. பறவைகளின் கீச்சுகள் காட்டிலும் அதன் மேல் படர்ந்த வானிலும் ஒலித்தன. அவை வெவ்வேறு பெயரறியா மரங்களின் கிளைகளுக்குள் பரந்தெழுந்தன. சூரியன் வானில் இறங்கிச்சென்றது. பற்பல வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு அந்திவேளையில்தான் குழியேரியை நோக்கி பேருந்திலும் ஜீப்பிலுமாக அம்மா பதைபதைப்புடன் விரைந்துகொண்டிருந்தாள், அந்தியையும் இருளையும் தோற்கடித்து முந்தி வரமுடியுமா என்ற வேகத்தில்.

வடமேற்கு திசையை சுட்டிக்காட்டி, ஷோக்யோ, அங்கே பார், அங்கு காடு அவ்வளவு அடர்ந்து இல்லை, ஒரு சிற்றொடையோ என்னவோ அங்கே உள்ளதுபோல் தெரிகிறது, என்றாள் அக்கா. அங்கு தான் நிலம் நன்றாக சரிந்து இறங்கியது. அந்த திசையில்தான் எரிகல்   மண்ணை நோக்கி இறங்கியதாக புரந்தரே எழுதியிருக்கிறார். எரிகல்   பூமிக்கு மிகக்குறுகிய கோனத்தில் வந்து இறங்கியது. அது பூமியை அறைந்த விசையில் புயலென எழுந்தது புழுதியும் காற்றும் மட்டுமல்ல, மிகுந்த வலியும் வேதனையும்தான். பூமியின் அதள பாதாளத்திலிருந்து எரிமலைப்பிழம்புபோல் அந்த வலி எழுந்து கிளம்பி வானில் குதித்தெழுந்து நிலங்களைத்தாண்டி பரவியது. எல்லாம் அடங்கியதும் அரக்கவடிவத்தில் வாய்பிளந்து திரந்து கிடந்த நிலத்துக்கு விளும்பாக கல்வடிவம் கொண்டிருந்தது. வருடக்கணக்காக பொழிந்த மழை அந்த குழியை நிறப்பி குழியேறியை உருவாக்கியிருந்தது. எரிகல்  லின் காரத்தன்மையால் ஆயிரமாயிரமாண்டுகளானாலும் நீரின் உப்புத்தன்மை மறையவில்லை.

சிறிதும் பெரிதுமாக விண்கற்கள் பூமியை நோக்கி வீழ்ந்தபடியே தான் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும், ஓவ்வொரு பருவத்திலும் அவை பூமியின் காற்றுமண்டலத்திற்குள் விழுகின்றன. செவ்வாய் கிரகத்துக்கும் வியாழ கிரகத்துக்கும் இடைப்பட்ட வெளியில் பல சிறுகோள்கள் சூரியனை சுற்றிக்கொண்டிருக்கின்றன. விண்கற்கள் அவற்றின் தோலிலிருந்தும் உடலிலிருந்தும் பிரிந்துவரும் பகுதிகள். பூமியின் காற்றுமண்டலத்துக்குள் நுழையும்போது அவற்றில் சில எரிந்து சாம்பலாகின்றன. சில பூமியின் ஈர்ப்புவிசையை முற்றாக தவிர்த்து எல்லையில்லா பெருவெளியில் திரிகின்றன. வண்ணங்களும் உணர்ச்சிகளும் மாறி மாறி கனியும் பூமியின் மடிக்குள் சில விண்கற்கள் மட்டும் வந்து புதைகின்றன.

ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னால் பூமியில் காற்றூமண்டலத்திற்குள் பாய்ந்து நுழைந்த விண்கள் ஏதாவது மாயவலைக்குள் சிக்கி இழுக்கப்பட்டதா? புல்தானா மலைச்சாரலின் விரிந்த சிறகுகள் அதைக் கவர்ந்ததா? பசுங்காட்டுக்கும் கரிசல் நிலத்துக்குமான முரண் அதன் மனதை குதூகலித்து இங்கே தஞ்சம் புகச் செய்ததா? அதன் விரிந்த விழிகளுக்கு முன்னால் லோனார் என்ற இந்த கிராமம் தென்பட்டது. காற்றில் பாய்மரத்துணியைப்போல் விரிந்தெழுந்த நிலம். ஆம், அப்போது இந்த இடத்துக்கு லோனார் என்ற பெயர் வரவில்லை. அப்போது லவனாசுரன் பிறந்திருக்கவில்லை. விஷ்ணு அவனை உதைத்ததால் அவன் குருதியும் பீரிட்டு நிலத்தில் படிந்திருக்கவில்லை. சிறுவிவசாயம் செய்த மனிதர்களும் ஆநிரைகளை மேய்ப்பவர்களும் இலையும் தளிரும் வெய்ந்த இல்லங்களில் வாழ்ந்து வந்த காலம் அது. பூமியை அடைந்த விண்கள் தளிர்மணத்தையும் மண்மணத்தையும் அறிந்தபடி எவ்வளவு ஆவலோடு தன் புதிய வீட்டின் வாசற்படியை முத்தமிட்டது!

