நான்காவது கொலை!!! -5

கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து இலச்சினையைப் பார்த்து. “ஐஸ்வர்யா டாய் ஹவுஸ். முப்பது ரூபாய்” என்று படித்து “கொஞ்சம் கலங்கிப் போயிட்டேண்டா” என்றான்.

“கடைசி வரிதானே பாஸ், கொஞ்சம் மிகையா இருக்கிறதுல தப்பில்ல. முன்ன ஒரு தடவை நான்கூட இப்டி ஒரு தொடர்கதைல பாத்ரூம் கதவை திறந்து பாத்து உள்ள தண்ணியில்லைன்னு தெரிஞ்சு தலையிலே ஆயிரம் இடி சேர்ந்து இறங்கினது மாதிரி கலங்கியிருக்கேன்.”

சிரித்தபடி ஒரு குண்டு சேட்டு பையன் வந்து குறுவாளை பிடுங்கியபடி “ஷேம்! ஷேம்!” என்று கூவியபடி ஓடினான்.

“டேய், இப்ப இதுவரை நடந்ததையெல்லாம் தொகுத்துக்குவோம். நீ ஒவ்வொண்ணா சொல்றே. நான் லாட்டரல் திங்கிங் பண்றேன்.” என்றபடி கணேஷ் ஜட்டியுடன் சிரசாசனத்தில் நின்றான்.

வசந்த் ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தான். “நாம இந்த ஓட்டலுக்கு வரோம் பாஸ். ரிசப்ஷனிஸ்ட் சிந்து பணிக்கர் நம்மை அழகா வரவேற்கிறா..”

“நாசமா போச்சு, அவளைப்பத்தி எப்டிரா லாட்டரல் திங்கிங் பண்றது ? கட்டுப்படியாவுமா ? கேஸைச் சொல்லுடா”

வசந்த் வரிசையாக நிகழ்ச்சிகளை சொன்னான். கணேஷ் “யார் யார் மேல சந்தேகம் வர சான்ஸ் இருக்குன்னு பட்டியல்போடு” என்றான்.

“முதல்ல அந்த ஓட்டல் மேனேஜர். அப்புறம் ரெண்டு பக்கத்திலெயும் தங்கியிருந்தவங்க. ரெண்டும் சேட்டு பாஸ். பொம்பிளைங்கல்லாம் தொண்ணூத்தெட்டு சைஸிலே இருக்குங்க. சூரத்திலேருந்து துணி வரவழைச்சு மொத்த வியாபாரம் பண்றவங்க. சிமன்பாய் ஸ்பெஷலா மலையாளிகளுக்காக டிசைன் பண்ன ஒரு டிரெஸ்ஸால பணத்த அள்ளிட்டிருக்கார். டிரான்ஸ்பரண்ட் கெளபீனம். அதுல அல்பசங்கைக்கு ஜிப் வைக்க தோணின நிமிஷம் அவனோட குலதெய்வம் அருள்மிகு கந்துவட்டியாத்தா கண்திறந்திருக்கணும். சூட்கேஸ் சங்கிலிகூட தங்கத்திலே வச்சிருக்கான் படவா”

“அப்புறம்..?”

“வெயிட்டர்கள் ரெண்டுபேரு அந்த ஃபுளோருக்கு. சர்வோத்தமன் நாயர் பிறவி மாமா பாஸ். சாயா கொண்டுவரட்டேன்னு கேட்டாக்கூட நெளிஞ்சு குழைஞ்சு ஒருமாதிரி சிரிச்சுட்டு தாழ்ந்த குரலிலே கேக்கிறான். மத்தவன் முரளிதரன். அவன் சகாவு.”

“என்னது, ஜடாயுவா?”

“காம்ரேட் பாஸ். அதி உக்கிர சி.பி.எம். “ஸ்கி“ சேக்காம அவன் சொல்ற ஒரே பேரு அவன் அப்பாபேருதான். அதை ராமச்சந்திரோவ்னு சொல்றான்.”

“ரூமுக்கு யார் வந்திருக்காங்க?”

“யாருமே இல்லை, அந்த வெயிட்டர் மட்டும்தான்”

“அந்த வாத்துநடைக்காரி அவ பேர் என்ன, அவளை விட்டுட்டியே?”

“அவளா பூவு பாஸ் அவ. அவளைப் போய்..”

“கொலையும் செய்வாள் பத்தினீம்பாங்க”

“இவ சித்தினி பாஸ். பத்மினி லலிதா ராகினி அத்தினி சித்தினி அப்டின்னு காமசூத்ரத்திலே சொன்ன லிஸ்டுல இவ…”

“அதென்னடாது ராட்சச சைஸ்லாம் சொல்றே?”

