குகை (குறுநாவல்) : 4

11

[ 7 ]

அந்தக்குகையில் அவ்வப்போது நான் வெள்ளையர்களைப்பார்த்து வந்தேன். பெரும்பாலும் அனைவருமே பழைய பிரிட்டிஷ் கால உடைகளை அணிந்திருந்தார்கள் .அனைவருமே அங்கே நெடுங்காலமாக உலவும் வழக்கம் கொண்டவர்கள் என்பது அங்கே சேற்றில் நடப்பதற்குரிய முழங்கால் வரை வரும் ரப்பர் சப்பாத்துகளை கையுறைகலையும் அணிந்திருந்தமையில் இருந்து தெரிந்தது. பெண்கள் கால்களில் நீண்ட சப்பாத்துகளை அணிந்து வெண்பட்டால் ஆன கையுறைகளை அணிந்திருந்தனர். அவர்கள் இந்த குகைவழிக்குள் இறங்கும் இடங்களில் இவை வைக்கப்பட்டிருக்கலாம்.

பொதுவாக அங்கு நான் பார்த்த எவருமே ஒருவரை ஒருவர் பார்த்ததாகத் தெரியவில்லை அவர்கள் எவரும் ஒரு சொல் கூட பேசிக்கொள்ளவும் இல்லை. பெரும்பாலானவர்கள் தனியாக, நிழலசைவது போல, குகைப்பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மிக அபூர்வமாகத்தான் அவர்களுக்கு எதிரில் யாராவது வருவார்கள். அப்போது அவர்கள் சுவர் ஓரமாக ஒண்டி அசைவற்ற்ற நிழலாக மாறி நின்றார்கள் அவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்று சில முறை எண்ணிப்பார்த்தேன். அவர்கள் இந்தப்பாதை வழியாக வேறெங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்தப்பாதையில் அவர்கள் பேசிக்கொள்வதற்கோ செய்வதற்கோ ஒன்றுமில்லை.

நான் கூட அந்தப்பாதையில் வெறுமே தான் அலைந்துகொண்டிருக்கிறேன். அந்தப்பாதையே கண்டடைந்தபோது இருந்த கிளர்ச்சியும் பரபரப்பும் மெல்ல குறைய ஆரம்பித்தன. அந்தப்பாதையின் அனைத்தும் என் காலுக்கு பழகிய பின்னர் அதில் புதிய வழிகள் எதுவும் தெரியாமல் ஆகியது. ஏதோ நிகழும் என்றும் எதையோ அறிவேன் என்றும் கற்பனைசெய்தபடி அதற்குள் வெறுமே சுற்றி வந்துகொண்டிருந்தேன். ஏன் இப்படி சுற்றி வரவேண்டும், எங்கேனும் ஓர் இடத்தில் மேலே ஏறி பார்ப்போமே என்று நினைத்தேன். அந்த நினைப்பு  ஒரு கிளர்ச்சியை அளித்தது. அதைப்பற்றிய கற்பனைகளில் திளைத்தேன்

எனக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத ஒர் அறையில் மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கையில் காலடியில் ஒரு தட்டலோசை கேட்கிறது. பதட்டமடைந்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்கிறார்கள். மெல்ல அந்த தரை பெயர்ந்து விலக உள்ளிருந்து ஒருவன் எழுந்து வருகிறான். ஒரு பெரிய பாம்பு போல. பாதாளத்திலிருந்து பிசாசு ஒன்று தோன்றுவது போல. பயந்து அலறிவிடுவார்கள். அல்லது திருடனென்று நினைக்கக்கூடும். கையில் ஏதாவது ஆயுதமில்ல்லாமல் செல்லக்கூடாது. அவர்களை எடுத்த எடுப்பிலேயே அச்சுறுத்தவேண்டும். அல்லது “பயப்படவேண்டாம், நான் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்பவன் அல்ல” என்று சொல்லலாம்

இரவில் அல்ல பகலில் தான் செல்ல வேண்டும் என்று அதன்பின் எண்ணிக்கொண்டேன். பகலில் அந்த அறையில் என்னென்னவோ நிக்ழந்துகொண்டிருக்கும். அது சமையலறையாக இருக்கலாம். குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கலாம். ஆண்கள் அமர்ந்து பிற ஆண்களுடன் பேசிக்கொண்டிருக்கலாம்.மேலே இயல்பான வாழ்க்கை பகலில்தான் .இரவில் விந்தையானவை நிகழும்போது அவை ஒருவகையில் சாத்தியம் என்பதாலேயே அவற்றின் விந்தைத்தன்மை கொஞ்சம் குறைந்துவிடுகிறது.

