அனிதா அக்னிஹோத்ரி
‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி
நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி
விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதைகள் பற்றி .
அன்புள்ள ஜெ
அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் கதைகள் எல்லாமே அவருடைய நேரடி அனுபவம் சார்ந்தவையாக உள்ளன. அவர் வாழும் ஓர் உலகம் அதிகார வர்க்கம் சார்ந்தது. அந்த வர்க்கத்தின் இரட்டைநிலையையும் இக்கட்டுகளையும் நம்பகமாகச் சொல்கின்றன.
இங்கே அவர் அந்த அதிகாரவர்க்கத்தின் குரல் என்பதனால் கொஞ்சம் மிகையாக ஆனால்கூட மொத்தமே பசப்பு ஆக மாறிவிடும். ஆகவே மிகமிகக்குறைவாக சொல்கிறார். அதுவே நம்பகத்தன்மையை உருவாக்கி இவற்றை நல்ல கதைகளாக ஆக்குகிறது
ராமச்சந்திரன்
வணக்கம் ஜெ.
மறுபடியும் ஒரு முத்தான கதை.
கதையென்று என்று சொல்ல என் மனது வலிக்கின்றது.
மறுபடியும் சா ராம்குமாரை போற்றத் தோன்றுகிறது. அழகான தமிழாக்கம்.
தனிமா தாஸ். என்ன போராளி!!
ஒருவர் இப்படி போராடுகிறார் என்றால் அது உண்மையாகவே இருக்கும். உண்மையே இந்த தைரியத்தை கொடுக்கும். அந்த உண்மையைத் தான் அனிதா எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
தலை வணங்குகிறேன் தனிமாவிற்கு..இந்த பெண்மணியின் விடாமுயற்சியும் ஏதோ விதத்தில் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ஏழைகளுக்கு ஏன் நீதி மறுக்கப் படுகிறது? காந்தி மறைந்து விட்டார் ஜெ.
பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் என் நினைவில் வந்தார். எவ்வளவு வருடங்களாக போராடுகிறார்!! எப்பேற்பட்ட தாய்மை அது!! அந்த தாய்மை ஜெயிக்க வேண்டும்.
இம்மாதிரியான கதைகள் மனதிற்கு அருகானவை.
நன்றி.
அன்புடன்
மாலா
ஜெ
அனிதா அக்னிஹோத்ரி கதைகள் அரசின் போலி செயல்பாடுகளை காட்டுபவையாகவும், அதிகாரம் எளியவர்கள் மீது செலுத்தும் வெற்று நடைமுறைகளையும் காட்டுகிறது. பொதுவாக இங்கு அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது பிறகு அத்திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் இருப்பதற்கு செயல்படாமல் வைப்பதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் மூலமாக அதே திட்டத்தை முடக்குகிறது
‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ கதையில் இதுவே நிகழ்கிறது எல்லா அரசு அதிகாரிகளும் கல்லோல் போல இளம் சிங்கங்களாக தான் பணியில் சேர்கிறார்கள். பிறகு சக ஊழியர்களால் மாற்றப்படுகிறார் மனுவை கிடப்பில் போடுவது மூலம் தனது ஆண்மை கூடிவிட்டதாக நினைக்கும் கல்லோல் பிறகு அதுவே வழமையாகவும் வசதியாகவும் மாறுகிறது ஒரு கட்டத்தில் அதிகாரம் எளியவர்கள் மீது செலுத்தும் அடக்குமுறையாக மாறுகிறது. மறுப்பின் மூலம் மக்களிடம் இருந்து விலகி விலகிச் சென்று இறுதியில் செயலற்று நின்று விடுகிறார்கள் அவர்களை சிறு துளியேனும் உசுப்ப பத்தோ இருபதோ செலுத்தி அந்த மனுவை அவரது மேஜைக்கு செலுத்த ‘தனிமா’விற்கு அனுபவம் இல்லை.
கோபால் தாஸ் போல அரசின் மக்களின் நன்மைக்காக என்று பலர் பலியாக்கபடுகிறார்கள். அனைத்தையும் வாரிச் சுருட்டும் இவர்கள் தனக்கு கீழே இருப்பவர்களை தண்டித்து தான் நேர்மையை நிறுவிக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வெளியிலிருந்து அருணாராய் போன்றவர்கள் உண்மையிலேயே தீவிரமாக செயல்படுகிறார்கள். உண்மையில் இளம் சிங்கமாக இருக்க வேண்டும் என்றால் வேண்டுமென்றால் அரசாங்கத்திற்கு வெளியில் நின்று செயல்பட வேண்டும் இங்கு வந்து செய்கிறேன் என்றால் அருணாராய்யும் கல்லோல் போலவே தான் மறமுடியும். மிக விரிவாக சிந்திக்க வைக்கும் கதை.
இங்கு கல்லோல் என்றால் அங்கு சிவாஜி ‘சிதைவு’ இங்கு மக்கள் அரசாங்கத்தை கைகழுவ நினைக்கிறார்களா அல்லது அரசாங்கம் மக்களை கைகழுவி விட்டதா? இதில் பலி சிவாஜி இதை நேரடியாகவே எழுத்தாளர் சொல்லிவிடுகிறார் பள்ளி, சாலை, மின்சாரம், இல்லை எந்த வசதியும் இல்லாமல் கை கழுவி விடப்பட்ட மக்கள் அவர்களின் வாழ்விடங்களை நவீனபடுத்துகிறோம் என்று நுழைகிறார்கள். இவர்களின் அரசியல் விளையாட்டுகளில் எளியவர்கள் பலிகளாக விழுந்துகொண்டே இருக்கிறார்கள். ஆமாம் அவர்களுக்கு என்ன தான் வேண்டும்????…. நிழல் யுத்தமும் கதையில் மக்கள் பலியானார்கள்… ஆழமாக வாசிக்க வேண்டிய கதைகள்.
ஏழுமலை