“தொப்பை பாஸ். சந்தேகப் பட் டியல்ல இவ்வளவு பேர்தான்.”

“மொத்தம் இருபது பேர்மேல சந்தேகம் கொள்ள சான்ஸ் இருக்கு இல்லியா?”

“ஆமா”

கணேஷ் நிமிர்ந்தான். “கொலையாளி இவங்கள்ல யாருமே இல்லை வசந்த். எப்பவுமே துப்பறியும் நிபுணர் கொஞ்சம்கூட சந்தேகப்படாத ஒருத்தர்தான் குற்றம் செஞ்சிருப்பாங்க. இது துப்பறியும் சாஸ்திரத்திலே மூணாவது பொன்விதி.”

“அப்ப இப்ப என்ன பண்றது?”

“என்ன பண்ண? இவங்களை சந்தேகப்பட்டு தகவல் துருவிக்கிட்டே இருக்கவேண்டியதுதான். யாரையாவது நெஜம்மா சந்தேகப்பட்டுட்டோம்னா அவன் குற்றவாளி இல்லாம ஆயி தப்பிச்சிருவான். ஆனா எப்டியும் ஆசாமி கடைசி அத்தியாயத்துலே மாட்டிக்கத்தான் போறான். அதோட இப்ப நாம ரொம்ப அதிகமா சந்தேகப்படற ஆள் பொட்டுனு போயிருவான், இதிலே யாரை பொலிபோடலாம்கிறே?”

“அந்த மாமாப்பயலை எனக்கு சுத்தமா பிடிக்கலை பாஸ். அவனும் அவன் சிரிப்பும்…”

“சரி, அவன்மேல ஆதாரங்களை திரட்டுவோம்” என்றான் கணேஷ்.

***

சாம்பு ஓட்டலுக்குத் திரும்பியபோது ஒரே களேபரமாக இருந்தது. வெயிட்டர்களும் வெயிட் உள்ளவர்களும் எல்லாம் கலவரமாக தேடிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன தேடறேள்?” என்று சாம்பு ஏழெட்டு பேரிடம் கேட்டு எஸ்.சுந்தரமூர்த்தி அய்யர் என்பவர் காணாமல் போயிருக்கிற விஷயத்தை அறிந்துகொண்டார்.

“பாவம் எங்க போய் திண்டாடறதோ. பெரியவாளை கவனமா பாத்துக்கவேணாமோ” என்று அங்கலாய்த்தபடி சாம்பு தன் அறையை அடைந்தபோது, வேம்பு “வந்துட்டேளா? சுந்து மறுபடியும் காணாம போய்ட்டான்க. அய்யோ நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்…“ என்றாள்.

“என்னது குழந்தையை காணுமா? இப்பதான் கீழே சுந்தரமூர்த்தி அய்யர்னு ஒத்தரை காணும்னு சொல்லி தேடிண்டிருக்கா. என்ன நடக்குது இங்க? ஒண்ணுமே புரியலையே?” என்றார் சாம்பு.

“அய்யோ அது நம்ப சுந்துதான்னா.அவனுக்கு உங்க அப்பா பேருதானே வச்சோம் மறந்துட்டேளா?”

“ஏண்டி தகவல் சொல்றச்சே தெளிவா சொல்லமாட்டியா?” என்றபடி பாய்ந்து சாம்பு ரிசப்ஷனுக்கு வந்து “மிஸ் இல்லை மேடம், ஒரு தப்பு நடந்துபோச்சு. மொத்தம் ரெண்டுபேர் காணாமப் போயிட்டா. இன்னொருத்தர் பேரு சுந்து, மூணுவயசு” என்றார்.

“அய்யோ ஏன்னா உளர்ரேள்? காணாமபோனது ஒத்தர் மட்டும்தான்னா..“

“அப்ப நம்ப சுந்து காணாமபோகலையா? அப்பாடி”

“அவந்தான்னா காணாம போனது”

“அப்ப மத்தவர்?”

“அவர் காணாம போகலை. அய்யோ, எனக்கே குழப்பமா இருக்கே”

“அப்ப சரி” சாம்பு ரிசம்ப்ஷனிஸ்டிடம் “தப்பா சொல்லிட்டோம் மிஸ், இல்லாட்டி மேடம். சுந்தரமூர்த்தி அய்யர்ங்கிறவர் காணாமப் போகலை.”

