குகை (குறுநாவல்) : 3

7

குகை- சிறுகதை- பகுதி -1

குகை சிறுகதை-  பகுதி 2

[ 5 ]

நகரத்தின் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மைகள் இருந்தன நான் பெரும்பாலும் சென்று இளைப்பாறும் ஒர் இடத்திற்கு மேலே பேருந்துநிலையம் இருக்கிறது என்பதை வரைபடத்திலிருந்து கண்டுபிடித்தேன்.பேருந்து நிலையம் பகலிலும் இரவிலும் வண்ணங்களாலும் வெளிச்சங்களாலும் கூச்சல்களாலும் கொப்பளித்துக்கொண்டிருக்கும். அதற்கு அடியில் நீள்சதுரமான பெரிய கூடமொன்று இருந்தது அது சுவர்கள் கல்லடுக்கிக் கட்டப்பட்டவையாகவும் கூரை வளைவுகளால் இணைக்கப்பட்ட குவையால் ஆனதாகவும் இருந்தது. உள்ளே மெல்லிய காற்று ஓடிக்கொண்டிருக்கும். உடல் நடுங்க வைக்கும் குளிர்.

நான் அடிக்கடி அங்கே சென்று அமர்ந்திருந்தேன். அவ்வளவு பெரிய மக்கள் திரளுக்கு கீழே கன்னங்கரிய வெறுமை. மைபோன்ற இருட்டு. மேலே கேட்கும் ஓசைகள் கலந்து ஒரு ரீங்காரமாக மாறி அங்கே நிறைந்திருக்கும். அவற்றை ஒன்றாக கலப்பது எது என்பது தெரியவில்லை. அந்த ஓசைகள் ஒவ்வொன்றும் அங்கிருக்கும் கற்களில் கசிந்து வரும். ஒவ்வொரு குரலும் ஒரு கல். ஒட்டுமொத்தமாக அக்கற்கள் இணைந்து அந்த முழக்கத்தை உருவாக்கின.

பெரிய சந்தை, பேருந்து நிலையம் போன்றவற்றில் எழும் ஓசை முதலில் வெறும் முழக்கமாகவே இருக்கும். ஆனால் சற்று நேரத்திலேயே அத்தனை ஓசைகளிலும் நமக்குத் தேவையான ஓசைகளை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள முடியும். அந்த ஓசைகள்தான் அந்த இடமே என்று எண்ணிக்கொள்கையில் அந்த இடம் நமக்குப் பொருள்படத்தொடங்கும். நான் மேலே பேருந்து நிலையத்திற்கு செல்லும்போது எப்போதும் ஊர்ப்பெயர்களைக் கூவி அழைக்கும் ஊழியர்களின் குரல்கள் மட்டும்தான் அங்கிருக்கும் ஓசை என்று நினைத்துக்கொள்வேன்

ஆனால் இங்கே இந்த மொத்தமான முழக்கத்தை எப்படிச் சுருக்கிகொள்வதென்று தெரியவில்லை ஆனாலும் அதை சுருக்கிக்கொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாயினும் அதை அர்த்தப்படுத்தியாக வேண்டும். ஏனென்றால் ஓசைதான் ஓர் இடத்தின் பெயர். பெயரில்லாத மனிதர்களிடம் எப்படிப் பழக முடியும்? அது கைப்பிடி இல்லாத பெரிய உருளைபோல பிடித்து தூக்க முயன்றால் நழுவிக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் நான் அங்கே சென்று அமர்ந்து அந்த ஓசையை காதுகளில் நிரப்பி அதை ஒர் இசையாக அல்லது மொழியாக மாற்றிக்கொள்ள முயன்றேன். பின்னர் அது ஒருசொல்லாக மாறியது. அந்தச் சொல் நான் அறியாத ஒரு மொழியைச்சேர்ந்தது. பின்னர் அதை  ‘நான்’ என்று மொழிபெயர்த்துக்கொண்டேன்.   ‘ஆம்’ என்றும் மொழி பெயர்க்கலாம். ஆனால் எனக்கு  ‘நான்’ பிடித்திருந்தது. அங்கு சென்றமர்ந்து  ‘நான்!’ என்ற சொல்லைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அந்த சொல் என்னைச்சுற்றி நீர்ச்சுழி போல வட்டமிடும். என் உடலை தூக்கி சுழற்றி மையத்திற்கு கொண்டு செல்லும். மையத்தில் அந்த சொல் மிகுந்த விசையுடன் இருந்தது. அங்கே நான் பம்பரம் போல சுற்றி ஆழத்திற்கு சென்று விடுவேன்

பிறகு நினைவு வரும்போது என் முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். தளர்ந்த காலடிகளுடன் நான் திரும்பி வந்து அலுமினிய ஏணி வழியாக ஏறி சுரங்கப்பாதை மூடி விரிப்பை சீரமைத்து என் படுக்கையில் படுத்துக்கொள்வேன். படுக்கையின் கீழே ஏதோ கை அதைத்தூக்கி ஆட்டுவதுபோலிருக்கும். அந்தச் சொல்லே கையாக மாறி என் படுக்கையை ஏந்தியிருப்பதுபோல.

