அன்புள்ள ஜெ.,
நலமா? சில வருடங்களுக்கு முன் உங்களுடைய ‘வெள்ளை யானை’ யை என்னுடைய மாமனாருக்கு படிக்கக் கொடுத்தேன். நான் இப்படியெல்லாம் அவ்வப்போது ‘டார்ச்சர்’ பண்ணுவதுண்டு.படித்து முடித்து அவர் புத்தகத்தைத் தரும்போது எப்படி இருந்தது? என்று கேட்டேன். ‘நன்னாத்தான் எழுதிருக்கான்(அவருக்கு வயது எண்பத்தைந்து). ஆனா இப்ப இந்த நாவலை எழுதவேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த நாவல் எப்போது எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை அப்போது கேட்டிருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. அவசியம் கருதி எழுதப் படுபவைகளா நாவல்கள்? அப்படி எழுதப்படும் நாவல்களும் உண்டா?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,
முதலில் எவருடைய அவசியம் என்பதுதான் கேள்வி. எழுத்தாளனைப் பொறுத்தவரை அவனுடைய சொந்த அவசியம்தான் முக்கியம். அவனுக்கு எழுத உந்துதல் வருவதே அது எழுதப்படவேண்டும் என்னும் அவசியம் அவனுக்கு இருப்பதனால்தான். ஒன்றை புரிந்துகொள்ள, ஒன்றை விவாதிக்க, ஒன்றிலிருந்து விடுபட அவன் அதை எழுதுகிறான்.
வாசகன் எழுத்தாளனின் எதிர்தரப்பு. ஆனால் ஆடிப்பாவை. எது எழுத்தாளனை தூண்டுகிறதோ அதுவே வாசகனையும் தூண்டும். எழுத்தாளன் அடைந்த தெளிவை, விடுபடலை வாசகனும் அடைவான். அடையாதவர்கள் உண்டு, அவர்கள் அந்நூலின் வாசகர்கள் அல்ல, அவ்வளவுதான். உலகமெங்கும் எழுத்தாளன் தன்னை நோக்கியே எழுதுகிறான். அவன் மிகச்சிறப்பாக தன்னை நோக்கி பேசிவிட்டான் என்றால் வாசகனையும் நோக்கி பேசிவிட்டான் என்றே பொருள்.
எனக்கு முந்தைய காலகட்ட எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு நான் மனிதனை வரலாற்றில் நிறுத்திப் பார்க்கிறேன் என்பதுதான். முந்தைய நவீனத்துவக் காலகட்டத்துப் படைப்பாளிகளுக்கு ஒருவகையான வரலாறுமறுப்புப் பார்வை உண்டு. வரலாற்றிலிருந்து தனிமனிதனை வந்தடைவது என எதையும் அவர்கள் கருதவில்லை. தனிமனிதனையே அவர்கள் அலகாக்கினார்கள்.
நான் என்னை வரலாற்றில் அடையாளம் கண்டேன். என் தனிப்பட்ட குடும்பப்பிரச்சனையில் இருந்தே அதை தொடங்கினேன். என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டனர். மகிழ்ச்சியற்ற முப்பதாண்டுகால குடும்ப வாழ்க்கை. அதற்கு அவர்கள் இருவரின் குணங்களை எளிதாக காரணமாக சொல்லிவிடலாம். ஆனால் மருமக்கள்தாய முறை அழிந்ததும் , பெண்ணின் குடும்ப இடம் மாறுபட்டதும் அதற்கான காரணம் என மிக இளமையிலேயே என்னுள் பதிந்தது.
ஆகவே அனைத்தையுமே விரிந்த வரலாற்றுப்பெருக்கின் துளிகளாக, வரலாற்றின் நெறிகளின்படி இயங்குவனவாக, நான் காண ஆரம்பித்தேன். ஆகவே எதையுமே விரித்து விரித்து வரலாறென்றே ஆக்கும் பார்வை எனக்கு அமைந்தது. என் மதிப்பிற்குரிய மூத்தபடைப்பாளிகளுடன் என் விலகல் அங்கிருந்தே ஆரம்பித்தது. எனக்கு நவீனத்துவம் போதாமலானது அவ்வாறுதான்.
நான் என்றுமே வரலாற்றின் தீவிரமாணவன். நான் படித்த நூல்களில் நேர்பாதி வரலாறுதான். இன்று இலக்கியத்தைவிட வரலாற்றையே மிகுதியாக படிகிறேன். தமிழ் எழுத்தாளர்களில் வரலாற்றின்மேல் என்னளவு தீவிரமான ஈடுபாடு கொண்ட இன்னொரு இலக்கிய எழுத்தாளர் இல்லை என்பதையே காண்கிறேன்.
ஆனால் புறவயமாக எழுதப்பட்ட வரலாறு மானுட அகத்தை வடிவமைப்பதில்லை என்று உணர்ந்தேன். வரலாறு தொன்மங்களாக, ஆழ்படிமங்களாக மாறி நம்முள் குடியேறுகிறது. தொன்மங்களும் ஆழ்படிமங்களும் நிறைந்திருக்கும் பெருங்களஞ்சியமே மதம். ஆகவே மதமும் என் பயில்களமாக ஆகியது. பண்பாட்டுவரலாற்றை மதங்களை அறியாமல் கற்கமுடியாது. மதம் வரலாற்றிலிருந்து தத்துவத்தை திரட்டிக்கொள்ளும் ஒரு செயல்பாடு. ஆகவே தத்துவமும் எனக்குரியதாகியது.
முப்பதாண்டுகளாக இம்மூன்று களங்களிலும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறேன். என் எழுத்து வரலாறு, மதம், தத்துவம் ஆகிய மூன்றையும் இணைத்துக்கொண்டு உருவாவது. இக்காரணத்தால் தமிழின் இலக்கியப்பரப்பில் இது தனித்து நிற்கிறது. இம்மூன்று தளங்களிலும் சற்றேனும் பயிற்சி இல்லாதவர்கள், இக்களங்களில் நிகழும் என் தேடலை பகிர்ந்துகொள்ளாதவர்கள் எனக்கான வாசகர்கள் அல்ல.
ரப்பர் முதல் வெண்முரசு வரை வெவ்வேறு வகையில் நான் எழுதி எழுதி எனக்கான வரலாற்றுப் புலம் ஒன்றை விரித்துக்கொண்டிருக்கிறேன். நான் தேடுவனவற்றுக்கான விடைகளை இங்கே கண்டுகொள்கிறேன். எனக்கான விடைகள் உள்ளே உறையும் கனவில் வெளியே விரியும் வரலாற்றில் ஒரே சமயம் பொருள்கொள்பவை. வரலாறே மானுடனின் கனவின் வெளிப்பாடுதான்.
அறம், நீதி, விழுமியங்கள் எல்லாமே வரலாற்றினூடாகத் திரண்டு வருபவை. நமது சமகால அரசியல் அறம் உருவாகிவந்ததன் கதையைச் சொல்லும் நாவல் வெள்ளையானை. உண்மையில் அது உருவாக்கும் கேள்விகள் இங்குள்ள பெரும்பாலானவர்களுக்கு உரியவை அல்ல. இங்கே பெரும்பாலானவர்களின் கேள்விகள் மானுடஉறவுச்சிக்கல்கள் சார்ந்தவை, அதிலும் ஆண்பெண் உறவு சார்ந்தவை. பிறவற்றை அவர்களால் உணர, தொடர முடிவதில்லை. அவர்களுக்குரியதல்ல வெள்ளையானை. என் எந்த எழுத்தும் அவர்களுக்குரியதல்ல.
இப்படி சொல்கிறேன், வெள்ளையானை நான் என்னுள் உறையும் வரலாற்றை, இன்றும் தொடரும் அதன் பல கருத்துநிலைகளை உடைத்து ஆராய்வதற்காக எழுதிய நாவல். நேற்று உண்மையான வரலாறாக நிகழ்ந்த ஒன்று இன்றைக்கு ஒரு குறியீடாக மாறி நம்மில் நீடிக்கிறது. நாம் சிந்திப்பவற்றை அதுவே வழிநடத்துகிறது. அந்தக் குறியீடாகச் சுருங்கிய வரலாற்றை விரித்தெடுத்து அதை அறிய முயன்றிருக்கிறேன். அது ஒரு குருதிச்சொட்டு.
தன்னுள் உள்ள குருதிச்சொட்டை அறியவிழைபவர்களே அதன் வாசகர்கள். அதை அறியத்தேவையில்லை என நினைப்பவர்கள் அதன் வாசகர்கள் அல்ல. அவர்களுக்கு எப்படி நான் தேவையில்லையோ அப்படி எனக்கும் அவர்கள் தேவையில்லை.
ஜெ