நடுப்பகலில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எதுவுமே நிகழாது என்று முழுமையாக உறுதி இருகும் நிலையில் ஒன்று நிகழும்போது அவர்கள் பதைத்து பித்தர்கள் போல நடந்துகொள்வார்கள். ஓலமிடுவார்கள். ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அர்த்தமாற்ற் சொற்களைக் கூவிக்கொண்டு வெளியே ஓடுவார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் கைகால் உதற விழுந்துவிடுவார்கள். ஒவ்வொரு இடத்திலாக அவ்வாறு நிகழ்வதை நான் கற்பனை செய்தபடி நான்  புன்னகைத்துக்கொண்டேன். பின்னர் சிலநாள் ஒவ்வொரு வீட்டுக்கடியிலும் சென்று நின்று அந்த வீட்டில் நான் தோன்றினால் என்ன நிகழும் என்பதை விரிவாக என்னுள் நிகழ்த்திவிட்டு திரும்பி வருவ்து வழக்கமாயிற்று

என் அம்மா என்னை வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்து சென்றாள். டாக்டர் என்னைப்பார்த்ததுமே  “என்னாச்சு இப்படி இருக்கிறார்?” என்றார். “ஆமா டாக்டர் தூங்கறதே இல்ல ஆனா எப்பவும் படுத்துட்டு தான் இருக்கான். பெரும்பாலும் கதவ சாத்திட்டு உள்ளதான் இருக்கான். ஆனா உடம்பு மெலிஞ்சுட்டே இருக்கு” என்றாள் அம்மா. “சாப்பிடறார் இல்லியா?” என்றார் டாக்டர். “சாப்பிடறதும் கம்மிதான் .ஒரு வேள சாப்பிடறான் .பெரும்பாலும் கொஞ்சம் சாப்ப்டு எந்திரிச்சு போயிடறான் .இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. என்னென்னமோ சொல்றான்”

டாக்டர் என் கண்களையும் நாக்கையும் பரிசோதித்து விட்டு என்னை கூர்ந்து பார்த்து  “மாத்திரைகளை சாப்பிடறிங்களா?” என்று கேட்டார். “மாத்திரைகளை சாப்பிட்டா நான் குகைகளுக்குள் போக முடியாதே” என்றேன் . “எந்த குகைகள்?” என்று அவர் கேட்டார். நான் அதை சொல்லக்கூடாதென்று எண்ணினாலும் சற்றேனும் சொல்லாவிட்டால் என்னை அவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று தோன்றியது “டாக்டர், இந்த சிட்டிக்கு  அடியிலே ஏராளமான சுரங்கப்பாதைகள் இருக்கு” என்றேன். டாக்டர் என்னை விழித்துப்பார்க்க நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்

வெள்ளையர்கள் 1750 முதல் ஐம்பதாண்டுகாலம் தொடர்ச்சியாக அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.நகரத்தில் எங்கு வேண்டுமானாலும் சுரங்கப்ப்பாதைகளில் மண்ணுக்கு அடியில் செல்லமுடியும். உங்களுக்குத் தெரியுமா, அந்த சுரங்கப்பாதையின் அடியில் சென்ற எவருக்குமே மரணம் கிடையாது 1856-ல் புரட்சியின்போது பலர் உள்ளே சென்றார்கள். அங்கிருந்து வெளியே வந்தவர்கள் எல்லாம் இறந்து போய்விட்டார்கள். உள்ளே சென்றவர்கள் பலர் அங்கேயே இருக்கிறார்கள். சாவு என்பது இந்த சூரிய ஒளி படும் இடத்தில் மட்டும்தான்! நான் மூச்சுவாங்க, ஒன்றோடொன்று ஏறிய விரைந்த சொற்களில் சொன்னேன்.

டாக்டர் தலையசைத்தபின் என் அம்மாவிடம் “மாத்திரைகளை சாப்பிடறதில்லன்னு நினைக்கிறேன் .எப்படியாவது சாப்பிட வெச்சுரணும்” என்றார். “மாத்திரைகள் சாப்பிடறதில் அர்த்தமே இல்ல டாக்டர். மாத்திரைகளை சாப்ட்டிட்டு நினைவில்லாம தூங்கிட்டிருக்கிறதில் என்ன அர்த்தம் இருக்கு? ஃப்ரிட்ஜிலே வச்ச காய்கறி மாதிரி இருந்திட்டிருக்கலாம்.செத்துப்போனாலும் அழுகாம இருக்கிறதுதானே அது? இப்ப பாருங்க இந்த சிட்டியிலேயே எல்லாரையும் தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான் .எங்க வேணாலும் போக முடியும். வெளயாட்டா நெனக்காதிங்க. அம்மா நீ கொஞ்சம் வெளிய போ” என்றேன்