பகலெல்லாம் பெரும்பாலும் நான் தூங்கிக்கொண்டே இருந்தேன். மாலையில் விழித்துக்கொண்டு வரைபடத்தில் நகரத்தின் இடங்களைப் பார்ப்பேன். அன்று நான் செல்லவேண்டிய இடம் என்ன என்றும், முந்தைய நாள் சென்ற இடங்கள் எவையென்றும் அவற்றில் பதிவு செய்வேன். வரைபடம் என்பது நாம் விரும்ப விரும்ப விரிவது என்பது எவ்வளவு விந்தையானது! விரித்துக்கொண்டே சென்றால் அதிலுள்ள ஒவ்வொன்றும் பெரிதாகின்றன. ஆனால் எத்தனைபெரியவற்றையும் நம்மால் சுருக்கி புள்ளியாக்கிவிட முடியும் அதில் என்பது மேலும் விந்தையானது.

என்னிடம் ஒரு நல்ல செல்பேசி இருந்தது என் மனைவி பயன்படுத்தி விட்டு தூக்கிப்போட்டது .அந்த செல்பேசி மிக விலைமதிப்புள்ளது .ஆனால் என்மனைவி ஆறேழு மாதங்களுக்கொரு முறை செல்பேசியை மாற்றிக்கொண்டிருப்பாள். என் வீட்டில் நாலைந்து செல்பேசிகள் அவ்வாறு கிடந்தன.அவற்றை எடுத்துகொண்டு வந்து இயக்கி வரைபடங்களை விரிவாக்கிக்கொண்டேன். நான் சென்ற இடங்களை நீலப்புள்ளிகளால் குறிப்பதற்கான வசதி அதிலிருந்தது. ஒவ்வொரு நாளும் அந்நகரத்தின் வெவ்வேறு இடங்கள் வழியாக சென்று அந்நகரத்தின் அளவை நான் பெரிதாக்கிக்கொண்டிருந்தேன் என்று என் பேசியிலிருந்த வரைபடம் காட்டியது.

பகலில் அந்த வரைபடத்தை பெரிதாக்கியபடி நான் நெடுநேரம் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு நாளும் வெளிறி பலவீனமடைந்துகொண்டே இருப்பதாக அம்மா சொன்னாள். “மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறியாடா?” என்று என்னிடம் கேட்டாள்.  “சாப்பிடறேன்!” என்று சொன்னேன்.“பாத்தா தெரியல்ல. உன் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு. வாயைப்பார், தண்ணியே குடிக்காதவன் மாறி உலர்ந்து சுருங்கி… என்னாச்சு உனக்கு?” என்றாள். “ஒண்ணும் இல்லியே” என்றேன்.

என் நெற்றியைத் தொட்டு “நல்லா தூங்கறியா? உன் ரூம்ல சத்தமே இல்லியே” என்றாள். “நல்ல தூக்கம், அதான்” என்றேன். “அப்பறம் ஏன் பகல்ல தூங்கிட்டிருக்க?” என்றாள்.  “பகல்லயும் தூக்கம் வருது. வேண்ணா மாத்திரைய நிப்பாட்டிக்கவா?” என்றேன். “வேண்டாம் வேண்டாம் அத  விடக்கூடாது. சாப்டுக்கோ” என்றாள்.

ஆனால் நான் சரியாக இல்லை என்ற சந்தேகம் அம்மாவுக்கு இருந்துகொண்டே இருந்தது .நான் அறைக்குள் இருக்கும்போது என் மனைவியிடம்  “அவன் ராத்திரி சரியா தூங்கறதில்லன்னு நெனக்கிறேன். முகமே மாறிப்போச்சு .டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டணும்” என்று அம்மா சொல்வதைக்கேட்டேன். என்னைப் பற்றிய இந்த மாதிரியான எந்த விஷயத்தையும் என் மனைவி காதில் போட்டுக்கொள்வதில்லை. நாக்கை சுழித்து ஏதோ ஒரு ஓசை எழுப்பிவிட்டு அவள் எழுந்து சென்றாள்.