“அய்யோ மசமசன்னு நிக்காம வாங்கோன்னா, அந்தப்பக்கமா போயி தேடலாம்.”

சாம்பு மனைவியுடன் முற்றத்தில் இறங்கி மறுபக்கமாக ஓடி சுற்றி வந்த போது ரிசப்ஷனிஸ்ட் “மிஸ்டர் சாம்பு ஒரு சிக்கல்” என்றாள் கதிகலங்கி.

“சொல்லுங்கோ”

“எஸ் சுந்தரமூர்த்தி அய்யர் கிடைச்சுட்டார். பார்க்கிங் செக்யூரிட்டி ஃபோன்லே கூப்பிட்டு சொல்லிட்டு கூட்டிட்டு வரார்”

“அய்யோ கிடைச்சுட்டானா? என் கோந்தை கிடைச்சுட்டானா? பகவானே!”

“அவருதான் காணாமபோகவே இல்லியே” என்றார் சாம்பு குழம்பி.

மகிழ்ந்துபோன ஒரு கிழவருடன் செக்யூரிட்டி ஆசாமி வந்தான். “யெஸ், நாந்தான் எஸ்.சுந்தரமூர்த்தி அய்யர். சார் யாரு?” என்றார் கிழவர்.

“சார் ஒருதப்பு நடந்துபோச்சு. நீங்க உண்மையிலேயே காணாம போகலை”

“அதெப்பிடி? நீங்கன்னா கண்டுபிடிச்சிருக்கேள், இப்ப இல்லே என்னா எப்டி?” என்றார் அவர்

“இல்லீங்க ஒரு சின்ன குழப்பம்”

“சின்ன குழப்பமா என்னய்யா உளர்றே? இப்ப என்னை மறுபடியும் தொலைக்கபோறியா? வயசான காலத்துலே நான் தொலைஞ்சுபோயி அலையணுமாக்கும்?

வேம்பு ஓடிவந்து “ஏன்னா அங்க முழிச்சுண்டு நிக்காம கொஞ்சம் வாங்கோ. சுந்து போனவழி தெரிஞ்சுடுத்து” என்றாள். இருவரும் பின்கட்டுக்கு ஓடினார்கள். “கேட்டேளா, சித்த முன்னாடி ஒரு கோந்தை இங்க ஒத்தர்கிட்டே நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேட்டிருக்கு. அவரு நல்லவர்னு சொல்லியிருக்கார். அப்பன்னா ஏன் நீங்க எனக்கு அச்சுவெல்லம் தரல்லேன்னு கேட்டு, கோங்கூன்னு திட்டியிருக்கு. சுந்து தான்னா அது…”

அந்த மனிதர் “ஆமாங்க, மகா கிருத்திருமக்காரப் பயல்ங்க. ஓடறான்..” என ஆரம்பித்தார்.

சாம்பு “அவன் போன வழியை மோந்துபாத்தாலே கண்டுபிடிச்சுடலாம்டீ” என்றபடி குனிந்தார்.

பின்பக்க படிக்கட்டுவழியாக போய் லிஃப்டில் ஏறி அவர்கள் ஓட்டலை சுற்றியபோது மீண்டும் அறிவிப்பு கேட்டது, எஸ். சாம்பமூர்த்தி அய்யர் என்பவர் காணாமல் போயிருந்தார்.

“பாருடி, இன்னோர்த்தர் கூட காணாம போயிட்டார். நேக்கு ரொம்ப பயமா இருக்குடி” என்றார் சாம்பு.

“அபிஷ்டு மாதிரி பேசாதீங்கோ. அது நீங்கதான்னா” என்றாள் வேம்பு.

“நானா, நான் எங்க காணாம போனேன்? இங்கதானே இருக்கேன்.”

“அழகுதான் போங்கோ, உங்களைக் காணும்னு யாரோ தகவல் குடுத்திருக்கா.”

ரிசப்ஷனில் சுந்து வாழைப்பழம் தின்றுகொண்டிருந்தது “அப்பா நீ எங்கே போயிட்டே? நான் ரூம் முச்சூடும் தேடிட்டேனே?”

ரிசப்ஷனிஸ்ட் “எங்க சார் போனீங்க? பையன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டான் சார்” என்றாள்.

வேம்பு ஆனந்த கண்ணீர் வடித்து, “காலை ஒடிச்சு அடுப்பிலெ சொருகிப்போடுவேன் படவா. எங்கடா போனே, எழவெடுத்தவனே?” என்றாள்.

