‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

anitha

அனிதா அக்னிஹோத்ரி

 

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.

 

ழுதி சுழன்றடித்தது.சாலையில் விரவி கிடந்த மொத்த தூசித்துகள்களும் கீழே கிடந்த இலைதழைகளோடு சேர்ந்து உயிர்ப்போடு இருப்பதுபோல அல்லாடின. தரை அதிர திடீரென லாரி அப்போது வந்தது.புழுதிதுகள்கள் விலகி மிதந்தன.லாரியின் பின்புற கதவு திறக்கபட்டது.தாகமெடுத்த ஓட்டுநருக்கு அலுமினிய தம்ளரில் யாரோ குடிக்க நீர் கொடுத்தார்கள்.ஆண்களும்பெண்களும் அடித்துபிடித்துக் கொண்டு லாரியில் ஏற ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவரைகூட விட்டுவிட்டு அந்த லாரி போகாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் அவசரபட்டு ஏறவேண்டிய அவசியமேயில்லை.வேலை ஒப்பந்தக்காரன் எல்லோரையும் ஏற்றிகொண்டுதான்  செல்வான்.பாலுவின் அம்மாவால் ஏறமுடியவில்லை.அவள் ஒரு மலிவான நீல நிறச் சேலையை கணுக்கால் வரை தூக்கி செருகியிருந்தாள்.காலை தூக்கி ஏறும்போது கிழிந்துவிட்டால் என்ன செய்வது என பயந்து இரு முறை காலை எடுத்துவைத்தும் ஏறமுடியாமல் தயங்கியபோது ஒரு வலிமையான கை அவளது இடுப்பை பற்றி லாரியினுள் உள்ளிழுத்து போட்டது.லாரி கிளம்பி தனது பயணத்தை தொடர்ந்தது.தரை லேசாக அதிர்ந்தது.வேகத்தால் காற்றில் புழுதிதுகள்கள் என்ன செய்ய வேண்டும் என முன்னரே தெரிந்துகொண்டதைபோல அலைந்து பறந்தன.

பாலுவின் அம்மா அவனை கூப்பிட்டு அவனை நோக்கி கையசைத்திருக்கவேண்டும். கூட்டமாக ஆட்கள் அவளை மறைத்து நின்றிருந்ததால் பாலுவுக்கு அது தெரியாது.பாலு மிகவும் குட்டியாக சிறிய உருவமாக இருந்ததால் லாரியின்மேல் உயரத்தில் இருந்தவர்களை சரியாகப் பார்க்க முடியவில்லை.

லாரி பசுமைப் பரப்பில் புகுந்து கண்மறைந்து போனது.பாலு வீடு நோக்கி போனான். அவனுடன் இரண்டு வாத்துகளும் வந்தன.தினமும் அவற்றோடு அவன் விளையாடிவந்ததால் அவை இவனோடு நட்பாகிவிட்டன.அவற்றின் அலகுகளில் பசுமையான புல்லிழைகள் இருந்தன.தங்களது
தோலிழைப் பொதிவுடைய பாதங்களை ஆணித்தரமாக வைத்து அசைந்து அசைந்து நடந்துவந்தன. அவற்றின் தொண்டையிலிருந்து தொடர்ந்து குவாக் குவாக் என சத்தமிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன.அவை பாலுவை நேராக பார்க்கவில்லை என்றாலும் அவனால் ஈர்க்கப்பட்டு கூடவே வந்தது தெளிவாக தெரிந்தது.