“டாக்டர்ட்ட போய் காட்டலாண்டா” என்றாள் அம்மா. “எதுக்கு?” என்றேன். “நீ என்ன பண்ற?” ராத்திரி நீ சரியா தூங்கலேன்னுதான் தோணுது” என்றாள். “தூங்கறேன்னு சொல்றேன்ல? நீ வந்து பாரு” என்றேன்.  “நேத்திக்கி ராத்திரி நான் வந்து பாத்தேன். உள்ள ஒரு சத்தமும் இல்ல. நீ வழக்கமா நல்ல குறட்டை விடுவே” என்றாள்.  “நான் நல்ல கொறட்ட விட்டு தான் தூங்கறேன். இந்தக்கதவு ரொம்ப கனமா இருக்கு, அதான் கேக்கல” என்றேன் .

“அப்டீனா நீ எதுக்கு கதவ மூடி வெக்கற? கதவ தெறந்து வையி” என்றாள்.  நான் அம்மாவை பார்த்தேன்  “கதவ தெறந்து வெச்சா பூனை வந்துருது” என்றேன். “பூன வந்தா என்ன? பயமானா என்னைய வந்து பாக்கலாம்ல? இந்த கதவு இப்படி காட்டுத்தனமா இருக்கு. மயக்கம் கியக்கம் வந்துருச்சுன்னா எப்படி உள்ள வர்றது? சொல்லிட்டேன் ,இனிமே நீ கதவ தெறந்துதான் வெக்கணும்” என்றாள். நான் தலையசைத்தேன்

மறுநாள் அம்மா கதவை பல முறை தட்டியிருக்கிறாள் காலையில் நான் சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும்போது கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து திறந்தேன். “ஏண்டா கதவ மூடி வெக்கற? நேத்து ராத்திரி எத்தன தடவ கதவ வந்து தட்டினேன் தெரியுமா? பயந்துட்டேன்” என்றாள். நான்  “நான் என்ன பண்றது? நல்ல தூக்கம் வந்துருது” என்றேன் . “நீ கதவ தெறந்து வை” என்று சொன்னாள். “சரி” என்றேன்.

அதன்பிறகு அம்மா என்னைக் கண்காணிக்க தொடங்கினாள். மறுநாளும் இரவில் என் கதவைத் தட்டியிருந்தாள். மூன்றாம் நாளும் நான் கதவைப் பூட்டிவைத்திருந்ததைக் கண்டு அவளுக்கு பெரிய சந்தேகம் வந்தது. “நீ முன்னாடி கதவ மூடிவைக்க மாட்டியே. கதவ முடி வெச்சா பயமா இருக்குன்னு சொல்லுவியே” என்றாள். “இந்த வீட்டுல பயமே இல்ல. கதவு நல்ல கனமா இருக்கு” என்றேன் . “என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கே? உனக்கென்ன பண்ணுது ஒடம்புக்கு? என்றாள். “ஒண்ணுமே பண்ணலே நல்லாதானே இருக்கேன்” என்றேன். “கனவு ஏதாவது வருதா?” என்றாள். “கனவே இல்ல. நல்ல தூக்கம்” என்றேன்

அம்மா நான் பகலில் தூங்கிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி வந்து என் நெற்றியில் கையை வைத்துப்பார்த்தாள். அம்மாவிடம் இந்த சுரங்கத்தைப்பற்றி சொன்னாலென்ன என்று நான் எண்ணத்தொடங்கினேன். அம்மாவுக்கு அது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் ஒருவேளை சுரங்கத்தில் நான் திரும்பி வரமுடியாமல் ஆனால் என்னை அம்மா தேடி வரவேண்டும். குறைந்த பட்சம் எவருக்காவது இப்படி ஒரு சுரங்கம் இங்கிருக்கும் செய்தி தெரிந்திருக்கவேண்டும்.

அம்மாவிடம் இதை எப்படி சொல்வதென்று யோசித்தேன். அப்பட்டமாக திறந்து சொன்னால் அம்மா அதிர்ச்சிதான் அடைவாள். ஏற்கனவெ அவளுக்கு நிறைய அதிர்ச்சிகள். எனவே நான் அம்மாவிடம் பேசும்போது பூடகமாகவே சொன்னேன்.  “அம்மா நம்ம வீட்டு அடியில் சுரங்கம் இருக்கு”  என்றேன். “என்ன?” என்று சமையல் செய்தபடியே கேட்டாள்.  “நம்ம வீட்டுக்கு அடியிலிருந்து கிளம்பிப்போகுது. இந்த சிட்டி முழுக்க இருக்கு அந்த சுரங்கம். நம்ம வீட்டுக்குள்ள இருந்து அந்த சுரங்கத்துக்குப் போயிட முடியும்”  என்றேன்

அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. “உண்மையச் சொன்னா நான் டெய்லி அந்த சுரங்கத்துக்குள்ள போறேன்” என்றேன். அம்மா  “சாப்பிடறியா? மணி பன்னெண்டரை ஆச்சு” என்றாள் நான்  “ரொம்ப இருட்டான சுரங்கம். நெறைய கிளைகள் இருக்கு .அந்த கிளை வழியாக எந்த இடத்துக்கும் போகமுடியும் .இந்த நகரம்ங்கறது மேல் இருக்கறது இல்ல. உண்மையில அது பொய். சோப்புநுரை மாதிரி. அடியில தண்ணிமாதிரி இருக்கிறதுதான் உண்மையானது” என்றேன்.