டாக்டர் அம்மாவைப்பார்க்க அம்மா டாக்டர் வெளியே போகும்படி கைகாட்டினார் அம்மா வெளியெ சென்றதும் நான் எழுந்து சென்று கதவை நன்றாக மூடிவிட்டு “இந்த ஆஸ்பத்திரிக்கு அடியிலயே நல்ல இடமிருக்கு டாக்டர். என்னோட ரூம்லேருந்து இங்க வர்றது ரொம்ப ஈசி. வெளிய இருக்கற டிராபிக்கோ சத்தமோ ஒண்ணுமே கெடையாது. நெறய நாள் நான் இங்க வந்திருக்கேன். ஒருவாட்டி வரும்போது நீங்க அந்த புதுசா வந்த நர்ஸ்… வசந்தாதானே அவ பேரு? அந்தப்பொண்ண மெரட்டிட்டு இருந்திருங்க. அது அழுதுச்சு.. ஒரே அழுகை. விசும்பி விசும்பி… பாட்டு மாதிரி அழுதுகிட்டே உங்ககிட்ட மன்றாடிட்டு இருந்திச்சு”

“நீங்க அவ கிட்ட வேலையவிட்டு தூக்கிருவேன்னு சொன்னீங்க. கைதவறி அவ ஒரு ஆளக்கொன்னுட்டா அப்படின்னு சொன்னா அதுதான் உண்மை ஆயிரும்னு நீங்க சொன்னப்ப அய்யய்யோ  நான் ஒண்ணுமே பண்ணலேன்னு அந்தப்பொண்ணு அழுதுச்சு. நீ பண்ணலேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நீ பண்ணினேன்னு நான் சொன்னா அதற்கு பிறகு எந்த டாக்டரும் உன்னை வேலைக்கு வெச்சுக்க மாட்டாங்க. மறுபடியும் வீடுகள்ல பாத்திரம் கழுவத்தான் நீ போணும். யோசிச்சுப்பாரு, உன் குடும்பம் என்னாகும்? நீங்க குரலை தூக்காம திடமா பேசிட்டிருந்தீங்க. அதெல்லாம் அவ்ளவு தெளிவா கேட்டுது”

“அந்தப்பொண்ணு  விடாம் அழுதுட்டே இருந்திச்சு .அப்ப நீங்க அவகிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, இங்க இருக்கற நர்ஸுங்க எல்லாருமே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டவங்கதான் ,நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா உன் சம்பளத்த டபுளாக்கறேன், இங்கயே ஒரு நாலஞ்சு வருஷம் வேல பாத்தா அப்புறம் நீ தனியா கூட கிளினிக் வெச்சுக்க முடியும், அப்புறம் அப்டியே கல்யாண்மாகி செட்டிலாயிடலாம், அப்படிதான் எல்லாரும் செட்டிலாயிருக்காங்க அப்டீன்னு சொன்னிங்க… அந்தப்பொண்ணு டாக்டர் டாக்டர்னு சொல்லி அழுதிட்டே இருந்தா”

டாக்டர் பதறிப்போய்  “எப்போ ?இது எப்படி உனக்குத் தெரியும்?” என்றார். “டேய் நீ எங்க இருந்தே? சொல்லு? அவ சொன்னாளா?” என கிசுகிசுப்பான குரலில் அதட்டினார். அவர் முகம் வலிப்பு வந்ததுபோல் இருந்தது. நான் அழுத்தமான புன்னகையுடன்  “எனக்குத்தெரியும். நான் சொன்னேனே ,நான் இங்க நேர்கீழேதான் நின்னுட்டிருந்தேன். ரூம்ல யாருமே கெடயாது .நீங்க முன்னாடி எல்லாரையும் வெளிய போகச்சொல்லி எல்லாக் கதவையும் அடச்சுட்டுதான் அந்தப்பொண்ணு இருக்கற எடத்துக்கு வந்திருக்கிங்க” என்றேன்

“அந்தப்பொண்ணோட குரல் எறங்கிட்டே போச்சு. வேண்டாம் டாக்டர், என்ன விட்ட்டுங்க டாக்ட்ர், ஏழை டாக்டர், ரொம்ப ஏழை டாக்டர்னு சொல்லிட்டே இருந்தா. நீங்க நீ ஏழை ஆனதுனாலதான் சொல்றேன். இந்தப் பிடிவாதத்தால் உன் தம்பி தங்கச்சிகளெல்லாம் பட்டினிக்கு போகும். கொஞ்சம் விட்டுக்குடுத்துட்டேன்னா அவங்கல்லாம் நல்ல நிலைக்கு வந்துருவாங்கன்னு சொன்னீங்க. மொதல்ல கஷடமாதான் இருக்கும், ஒரு ரெண்டு மூணு தடவா ஆனா நீயே எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு சொன்னிங்க”