அவனது அம்மா ஒப்பந்தக்காரர் மூலம் வெளியூரில் உள்ள நிலத்தில் வேலைக்கு போனாள்.அந்தக் கூலியை அனுப்புவாள். அவர்களின் வீடு அவளில்லாமல் எப்படியிருக்குமோ?அவனது அப்பா இரண்டு வருடமாக வேலைக்கு போகவில்லை.அவரது கால் மூட்டுகள்வீங்கி சீழ் வடிய கால்களை இழுத்து சிரமப்பட்டு  மெல்லநடக்கவே முடிந்தது.வலி. அவரது சிகிச்சைக்காக அம்மா கிராமத்தில் வேலை கிடைத்த வரை தினக்கூலியாக வேலை செய்தாள்.வருடத்தின் தற்போதைய காலக்கட்டத்தில் வேலைகள் கிராமத்தில் இல்லாமலானது.பருவமழைக் காலம் வந்தாலும் அது நகரங்களில் பொழிந்ததுபோல் இல்லாமல் கிராமங்கள் வெயிலால் சுட்டெரிக்கப்பட்டன.நிலமெங்கும் வெடிப்புகள் தோன்றின.விவசாயிகள் இன்னும் நெல் விதைக்க ஆரம்பிக்க வில்லை.லேசான ஓரிரு மழை பொழிவை கண்டு அவசரப்பட்டு நெல் விதைத்தவர்களும் பருவமழைக்காக காத்துகிடந்தார்கள்.ஒரு வயதான அத்தைகிழவி இவர்களுடன் இருந்துவந்தாள்.தினப்படியான பட்டினியை பொறுக்கமுடியாமல் கடுப்புடன் வேறு கிராமத்திற்கு போய்விட்டாள்.தற்போது வீட்டில் பாலுவும் அவனது அப்பாவும் மட்டும்தான்.அவர்கள் இங்கேயே இருந்துகொள்ள முடிவெடுத்தனர்.பாலுவின் அம்மாவின் கூலி பாக்கியாக பிர்ஜன் ஷாஹுகர் வசமிருந்து தினம் ஒரு வேளை சாப்பாட்டிற்கான பணத்தை பெற்று சாப்பிட்டுவந்தனர்.மற்ற வேளை உணவிற்காக அவர்களே வேறு முயற்சிகளை செய்துவந்தனர்.அது அவர்களுக்கான ஒரு சரியான ஏற்பாடாக இருந்தது.

 

வாத்துகளும் சரியான தீனி கிடைக்காமல் கஷ்டப்பட்டன.கடக்கும் ஒவ்வொரு நாளும் உஷ்ணஅ சூரியனால் புற்களெல்லாம் கருக ஆரம்பித்தன.குட்டையில் மழை பெய்த போது சிறிய நத்தைகளும் சங்குப் பூச்சிகளும் இருந்ததை வாத்துகள் வயிறு நிறைய பிடித்து உண்டன.ஆனால் மிகசில நாட்களிலேயே மனிதர்களுடன் போட்டி போட முடியாமல் வாத்துகள் சத்தமிட்டவாறே ஒதுங்க நேர்ந்தது.மனிதக் கால்கள் குட்டையின் சேற்றை அளைந்து அளைந்து அச்சேறுகூட காய்ந்து போனது. குட்டை சுத்தமாக வெயிலால் காய்ந்து வழித்தெடுக்கப்பட்ட பாத்திரம் போலானது.
பாலு சோற்றிற்காக எதையும் செய்ய தயாரானான்.காய்கறிகளையும் பழங்களையும் திருடிவந்தான்.குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதானது.மற்ற குடும்பங்களுக்கு குடிநீர் பிடித்து கொடுத்தும் பாத்திரபண்டங்களை கழுவியதற்கும் சில்லரையாக அவனுக்கு கிடைத்தது. கிணற்றில் நீரின் அளவு மிகக்கீழே போனது.பல கைப்பம்புகள் பழுதடைந்து இருந்தன.தங்களது வீட்டிலிருந்து தொலைவான தூரத்திலிருந்து தண்ணீர் கொண்டுவர முடியாத குடும்பப் பெண்களுக்கு பாலு  தண்ணீர் பிடித்து கொடுத்தான்.தனது பக்கெட்டுகளை வரிசையில் மற்றவர்களின் பாத்திரங்களுக்கு முன்பாக மாற்றிவைத்தும் பிடித்தான்.ஹரிஜனப் பகுதிகளிலிருந்து பிராமணர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்ததும் உண்டு. பாலுவுக்கு இது ஒருமாதிரியான குஷியை ஏற்படுத்தியது.வாத்துகளை பொறுத்தவரை ஈரமண்ணையோ நீர் தேங்கலையோ கண்டால் அங்கே உட்கார்ந்து மகிழ்ந்தன.தங்களது வயிற்று பாகத்தை ஈரமண் தீண்டுவதை விரும்பியிருக்கலாம்.நீரில் நீந்துவதை எப்போதோ மறந்துவிட்டன.