அம்மா தட்டுகளைக்கழுவியபடி தலையசைத்தாள். “நுரை அப்டியே போயிடும் பாத்துக்கோ .இப்போ அணுகுண்டு போட்டாங்கன்னா நம்மளச் சுத்தி இருக்கிறது எல்லாம் அப்படியே இல்லாம ஆயிடும். ஒரு ஆள் கூட இருக்கமாட்டாங்க. ஆனா சுரங்கத்துக்கு அடியில ஒண்ணுமே ஆகாது. இந்த சுரங்கம் இருக்கிறது தெரிஞ்சவங்க அதுக்குள்ள போய் தப்பிச்சுக்குவாங்க. நான் அடியில இருக்கும்போது மேல் அணுகுண்டு விழுந்துருச்சுன்னா நான் மட்டும்தான் சிட்டியில பாக்கி இருப்பேன்” என்றேன்.

பாத்திரத்தை வெளியே போடப்போன அம்மாவுடன் சென்றபடி “ஆனா நான் வெளிய வரவே மாட்டேன். வெளிய வந்தா ரேடியேஷன் இருக்கு, பாத்துக்கோ. எல்லாரும் செத்துருப்பாங்கல்ல? வெளிய வந்தா நானும் செத்திருவேன். அதனால் நான் உள்ளயே இருந்துவேன்” என்றேன். அம்மா தட்டுகளை கழுவி மேசையில் வைத்தபடி  “சாப்ப்டுடா” என்றாள். நான் உட்கார்ந்துகொண்டேன். அவள் தண்ணீர் வைத்தாள். “சாதம் கொஞ்சம் போட்டுக்கோ .ரசம் இருக்கு. இன்னிக்கு சாம்பார் வெக்கல்ல’ என்றாள்.

நான்  “எல்லா சிட்டிக்கும் அடியிலே இப்படி ஒரு ரகசிய குகைவலை இருக்கும்னு நெனக்கிறேன். இது மரங்களோட வேர் அடியில இருக்கிற மாதிரி. முக்கியமானவங்களுக்கெல்லாம் இப்படி அடியில் ஒரு நகரம் இருக்கிறது தெரியும். அணுகுண்டு போட்டா அவங்க உள்ள போய்டுவாங்க. அப்பறம் அணுகுண்டோட ரேடியேஷன் போன பிறகு உள்ளே இருந்து வெளிய வந்து மறுபடியும் அந்த சிட்டிய அவங்க உருவாக்குவாங்க. மரம்லாம் முறிச்சா வேரிலிருந்து மறுபடியும் மொளைக்குதுல்ல? இந்த வேர் எவ்வளோ ஆழத்துக்கு போயிருக்கோ அந்த அளவுக்கு சிட்டி பர்மனண்ட்டா இருக்கும்” என்றேன்.

சாப்பிட்டபடி நான் பேசிக்கொண்டே சென்றேன். “சுரஙகத்திலிருந்து இந்த மாதிரி சிட்டியெல்லாம் பல முறை மொளச்சு வந்திருக்குன்னு நெனக்கிறேன். இப்ப இருக்ககூடிய சிட்டிக்கு முன்னாடி வேற ஒரு சிட்டி இருந்திருக்கும். அத அப்படியே இடிச்சுட்டாங்க. அது பழைய ராஜாக்கள் கட்டினது.  அந்த எடத்த இடிச்சு வேற ஒரு சிட்டிய உருவாக்குனாங்க. இந்த சிட்டில இப்ப இருக்கிற எல்லாத்தையும் இடிச்சுட்டு வேற ஒரு சிட்டி வரும்.  ஆனா சொரங்கம் அப்படியே தான் இருக்கும்”

“இப்போ சொரங்கத்துல நமக்கு நெறய பொருட்கள கொண்டு வெசுக்க முடியும். இங்க இருக்கற மாதிரி. ஆனால் அதெல்லாம் அங்க ஒர்க் பண்ணாது. நான் பார்த்துட்டேன் அங்க செல்போனுக்கு சிக்னலே கெடைக்கறதில்ல. அப்ப நான் எப்படி உள்ள வழி கண்டுபிடிக்கறன்னு கேளு” என்றபின் புன்னகைத்து  “எனக்கு ஜிபிஎஸ்ஸே வேண்டியதில்லை. வெளியதான் ஜிபிஎஸ். அங்க உள்ளார ஜிபிஎஸ் வேல செய்யாது .வேல செஞ்சா கூட அந்த உள்ள இருக்கக்கூடிய மேப் எதுவுமே எந்த ஜிபிஎஸ்ஸிலும் இருக்காது”