“அப்புறம் அந்தப்பொண்ணு ஒண்ணுமே சொல்லாம அழுதிட்டிருந்தபோது நீங்களே அவள கட்டிப்பிடிச்சு …” நான் எழுந்து அப்பாலிருந்த பரிசோதனைக் கட்டிலைக்காட்டி  “இந்தக்கட்டில்தான்… இதுல அவள படுக்க வெச்சு அவள அனுபவிச்சிங்க. நீங்க பண்றப்ப கூட அவ அழுதிட்டு தான் இருந்தா…” என்றேன். “ஸ்டாப்!” என்று அவர் சொன்னார். “நீங்க அழுவாத அழுவாதன்னு சொல்லிட்டே அத செஞ்சிங்க. அப்றம் அவள அடிச்சு அழுவாதே, வாயமூடு மூதேவீன்னு திட்டினீங்க. அப்புறம் மறுபடியும் இன்னொருவாட்டி அவள  செஞ்சிட்டு எந்திரிச்சு பாத்ரூம் போனீங்க”

“அவ எந்திரிச்சு நடக்க முடியாம தரையில உக்காந்தா. நீங்க அவ தலமுடிய பிடிச்சு தூக்கி நிப்பாட்டி போய் சுத்தம் பண்ணிக்கோ, எங்கயும் யார்ட்டயும் மூச்சு விடாதே, எங்க சொன்னாலும் உன்னாலதான் ஆப்ரேஷன்ல தப்பு நடந்துச்சுன்னு சொல்லி ஜெயிலுக்கு கூட அனுப்புவேன், என்னால் முடியும் அப்படின்னு சொன்னிங்க. அவ சுவர பிடிச்சுகிட்டு பாத்ரூம் போன போது நீங்க ட்ரெஸ்ஸ மாத்திட்டு கதவ தெறந்துட்டு வெளிய போனீங்க. அவ பாத்ரூமிலே தலையிலே அடிச்சுகிட்டு பயங்கரமா அழுதா. எனக்கு பாவமா இருந்திச்சு. மேல வரலாமான்னு நெனச்சேன் ஆனா என்னமோ வரத்தோணல. அந்தப்பொண்ண பாத்தா நான் அழுதுருவேன்னு தோணிச்சு. பாவம்ல?” என்றேன்.

டாக்டர் என் கண்களைக் கூர்ந்து பார்த்து “நீ அவட்ட பேசினியா ?எப்ப பேசின?” என்றார், “யார்ட்ட, அவள்ட்டயா ?அவள்ட்ட பேசவே இல்லியே. அதுக்கப்புறம் நான் இன்னிக்கு தான் அவளப்பாக்கறேன். இப்ப அவ முகம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு. கண் எமையெல்லாம் தடிச்சிருக்கு. அவளும் நல்லா தூங்கறதில்லன்னு நெனக்கிறேன் .அவளுக்கும் மாத்திர குடுப்பீங்களா டாக்டர்?” என்றேன் .

“இதபார் நீ என்னோட பேஷண்ட், நான் ஒன்ன ரெண்டு ஊசி போட்டு முழுகிறுக்காக்கி இந்த ஆஸ்பத்திரில ஏதாவது ஒரு ரூம்ல அடச்சு போட்டுரமுடியும். புரியுதா?” என்றார் டாக்டர். நான் அவரையே பாத்துக்கொண்டிருந்தேன். “உன்னை  நான் என்ன வேணாலும் பண்ண முடியும். பேஷண்டை டாக்டர் நெனச்சா கொசு அடிக்கிற மாதிரி அழிச்சுர முடியும் .அதிலயும் மெண்டல் பேஷண்டுன்னா இன்னொரு மெண்டல் டாக்டர்தான் என்னை விசாரிக்கவே முடியும். அவுங்க எதுவும் பண்ணமாட்டாங்க. நாங்கள்லாம் ஒண்ணு. உன் உயிர் என் கையிலதான். எங்கியாச்சும் இத வாயத்தெறந்தே…” என விரலை ஆட்டினார்.

”நான் எதையுமே யார்ட்டயுமே சொல்றதில்லயே” என்றேன். “நான் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. நான் உளர்றன்னுதான் நெனப்பாங்க. அதனால நீங்க பயப்படவே வேண்டியதில்லை” டாக்டரின் முகம் தெளிந்தது. “நீ ரொம்ப கிளவர்…” என்றார். “இப்போ உனக்கு ஒரு ஊசிய போடறேன் .கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்துரும்” என்றார்.  “நீங்க ஊசி போட்டாலும் குகை அங்கதானே இருக்கும்? ஊசி போட்டு குகைய இல்லாம பண்ணிற முடியுமா? அது ஒரு சிட்டி மாதிரி டாக்டர்… சொல்லப்போனா இந்த சிட்டியை விட பெரிசு” என்று நான் சிரித்தேன்