“அப்பா ஒரு தாடித்தாத்தா இங்க வந்து வெல்லம் திருடிண்டு போறார். ஒரு நாயையும் கூடவே வச்சிருக்கார்.”

“ஃபீல் பண்றப்ப பையன் வாழைப்பழமா சாப்பிடறான் சார், இதுக்குள்ள ஏழுபழம் தின்னுட்டான்னா பாத்துடுங்க..”

சுந்துவுடன் சாம்பு அறைக்குத் திரும்பியபோது கோபாலன் அறைக்குள் புயல்போல பாய்ந்து வந்து சாம்புவை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்து “சாம்புசார் எப்டிசார் இப்படி துப்பறியறேள்? மெய்சிலுக்குது பாருங்கோ. கரெக்டா சொன்னேள், அந்த மேனேஜர்தான் சார் கல்பிரிட். இன்னும் முக்கிய ஆதாரம் கிடைக்கலை. குப்பைல போட்டுட்டாங்கன்னீங்களே அன்னிக்கு, அப்டியெ கரெக்ட் சார். குப்பைக்கூடைய எல்லாம் தேடிபாத்தப்ப இந்தக் கையுறை கிடைச்சது. பாத்தேளா இது யாரோடது?”

“வெல்லம் திருடியிருக்கான்” என்றார் சாம்பு.

“கைரேகை படாம இருக்கிறதுக்கு இதை யூஸ் பண்ணியிருக்கான். ஆனா எங்கியும் படாத ரேகை இந்த கிளெளஸுக்குள்ளே கண்டிப்பா பட்டிருக்கணுமே. இத ஒரு நல்ல கைரேகை நிபுணர்ட்டே காட்டினோம்னா ஆளைக் கண்டுபிடிச்சுடலாம். என்ன சொல்றீங்க?”

“என்னமோ அவன் ஆய்சுக்கு பலம், கிடைச்சுடுத்து” என்றார் சாம்பு.

“க்ளூ” என்று கோபாலன் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிந்தது.

“மாமா அப்பா காணாமப் போயிட்டா”

“இனிமேதான் நமக்கு வேலையே இருக்கு சாம்புசார், எல்லாம் உங்க ஆசீர்வாதம்”

“வாழப்பழம் திங்கறதுக்குள்ள வந்துட்டா, மூக்குக் கோங்கு…”

***

ஓட்டல் வாசலில் கறுப்புநிற டாக்ஸி வந்து சரேலென்று நின்றது. செக்யூரிட்டிகள் சலாம் போட ஓட்டல் வாசல் பரபரப்படைந்தது. டிரைவர் இறங்கி பவ்யமாக பின் கதவைத் திறந்தான். உள்ளிருந்து ஒரு கருப்பு நிற ஷூ முதலில் வெளிவந்தது. உயர்ரக அமெரிக்க பாலீஷினால் நன்கு பளபளப்பாக்கப்பட்டிருந்த அது பரம்பரை ஆண்டியின் திருவோடுபோல ஜொலித்தது. அதற்குள்ளிருந்து தொடங்கி மேலேறிய காலில் அணியப்பட்டிருந்த உயர்ரக பிரெஞ்சு லினன் சூட் மெதுவாகத் தெரியவரலாயிற்று. அதற்கு மேல் [கண்டிப்பாக உயர் தர] ஓப்பன் கோட்டும் உள்ளே [மீண்டும் உயர்தர] சட்டையும் அணியப்பட்டிருந்தன. கைகளில் விலைமதிப்பிட முடியாத ராடோ வாட்ச் கட்டப்பட்டிருக்காமல் இருக்க முடியாதாகையால் அதுவும் தெரிய வரலாயிற்று. அதன் பிறகு அழுத்தமான சிவந்த உதடுகளும், அதற்கு மேலே மீசையின்மையும், அதற்கு மேலே அணிகள் அணியப்பட வாய்ப்பற்ற மூக்கும், அவற்றுக்கு மேலே [கூரியதாக இருந்தாகவேண்டிய பார்வை மறைந்திருக்கும்] ரேபான் கருப்புக் கண்னாடியால் பாதுகாக்கப்பட்ட கண்களும், அதற்கும் மேலே [உயர்தர, சந்தேகமேயில்லை] தொப்பியும் முறையே தெரிந்து கொண்டேயிருந்தன. கடைசியில் இவற்றின் ஒட்டுமொத்தமாக ஒரு மனிதர் தெரியவரலானார்.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வாசலில் கூட்டம் கூடியது நியாயமேயாகும். காரிலிருந்து இறங்கிய அந்த மர்ம நபரை அனந்தபத்மனாபன் நாயரே நேரில் வந்து வணக்கம் முகமன் குசலம் கூறி வரவேற்றார். “தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமா?” என்றார்.