“ஆனா எனக்கு மன்சில் இருக்கு .எல்லா எடமும் மனசில இருக்கு. நான் எங்க வேணாலும் போவேன் .எங்க வேணாலும் வெளிய வருவேன். யோசிச்சுப் பாரு, என்னால எங்க வேணாலும் வெளிய வரமுடியும். அவங்க நெனச்சிட்டிருக்காங்க அவங்களால எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும்னு. ஆனா என்னைத் தெரிஞ்சிக்க முடியாது. நான் எங்க வெளியே வருவேன்னு அவங்களால தெரிஞ்சிக்க முடியாதில்ல? அவங்க யாருமே இல்லைன்னு நெனக்கிற எடத்துல காலுக்கு அடியில நான் இருப்பேன். அவங்க ஒளிஞ்சிட்டிருகக் எடத்துல அவங்கள பாத்துட்டு கீழ ஒக்காந்திருக்கேன். நான் எந்த எடத்த வேண்ணாலும் தெறந்துட்டு வெளிய வருவேன். அப்ப அவங்களுக்கு எப்படி இருக்கும்? அலறிடுவாங்க இல்ல?”

அம்மா மூன்று மாத்திரைகளை கொண்டு வந்து என் கையில் கொடுத்து  “சாப்பிட்டு படுத்துக்கோ” என்றாள் .நான் மாத்திரைகளைக் கையில் எடுத்துக்கொண்டு “படுத்துட்டு சாப்பிடறேன்” என்றேன். “ஏன் இங்கயே சாப்பிடு” என்றாள். “இல்ல சாப்டுட்டு அங்க போறதுக்குள்ள எனக்கு கால் நடுங்குது .அங்க போய் சாப்டுட்டு படுத்துடறேன்” என்றேன். “சரி” என்று அம்மா சொன்னாள்.

“நான் எதையுமே பாக்காம இருக்கேன்னு நெனக்கறாங்க. ஆனா இங்க வெளிய இருக்கும்போதுதான் எனக்கு எதையும் பாக்க முடியாது .உள்ள சொரங்கத்துக்குள்ள போகும்போது நான் எல்லாத்தயும் பாத்துருவேன்.  சொரங்கத்துக்குள்ள போய் பாக்கறதுக்கு இந்த மாதிரி கண்ணு இல்ல. வேற கண்ணு அது. இப்போ இங்க வெளிச்சத்த வெச்சு பாக்கறோம். அந்த மாதிரி அங்க இருட்ட வெச்சு பாக்கணும். இருட்டில வெச்சுப்பாத்தா சுவர் வழியா பாக்க முடியும். வெளிச்சம்தான் சுவர் வழியா போக முடியாது .இருட்டு சுவர் வழியா போயிடும். இருட்டு எவ்வளவு தூரம் வேணாலும் போகும். இருட்டு போற தூரத்துக்கு வெளிச்சம் போகாது”

“நீ ஒருவாட்டி உள்ள வா. கண்ண அந்த இருட்டுக்கு பழகிட்டன்னு வெச்சுக்கோ இருட்ட வெச்சே எல்லாத்தயும் பாத்திடலாம். அப்பதான் ஒண்ணு தெரியும். நம்ம பாக்கற மனுஷங்க எல்லாம் வெளிச்சத்த வெச்சு செஞ்சவங்க. ஆனால் இருட்ட வெச்ச செஞ்ச ஒரு வடிவம் அவங்க கிட்ட இருக்கு. நாம் ஒளிய வெச்சு பாக்கும்போது அத பாக்க முடியாது. இருட்ட வெச்சு பாக்கும்போது அந்த இருட்டுல செஞ்ச வடிவத்த பாத்தரலாம்”

“படுத்துக்கோ” என்று அம்மா சொன்னாள். நான் என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அந்த மாத்திரைகளை டிராயருக்குள் சின்ன பெட்டிக்குள் போட்டேன் வரைபடத்தை எடுத்து அன்று செல்ல வேண்டிய திசைகளை கூர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். என் முகம் மலர்ந்தது. தம்மரே தம் என பாட ஆரம்பித்தேன். மென்மையாக நடனம் ஆடினேன். சன்னல் வழியாக வெளியே நின்றிருந்த மரங்களைப் பார்த்தேன். அவற்றின் வேர்களை எனக்குத்தெரியும் என நினைத்து சிரித்தேன்.

