ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3

raj2

 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2

3 ஆய்வாளனின் வழித்தடம் 

சிந்தனையாளராக ராஜ் கௌதமனின் தொடக்கம் தலித்தியம் அல்ல. அதற்கு முன்னரே இடதுசாரி நோக்கு கொண்ட ஒர் இலக்கிய விமர்சகராக அவர் இங்கு அடையாளப்பட்டிருந்தார். எண்பதுகளின் தொடக்கத்திலேயே மார்க்ஸியநோக்கு கொண்ட விமர்சகராக அவரைச் சுந்தர ராமசாமி தொடர்ச்சியாக கவனப்படுத்தி வந்தார். நான் கவனித்தது 1988ல் சுந்தர ராமசாமியின் காலச்சுவடின் முதல் இதழில் அவர் எழுதிய  ‘தண்டியலங்காரமும் அணுபௌதிகமும்’ என்ற கட்டுரை அந்தக்கட்டுரை. அன்று அதைப்பற்றி ஒரு குறிப்பும் எழுதியிருந்தேன். இன்றைய வாசிப்பில் முக்கியமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அதன் பார்வை ராஜ்கௌதமனின் பிற்காலத்திய இயல்புகளைச் சுட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அக்கட்டுரையின் உள்ளடக்கத்தை மூன்று கூறுகளாக நான் இன்று பிரித்துக்கொள்வேன் .

ஒன்று ,புறவயமான அறிவியல் தர்க்கம் சார்ந்த அணுகுமுறையை வரலாற்றிலும் இலக்கியத்திலும் தொடர்ந்து வலியுறுத்தும்போக்கு.

இரண்டு, அந்தப்பார்வையை தெளிவான சான்றுகளுடன் சீரான கல்விப்புல மொழிபுடன் முன் வைக்கும் இயல்பு.

மூன்று : மீபொருண்மை ஆன்மிகம் ஆகிய இரண்டுக்கும் எதிரான கறாரான உலகியல் நோக்கு.

பின்னர் பின்நவீனத்துவம், தலித்தியம் ஆகியவற்றுக்கு வந்தபோது  ராஜ்கௌதமனின் எழுத்துக்களில் ஒர் எள்ளல் குடியேறியது. ஒட்டுமொத்தமாக 1.அறிவியல்நம்பிக்கை, 2.கல்வித்துறைசார் முறைமை,3. உலகியல்நோக்கு, 4. எள்ளல் என்னும்  இந்நான்கு அம்சங்களும் இன்று ஓர் சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் அவரை தமிழில் நிலை நிறுத்தும் தனித்தன்மைகளாக வளர்ச்சி பெற்றுள்ளன.

மார்க்சியச் சிந்தனையாளராக இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட ராஜ்கௌதமன் எண்பதுகளின் இறுதியில் மார்க்சியச் சிந்தனைகளிலிருந்து விலகிச்சென்றிருக்கக் கூடும். பொதுவாகவே மார்சிய நம்பிக்கைகள் வலுவிழந்தபோது அன்றைய அறிவுஜீவிகளில் சிலர் தமிழ்த்தேசியவாதம் நோக்கியும் திராவிட இயக்கக் கருத்தியல் நோக்கியும் சென்றனர். அதில் கணிசமானவர்கள் வன்னியர் சங்கம் போன்ற சாதி அமைப்புகளுக்கும் சென்று சேர்ந்தார்கள். அக்காலத்து நம்பிக்கை இழப்பு ராஜ்கௌதமனை நிறப்பிரிகை உருவாக்கிய தலித் இலக்கியம் நோக்கி கொண்டு சென்றிருக்கலாம். அதற்கு முன்னர் அவர் தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் இயக்கப் பின்னணியைப்பற்றி ஏதும் ழுதியிருப்பதாக தெரியவில்லை.

பின்னர் அவர் தலித் இலக்கியம், தலித் வரலாற்று பார்வை, தலித் உலகக்கோட்பாடு எனும் மூன்று தளங்களில் அவர் தீவிரமாகச் செயல்படத்தொடங்கினார் . பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த புலத்திலேயே அவர் செயல்பட்டார். மேடைகளில் பேசுவதோ, தலித் ஆய்வுக்களங்களில் தோன்றுவதோ அவருடைய செயல்முறையாக இருக்கவில்லை. தலித் ஆய்வுகளுக்காக வெளியிடப்பட்ட இதழ்களில்கூட அவர் பெரும்பாலும் எழுதவில்லை. தமிழின் சிற்றிதழ்ச்சூழலில் இருந்தே பெரும்பாலும் அவர் விலகிச்சென்றுவிட்டிருந்தார். அவருடைய செவ்வியல் ஆக்கம் என்று சொல்லத்தக்க பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் என்னும் நூலில் பெரும்பாலான கட்டுரைகள் கல்வித்துறை சார்ந்த களங்களில் முன்வைக்கப்பட்டவை.