ஊசி போட்டுக்கொண்டு வரும் வழியிலேயே நான் நன்றாக தூங்கிவிட்டேன். இரண்டு நாட்கள் எனக்கு எப்போதுமே தூக்கக்கலக்கமாக இருந்ததனால் குகைகளுக்குள் செல்லவில்லை. ஆனால் உண்மையில் செல்லவில்லையா என்ற சந்தேகமாகவும் இருந்தது. ஏனென்றால் கனவில் நான் நிறையமுறை அந்தக்குகைக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன். கனவு காண்கிறேன் என்று அந்தக்குகைக்குள் சுற்றும்போதே தெரிந்தது. அல்லது தூக்கவெறியில் நானே கிளம்பி  கால்பழக்கத்தில் குகைகளுக்குள் சென்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அம்மா என் மனைவியிடம்  “என்னமோ தெரியல, ரொம்ப வீக்காயிட்டான் .பேச்சும் ரொம்ப மாறிடுச்சு” என்றாள். என் மனைவி பேசாமல் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.  “நீ ஒருவாட்டி வாயேன் டாக்டர்ட்ட” என்றாள் அம்மா .அவள் ஒன்றுமே சொல்லாமல் தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அம்மா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே விரல்களை நக்கிக்கொண்டிருந்த என்னிடம் “வெரல நக்காதே முண்டம்” என்றாள்

நான் இரண்டு நாட்களிலேயே ஊசியின் விளைவுகளிலிருந்து வெளியே வந்தேன். அந்த ஊசியை டாக்டர் எனக்கு ஏன் போட்டிருப்பார் என்று எனக்குப் பிறகுதான் தெரிந்தது .அந்த இரண்டு நாட்களிலும் நான் நிறைய பேசித் தள்ளியிருந்தேன். அம்மா  “என்னடா இது சொல்ற? என்ன்னென்னமோ சொல்லிட்டிருக்க? எல்லாரப்பத்தியும் என்னென்னெமோ கேவலமா சொல்ற?” என்றாள். “நானா?” என்றேன். “நீதான்” என்றாள். “என்னென்ன சொன்னேன்?” என்றேன். “வேண்டாம். உன்னயெல்லாம் எப்டிரா வளர்த்தோம்! சின்னபுள்ளையா இருக்கும்போது அப்படி ஒரு பிள்ளயா இருந்தே. இப்ப ஒனக்கு என்ன ஆச்சு?” என்றாள்

“நான் எல்லாத்தயும் தெரிஞ்சிட்டிருக்கேன்” என்றேன். “என்னத்த தெரிஞ்சே? கிறுக்கு!” என்று அம்மா சீற்றத்துடன் சொன்னாள். “நீதான் கிறுக்கு! உம்மருமகதான் கிறுக்கு! இந்த உலகத்தில உள்ள அத்தன பேரும் கிறுக்கு!” என்று சொல்லிவிட்டு நான் எழுந்து என் அறைக்குள் வந்தேன். ஓங்கி கதவை அறைந்தேன். செல்பேசியை எடுத்து வரைபடத்தை ஆராயத்தொடங்கினேன்.

9

[ 8 ]

நான் மீண்டும் குகைப்பாதைக்குள் சென்றபோது சற்று உடல் களைப்பிருந்ததே தவிர மற்றபடி எந்த மாற்றமும் இருக்கவில்லை. வழக்கம்போல குகைப்பாதைக்குள் இறங்கியதுமே மொத்த குகைவரைபடமும் என் மனதில் தோன்றியது. அன்று எங்கே செல்வது என்று வழக்கம்போல யோசித்தபின் கால்களுக்கே அந்த பொறுப்பை அளித்தேன். சுற்றி அலைந்து வேண்டுமென்றே வழி தவற முயன்று தன்னிச்சையாகவே கால்கள் வழி கண்டுபிடிக்கும் ஆச்சரியத்தை அனுபவிப்பது என்னுடைய வழக்கம். கால்கள் ஓய்ந்து நின்றிருக்கும்போது அது எந்த இடம் என்று வரைபடத்தை மனதில் ஓட்டி கண்டுபிடிப்பேன். அதன்பிறகு அங்கு ஏன் வந்தேன் என்று புரிந்துகொள்ள முயல்வேன். பெரும்பாலும் ஏழெட்டு கோணங்களில் அதற்கான காரணங்களை உருவாக்கிக்கொண்ட பிறகு சலிப்படைந்து அங்கிருந்து திரும்பி வருவேன்

அன்று நான் மேலே வந்தபோது நான் சென்று நின்ற இடம் சற்று சிறியதாக இருந்தது .அதற்குள் நான் மிக அடிக்கடி வந்துகொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். முன்பு ஒரு முறை தற்செயலாக அங்கே வந்தேன். அதன்பிறகு அங்கு இறங்கியதுமே அந்த இடம்தான் என் மனதில் வருகிறது என்று அப்போதுதான் தெரிந்தது. அது வேண்டாம் என்று தவிர்த்துவிட்டுத்தான் இன்னொரு இடத்தைச் சென்று சேர்கிறேன். இந்த இடம் என் மனதில் ஏன் முதலில் வருகிறது? அங்கே அமர்ந்தபடி அதற்கான காரணம் என்ன என்று யோசித்துப்பார்த்தேன். ஒன்றும் தோன்றவில்லை.