5[ 6 ]

அந்தச் சின்ன அறையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நகரத்தின் எப்பகுதிக்கும் சென்று வர முடியுமென்பது என்னை கிளர்ச்சியின் உச்சத்திலேயே நிறுத்தியிருந்தது. ஆகவே நான் அறைக்குள் இருப்பதை வெறுத்தேன். அந்த வீட்டுக்குள் இருந்தே முழுமையாக வெளியேற விரும்பினேன். கொஞ்சம் கொஞ்சமாக பகலிலும் குகைக்குள் சென்றுவர ஆரம்பித்தேன். “எனக்கு தலைவலிக்குது” என்று சொல்லி கதவை மூடிக்கொள்வேன். அல்லது “களைபப இருக்கு” என்று சொல்லி அம்மாவின் கண்முன் மாத்திரையை வாயில்போடுவேன். விழுங்காமல் என் அறைக்குள் திரும்பி அதை துப்பிவிட்டு குகைக்குள் புகுந்துவிடுவேன்.

பகலிலும் உள்ளே இருட்டுதான். குகைக்குள் பகலிரவு இல்லை. ஆகவே நாள் இல்லை. நான் சென்று மீள்வதுதான் ஒருநாள். அது எத்தனை நாட்களாகவும் இருக்கலாம். சிலசமயம் நான் திரும்பி வரும்போது அம்மா வேறு புடவை கட்டியிருந்தாள். ஆகவே ஒருநாளுக்குமேல் ஆகியிருக்கும் என கணித்துக்கொண்டேன். அம்மா  என்னிடம் “ஏண்டா இப்படி இருக்கே?” என்று கேட்கும்போதெல்லாம் எரிச்சலும் கோபமும் அடைந்து கதவுகளையும் மேசைகளையும் ஓங்கி அறைந்து  “என்னை விட்டுரு. நான் அடியில போயிடறேன். அடியில எனக்கான வழியெல்லாம் இருக்கு” என்று கத்தினேன்.

அம்மா என்னை நீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.  “எல்லாரும் ஞாபகம் வெச்சுக்குங்க. என்னால எல்லாருக்கு அடியிலயும் வரமுடியும் நேத்தைக்கு நான் எங்கிருந்தேன் தெரியுமா? நேத்திக்கு நான் இந்த நகரத்தில இருக்கிற பெரிய ஆட்களுடைய வீட்டுக்கு அடியில இருந்தேன் .அங்க என்னன்ன தப்பு நடக்குதுன்னு என் கண்ணால பாத்தேன். ஆமா இப்பல்லாம் என்னால் கண்ணாலயே பாக்கமுடியும். சுவர்ல காத வெச்ச்சுக்கிட்டா போதும் .சத்தம் கேக்கும் .அத அப்படியே கண்ணால பாக்கற மாதிரி மாத்திக்குவேன். எனக்குத்தெரியாம ஒண்ணுமே இங்க நடக்க முடியாது”

“என்னை கிறுக்குன்னு நெனக்கிறிங்க .எனக்கு கிறுக்கும் ஒண்ணும் கெடயாது. எனக்கு மாத்திரயெல்லாம் குடுத்து கிறுக்க கொணமாக்கணும்னு நெனக்கிறிங்க .அப்பறம் நான் ஒண்ணுக்கும் ஒதவாதவன் ஆயிடுவேன். இதோ இந்தமாதிரி என்ன நாற்காலியில உக்கார வெச்சு எனக்கு சோறு மட்டும் போட்டுட்டு இருப்பிங்க. அப்படி கெடயாது .நான் கிறுக்கன் இல்ல. அதமட்டும் ஞாபகம் வெச்சுக்குங்க” என்று கத்தினேன். பிறகு என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டேன்.

அந்தக்கதவு எனக்களித்த பாதுகாப்புணர்வு மிகப்பெரியது. அம்மாவிடம் இந்த வழியைச் சொல்லிவிடக்கூடாது என்ற முடிவை  முன்னரே நான் எடுத்திருந்தேன் .அவர்கள் இப்போது என்னைப்பற்றி பயப்படுகிறார்கள். இப்போது நான் நினைத்தால் எந்த வீட்டுக்கும் அடியில் சென்று நின்றுவிடமுடியும் .தங்களுக்கு தெரியாமல் தங்கள் வீட்டுக்கு ஒருவன் வந்து நிற்பதென்பது எவ்வளவு பெரிய அபாயம். இந்த நகரத்தை ஆண்ட வெள்ளையர்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமான ரகசியத்தை உருவாக்கி எனக்கு அளிப்பார்கள் என்று எவரும் கற்பனை கூட  செய்திருக்கமாட்டார்கள்.

வெள்ளையர்கள் இந்த நகரத்தை மேலிருந்து ஆளவில்லை, அடியிலிருந்து ஆண்டிருக்கிறர்கள். அன்று முதலில் தங்கள் அலுவலகங்களை இணைத்துக்கொண்டவர்கள் பிறகு நகரத்தின் அனைத்து கட்டிடங்களின் அடியிலும் செல்லும்படி அந்தப் பாதையை விரிவு படுத்தியிருக்கிறார்கள். இந்த நகரத்திற்கு கீழே இருண்ட நகரம் ஒன்று மிகமிகக்கூர்ந்து மேலே நோக்கிக் கொண்டு பதுங்கியிருந்திருக்கிறது.

அன்று இந்த நகரத்தில் எவ்வளவோ நடந்திருக்கின்றன. நான்குமுறை கவர்னரை கொல்ல முயன்றிருக்கிறார்கள். இரண்டு ஆயுதப்புரட்சிகள் நடைபெற்றிருக்கின்றன. பிரிட்டிஷாருக்கு எதிராக எவ்வளவோ பேசப்பட்டிருக்கும்.திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் அவர்களை எதுவுமே செய்யமுடியவில்லை. அத்தனை சதிகளும் முறியடிக்கப்பட்டன. கடவுள் போல வானத்திலிருந்துகொண்டு அவர்கள் இங்குள்ள  அத்தனை பேரையும் கண்காணிக்கிறார்கள் என்றும் அத்தனை பேரும் தங்களுக்குள் மிக ரகசியமாக பேசிக்கொள்வது கூட அவர்களுக்கு கேட்கிறது என்றும் அந்தக்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது .இன்று கூட சிலர் வானிலிருந்து எல்லாரையும் கண்காணிக்கும் எதையோ அவர்கள் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் வைத்திருந்தது வானிலிருந்து அல்ல மண்ணுக்கு அடியிலிருந்த கண்காணிக்கும் அமைப்புதான். அத்தனை பேருக்கும் காலடிக்கு கீழே அவர்கள் அமைந்திருந்தார்கள்.

நான் அந்த சுரங்கங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தேன். சுரங்கத்தின் சுவர்களை கையால் மெல்ல தட்டிக்கொண்டே செல்வேன். ஏதேனும் சில பகுதிகளில் ஓசை மாறுபாடு இருக்கும். அந்தபகுதியை சற்றே கையால் சுரண்டியபின் கல்விளிம்பைக் கண்டுபிடித்து இடைவெளியை உருவாக்கி நெம்பித்திறந்தால் இன்னொரு சுரங்கப்பாதை தெரியத்தொடங்கும். அதனூடாக மீண்டும் சென்றால் மீண்டும் புதிய பாதை.

நான் ஒருமுறை சென்றுகொண்டிருக்கையில் எதிரில் ஒருவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார் .இருவரும் திடுக்கிட்டு சற்று நேரம் நின்றோம். அவர் என்னை ஒரு ஆவியாக நினைக்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது .ஆகவே நான் சற்று முன்னால் சென்று  ‘குட்மார்னிங் சார்’ என்றேன். அவர் கனத்த குரலில் ‘குட்மார்னிங்’ என்று சொன்னார். அதன்பிறகு தான் அவர் வெள்ளையர் என்ற எண்ணத்தை நான் அடைந்தேன். மேலும் அருகே சென்று ‘மே ஐ ஹெல்ப் யூ சர்?” என்று கேட்டேன். “நோ தாங்க்ஸ்” என்றபின் அவர் சற்று முன்னால் நடந்து நான் அதுவ்ரை கவனிக்காத ஒரு மிகச்சிறிய வழியினூடாக திரும்பி உள்ளே சென்றுவிட்டார்.

எனக்கு படபடப்பு அடங்க் நெடுநேரம் ஆயிற்று. உண்மையில் அந்த கைவிடப்பட்ட சுரங்க வழி என்னுடையது மட்டும்தான் என்று அதுவரை எண்ணிக்கொண்டிருந்தேன். அதற்குள் உலவுவதற்கான வழிகள் தெரிந்த பிறரும் இருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அன்று மிக விரைவிலேயே என் அறைக்கு வந்துவிட்டேன். ஆனால் நிறைய எண்ணி எண்ணி என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். அங்கே அப்படி பிறர் வருவது ஒருவகையில் நல்லதுதான். அங்கு தனிமை இல்லையல்லவா? அதைவிட ஏதோ ஒரு ஆபத்து என்றால் துணைக்கு ஆளிருக்கிறார்கள். நாங்கள் ஒரு சிறு குழுவாக ஆகமுடியும் .ஏன் ஒரு சமூகமாகவே ஆக முடியும்!

