ஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம்

airavatham-mahadevan

ஐராவதம் மகாதேவன் – கடிதம்

அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்

அன்புள்ள ஜெமோ,

ஐராவதம் மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்த 30 பேர்தான் வந்தார்கள் என்ற செய்தியை முன்னிட்டு பிஏகேவின் பேஸ்புக் பதிவில் ஐராவதம் மகாதேவனின் மாணவர் இராமன் சங்கரன்  எழுதியிருந்த குறிப்பு இது.  

 

// நான் அவருடைய மாணவன், பல வருடங்களாக அவருடன் இருந்திருக்கிறேன். கடைசி சில நாட்களில் பல மணி நேரம் அவருடன் கழித்தேன். அவர் திங்கட்கிழமை காலை நாலு மணி அளவில் நம்மை விட்டுப் பிரிந்தார,. அதற்கு முன் சில விஷயங்கள் நடந்தது. சனிக்கிழமை காலை பத்தரை மணி அளவில் live support மெஷினிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் உயிருடன் இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அவர் திங்கட்கிழமை காலையில் தான் அவரின் உயிர் பிரிந்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சுமார் 500 பேருக்கு மேல் அவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரை வந்து பார்த்தனர். மேலும் ஒரு 200 பேராவது தொலைபேசி மூலம் அவர் நிலைமையை அறிந்து கொண்டனர். திங்கள்கிழமை காலையில் 6 மணி முதல் நான் அங்கிருந்தேன். சுமாராக ஒரு 500 பேர் அவரை வந்து பார்த்தனர். வெளியில் அவர் படத்தில் அருகில் ஒரு நோட் புக் வைத்து அதில் வந்தவர்கள் எல்லாம் அவரைப் பற்றி சிறுகுறிப்பு எழுதினர். அதுவே 200க்கு மேல் உள்ளது. அவரின் உடல் பெசன்ட்நகரில் அவர் விருப்பப்படி தகனம் செய்யப்பட்டது. அந்த இடுகாடு அவர் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டருக்கு மேல் உள்ளது. அதனால் வாகன வசதி உள்ளவர்கள் மட்டுமே இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வரமுடிந்தது. மேலும் அவர் ஒரு உறவினர்கள் மொத்தமே பத்து பேர்தான். மீதி அனைவரும் தமிழ் ஆர்வலர் அந்தப் பதிவை வெளியிட்டவர் ஒரு மணிக்கு மேல்தான் வந்தார் இடுகாட்டிற்கு 40 பேர் தான் வந்தார்கள், அது உண்மை. //

 

அந்த செய்தியை வெளியிடடவர் ஒரு நிருபராக மதியம் ஒரு மணிபோல் வந்திருந்து அப்போது இருந்தவர்களைக் கணக்கெடுத்து செய்தி தயாரிக்க போயிருப்பார். அப்படிதான் செய்யமுடியும், அதற்குமேல் எதிர்பார்க்க முடியாது. “குறைந்த பேர்கள்தான் அஞ்சலி செய்ய வந்திருந்தார்கள்என்பதுதான் அதில் ஒருசெய்தியாகவும் ஆகும். புரிந்துகொள்ள முடிகிறது.       

 

ஐராவதம் மகாதேவன் மறைவு சார்ந்து நிறைய சோசியல் மீடியா மற்றும் பத்திரிகை செய்திகள் பார்த்தேன். அவரது சாதனைகள் சார்ந்து பல கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தது. தமிழ் இந்து விரிவான செய்தி வெளியிட்டு இருந்தது

 

ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி, மாஃபா பாண்டியராஜன், வீரமணி, சுப வீரபாண்டியன், திருமாவளவன் போன்றோர்  இரங்கல்  செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

 

சென்னை, பாண்டிசேரியில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் சார்பில் அஞ்சலி கூட்ட்ங்கள்  நடைபெற்றதாக செய்திகள் வந்தன. வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவை இரங்கல் கூட்டம்  நடத்துகிறது. பெரும்பாலான செய்தி சேனல்களிலும் அவரது சாதனைகள் சார்ந்த செய்தி குறிப்பு ஒளிபரப்பபடாது .

 

ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் நேரடியாக சென்று ஐராவதம் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இது  ஸ்டாலின் வெளியிடட அஞ்சலி செய்திகுறிப்பு

 

//பத்மஸ்ரீ விருது பெற்ற கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலையணிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன்.

 

27 வருடங்களுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையாக பணியாற்றி ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு எல்லாம் நல்லுதாரணமாகத் திகழ்ந்தவர். நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய, அறிவியல் உலகத்திற்கு அரிய கருத்துக்களையும் விதைத்தவர்.

 

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிக ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, “பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறதுஎன்ற அவரது ஆய்வினை மேற்கோள்காட்டி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையுரையிலேயே பாராட்டப்பட்டவர்.

 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2009-10 ஆம் ஆண்டிற்கானதொல்காப்பியர்விருதினைப் பெற்ற திரு ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன்களுக்கும், உறவினர்களுக்கும், ஆய்வு அறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

 

அன்புடன் 

சரவணன் விவேகானந்தன் 

முந்தைய கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை