பரியேறும்பெருமாள் விழா -கடிதங்கள்

fb_img_1543759528580

 

அன்புள்ள ஜெ

பரியேறும்பெருமாள் விவாத அரங்கில் உங்களைப் பார்த்தேன். பேசவே முடியாதபடி மூச்சுத்திணறல் இருந்ததாகப் பட்டது. நான் இரண்டுமுறை உங்களைப் பார்த்திருக்கிறேன். மிக உற்சாகமாக ஆறேழு மணிநேரம்கூட உரையாடுபவர் நீங்கள். என்ன ஆயிற்று? உடல்நலம் சரியில்லையா என்ன?

 

சுரேஷ்குமார்

 

அன்புள்ள சுரேஷ்குமார்,

 

உடல்நலம் நன்றாகவே இருக்கிறது. எனக்கு பேசுவதற்கு குரல் எழாமல் அல்லது மூச்சிரைப்பதுபோலிருப்பது சில காரணங்களால். முதலில் சென்னையின் தூசி எனக்கு ஒத்துக்கொள்வதே இல்லை. வெளிக்காற்றே இல்லாமல்தான் எப்போதும் சென்னையில் இருக்கிறேன். அவ்வாறன்றி வெளிக்காற்று படும்படி இரவு தூங்கினால் மூச்சு இழுக்க ஆரம்பிக்கும். இரவில் நல்ல தூக்கம் இருக்காது. டிஸ்கவரியின் அந்த சிற்றறை அக்கூட்டத்திற்குப் போதவில்லை. நிறையபேர் நின்றுகொண்டிருந்தனர். அங்கே முன்னரே எனக்கு சற்று மூச்சுவாங்கிக்கொண்டுதான் இருந்தது. மற்றபடி இப்போது ஒன்றுமில்லை

 

ஜெ

fb_img_1543759503909

ஜெமோ,

உங்களை நேரில் சந்திப்பது எப்போதுமே ஒரு புத்துணர்ச்சிதான்.  ஆனால் இந்த தடவை அருண்மொழி அவர்களையும் முதன் முதலாக நேரில் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் அமைந்தது, என் மனைவிக்கும் மகளுக்கும் உங்களை முதன்முதலாய் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதுதான். எனது மகளை வாஞ்சையாகக் கட்டிகொண்டது, நீங்கள் ஒரு குழந்தைப் பிரியர் என்பதைக் காட்டியது. “அங்கிள் சொன்ன மாதிரி வெள்ளி நிலம், பனிமனிதனுக்குப் பிறகு படிக்கிறேன்பா” என்றாள். மிக நெகிழ்வான சந்திப்பு, ஒரு நெருங்கிய நண்பரையோ, உறவினரையோ சந்திப்பது போல.

 

டிஸ்கவரி பேலஸில், நிகழ்ச்சிக்குப் பிறகு அரங்கத்திற்கு வெளியே உங்களுக்கும் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் இன்னும் அங்கு எஞ்சியிருந்த வாசகர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. அருவி மாதிரி இருவரும் மாற்றி மாற்றி கொட்டிக்கொண்டேயிருந்தீர்கள். நனைந்த மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

 

https://muthusitharal.com/2018/12/02/காந்தி-ஆசாரியா/

 

அன்புடன்
முத்து

mari

அன்புநிறை ஜெ,

 

இன்றைய கூட்டம் அகரமுதலவன் கூறியது போன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டம். பரியேறும் பெருமாள் படத்தின் பாராட்டு விழாவிற்கு ஜெயமோகன் வருகிறார் நாளை செல்லலாமா? என்று என்று நண்பனிடம் கேட்டதற்கு, மிக வியப்புடன் என்னது பரியேறும் பெருமாள் பட பாராட்டு விழாவிற்கு ஜெயமோகன் வருகிறாரா? அவருல்லாம் இந்த மாதிரி விழாவிற்கு  வருவாரா டா? என்று கேட்டான். நான் ஒரு பார்வை பார்த்து நாளை வா தெரியும் என்று கூற அவனும் மிக ஆவலுடன் வந்தான். பொதுபுத்தியில் ஜெயமோகன் என்றால் இந்துத்வா, இந்துத்வாவின் முகம் என்று முடிவுசெய்துவிட்டார்கள். அதை மறுத்து தாங்கள் எத்தனை கட்டுரைகள் எழுதினாலும் எவ்வளவு பேசினாலும் அதை யாரும் கண்டுக்கொள்ளப்போவதில்லை. அவர்களாக தங்கள் சுயவிருப்பத்தில் அப்படி என்னத்தான் எழுதியிருக்கிறார், பேசுகிறார் என்று தேடி படித்தால், கேட்டால் தான் தங்களின் உண்மை முகம் தெரியவரும். மற்றப்படி யார் என்ன கூறினாலும், தாங்கள் எத்தனை கட்டுரை எழுதினாலும் கண்டிப்பாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், யாரும் புரிந்துக்கொள்ளவும் மாட்டார்கள் என்பது என்னுடைய முழு அனுபவம். இன்று என்னுடன் வந்த நண்பன் முழுவதாக அவன் விருப்பத்தில் தான் வந்தான். நான் வியக்கும் அளவிற்கு தங்கள் பேச்சை லயித்து கேட்டுக்கொண்டிருந்தான். இப்படி தாங்களே வெளிவந்தால்தான் உண்டு என்பது என் கருத்து.

 

காலை 9 மணிக்கு விழா. சென்ற முறை தாமதமாக வந்ததனால், நின்றுக்கொண்டே கேட்பதாக இருந்தது. ஆகவே  இந்த முறை சீக்கிரமாக வந்திருந்தோம். ஆனால் கடையே திறக்கப்படவில்லை. கிட்டத்திட்ட அரை மணி நேர காத்திருப்பிற்குப் பிறகு  திறக்கப்பட்டது. உள்ளே சென்று புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தோம். கூட்டம் சற்று அதிகமாவதை கண்டவுடன் இருக்கைக்கு  சென்றமர்ந்தோம். சற்று நேரத்தில் தாங்களும் வந்தீர்கள். இன்று தங்களின் மனைவி அருண்மொழியம்மாவையும், தங்கள் மகன் அஜிதனையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, அஜிதனிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் கிளம்பவேண்டும் என்ற அவசரத்தில் எதுவும் பேசமுடியவில்லை.

 

நான் பார்த்தளவில் பரியேறும் பெருமாள் வசனங்களுக்கு முக்கியத்துவம் தராமல் குறியீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது. பகுதி பகுதியாக காட்சிப்படுத்திய விதம் வியக்கவைத்தது. மாரி செல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் புத்தகமும் அவரின் எளிமையான காட்சிப்படுத்துதலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதன் உச்சம் இவரின் இத்திரைப்படம். ஒரு படத்தை எப்படி ரசிக்கவேண்டும். திரை ரசனை என்பது எவ்வாறு அமைய வேண்டும். பார்வையாளர்களின் முக்கியத்துவம் என்ன? இலக்கியமும், திரையும் ஒன்றிணையும் புள்ளி என்ன? என மிகச் செறிவாக அமைந்திருந்தது தங்கள் உரை. மிகக் கச்சிதமாக படத்தின் முக்கிய காட்சிகளையும், அதன் அமைப்பும், படத்தின் ரசனைத்தன்மையும், பார்வையாளனின் பார்வை கோணமும் என அனைத்து கோணத்தில் இருந்தும் தங்களின் உரை சிறப்பாக அமைந்திருந்தது. மிகச் சிறப்பாக சென்றிருந

 

நான் பல எழுத்தாளர்கள் பங்குபெற்ற இலக்கிய கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். அனைத்து இலக்கிய கூடுகையிலிருந்தும், தாங்கள் கலந்துக்கொள்ளும் கூடுகை மிகவும் வித்தியாசமானது. பொதுவாக அனைவரும் கூட்டம் முடிந்தவுடன் கிளம்பி சென்றுவிடுவர். கூட்டத்திற்கு பின் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும், உரையாளர்களுக்கும் எந்த உறவும் இருக்காது. வாசகர்களாக பேசிக்கொண்டால் உறவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் தாங்கள் பங்குக்கொள்ளும் கூட்டம் மட்டும் எப்பொழுதும் கூட்டம் முடிந்தவுடன் வாசகர்களின் வழக்கமான சந்திப்பிற்கு பிறகும் வாசகர்களுடனான தங்களின் உரையாடல் நீளும். கூட்டம் முடிந்தபிறகு கூடும் இத்தகைய தங்கள் கூட்டம் என்னளவில் மிகவும் முக்கியமானது, ஏனென்றால், உரையில் தாங்கள் பேசியதற்கு இணையான அல்லது சில சமயங்களில் அதைவிட மிக முக்கியமான பல கூறுகளை கொண்டுள்ளதாக இந்த கூட்ட முடிவிற்கு பின்பான கூட்டம் அமையும். அவ்வளவு செறிவான கருத்துகளை மிகச்சாதாரண உரையாடலில் மிக எளிதாக சொல்லிச் செல்வீர்கள். தங்கள் கூட்ட உரைக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தது தங்களின் இந்த கூட்டத்திற்கு பிறகான வாசகர் சந்திப்பும் அதைத்தொடர்ந்த தங்களின் உரையும்.