அந்நூலின் முன்னுரையில் அவை அனைத்துமே வகுப்பறைகளில் நடத்தப்பட்ட பாடங்கள் என்கிறார். கல்வியமைப்பின் மேலோட்டமான தன்மை காரணமாக அவை பொருட்படுத்தப்படாமல் போய்விட்டன என்றும் ஆகவே அவை நூல்வடிவு கொள்கின்றன என்றும் குறிப்பிடுகிறார். தமிழினி வசந்தகுமாரிடம் அவர் கொண்ட உறவே அவருடைய இரண்டாவது காலகட்டத்தை ஓர் அறிவியக்கமாக ஆக்கியது. தமிழினி அவருடைய நூல்களை செம்மையாக, அழகிய பதிப்புகளாகக் கொண்டுவந்தது. தமிழ்ச்சூழலில் தமிழினி பதிப்பகத்திற்கு இருந்த முக்கியத்துவம் அந்நூல்களைக் கவனிக்க வைத்தது. ஒரு பேச்சுக்கு இக்கட்டுரைகள் இங்கே வந்துகொண்டிருந்த தலித் இதழ்களில் வெளிவந்தன என்று கொள்வோம், அவை கவனிக்கப்பட்டிருக்காதென்று உறுதியாகவே சொல்லமுடியும். அவ்விதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கும் அரசியல்நிலைபாடுகளை உரத்தொலிக்கும் சமநிலையோ ஆய்வுநோக்கோ இல்லாத கட்டுரைகள் இவற்றை மறைத்துவிட்டிருக்கும்

ஒருவகையில் அந்த எள்ளல் அம்சத்தை ராஜ் கௌதமனின் தற்காப்பு உத்தி என்று புரிந்துகொள்ளலாம்.ஏனென்றால் அவர் செயல்படத்தொடங்கியபோது தமிழகத் தலித் இயக்கம் தன்போக்கில் அரசியல்செயல்பாடுகள் கொள்ளத் தொடங்கியிருந்தது. அதன் வழிகள் வேறு, இங்குள்ள பரப்பிய அரசியல் சூழலில் அரசியலியக்கங்கள் எவையாயினும் மிகைப்படுத்தல், ஒற்றைப்படையாக்கல், சமரசம், தனிநபர்வழிபாடு, குற்ற அம்சம் ஆகியவை வழியாகவே செயல்பட முடியும். ராஜ் கௌதமன் தலித் அரசியலின் நடைமுறைத் தளத்தில் அவரைப்போன்ற சிந்தனையாளர் எதிர்கொள்ளச் சாத்தியமான ஏமாற்றம், கசப்பு ஆகியவற்றை வெல்ல எடுத்துக்கொண்ட நோய்த்தடுப்பு ஊசிதான் அவரிடமிருக்கும் எள்ளல்.

தமிழகத்தில் நிறப்பிரிகை அலைக்கு பின்னர் ஒரு சிறிய இடைவெளி உருவாயிற்று .நிறப்பிரிகை முன்வைத்த மேலைநாட்டு நகல்கோட்பாடுகள் எதற்குமே சம்மந்தமற்று தமிழில் தலித் இலக்கியம் தன்போக்கில் வலுவான கலைத்தன்மையுடன் உருவாகி வரத்தொடங்கியது. நிறப்பிரிகையின் கோட்பாட்டாளர்கள் ஆவேசமாக முன்வைத்த எதையுமே தமிழக தலித் எழுத்தாளர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் சொந்த வாழ்க்கை தாங்கள் அறிந்த சூழலிலிருந்தே தங்கள் சிந்தனைகளையும் அழகியலையும்  உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் எழுந்து வந்ததுமே அதுவரை பேசப்பட்ட தலித்கோட்பாடுகளின் உள்ளீடின்மை தூலமாகத் துலங்கியும் வந்தது. சொல்லப்போனால் தலித் இலக்கியம் தலித் அரசியலில் இருந்து விலகி தனக்கான அறிதல்நோக்கை தானாகவே வகுத்துக்கொண்டது.

அவ்வகையில் இமையம் தமிழிலக்கியத்தில் ஒரு பெருநிகழ்வு என்றே சொல்லவேண்டும் .கலைஞனின் செருக்கும் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்கும் நிமிர்வும் கொண்ட இமையம் தமிழ் தலித் எழுத்தில் ஒரு புதுப்பாதையை வகுத்தவர் .  இங்கு இமையத்தின் எழுத்தை தலித் எழுத்து என்று சொல்வது இந்த விவாதத்தின் பொருட்டு மட்டுமே .அவை மானுட வாழ்க்கையின் நுட்பமான வண்ண வேறுபாடுகளையும் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் தேடிச்செல்லும் கலைப்படைப்புகள். இமையம் தமிழ் இலக்கியத்தின் முதன்மை படைப்பாளிகளில் ஒருவர். தலித் இலக்கியம் என்ற நோக்கில் அவரது படைப்புகளை படித்தால் அதற்குள் மிகச்சிறிய பங்கொன்றையே சென்றடைகிறோம்– ஜானகிராமனை பிராமண எழுத்தாளர் என்று பார்ப்பது போல. அந்த அடையாளங்களில் வழியாக அவர்களின் பல தனித்தன்மைகளின் ஒன்றிரண்டு நமக்கு பிடி கிடைக்கும். அவற்றை அடைந்ததுமே அவ்வடையாளத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் அவர்களை அணுகுவதே உகந்தது .இதுவே தமிழகத் தலித் இலக்கியத்தின் இன்னொரு உச்சப்படைப்பாளியான சோ.தர்மனுக்கும் பொருந்தும்

ராஜ் கௌதமன் இந்த தலித் அறிவியக்கத்தின் புனைவிலக்கிய அலையால் தமிழிலக்கியத் தளத்திலிருந்து பின்னகர்த்தப்பட்டார். இமையம் சோ.தர்மன் இருவரும் தமிழ் தலித் இலக்கியத்தின் இரு முன்னோடிகளாக எழுந்து வந்தனர். தலித் வாழ்க்கையின் பண்பாட்டுகூறுகளை, இந்த மண்ணுடன் அவர்களுக்கான உறவை , உறவுச்சிக்கல்களை இருவருமே புனைந்து தமிழுக்களித்தனர். இவர்கள் இருவரின் ப்டைப்புகளையும் ஒப்பிட்டு பார்ப்பது இவ்விரு முன்னோடிகளையும் புரிந்துகொள்வதற்கு உதவியாகிறது .இமயத்தின் படைப்புகளில் மண் மிக குறைவாகவே இடம் பெறுகிறது. வேளாண்மை சார்ந்த ஒரு  வாழ்வுக்களத்திற்குப் பதிலாக மனித உறவுகளின் ஒரு வலையை உருவாக்கிக் காட்டுவதே அவருடைய எழுத்தாக உள்ளது. மாறாக சோ. தர்மனின் எழுத்து பெரும்பாலும் வேளாண்மை வாழ்க்கையின் இடர்க்ளையும் அழகியலையும் சொல்வதாக அமைகிறது .இவ்விரு எழுத்தாளர்களின் சாதியடையாளம் இந்த பண்பை புரிந்துகொள்வதற்கு உதவும். இமையம் பறையர்களின் வாழ்க்கையை எழுதும்போது தேவேந்திரகுல வேளாளர்களின் வாழ்க்கையை சோ.தர்மன் எழுதுகிறார்.

எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் தமிழர்களின் தலித் இலக்கியம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டது. இன்று ஆங்கிலம்வழியாக பெருந்தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியத் தலித் இலக்கியப் படைப்புகளை ஒட்டு மொத்தமாக படிக்கையில் இந்தியாவின் தலை சிறந்த தலித் எழுத்தாளர்கள் என்று கன்னடத்திலும் தமிழிலும் மலையாளத்திலும் எழுதுபவர்களை சொல்ல முடிகிறதே ஒழிய மராட்டிய எழுத்தாளர்கள் எவருமே கலைஞர்களாக ,தங்கள் தனித்தன்மையை உருவாக்கிக்கொண்டவர்களாக தெரியவில்லை. முன்னோடியான தயா பவார் போன்றவர்களைக் கருத்தில் கொண்டே இதை சொல்கிறேன். தேவனூரு மகாதேவா [கன்னடம்] இமையம்,சோ.தர்மன் ஆகியோர் தான் இந்தியநிலம் உருவாக்கிய தலைசிறந்த தலித் எழுத்தாளர்கள். அவர்கள் தலித் எழுத்தாளர்கள் என்பது மேலோட்டமான அடையாளம் மட்டுமே என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத் தலித் இயக்கத்தின் தன்னிச்சையான எழுச்சியும், அதன் விளைவாக உருவான பொதுவான சிந்தனைமாற்றமும்தான் ராஜ் கௌதமனை அதுவரை அவர் நம்பிவந்த கூட்டு இயக்கத்திலிருந்து தனித்து விலகச்செய்தது. மீண்டுமொரு கூட்டுப்புழு பருவத்தை அவர் அடைந்தார். தன்னுடைய ஆளுமையைக் குவித்துக்கொள்ளவும் தனக்குகந்த துறைகளில் தீவிரத்துடன் இறங்கவும் இது அவருக்கு வழி வகுத்தது. பின்னர் ஓர் இடைவெளிக்குப்பிறகு வெளிப்பட்ட ராஜ் கௌதமன் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளராகவும் தமிழக பண்பாட்டு வரலாற்று சித்திரத்தில் தலித் நோக்கில் அழுத்தமான ஊடுருவல்களை நிகழ்த்துப வராகவும் இருந்தார்.

ஏறத்தாழ இந்தக்கால கட்டத்தில் உலக அளவில் விளிம்புநிலை இலக்கியம் விளிம்பு நிலை பண்பாடு [Subaltern Studies] பற்றிய பேச்சுகள் உரத்து ஒலிக்கத்தொடங்கின. இந்திய வம்சாவளியினரான அமெரிக்கப் பேராசிரியர் ரணஜித் குகா இந்தியாவின் விளிம்புநிலை மக்களின் பண்பாட்டை மையப்பண்பாட்டின் ஒருபகுதியாகவோ அதற்கான எதிர்வினையாகவோ அணுகக்கூடாது என்றும், அதை ஒரு தனிப் பண்பாட்டுவெளியாகவே கருதவேண்டும் என்றும் வாதிட்டார். விளிம்புநிலை மக்கள் தங்களுக்கென தனித்தபண்பாட்டுப் பின்புலம் ஒன்றைக்கொண்டவர்கள், அந்தப் பண்பாட்டுப்பின்புலம் காரணமாகவே அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்டபின் அடித்தள வாழ்க்கையிலிருந்து அவர்கள் பண்பாட்டுத்தனித்தன்மை ஒன்றை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்களின் பண்பாட்டுப் பின்புலத்தை ஒரு பொருண்மையான சமூகவிசையாகவே கணக்கில்கொள்ளவேண்டும் என்ற கோணம் வலுப்பெற்றது.

விளிம்புநிலை ஆய்வுமுறைமையின் கருத்துக்கள் இந்தியக் கல்விநியலையங்களை ஊடுருவின. மேலைநாட்டுப் பல்கலைகளுடன் இணைக்கப்பட்டிருந்த நிதியுதவிகளும் இவ்வகை ஆய்வுகளுக்கு அளிக்கப்பட்டன. இந்தியாவில் நிகழ்ந்த வெவ்வேறு விவசாயிகள்போராட்டங்களை எளிமையான பொருளியல்கோணத்தைத் தவிர்த்து பண்பாட்டுமுரண்பாடுகளினூடாக அணுக அவை வழிவகுத்தன. இந்திய அளவிலும் முதன்மையான சிந்தனையாளர்கள் அந்தக்கோணத்தில் இந்திய வரலாற்றை ஆராயத்தொடங்கினர். இந்தப்பார்வை சம்பிரதாயமான இடதுசாரிப்பார்வையிலிருந்து பெரிதும் மாறுபட்டதென்றாலும் இந்தியாவில் மெல்லமெல்ல இது சம்பிரதாய மார்க்சியர்களின் வழக்கமான சட்டகங்களுக்குள் அடைக்கப்பட்டது.

அதுவரை இந்திய வரலாற்றையும் இந்திய பண்பாட்டையும் எழுதி அமைத்த மூன்று போக்குகளுமே தங்கள் பார்வைக்கேற்ப  ஒரு முன்வரைவை கட்டமைத்து அவற்றின் கூறுகளை தீட்டி முழுமைப்படுத்தும் தன்மை கொண்டிருந்தன. அவை பார்வைக்கோணத்திலும் நுண்சித்திரங்களிலும்தான் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டன.மாறாக விளிம்புநிலைப் பார்வையிலான வரலாற்றுச் சித்திரம், பண்பாட்டுச் சித்திரம் என்பது முதன்மையாக அதுவரைக்குமான வரலாற்றெழுத்து மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பதாகவும், பெரும்பாலும் அந்த விமர்சனத்தையே தன் தரப்பாக சொல்லி நின்றுவிடுவதாகவும் இருந்தது. ஒரு மாற்று முழுமைச்சித்திரத்தை அவர்கள் முன்வைக்கவில்லை. இன்றுவரையிலும் கூட அவர்கள் முன்வைக்கும் சித்திரத்தில் வரலாற்று பரிணாமத்தில் பண்பாட்டு பின்புலத்தில் காரண காரியங்களை விளக்கும் கூறுகள் இல்லை.

அதற்கான காரணம் இவர்களின் பார்வை பின்நவீனத்துவ காலகட்டத்தில் நிகழ்ந்தது என்பது தான். பின்நவீனத்துவம் முழுமையாக ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்குவதில்லை. வரலாற்றெழுத்தை அது மொழிபு அல்லது கதையாடல் என்கிறது. முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை அது பெருங்கதையாடல் என்கிறது. பெருங்கதையாடல் என்பது ஒருவகையான அதிகாரக் கட்டமைப்பு என்றும் எல்லாவகையான பெருங்கதையாடல்களும் அடிப்படையில் அதிகாரம் அற்ற மக்களுக்கு எதிரானவை என்றும் பின்நவீனத்துவம் கருதியது. ஆகவே உடைப்பு மட்டுமே அவர்களின் சிந்தனையில் இருந்தது, கட்டமைப்பு நிகழவில்லை. அதில் அவர்களுக்கு பெரும்பாலும் நம்பிக்கை இருக்கவில்லை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே சொன்னதுபோல, ராஜ் கௌதமன் அவருடைய சிந்தனையில் இரண்டு காலகட்டங்களைக் கடந்து வந்திருந்தார். ஒன்று தொடக்ககால மார்சியம். பேராசிரியர் சிவத்தம்பி, கனகசபாபதி போன்ற அன்றைய மார்க்சியர்களுடன் அவருக்கு அணுக்கமான சிந்தனைத் தொடர்பிருந்தது. பின்னர் சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவர்களிடம் அவர் தொடர்ச்சியான உரையாடலில் இருந்தார். இவர்கள் இருசாராருக்கும் பொதுவான அம்சம் என்பது புறவயமான நோக்கு, அறிவியல் அணுகுமுறை, கற்பனாவாத எதிர்ப்பு மனநிலை ஆகியவையே.

உதாரணமாக, அவருடைய ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’ என்னும் நூலை எஸ்.வையாபுரிப்பிள்ளை, கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோருக்கு ராஜ் கௌதமன் சமர்ப்பணம் செய்திருக்கிறார். தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை எழுதிய தமிழியக்கவாதிகள், திராவிட இயக்கவாதிகள் என்னும் இரு தரப்பினருக்கு முற்றிலும் வெளியே உள்ள இரு தரப்புக்கள் இவர்கள். எஸ்.வையாபுரிப்பிள்ளை தமிழ்ப்பண்பாட்டு ஆய்வில் செலுத்திய அறிவியல்நோக்கின் பொருட்டு சில தமிழியக்கவாதிகளாலும் திராவிடஇயக்கவாதிகளாலும் பழிக்கப்பட்டவர். கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழியக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின்மேல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த மார்க்ஸியர்கள். வையாபுரிப்பிள்ளை தேசியக்கண்ணோட்டம் கொண்டவர். மரபான உள்ளம் கொண்டவர். அவருக்கும் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோருக்கும் நடுவே என்ன பொது அம்சம் இருக்கக்கூடும்? அது புறவயமான அறிவியல்நோக்கு, கற்பனாவாதத்தை விலக்கும் சமநிலை என்று சொல்லலாம். அதுவே அவர்களிடமிருந்து ராஜ் கௌதமன் பெற்றுக்கொண்டது

இன்று வரை ராஜ் கௌதமனிடம் இருக்கும் புறவயத்தன்மை, தர்க்கபூர்வ அணுகுமுறை அறிவியல்நம்பிக்கை போன்றவை மார்க்ஸியத்திலிருந்தும் நவீனத்துவத்திலிருந்தும் அவருக்கு கிடைத்தவை. ஆனால் அவற்றைக்கொண்டு ஒற்றைப்பேரமைப்பாக வரலாற்றைக் கற்பிதம்செய்துகொள்ளக்கூடாது, மையப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுப் பரிணாமச்சித்திரத்தை உருவாக்கக்கூடாது என அவர் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். சங்ககாலத்தின் உறவுச்சித்திரங்களை அவற்றில் செயல்பட்ட ஆதிக்கம், அதிகாரம் என்னும் கோணத்தில் ஆராய ராஜ் கௌதமன் மிஷேல்ஃபூக்கோவையே பெரிதும் மேற்கோளாக்குகிறார். ‘கருத்துக்களின் அதிகாரம்’ என்ற அடிப்படைக்கருத்தை ஃபூக்கோவிடமிருந்து ராஜ் கௌதமன் பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். அதை தன் நோக்கில் தமிழ்ப்பண்பாட்டு வெளியில் அவர் விரித்தெடுத்தார்.

தமிழகத்தில் தலித் அடையாளம் சார்ந்த விவாதங்களில் இரண்டு மாறுபட்ட கருத்தியல்கள்  முன்வைக்கப்பட்டு விவாதிக்கப் பட்டிருக்கின்றன. மிகவிரிவான பொதுப்பார்வையில் சொல்வதென்றால் ஏற்கனவே தலித்துகள் தங்களுக்கென கொண்டிருக்கும் அடையாளங்களையும் பழக்க வழக்கங்களையும் இனக்குகுழு சார்ந்த இயல்புகளையும் தங்கள்  அடையாளமாக மாற்றிக்கொள்வது ,அதையே தாங்களாக முன்வைப்பது, அதற்காக தங்கள் செயல்பாடுகளை தொகுத்துக்கொள்வது என்பது ஒரு தரப்பு. இவர்களைப் பொறுத்தவரை தலித்துகள் மேல் சுமத்தப்படும் அடையாளங்கள் அவர்களை நாணச்செய்வதனால் தான் அவர்கள் தங்களை தாழ்ந்தவர்களாக உணர்கிறார்கள். இத்தாழ்வுணர்ச்சியிலிருந்து விடுபடுவதே அரசியல் விடுதலை நோக்கிக் கொண்டுசெல்லும்.  ஆகவே எந்த அடையாளங்களைக் கொண்டு அவர்கள் இழிவு செய்யப்பட்டார்களோ அந்த அடையாளங்களையே பெருமிதமாக ஆக்கிக்கொள்வதுதான் உகந்தது

ராஜ்கௌதமன் இந்நிலைபாடு சார்ந்து ஆரம்ப காலங்களில் ஓரளவு எழுதியிருக்கிறார். அவருடைய தொடக்ககால நூல்களான அறம்+அதிகாரம் போன்றவை இந்த நிலைபாட்டை முன்வைப்பவை.  பறை முதலிய வாத்தியங்களை தங்கள் அடையாளமாகக்கொள்வது , பறையர் என சாதிப்பெயர் சேர்த்துக்கொள்வது போன்றவை அதன் ஒர் எல்லை என்றால் பொது மொழியின் சபைநாகரீங்களை உதறிவிட்டு தங்கள் வட்டாரவழக்கைப் பேசுவது, தங்க்ளுக்கான உடல் அடையாளங்களை மறைக்காமல் இருப்பது ,எங்கும் தங்கள் சாதியப்பின்னணியை உரத்து சொல்வது என்று தலித்துகள் த்ங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளவற்றையே தங்கள் அடையாளமாக பெருமிதம் கொண்டு மாற்றிக்கொள்ளவேண்டும் என்று இத்தரப்பு வாதிட்டது. மதுவருந்தும் வழக்கம் தலித்துகளின் ஓர் அடையாளம் என்றே அன்று சொல்லப்பட்டது.