download

ஆனால் அடுத்த நொடியே காட்டில் பேரோலம் எழுந்தது. வெப்பமும் பிழம்பும் வேதனையும் வானை நோக்கி பீய்ச்சி எழுந்தது. எரிகல்   மண்ணுக்கடியில் புதைந்து மாட்டிக்கொண்டது. அதன் வலி ஆறவேண்டுமென்றால் அது பூமியின் மையத்தை அடையவேண்டும். ஆனால் பூமியின் மையத்தை அடையும் பாதையை, அதன் விடுபடலுக்கான வழியை, நிலத்தின் அடுக்குகளும் பாறைகளும் உருகி வழிந்த உலோகப்பிழம்பும் தடுத்து நின்றன.

தனக்கான வழி வானிலும் அடைக்கப்பட்டுள்ளது, மண்ணிலும் அடைக்கப்பட்டுள்ளது என்று அறிந்த எரிகல்   தன் முதுகைத் திருப்பி முகத்தை மண்ணில் புதைத்துக்கொண்டது. அதன் வரண்ட பரப்பின் வெருமையை மழைநீர் பெய்து நிறைத்தது… முதுகு திரும்பியது… ஆம், ஷோக்யோவுக்கு அம்மாவின் திரும்பிய முதுகு நினைவுக்கு வந்தது. நோய் முற்றிய நாட்களில் அம்மா தன் அப்பாவின் பழைய வீட்டுச் சுவற்றை பார்த்தபடி குறுகிய கட்டிலில் படுத்துக்கொள்வாள். ஷோக்யோ அப்போது வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தான். அடுக்குமாடி குடியிருப்பு சிறிது சிறிதாக மேலெழும்பிக்கோண்டிருந்தது… உன்னை என்னுடன் கூட்டிச்செல்லப்போகிறேன் அம்மா, அதுவரை உயிரை கையில் பிடித்துக்கொள்… அவள் முயற்சி செய்திருக்கலாம், ஆனால் அம்மாவுக்கு உடல்நிலை சரியாகவேயில்லை. பலவருடங்களாக அன்பையும் பரிவையும் பாசத்தையும் அறியாத உடலின் எலும்பும்  மஜ்ஜையும் ரத்தமும் வெந்து சாம்பலாகிக்கொண்டிருந்தது. அம்மா உயிருடன் எரிந்துகொண்டிருந்தாள். நுரையும் குருதியும் அவளுக்குள்ளிருந்து வழிந்தது. முகமும் கைகால்களும் வீங்கி பழுத்தன.

அக்கா, அந்த எரிகல்   அங்கே ஏரிக்கடியில் தான் எங்கேயோ உள்ளது. வேரெங்கும் போக அதற்கு வழியில்லை. ஏரியின் விளிம்பை  சுற்றிக்கொண்டு பொழுதை வீணாக்காமல் மதியமே நான் ஏரியில் மூழ்கி அதைத் தேடியிருக்கவேண்டும்…

ஊர்வசி தம்பியின் தோளில் கை வைத்தாள். ஷோக்யோ ஏரியின் உப்புநீரில் மூழ்கி அந்த பழம்பெரும் எரிகல்லை துழாவித் தேடும் மனக்கண் சித்திரம் அவள் முகத்தில் புன்னகையும் கண்களில் நீரையும் வரவழைத்தது. ஷோயோவால் இந்த காயத்தை ஆற்றவே முடியாது என்று அவள் அறிவாள்… அவனுள் உறையும் காயம். அம்மா மீது அவ்வளவு அன்பை வைத்துக்கொண்டு, அவளுடன் வாழ முடியாமல், அவளை தன்னுடன் வாழவைத்துக்கொண்டு தன்னால் இயன்ற மகிழ்ச்சியை அவளுக்கு அளிக்கவும் வழியில்லாமல்… இப்போது அவனிடம் மிஞ்சியதெல்லாம் நெஞ்சில் ஒர் ஓலம். அடர்காட்டுக்குள் வீசும் புயலின் வெறுமை. தன்னை மன்னிக்கமுடியாததன் வெறுமை.