நான் அந்த மனிதரை மீண்டும் சந்திக்க விரும்பினேன். ஆகவே மறுநாள் அவரைத்தேடி அந்த குகைக்குள் அலைந்தேன். இரவு முழுக்க சிறிய பாதைகளினூடாக திரும்பி திரும்பி நடந்துகொண்டிருந்தேன். சில இடங்களில் குந்தி அமர்ந்தும் சில இடங்களில் குப்புறப் படுத்து கைகளால் உந்தியும் தவழ வேண்டியிருந்தது. ஓரிரு இடங்களில் எனது உடல் குகையில் மிகச்சரியாக அடைத்துக் கொண்டது. இருவிளிம்புகளையும் கைகளால் பற்றி கால்களால் மிதித்து புழு போல முன்னால் செல்ல வேண்டியிருந்தது .பிரசவம் நடப்பது போல தலைகீழாக புதிய இடங்களில் சென்று இறங்க வேண்டியிருந்தது

அன்று திரும்பி வரும்போது ஏமாற்றமாக இருந்தது .அங்கு இன்னொருவர் இருப்பதற்கான எந்த தடயத்தையும் நான் காணவில்லை. முந்தைய நாள் பார்த்தது என்னுடைய பிரமையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அடைந்தேன் .ஆனால் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது மிக அப்பால் ஒரு நிழலசைவைக் கண்டேன். திடுக்கிட்டு “சார்!” என்று உரக்க அழைத்துவிட்டேன். அது ஒர் ஆங்கிலேய முதியவர். பழைய ஆங்கிலேய பாணியில் உடையணிந்திருந்தார் .நான் கணுக்காலளவு சேற்றில் காலை வைத்து விசை கூட்டுவதற்காக சுரங்கத்தின் இரு சுவர்களையும் கைகளால் பற்றி உந்தி முன்னால் சென்று  “குட்மார்னிங் சார்” என்றேன்

அவர் புருவம் சுளித்து “நீ யார்? என்று கேட்டார். தமிழ் பேசுவார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “நான் இந்த நகரத்தில் வாழ்கிறேன். இங்கே மேலே என் வீடு. உங்களை பார்த்ததில் சந்தோஷம் .நேற்று இன்னொருவரை பார்த்தேன்” என்றேன். “நீ எப்படி இந்த வழியைக் கண்டடைந்தாய்?” என்றார் .நான்  “தற்செயலாக… தரையைக் காலால் உதைக்கும்போது” என்று சொன்னேன்.  “இது எங்களுடைய வழி” என்று அவர் கடுமையான முகத்துடன் சொன்னார். வெள்ளையர்களுக்குரிய கூரிய மூக்கு. மெல்லிய உதடுகள். அவர் கண்கள் பழுப்புநிறமாக இருந்தன. உயரமானவர், ஆகையால் முதுமையில் கூன் போட்டிருந்தார்.

“இங்கு நிறைய பேர் இருக்கிறீர்களா ?இங்கு அவ்வப்போது வருவீர்களா?” என்றேன்.  “ஆம் இது எங்களுடைய வழி” என்று அவர் மீண்டும் சொன்னார். “நான் உங்கள் வழிகளில் குறுக்கிடப்போவதில்லை .இங்கு உங்களைப் பார்த்ததனால் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தேன்” என்றேன். “இங்கு என்னைப்ப்போல பலர் வருவார்கள்” என்றார். முகம் மாறியது. குரல்தழைய “அவ்வப்போது சீமாட்டிகளும் வருவதுண்டு” என்றார். “சீமாட்டிகளா?” என்றேன்.  “ஆம் இது அவர்களுக்கு பழக்கமான பாதை .பிறர் அறியாமல் அவர்கள் எங்குவேண்டுமானாலும் இதனூடாக செல்ல முடியும். உண்மையில் அவர்களுக்கே இந்த வழி மேலும் பழக்கமானதாக உள்ளது”

நான் “ஆம் அவர்களுக்கு தான் இது தேவை” என்றபின் புன்னகைத்து  “ஆடைகள் மாற்றிக்கொள்ளாமல், துணை இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கிளம்பிச்செல்லலாம் அல்லவா?” என்றேன். “ஆம்” என்றபின் அவர்  “வருகிறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பிச்சென்றார். சற்று அப்பால் சென்று திரும்பி என்னைப்பார்த்து  “இளைஞனே உன்னிடம் ஒன்று சொல்கிறேன். இந்த வழியில் யாரைப்பார்த்தாலும் அவர்க்ளிடம் பேச முயலாதே. கூடுமானவரைக்கும் அவர்களின் கண்களில் படாமலிரு. எல்லாரும் என்னைப்போல உன்னை சகித்துக்கொள்பவர்களாக இருக்க வேண்டியதில்லை. இன்னொருவர் இதற்குள் வருவது அவர்களுக்கு பிடிக்காமல்கூட இருக்கலாம்” என்றார்

நான் உளச்சோர்வு அடைந்தாலும் அவர் எனக்காக அதை சொன்னதில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஆம் இனிமேல் பேசமாட்டேன்” என்றேன் . “நன்று” என்று கையை வீசியபின் அவர் திரும்பிச்சென்றார்.

[ மேலும்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்
அடுத்த கட்டுரைஇமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்