“சங்கர் லால், துப்பறியும் நிபுணர்” என்றார் அவர். “இங்கு ஒரு கொலை நடந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இது என் அறுபதெட்டாவது அட்வெஞ்சர். நான் வழக்கமாக ஐந்தாம் அத்தியாயத்தில்தான் வருவது” என்றார்.

“ரொம்ப சந்தோஷம். துப்பறியும் நிபுணர்களுக்காகவே தனி சூட் வசதி உள்ள ஓட்டல் இது” என்றார் நாயர்

சங்கர்லால் “நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எல்லா தகவல்களும் எனக்கு உடனடியாகத் தேவை. கொலைகாரன் யார் என்பதை மட்டும்தான் நான் கண்டுபிடிப்பேன்” என்றார்.

“எல்லாம் தயாரக இருக்கிறது சார்” என்றார் இன்ஸ்பெக்டர் ஃபல்குனன் பிள்ளா.

“நான் என் அறை எண்ணைத் தெரிந்து கொள்ளலாமா?” என்றார் சங்கர்லால்.

“நூற்று முப்பத்தெட்டு சார்.”

“ஓ, தட் மீன்ஸ் ஒன் ஹன்ட்ரட் ஆண்ட் தர்ட்டி எயிட். நைஸ்” என்று மர்மமாகச் சொல்லிவிட்டு சங்கர்லால் மோவாயை தடவினார். “நான் உங்கள் விருந்தினர் பட்டியலைப் பார்க்கலாமா? இஃப் யூ டோண்ட் மைண்ட்…”

ரிசப்ஷனிஸ்ட் பேரேட்டை எடுக்கும் முன் சங்கர்லால் துப்பறியும் நிபுணர்களுக்கே உரிய அசாதாரண லாவகத்துடன் மேஜை மீதிருந்த ஃப்ளவர் வேஸின் அடியில் சிறு பட்டாணிக்கடலை அளவுள்ள ஒரு ஒலிப்பதிவு உளவறியும் கருவியை பொருத்தி விட்டது அவருடைய குணச்சித்திரத்துக்கு மிகவும் இயல்பானதே.

சங்கர்லாலின் பெட்டிகள் லிஃப்டுக்கு போயின. “ஒருவேளை நீங்கள் ஃபயர் எஸ்கேப்பை பார்க்க விரும்பக் கூடும்” என்றார் அனந்த பத்மநாபன் நாயர். “வழக்கமான ஃபயர் எஸ்கேப்புகளுக்கு கூடுதலாக நாங்கள் துப்பறியும் நிபுணர்களுக்காக தனியாக ஒரு ஃபயர் எஸ்கேப்பும் கட்டியிருக்கிறோம்..”

“தேவைப்படும்” என்றார் சங்கர்லால் துப்பறியும் நிபுணர்கள் மட்டுமே உதிர்க்க முடியும் அந்த மர்மப்புன்னகையுடன்.

“ஸ்பைடர்மேன் தொங்கறதுக்கு ஸ்பெஷல் சீலிங் உள்ள சூட் இருக்கு. சூப்பர்மேனுக்கு மொட்டைமாடில தனி லாண்டிங் போர்ட் கூட வச்சிருக்கோம்” என்றார் பட்லர் பரமசிவம்.

லிஃப்டில் நுழைந்ததும் சங்கர்லால் தன் பையில் இருந்து ஒரு சிறு ரிசீவரை எடுத்து அதை தன் கண்ணாடியின் காதருகே ஒட்டிக் கொண்டு மீண்டும் அணிந்தார். அப்போது அவரது அதரங்களில் விரிந்த மர்மப்புன்னகை மறுகணமே சிதறுண்டதற்கு காரணம் அவர் ஃப்ளவர் வேஸ் என்று நினைத்தது கூஜா என்பதும் அது சமையற்கட்டுக்கு திரும்பிப் போய்விட்டிருந்தது என்பதும்தான். அவரது நரம்புகளை அதிரச்செய்தபடி பெரும் ஒலி ஒன்று கேட்டது “சாதா தோசெ ஒண்ணேய்…”

[தொடரும் ]

முந்தைய கட்டுரைதிருவையாறு இம்முறை
அடுத்த கட்டுரைமீனவர் படுகொலைகள்