மஹாவீர் கர்ணா

vikram-karna304s

பரியேறும்பெருமாள் படத்தின் விமர்சனநிகழ்வுக்காகச் சென்னை வந்திருந்தேன். 30 ஆம் தேதியே சென்னைக்கு நானும் அருண்மொழியும் அஜிதனும் வந்தோம். நண்பர்கள் வினோத் அகரமுதல்வன் வந்து அழைத்துச்சென்றார்கள்

30 அன்று பிஹைண்ட் வுட்ஸ் அமைப்பின் பேட்டி, 2.0 பற்றி. சர்க்கார் படம் வெளிவந்தபோதே பேட்டி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பேசப்பிடிக்கவில்லை. இப்போது வேறுவழியில்லை. பொதுவாக சினிமா பற்றிய பேச்சுக்களைத் தவிர்க்கவே முயல்கிறேன்.

30 மாலை பத்து நண்பர்களுடன் சத்யம் திரையரங்கில் 2.0 பார்க்கச் சென்றேன். உற்சாகமான நாள். படம் ஒருவகையான கிளர்ச்சிநிலையை உருவாக்கக்கூடியது. அன்று அறைக்கு மீண்டு பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்க நெடுநேரமாகியது.

vikram-karna304s
விக்ரம், விமல்

மறுநாள் பரியேறும்பெருமாள் கூட்டம். துயிலின்மை அன்று கூட்டத்தில் தெரிந்தது. அன்றே இண்டியா கிளிட்ஸ் நிறுவனத்தின் பேட்டி. இரண்டுமே ஒரே ஓய்வுவிடுதி அறையில்தான். மறுநாள் நானும் அருண்மொழியும் அஜிதனும் ஊர்திரும்புவதாகத் திட்டமிட்டு ரயிலில் பதிவுசெய்திருந்தேன். ஆனால் அவசரமாக திருவனந்தபுரம் செல்லவேண்டியிருந்தது

மகாவீர் கர்ணா என்று இப்போதைக்குப் பெயரிடப்பட்டிருக்கும் தமிழ் –தெலுங்கு –இந்தி படத்தின் முதல் நிகழ்ச்சி. விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்போதைக்கு பெரிய நடிகர்களில் ஒருவர் பீமனாக நடிக்கும் -ஹாலிவுட் நடிகர்.

படத்திற்காக ஏறத்தாழ முப்பதடி உயரத்தில் ஒரு தேர் செட் அமைக்கப்படுகிறது. அதிலுள்ள நூறு மணிகளில் ஒரு மணியை திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்தில் பூசை செய்து தச்சர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி

maha

2 ஆம்தேதி மாலை விமானத்தில் திருவனந்தபுரம் வந்தேன். மறுநாள் , 3 ஆம் தேதி காலை விழா. சுரேஷ்கோபி, மலையாள திரை எழுத்தாளர் சங்கத்தலைவர் பி.உண்ணிக்கிருஷ்ணன் ஆகியோர் பங்கெடுத்தனர். நிகழ்ச்சி மதியம் முடிந்தபின் நாகர்கோயில் வந்தேன்

கர்ணன் நான் திரைக்கதை உதவியும் வசனமும் எழுதும் படம். புராணப்பின்னணியில் எடுக்கப்படுவது. எந்நு நின்றே மொய்தீன் என்னும் பெரும் வெற்றிப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். லண்டனைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் தயாரிக்கிறது.

இப்போதைய பட்ஜெட் 250 கோடி ரூபாய். செட்டுக்கு மட்டுமே 80 கோடி. 80 கோடிவரை வரைகலைக்காக. ஹைதராபாத் ராமோஜிராவ் நிறுவனத்தில் அப்பணிகள் நடைபெறுகின்றன.

கர்ணனின் திரைக்கதை  2016ல் திட்டமிடப்பட்டு 2017ல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. படத்தில் என் பணி இனி அனேகமாக ஏதுமில்லை. அதன் மாபெரும் பட்ஜெட் மற்றும் நடிகர்குழு காரணமாக தாமதமாகியது. மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கக்கூடும். இன்னொரு பெரிய படம்.

முந்தைய கட்டுரைதமிழகப் பொருளியல்- ராம்குமார்
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அகாடமி விருது