«

»


Print this Post

ஒருதெய்வ வழிபாடு


shiva-lord-of-the-dance-ann-radley

 அன்புள்ள ஜெ

ஒரு சின்ன சந்தேகம். இது உங்களுக்கு வேடிக்கையாகக்கூடப் படலாம். ஆனால் எனக்கு இது ஒருவகையில் வாழ்க்கைப்பிரச்சினை. என் வயது 31. அரசு ஊழியன். என் அப்பா வீரசைவ விரதம் கொண்டவர். நானும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவிடமிருந்து வீரசைவ தீக்கை எடுத்துக்கொண்டேன். நான் சைவக்கோயில் தவிர எங்கும் செல்வதில்லை. வேறு எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை.

சமீபத்தில் நண்பர்களுடன் பயணம் செய்தபோது நான் பெருமாள்கோயிலுக்குப்போகாமல் காரிலேயே உட்கார்ந்தேன். என் சீனியர் நண்பர் ஒருவர் என்னை கடுமையாகக் கண்டித்தார். எனக்குப் பாவம் கிடைக்கும், ஏழுதலைமுறை பழி வரும் என்று சொன்னார். அவர் பிராமணர். அவர் இந்துக்கள் அனைவருக்கும் இந்துதெய்வங்கள் அனைத்தும் சொந்தம் என்று சொன்னார். இந்தமாதிரி பேதங்களால் இந்துமதம் ஒற்றுமை இல்லாமல் அழிகிறது என்றும் இந்துக்கள் பேதங்களை மறந்து ஒன்றாகவேண்டுமென்றும் சொன்னார். இந்து என்பது மட்டுமே அடையாளமாக இருக்கவேண்டும் என்றும் மற்ற அடையாளங்களெல்லாம் அழியவேண்டும் என்றும் சொன்னார்

நான் வாசித்தபோது இதேபோல வேறு தெய்வத்தைக் கும்பிடாத ஒரு நண்பரை நீங்கள் கேலிசெய்திருந்தது வாசித்தேன். அது பெரிய தப்பு என்று நீங்கள் சொல்லவில்லை. நான் பெரிய தப்பு செய்கிறேனா? என் அப்பாவிடம் இதைக் கேட்கமுடியாது.

எஸ்

DtNzo8NU0AAGgfn

அன்புள்ள எஸ்,

இந்துமதம் என இன்று சொல்லப்படுவது ஒரு மாபெரும் ஞானத்தொகை. முற்றிலும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட, ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மோதிக்கொள்ளூம் ஞானவழிகளின் பின்னல். இவை விவாதித்துத்தான் இதுவரை வளர்ந்தன. ஒன்றிலிருந்து பிறிதொன்று என கிளைத்தன. இப்படி புதிதாகத் தோன்றும் முறையும், கடுமையாக முரண்பட்டு விவாதிக்கும், ஒன்றையொன்று நிராகரிக்கும் நிலையும் இல்லாமலானால் இந்துமதம் இறுக்கமான அமைப்பாக மாறும். வெறும் அதிகாரமாக எஞ்சும்.

ஓர் அமைப்பின் உயிர்ச்செயல்பாடு எதுவோ அது தடுக்கப்பட்டால் அந்த அமைப்பு அழியும். வேறுசில மதங்கள் ஒற்றை மையத்தரிசனமும் மேலிருந்து கட்டுப்பாடும் உறுதியான அமைப்புகளும் கொண்டவை. அவை அந்த வழியில் வெற்றிபெற்றன. அந்தவகையில் இந்துமதத்தை சிலர் மாற்ற முயல்கிறார்கள். அதனால் அவர்கள் தேடும் ஓர் அதிகார அமைப்பு உருவாகலாம். எது இந்துமதமாக இது வரை வளர்ந்துவந்ததோ, எது கோடிக்கணக்கானவர்களுக்கு முக்திமார்க்கமாக நிலைகொண்டதோ அது அழியும்.

இதிலுள்ள பல்வேறு வழிகளில் ஒன்று ஃபாவபக்தி. இன்னொன்று சடங்கு – ஆசாரநெறி. இரண்டும் பலசமயம் இங்கே ஒன்றுடன் ஒன்று கலந்தவை. ஓர் இறையுருவை ஏற்று, அதை மட்டுமே வழிபட்டு, உளம்நிறைத்து, பிறிதொன்றிலாமல் அதனுடன் வாழ்ந்து பெறும் விடுதலையையும் நிறைவையுமே நாம் ஃபாவபக்தி என்கிறோம். அந்த ஃபாவத்தை – உணர்ச்சிகரமான ஏற்பை – அன்றாடவாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளவே பூஜைகள், நோன்புகள். நெறிகள் போன்ற ஆசாரங்களும் சடங்குகளும் சொல்லப்படுகின்றன.

அந்த உணர்ச்சிகர ஏற்பை மேலும் மேலும் முழுமைசெய்துகொள்வதே அந்த வழியின் இயல்பு. அதை ஏற்றால் அதை முழுமையாக கடைப்பிடிப்பதே முறை.  மாறாக அத்வைதமரபில் இத்தகைய உணர்ச்சிகர ஏற்பு இல்லை. அங்கே அறிதலும், தெளிதலும், ஊழ்கத்திலமர்ந்து ஆதலும்தான் வழிமுறையாக உள்ளது. சில மரபுகளில் எல்லா தெய்வங்களும் வழிபடப்படலாம். ஒன்றின் வழி இன்னொன்றுக்கு உகந்தது அல்ல.

உங்கள் வழியில் செல்லுங்கள். சிவன் மேல் கொண்ட பற்று பித்தாகி, அந்தத் தன்னளிப்பு முழுமை எய்துவதே உங்கள் முக்தி. அது பெருமாள் மேல் கொள்ளும் வெறுப்பாக, விலக்கமாக ஆனால் மட்டுமே நீங்கள் இருள்நோக்கி திரும்புகிறீர்கள். நம் மரபில் முன்னோர்களில் பலர் ஒருதெய்வ உபாசனை செய்தவர்கள்தான்.

இந்து மதம் – இந்துப் பண்பாடு ஆகிய இரண்டிலிருந்தும் இந்துத்துவ அரசியலை முற்றாகப் பிரித்துக்கொள்வதே இத்தருணத்தில் இந்துவென தன்னை உணரும் ஒவ்வொருவரும் செய்தாகவேண்டியது. இந்த இந்துத்துவ அரசியல் எவ்வகையிலும் இந்துமதத்துடனும் இந்துப்பண்பாட்டுடனும் தொடர்புடையதல்ல. இந்து மதத்தையும் இந்துப்பண்பாட்டையும் தாங்கள் காக்கவிருப்பதாக இவர்கள் சொல்வது பொய். நாம் இவர்களுக்கு வாக்களிப்பது இந்திய அரசை எப்படி நடத்தவேண்டும், நாம் அளிக்கும் வரிப்பணத்தை எப்படி செலவிடவேண்டும் என்ற வாக்குறுதியின் பேரில் மட்டுமே. அதை மட்டுமே அவர்கள் பேசட்டும்.

இந்து என்னும் சொல்லை இவர்களுக்கு நாம் முற்றளித்துவிட்டால் இவர்கள் இந்து என்னும் சொல்லை பயன்படுத்தி அரசியலாடி அதிகாரத்தை கைப்பற்றியபின் செய்யும் அத்தனை ஊழல்களுக்கும், ஒழுங்கின்மைக்கும் இந்துமதமும் பண்பாடும் பழிசுமக்க நேரிடும். இப்போதே இவர்களின் அறியாமையால், மூர்க்கத்தால், ஊழலால் இந்துமதமும் பண்பாடும் கறைகொள்ளவேண்டியிருக்கிறது. இந்துமதம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய அபாயம் இதுதான்.

இந்துமதம் அதன் ஞானிகளால் வழிகாட்டப்படட்டும். அதன் மெய்நூல்களால் ஆளப்படட்டும். இன்றுவரை பிரிந்து பிரிந்து வளர்வதன் வழியாக, அனைத்துத் தேடல்களையும் அனுமதிக்கும் உள்விரிவின் வழியாக, தனித்தன்மைகளை தக்கவைத்துக்கொள்ளும் உறுதியின் வழியாகவே இது வளர்ந்துள்ளது. இனியும் அப்படியே நீடிக்கட்டும். இதை இவர்களின் அரசியல்நலன்களுக்காக ஒற்றை இயந்திரமாக ஆக்கவேண்டியதில்லை.

நாம் இந்துவாக இருப்பது ஓருசில அரசியல் அமைப்புக்களுக்கு வாக்குவங்கியாக அமையும்பொருட்டு அல்ல. நம் முக்தியை விட்டுக்கொடுத்து இங்கே நாம் அடைவதொன்றும் இல்லை.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/115774/

1 ping

  1. இந்துமதத்தைக் காப்பது…

    […] ஒருதெய்வ வழிபாடு […]

Comments have been disabled.