ஒருவேளை தற்செயலாக கால்களை அலையவிட்டு நான் வந்தடைந்த முதல் இடம் இதுவாக இருக்கலாம். அதன்பிறகுதான் இந்த தற்செயலின் வாய்ப்புகளை நான் கற்றுக்கொண்டு பல இடங்களில் செல்வதற்கான வழிகளை என் மனதில் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால் வண்டிக்காளைகள்  தொழுவுக்கு  வருவது போல இந்த இடத்திற்குதான் மனம் முதலில் வருகிறது. முதலில் இந்த இடத்திற்கு ஏன் என் மனம் வந்தது? வெளியே இந்த இடத்தை நான் எப்படியாவது அறிந்திருக்கிறேனா?

உண்மையில் வெளியே அந்த இடம் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. இந்த தெருவோ கட்டிடமோ என்னுடைய கற்பனையில் இல்லை. கீழிருந்து மேலே கேட்கும் ஒலிகளை வைத்து இந்த இடத்தை உருவாக்கிக்கொண்டிருந்தேன். இந்த இடமே கீழிருந்து பார்க்கும் பார்வையில் தான் என் மனதில் விரிந்திருந்தது. இதற்குமுன் முந்தைய பிறவியில் எப்போதாவது இங்கு வந்திருக்கிறேனா? ஒருவேளை பழைய பிரிட்டிஷ் காலத்தில் ஒரு சோல்ஜராக நான் இங்கு இருந்திருக்கலாம். இது முந்தைய பிறவியின் நினைவாக இங்கு இருந்திருக்கலாம். ஏன் சோல்ஜர்? அதிகாரி! கேப்டன்! கர்னல்!

கர்னல்! கர்னல்! நான் என்னை கர்னல் என்று பலமுறை சொல்லிக்கொண்டேன். உற்சாகமாக இருந்தது.. என் கையில் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரிய துப்பாக்கி! பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அந்தக்காலத்தில் மிகப்பெரிய துப்பாக்கியை பயன்படுத்தியிருந்தார்கள். நான் கலைக்களஞ்சியங்க்ளை வாசிப்பதை இளமை முதலே வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். அப்பா என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா முழுத்தொகுப்பு வாங்கி வைத்திருந்தார். கலைக்களஞ்சியங்களில் இருக்கும் சின்னச் செய்திகளிலிருந்து நான் கதைகளை உருவாக்கிக்கொள்வேன். யானைத்துப்பாக்கி! நைட்ரோ கிளிசரினில் வெடிக்கக்கூடியது. மிகப்பெரிய ஓசையுடன் வெடிக்கும். பெரிய குண்டு. யானையின் தலையே துளைத்துவிடும். மனிதத் தலை கூழாக உடைந்து தெறிக்கும். துணிப்பொட்டலம்போல கட்டிவைக்கவேண்டும்.

பெருமூச்சு விட்டபடி கால்களை நீட்டி அமர்ந்தேன். மெல்ல ஒர் எண்ணம் எழுந்தது. நான் ஏன் மேலே சென்று பார்க்ககூடாது ?நான் இதுவரைக்கும் மேலே சென்றதில்லை. எல்லா இடத்திற்கும் மேலே செல்ல வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் இந்த ஒரு இடத்தை மட்டும் மேலே சென்று பார்க்கலாம் .என்ன நிகழ்கிறது என்று பார்க்கலாம். இங்கு பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. ஏனெனில் இங்கு எப்போதும் ஓசைகளோ அசைவுகளோ இல்லை. மேலே இருப்பது ஒரு சிறிய வாடகை வீடு. அங்கே குடும்பம் எதுவும் இல்லை. யாரோ தனியாக தங்கியிருக்கிறார்கள். இங்கே சில முறை வந்து நின்றதிலிருந்து அவர் ஏதோ நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதிகாரி என்று தெரிகிறது.. மேலே சென்று அவர் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு வரலாம் அவர் முகம் எத்தனை எண்ணியும் என் கற்பனைக்கு வரமாட்டேன் என்கிறது.