 

ஏனென்றால், மேடை நாகரிகம் எதுவும் கடைப்பிடிக்கும் கட்டாயமில்லாமல், மிக கலகலப்பாக பல முக்கிய சுவாரஸ்யமான விடயங்கள் இந்த பகுதியில் அமையும். இதை ஓரிரண்டு கூட்டங்களில் நான் கலந்துக்கொண்டு சொல்லவில்லை. பெரும்பாலும் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, இப்பொழுதுவரை தங்களின் அனைத்து கூட்டங்களிலும் கலந்துக்கொண்டுள்ளேன். இதுவரை பிப்ரவரியிலிருந்து தாங்கள் பங்குபெற்ற கூட்டங்களில் இரண்டு கூட்டங்களில் மட்டும் கலந்துக்கொள்ளவில்லை. நான் பார்த்தவரை தங்களின் அனைத்து கூட்டத்திலும் இந்த சிறப்பம்சம் இருக்கிறது. இதில் கலந்துக்கொண்டவுடன் மனதிற்கும் மிக நிறைவானதாக இருக்கும். ஆனால் இன்று அலுவலகத்தில் அரை தினம் அனுமதி பெற்றுவந்ததால், தங்களிடமும் அதிகமாக எதுவும் பேச முடியவில்லை. உடனே கிளம்பிவிடலாம் என்று வெளியேவந்து சுபிட்சமுருகன் புத்தகம் வாங்கிக்கொண்டிருந்தபொழுது தாங்கள் வெளியே வந்தீர்கள், எதிர்பார்த்ததுபோலவே கூட்டத்திற்கு பின்பான தங்கள் உரையை தொடங்கினீர்கள், என்னால் அதைவிட்டுவிட்டு செல்லவும் முடியவில்லை. தங்கள் கண்ணில்படாமல் ஒரு ஓரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன், கிளம்புகிறேன் என்று சொல்லியும் நான் கிளம்பவில்லை என்பதனால் அந்த உத்தி, இந்த முறை தங்களுடன் மாரி செல்வராஜூம் சேர்ந்துக்கொண்டு கரிசல்நில வருணனைகள் வாழ்க்கை முறைகள், நிலக்காட்சி என பல தகவல்களை இருவரும் சேர்ந்து அடுக்கிக்கொண்டிருந்தீர்கள், கேட்க கேட்க கிளம்பவேண்டும் என்ற அவசரம் மறந்தது. என் நண்பனும் மெய் மறந்து தங்கள் இருவரின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தான். இந்தளவிற்கு அவன் மிக உன்னிப்பாக கவனிக்கும் பேச்சு இதுதான். அப்படியிருந்தும், முழுவதுமாக என்னால் அந்த இன்பத்தில் திளைக்கமுடியவில்லை. கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் என் நண்பனையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம். அந்த இடத்தை விட்டு வர எங்கள் இருவருக்கும் மனமே இல்லை. மிகுந்த கனத்த மனதோடு கிளம்பினோம்.

 

ஒருவித நிறைவும், கனமும் கலந்த உணர்ச்சிகலப்பாக அமைந்தது இன்றையக் கூட்டம். என்றென்றும் மறக்கமுடியாத நிகழ்வாக இன்றைய நிகழ்வு எங்களிருவருக்கும் அமைந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி!

 

அன்புடன்,

ரா.பாலசுந்தர்.

 

முந்தைய கட்டுரைஆடைகளில்லாத தெய்வம்
அடுத்த கட்டுரைஅடேய்கள்,மீம்கள் -கடிதங்கள்