இன்னொரு பக்கம் இதற்கு மாறாக தலித்துகள் உலகளாவிய நவீன சிந்தனையின் ஒரு பகுதியாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், அறிவார்ந்த சமூகமாகவும் ஜனநாயகப்பண்பு கொண்டவர்களாகவும் தங்களை முன்னிறுத்த வேண்டுமென்றும் இன்னொரு தரப்பு சொன்னது. இவ்விரு தரப்புகளுக்குமிடையே எப்போதும் முரண்பாடுகள் இருந்தாலும் இருதரப்புமே தலித்துகளிடம் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். முதல் சாராரின் பல்வேறு கூற்றுகள் மறுக்கப்பட்டன. உதாரணமாக பின்னர் எழுத வந்த தலித் எழுத்தாளர்கள் எவருமே தலித்துகளின் இயல்புகளிலிருந்த எதிர்மறை பண்புகளை அழுத்தக்கூடியவர்களாகவும் அதையே அடையாளமாகவும் முன்வைக்கக்கூடியவர்களாகவும் இல்லை.  சோ.தர்மன் இமயம் போன்றவர்கள் தலித் அடையாளம் என்ப்தை மானுடம் நோக்கி நகர்த்தகூடியவர்களாகவும் மானுட ஒருமை மானுட விடுதலை ஆகியவற்றை பேசுபவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் அதே தருணம் இரண்டாவது தரபபினர் தலித் வாழ்வின் இழிவுகளையும் கீழ்மைகளையும் எவ்வகையிலும் பதிவு செய்வது பெருமை தராது என்ற எண்ணம் கொண்டிருந்தபோது இந்த முன்னோடி எழுத்தாளர்கள் தலித் வாழ்க்கையை அழுத்தமாக அதன் அனைத்து சிறுமைகளுடனும் பதிவு செய்தனர். உண்மை மிகப்பெரிய ஆயுதம் என்பதில் அவர்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்தனர். தமிழ் தலித் இயக்கம் என்பது இவ்விரு தரப்புகளின் உரையாடல்களினூடாக உருவாகி வந்தது என்று சொல்லலாம்.

ராஜ் கௌதமன் இந்த ஆரம்பகாலக் கருத்தியலில் இருந்து மிக விரைவிலேயே வெளியேறினார். தலித் இயக்கத்தின் தொடக்கக் களமாக இருந்த நிறப்பிரிகைக் குழுவுடனான தன் தொடர்புகளை முறித்துக்கொண்டார். காலச்சுமை என்னும் தன்வரலாற்று நாவலில் நிறப்பிரிகை கொள்கைமுரண்பாடுகளைவிட தனிப்பட்ட ஆணவமோதல்களாலேயே அழிந்தது என்கிறார். இன்று பார்க்கையில் நிறப்பிரிகையில் மிக மிக குறைவாகவே தலித்துகளின் பங்களிப்பு உள்ளது என்று காணலாம். ராஜ்கௌதமனையும் ரவிக்குமாரையும் தவிர்த்தால் அதில் குறிப்பிடத்தகுந்த தலித் எழுத்தாளர்களோ சிந்தனையாளர்களோ யாருமே இல்லை. தமிழ் தலித் அறிவியக்கமும் இலக்கியமும் நிறப்பிரிகையிலிருந்து தலித் முன்னோடி எழுத்தாளர்கள் விலகியபின்னரே உருவாயிற்று.

நிறப்பிரிகையின் முகம் பிற்படுத்தப்பட்டோர் அரசியல். அதை முன்வைத்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் இலக்கியத்தின் பரப்பில் எந்த பங்களிப்பும் இல்லை. செயற்கையானதும் பெரும்பாலும் அரைகுறையாக நகலெடுக்கப்பட்டதும் ஆகவே போலியானதுமான அறிவுத்தளத்தையும் உணர்வுகளையும் கற்பனை செய்துகொள்ளவும், அதனூடாக உள்ளீடற்ற படைப்புகளை உருவாக்கவும்தான் அவர்கள் முயன்றார்கள். அவர்களுடைய படைப்புகள் வெளிநாட்டு முன்மாதிரிகளை கொண்டவையாகவும், கட்டமைக்கப்பட்ட உருவகங்களினூடாக இங்கு உண்மையிலே இல்லாத பிரச்னைகளையும் உளநிலைகளையும் பேசுவனவாகவும், செயற்கையான படைப்பூக்கம் அற்ற மொழியில் வடிவ சோதனைகளை செய்து பார்ப்பனவாகவும் அமைந்தன. 25 ஆண்டுகளுக்குப்பிறகு அவற்றிலிருந்து  இன்று எடுத்துப்பார்ப்பதற்கான படைப்பு அல்லது சிந்தனைத்தொகைஎன எதுவும் இல்லை.

அன்று நிறப்பிரிகை சார்ந்து எழுதியவர்கள் எடுத்துப்பேசிய கோட்பாடுகளுக்கும்கூட இன்று ஒர் ஒட்டுமொத்தமான விளைவை கற்பனை செய்துகொள்ள முடியுமே ஒழிய இன்றையவாசிப்புக்கென தனித்து எடுத்து நிறுத்துவதற்கு தகுதி வாய்ந்த எழுத்துகள் பெரும்பாலும் இல்லை. அவற்றிலிருந்து உந்துதல் பெற்று எழுந்து வந்த எழுத்துக்களும் காணக்கிடைக்கவில்லை. ஏனெனில் இவர்கள் எவரும் தங்கள் வாழ்வுச்சூழலிலிருந்து ஒரு சிந்தனையை நோக்கிச்செல்லவில்லை. தாங்கள் கொண்ட நேரடி நெருக்கடிகளிலிருந்து கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கவில்லை. அவை மொழிபெயர்ப்புச் சிந்தனைகளாகவே இருந்தன. சிந்தனைகளை ‘தெரிந்துகொள்வதும்’ ‘முன்வைப்பதும்’ அவற்றை தன் சூழலில் விரித்தெடுத்து தன் சொந்தச்சிந்தனைகளை உருவாக்கிக்கொள்வதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

வெளியே இருந்து ஒரு சிந்தனைப்போக்கை ஒரு சூழலுக்குக் கொண்டுவந்து நிறுத்தும் அறிவுஜீவிகளுக்கு உலகமெங்கும் சில பண்புக்கூறுகள் உண்டு. அவர்கள் தொடர்ச்சியாக கால்நூற்றாண்டுக்காலமாவ து நம்பிக்கையுடன் விசையுடன் பணியாற்றி அந்தச் சிந்தனைப்போக்கு சார்ந்த ஒரு முழுமையான அறிவுத்தொகையை உருவாக்கியிருப்பார்கள். தொடர்ச்சியாகத் தங்கள் மாற்றுத்தரப்புடன் உரையாடி தங்கள் தரப்பை விரிவாக்கி நிலைநிறுத்திக் கொண்டிருப்பார்கள். நிறப்பிரிகை சார்ந்த அறிவுஜீவிகளில் தொடர்ச்சியாகச் செயல்பட்டவர் அ.மார்க்ஸ் மட்டுமே. அவருடைய செயற்தளமும் கருத்துநிலைகளும் சார்புகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருந்தாலும் அவருடைய களம் மனிதஉரிமைகளுக்கான போராட்டம் என்ற அளவில் நிலைபெற்றபோது அதற்கு இன்று தெளிவான ஓர்  அறிவுத்தளம் உருவாகிவந்துள்ளது..

தமிழவன் அவ்வப்போது உருவாகும் மேலோட்டமான ஈடுபாடுகள் வழியாகச் செயல்பட்டவர். தொடர்ச்சியாகத் தாவிச்சென்றுகொண்டே இருந்தவர். ஆகவே இவர்கள் எவருமே ஓரளவேனும் முழுமையான ஒர் அறிவியக்கத்தை உருவாக்க இயலவில்லை. அவர்கள் உருவாக்கிய கருத்துக்கள் மேலைநாட்டில் அந்தச் சிந்தனைகளின் காலகட்டம் முடிந்தபோது உடன் தாங்களும் அணைந்து சென்ற காலத்தின் ஒரு பகுதியாக மாறின. இங்கே மேலோட்டமான சில சலசலப்புகளை மட்டுமே அவை உருவாக்க்கின .

ஆனால் அக்களத்திலிருந்து விடுபட்ட பின்னர் தன்னுடைய தனித்தேடலின் வழியாக ராஜ்கௌதமன் நெடுந்தொலைவு சென்றார். ஆகவே அன்று செயல்பட்ட அந்த வட்டத்தின் தலை சிறந்த முகமாக ராஜ்கௌதமன் அறியப்படுகிறார். ஒருவகையில்  அங்கிருந்தது அவருடைய ஒரு குறுகிய காலகட்டம் மட்டுமே அதற்கு வெளியே வந்து தன்னுடைய தேடலை தன் வழியில் முன்னெடுத்து சென்றபோதுதான் இன்று நாம் காணும் ராஜ் கௌதமன் என்னும் எழுத்தாளனும் கோட்பாட்டளனும் உருவானார்கள்.

[மேலும்]

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரத்தில்…