நான் மேலும் மேலும் தயங்கி தயக்கத்தின் இறுதியில் உறுதியான முடிவை திடீரென்று எடுத்து மேலே செல்ல தொடங்கினேன்.சுரங்கத்தில் சுவர்களில் விரல்களால் தொற்றி கால்களால் பற்றி ஏறுவதற்கு எனக்கு இப்போது நன்றாக பயிற்சி இருந்தது. மேலே சென்று அங்கிருந்த கற்பலகையை கண்டுபிடித்து அதை சற்றே உந்தி கீழே இழுத்தேன் .அதற்குமேல் மரத்தாலான தரைதான் இருந்தது. அதை உந்தி பெயர்க்கமுடியுமா என்று பார்த்தேன்.  சில முறை உந்தியபோது அது அசைவது போல் தெரிந்தது. அன்று என் கையில் கடப்பாரையை கொண்டு வந்திருந்தேன். எப்படியோ அன்று அது தேவை என எனக்கு தெரிந்திருக்கிறது

மீண்டும் தொற்றி கீழிறங்கி தரையில் கிடந்த கடப்பாரையை எடுத்துக் கொண்டு மேலே சென்றேன். கடப்பாரை முனையால் தட்டிட்க் தட்டி பொருத்துகளை வலுவிழக்கச்செய்தபின் ஒரே உந்தலில் அதை மேலே தூக்கினேன். நான் வெளியேறும் அளவுக்கு வழி உருவாகியதும் இரு விளிம்புகளையும் பற்றி மூச்சுபிடித்து எம்பி மேலே சென்றேன்.

மிகச்சிறிய அறை அது. பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார்கள். கிரிக்கெட் மட்டைகள், உடைந்த நாற்காலிகள், நாலைந்து புழுதிபடிந்த மரப்பெட்டிகள், ஒரு பெரிய மரபீரோ. நான் அங்கே நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை .ஆனால் மரப்பலகை அசைந்ததை கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் நான் வெளியே சென்றால் என் காலடி ஓசையும் கேட்கும். ஒரு வேளை என்னை யாராவது தற்செயலாக பார்த்துவிடவும் கூடும்.

கடப்பாரையை கையில் எடுத்துக்கொண்டேன். கையில் ஒர் ஆயுதத்துடன் ஒருவர் இருப்பது எப்போதுமே முதலில் ஒரு பயத்தை உருவாக்கும். யாரும் அப்படி அணுகி வந்துவிடமாட்டார்கள். அதற்குள் நான் ஓடிவந்து இந்த துளை வழியாக குதித்துவிடுவேன். சுரங்கப்பாதைக்குள் சென்றுவிட்டேன் என்றால் அதன்பிறகு என்னை யாரும் பிடிக்க முடியாது.

இந்த சுரங்கப்பாதை இவ்வளவு பிரம்மாண்டமான வலைப்பின்னலென்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். நான் இதற்குள் பதுங்கியிருப்பேன் என்று போலீசை அழைப்பார்கள். ஆனால் போலீசாரும் இதற்குள் இறங்கி தேச முடியாது .இதற்குள் வாழ்ந்தால் மட்டுமே  வழி கண்டுபிடிக்கமுடியும். அதற்குமுன் நான் என்னுடைய அறைக்குள் வந்திருப்பேன். இந்த நகரத்தில் எங்கு சென்று என்னை அவர்கள் கண்டுபிடிக்க முடியும்? போலீஸ் நாய்கள் சுரங்கப்பாதைக்குள் மணம் பிடிக்குமா என்ன? பாவம் மிருகங்கள், அவை அத்தகைய இருட்டைக்கண்டதும் பயந்து அழ ஆரம்பித்துவிடும்.

வெளியே இருக்கும் போலீஸோ ராணுவமோ நீதிமன்றமோ துப்பறியும் நிபுணர்களோ இந்த சுரங்கப்பாதைக்குள் வர முடியாது. சுரங்கப்பாதைக்குள்  என்னைக் கைது செய்வதென்றால் அங்கே ஏற்கனவே இருந்துகொண்டிருப்பவர்களிடம் சொல்லவேண்டும்.  அவர்கள் பழைய பிரிட்டிஷ்  வீரர்கள். இவர்கள் கொடுக்கும் புகாரை அவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டுமென்பதில்லை.

நான் அந்த சிறிய அறையின் கதவை உள்ளிருந்து   மெல்லத்திறந்து வெளியே  சென்றேன். நினைத்ததற்கு மாறாக வெளியே இருந்த அறை நவீனமாக இருந்தது. புதிய சோபாக்கள் போடப்பட்டிருந்தன பறவைகள் பல்வேறு கோணங்களில் அமர்ந்திருக்கும் ஓவியம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. ஒரு சிறிய டெலிவிஷன்.   டீபாயில் மதுக்கோப்பைகள் இருந்தன. அருகே சிப்ஸ் மிஞ்சியிருக்கும் பிளாஸ்டிக் தட்டுகள்

