‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி
நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி
‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
நிலவொளியில் அனிதா அக்னிஹோத்ரி
அன்புள்ள ஜெயமோகன் சார்,
வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ” தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7 ” என்னும் கதை பெரிய தத்துவ விசாரங்களோ அகவயமான தேடல்களோ பெரிதாக இல்லாமல் இந்த பூமியின் மீது வாழ்வதற்கான நடை முறையிலும் போராடும் முனைப்பிலும் போராட்டத்தின் நீர்த்துபோன தன்மையிலும் அமைந்துள்ளது. ஆனால் போராட்டமோ உரிமையோ அது முடிந்துவிடுவது இல்லை அதற்கு கடைசி படி என ஓன்று இல்லை அது தொடர்வது. புதுப்புது வாழ்வில் இருந்து வருபவர்களின் புதுபுது பிரச்சனையின் தொடக்கம் கடைசியாய் கிடைத்த உரிமையின் அடுத்தபடி. பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தான் உரிமைகள் மறுக்கபடுவது தெரிகிறது, அவர்கள்தான் தங்களின் தோற்றம், அறிவு , கல்வி எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு உரிமைக்காய் போராட தொடங்குகிறார்கள்….ஆனால் ஒரு கேள்வி முடிவில் அல்லது பயன்கிடைக்கும் பொழுது எப்டி “அர்விந்த் கெஜ்ரிவால்கள், பிரகாஷ்கரத்துகள், கருணாநிதிகள், அருந்ததிராய்கள் உள்ளே புகுந்து அனைத்தையும் தங்களின் பக்கம் திருப்புகிறார்கள்? ” அதற்குள்தான் சட்டமன்றங்களும் ஊடகங்களும் இருக்கிறது என நினைக்கிறேன்.
தனிமாவின் பிடிவாதம் அல்லது அவள் உயிர்த்துடிப்போடு வாழ்வதற்கான ஒரே காரணமாக அவளது கணவனின் வேலை தொலைந்தது இருக்கிறது. அவள் அரசு, அதிகார மையங்களில் ஏறி இறங்கும் பொழுது அங்கு இருக்கும் அவர்களின் பதவி அடுக்கு, அவர்களின் வெற்று டாம்பிகம், அவர்களின் குண நலன்கள் அனைத்தும் அவளுக்கு தெரிய வருகிறது. அவளுக்கு உள்ளூர தெரிந்திருக்கும் இவர்கள் யாரும் தன்னைவிட எந்தவிதத்திலும் பெரிய ஆளுமைகள் அல்ல என . நமக்கே தலைமை செயலகத்திற்கு ஒரு வாரம் தொடர்ந்து சென்று வந்தால் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எண்ணம் வரும்.
தனது முந்தையை வாழ்க்கையை முற்றும் மறக்காமல் அதிகாரத்தின் சுவையை ருசிக்க முடியாது.கல்லோலுக்கு கொஞ்சம் அது நினைவு இருப்பதுதான் அவரின் சருக்குதலாக இருக்கிறது. முற்றும் மறந்தவர்கள் முன்னே போய்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் கொள்கை கோஷம் வேறு நடைமுறை வேறு. பின்னிட்டு பார்த்தால் உப்புதூண் தான்.அடுத்தவர்களின் உரிமைகளுக்கு போராடி அதை பெற்று கொடுத்தபின்,அவர்கள் அதையே ஆயுதமாக்கி தன்னிடமே வந்து நிற்பது கல்லோலுக்கு மட்டும் அதிர்ச்சியாக அல்ல,கொஞ்சம் அதிகாரத்தில் உள்ள எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பம் அமைந்திருக்கும். ஆதலால்தான் அலுவல்களில் புதிதாய் வருபவர்களுக்கு யாரும் கற்றுகொடுப்பதே இல்லை.ஆனாலும் அதிகாரிகளின் கண்களுக்கு அதிர்ச்சி ஊட்ட அருணா …தனிமா என நேர்மையான, துணிவான ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தவறான காரணங்களுக்காய் போராட்டத்தை ஆரம்பித்திருந்தாலும் அவர்களால் தான் இந்த ஜனநாயகமும் சமூகமும் முன்னே செல்கிறது.
ஸ்டீஃபன்ராஜ்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வருகைதரும் அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறீர்கள். அவர்களின் கதைகள் அளிக்கும் திறப்புகள் வழியாக அவர் நமக்கு மிக அணுக்கமானவராக ஆகிவிட்டார். ஓர் எழுத்தாளர் இங்கே வந்தால் அவரை வாசகர்களாகவே நாம் சந்திக்கவேண்டும், வெறும் முகமாக அல்ல. அப்படி ஓர் எழுத்தாளரை அவருடைய புனைகதைகள் வழியாக அறிமுகம் செய்கிறீர்கள். இது முக்கியமான ஒரு பணி. இப்படி ஒரு பணியை உங்கள் நண்பர்களுடன் இணைந்து இந்தத்தளம் செய்வது நீங்கள் இலக்கியத்தை எத்தனை தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது
செல்வராஜன்