பலநாட்களாக அரைப் பட்டினியும் கொலைப்பட்டினியுமாக கழித்த பாலுவின் அப்பா ஒரு நாளிரவு திடீரென இறந்துபோனார். இதனால் பெரிய அமளிதுமளியாகியது.அவர்களது வீட்டையும் பாலுவையும் புகைப்படமெடுத்தார்கள். ஜீப்களில் பலர் கேமராக்களோடு வந்து பேட்டியெடுத்தனர்.ஒரு குழு அவனது அப்பாவிற்கு கால்முட்டியில் பிரச்சனை என்றது. மற்றொரு குழு அவருக்கு பட்டினியால்தான் இந்நிலை என்றது.பாலுவிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை.ஆனால் அவனுக்கு புத்தாடைகளும் இருமல்மருந்துகளும் ஆயத்த உணவுப் பொட்டலங்களும் கிடைத்தன.அவனது அப்பாவின் உடலை தகனம் செய்து,அவனுக்கு ஒரு நாவிதனை வைத்து மொட்டையடித்தார்கள். எல்லோரும் சேர்ந்து சமைத்த கருமாதி விருந்தும் நடந்தது.அவனை அருகழைத்த பிர்ஜன் ஷாஹுகர்  “என்னோடு வந்துவிடு” என்றார்.

அவருடன் சென்ற பாலு முதலில் சாப்பாட்டிற்காகவும் பின்பு பணத்திற்காகவும் உழைக்க தொடங்கினான். வலுவாகவும் உயரமாகவும் வளர தொடங்கினான்,இதில் திருட்டு உணவுக்கும் பங்குண்டு.குழந்தைப் பருவ நினைவுகள் மங்கியும் மாறியும் மறைந்தன. அவ்வப்போது எழுந்துவந்து  அவனை குழப்பின.
ஒருநாள் இரவில் வாத்துகள் திருடுபோயின.பலர் பட்டினியாக உள்ள சூழ்நிலையில் இது நடக்கத்தான் செய்யும்.வாத்துகளின் சத்தம் கேட்டிருந்தால் பாலு ஓடிவந்து காப்பாற்றியிருப்பான்.அம்மாவிடமிருந்து பணமோ அவளை பற்றிய செய்திகளோ ஏதும் வரவில்லை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தான்.
சுழன்றடித்த புழுதி. அது அவனுக்கு பலவற்றை நினைவூட்டியது.பாலு அப்போது சிறுவன்.அப்போதே அவன் அந்த புழுதி காற்றை உற்று பார்ப்பான்.அவனது அம்மா அவனை விட்டு சென்ற நாளையும் நினைத்துகொள்வான்.சுழலும் புழுதிக்கு உயிருள்ளதோ என எண்ணுவான்.

தற்போது பாலு நன்றாக வளர்ந்துவிட்டான்.ஜீன்ஸ் பேண்ட்டும் சிகப்பு பனியனும் அணிந்து,கை மணிக்கட்டில் உலோக வளயமணிந்திருந்தான்.சிலர் அவனை கண்டு அஞ்சவும் செய்தனர்.ஒப்பந்தக்காரிடம் அவன் வேலைசெய்தான்.

வரட்சி காலத்தில் மத்தாணி கிராம வாசலுக்கு லாரி வந்து நின்றதும் ஆண்களும் பெண்களும் அலறியடித்துகொண்டு ஏற முயல்வர். ஏதோ அந்த லாரி அவர்களை விட்டுவிட்டு சென்றுவிடுமோ என பயப்படுவர்.ஆனால் அப்படி பயப்படவே தேவையில்லை.ஒப்பந்தக்காரர் ஒருவரையும்விடுவதில்லை, எல்லோரையும் ஏற்றிக்கொண்டுதான் செல்வார்.வெளி நிலங்களில் வேலை செய்ய போதுமான ஆட்களில்லாததால் கூலியும் அதிகம்தான்.லாரி புறப்படப் போக அதன் இஞ்சின் உறுமியது.சுழலும் புழுதியை பார்த்ததும் பாலு எதையோ நினைத்துகொண்டான்.பலதும் சேர்ந்து அவனுக்கு தொண்டை அடைத்து கொண்டது.

ஒரு மெலிந்த திருமணமான பெண் லாரியில் ஏற முடியாமல் இரு முறை தடுமாறினாள். பாலு பின்புறமிருந்து அவளது இடுப்பை பிடித்து தூக்கி உள்ளே ஏற்றி விட்டான். அவளது அழுக்கடைந்த செம்பட்டை தலை முடியும், துவைக்காத சேலையின் நெடியும்,பட்டினியால் மெலிந்த அவளது உடல் வீச்சமும் பாலுவின் மூக்கை துளைத்தது.

அந்த கணத்தில் பாலுவிற்கு எல்லாமும் நினைவிலாடியது. ஒவ்வொன்றும்.

 

ஆங்கிலம் வழி தமிழாக்கம் விஜயராகவன்

 

 

அனிதா அக்னிஹோத்ரி கதைகள்

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

 

முந்தைய கட்டுரைராஜ் கௌதமன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபழைய யானைக்கடை -கடலூர் சீனு