இரண்டு மதுக்கோப்பைகள் என்பது எனக்கு சிறிய அதிர்ச்சியை உருவாக்கியது. இரண்டுமே கால்வாசி எஞ்சியிருந்தன. நான் அவற்றில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன். விஸ்கி. அந்த  அறைக்குள் அங்கு தங்கியிருப்பவர் ஒற்றை ஆண்தான் என்பதைக்காட்டும் சில அம்சங்கள் இருந்தன .அதை என்னால் உணரமுடியவில்லை. அந்தக்கூடத்திலிருந்து வலப்பக்கமாக சமையலறைக்கு செல்லும் கதவில் ஒரு வாசல் இருந்தது. அங்கே ஒரு ஃப்ரிட்ஜ் ஓடிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது .அதற்கப்பால் சன்னல் கதவு திறந்திருக்க வெளியிலிருந்து வெளிச்சம் உள்ளே நீண்ட சட்டகங்களாக சரிந்து கிடந்தது ஒளியில் கண்கூச நான் திரும்பி வந்தேன்

இது பகலா என்ன? நான் என் அறைக்குள்ளிருந்து இந்தப்பாதைக்குள் நுழைந்தபோது இரவாக இருந்தது. விடிந்துவிட்டிருக்கிறது.நான் மெல்லிய குரலில் மூச்சொலிகள் கலந்த பேச்சுக்குரல்களைக் கேட்டேன். நான் எண்ணியது போலவே!  மிகச்சிறிய ஆவலொன்று எழுந்தது. ஆனால் அது தவறென்றும் தோன்றியது. அவ்வாறு தவறென்று தோன்றுவதே அதை நோக்கி நம்மை வலுவாக இழுக்கும். அத்தனை வலுவானது அந்த ஆவல்.

மெதுவாக நடந்து சென்றேன் அவர்கள் அந்தக்கதவை தாழிட்டிருக்கவில்லை. ஏனென்றால் முன் கதவை உள்ளிருந்து பூட்டியிருந்தார்கள். நான் மிக மெதுவாக அந்தக்கதவை தள்ளி விரற்கடை அளவிற்கு இடைவெளி உருவாக்கினேன். அதன் வழியாக பார்த்தபோது வெற்றுடல்கள் கைகளாலும் கால்களாலும் கவ்விக்கொண்டு விசையுடன் விதிர்த்து, நெளிந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். என் உடலெங்கும் பதற்றம் பரவியது. பற்கள் கிட்டித்து கண்களில் நீர் நிரம்பி பார்வையை மறைத்தது தலையை அந்தக்கதவில் சாய்த்து என்னை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

மீண்டும் கதவை சற்றே திறந்து அவர்களை பார்த்தேன். பின்னர் நன்றாகவே கதவைத் திறந்து உள்ளே சென்றேன். கதவு திறந்த ஓசையை கேட்டு இருவரும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்கள். அவள் அலறினாள். அந்த ஆண் எழுந்து அருகே இருந்த கூஜாவை கையிலெடுத்தார். நான் அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு உரக்க அலறிக்கொண்டு திரும்பி ஓடினேன் அந்த ஆண் என்னைத் துரத்தி வருவதை உணர முடிந்தது. அவர்  “நில்! யார் நீ? நில்!” என்று கத்திக்கொண்டே வந்தார்.

நான் அந்தச்சிறிய அறைக்குள் உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டேன். ஓடிச்சென்று பலகை பெயர்ந்திருந்த இடைவெளியினூடாகப் பாய்ந்து உள்ளே இறங்கினேன். அந்த துளையை மூடுவதற்கு எனக்குப்பொழுதில்லை. கீழிருந்து திறந்த மூன்று   குகை வழியில் எதில் ஓடுவதென்று தெரியவில்லை. முதன்முறையாக எனக்கு வழிகள் குழம்பிவிட்டிருந்தன ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து வெறியுடன் ஓடத்தொடங்கினேன். வெவ்வேறு மடிப்புகளில் திரும்பி திரும்பி இருளில் நான் சென்றுகொண்டே இருந்தேன்.

ஒரு போதும் என் மனதிலிருந்து மறையாத அந்த குகைகளின் வரைபடம் முழுமையாகவே கலைந்துவிட்டிருந்தது. ஓட ஓட அதுமுழுமையாகவே அழிந்துவிட்டது. இனி ஒருபோதும் அந்த வழிகள் எனக்குப்புலப்படப்போவதில்லை என்று தோன்றியது. அதன் பிரம்மாண்டமான சிக்கலை நான் அறிந்திருந்ததனால் திரும்ப என்னால் கிளம்பிய இடத்திற்கு செல்ல முடியாதென்பது தெரிந்திருந்தது. நான் எதிரே வந்த வெள்ளைக்காரரிடம் “மன்னிக்கவேண்டும். உங்களுக்கு என்னைத்தெரியுமா? என்னுடைய வீட்டுக்கு அடியில் செல்வதற்கு வழி சொல்ல முடியுமா?” என்று கேட்டேன் .அவர் என்னை நோக்கி ஏதோ சொன்னார். பின்னர்  தொய்ந்த தோள்களுடன் திரும்பி நடந்தார்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்