சூரியன் ஏரியின் விளிம்பு வரை இறங்கிவிட்டிருந்தது. அதன் பளிச்சிடும் பிம்பம் நீரில் துல்லியமாக தெரிந்தது. பின்னால் மலைச்சரிவுகளின் கோணலான உருவம். அது இன்னொரு திசையில், மற்றொரு துருவத்தில் உதிப்பதற்கு முன்னால் ஒருகணம் நின்று நிலைத்தது. யாரையோ தேடுவதைப்போல்… தன்னுடைய இருப்பிடத்தை அந்தியொளியின் கடைசி கீற்றில் பார்த்திவிட்டு போக யாராவது இன்று வந்திருக்கிறார்களா என்ன?

அக்காவும் தம்பியும் ஆரஞ்சு-ஊதா நிற அந்தியொளியில் திரும்பிக்கொண்டிருந்தார்கள். முள்வேலியின் இடைவெளி வழியே மெல்ல ஏறிச்சென்றார்கள். அரசாங்க பங்களாவில் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இனி ரயில்கள் ஏதும் வராது என்றாகிவிட்ட ரயில்மேடையைப்போல அது தோற்றமளித்தது.

சீதாப்பழ மரத்தின் இலைகள் புழுதிமூடியிருந்தன. மழைபெய்து பல நாட்கள் ஆகியிருக்கவேண்டும். மரம் குறுகலாக இருந்தது.. இலைகளுக்கடியில் ஆங்காங்கே பழங்கள் தென்பட்டன. காய்வெட்டானவை, இனிமேல் தான் கனியவேண்டும். கனிந்த பழங்கள் தானாகவே மரத்திலிருந்து உதிர்ந்தன. கிராமத்து சிறுவர்கள் அவற்றை பொருக்கிக்கொண்டு சென்றனர். மாடுகள் அவற்றை தின்றன. இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மரம் கனியக்கூடாது தான், ஆனால் பழகிப்போய்விட்டது. ஆகவே அது கனிகளை  உதிர்த்துகொண்டே இருந்தது. அடிமரத்தில் காலத்தின் இடை தெரிந்தது. அடிமரத்தை, கிளைகளை சுற்றி கொடிகள் படர்ந்திருந்தன. மரம் காத்திருந்தது. ஒரு விதத்தில் பார்த்தால் அது இங்கு பிறந்திருக்கவேண்டிய மரமே அல்ல. புடவையின் முந்தானையிலிருந்து விழுந்த சீதாப்பழ விதைகள் முளையாகும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை அல்லவா? ஆனால் ஒரு விதை வேர் விட்டிருந்தது. ஏரியின் விளிம்பில், அதிலிருந்து வெடித்தெழுந்த மண்ணில் சீதாப்பழ மரம் உயிர்பெற்று நிமிர்ந்து நின்றது.

ஷோக்யோவின் விரல்கள் மரத்தின் புழுதிபடிந்த இலைகளை உரசினவா? ஊர்வசியின் மஞ்சல் புடவையின் முந்தானை பறந்து மேலெழுந்து அந்த மரத்தை தொட்டது. சீதாப்பழ மரம் தன் உடலில் ஒரு நடுக்கத்தை உணர்ந்தது. உவகையால் அது சிலிர்த்துக்கொண்டது.

அவர்கள் புறப்படத் தயாரானார்கள். வெள்ளைக்கார் உயிர்பெற்றது. நிலம் நடுங்கியது. அவர்கள் எப்போது திரும்ப வருவார்கள் என்று யார் அறிவார்? மனிதர்கள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு வருவதில்லை தானே. சன்னமாக, அமைதியாக, மூச்சை வெளியிட்டு, அந்த மரம் இருட்டில் தன் கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்த்து நின்றது.

***

அனிதா அக்னிஹோத்ரி கதைகள்

நிலவொளியில் அனிதா அக்னிஹோத்ரி

‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7
அடுத்த கட்டுரைராஜ் கௌதமன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம்